வலைப்பதிவில் தேட...

Monday, April 26, 2010

அருந்ததியர்


                                                                             














அன்று ...
தாய் மண்ணின் சுதந்திரம்
வேண்டி
வெள்ளையனை அவனது
கூடாரத்தில் "ஒண்டி"யாகவே
சந்தித்து
மடிந்து போனான்
மா "வீரன்" ஒருவன்

அவனுக்கான இடம்
சுதந்திர வரலாற்றில்
தேடிக்கொண்டிருக்கிறோம்
தட்டுப்படவில்லை;

பிறகு...
மா "மதுரை "யில்
கள்ளர்களிடமிருந்து
உங்கள் வாழ்வைக்
காத்திருக்கிறான்
மற்றொரு மகத்தானவன்
அவன் ..." வீரன்"

மாறுகால் மாறுகை வாங்கி
"மீனாட்சி" க்கு காவலாய்
"கீழ் " வாசலில் காவல் தெய்வமென
பெயரிட்டு
வெளியே நிற்க வைத்தீர்கள்;

அடுத்து...
ஊமைத்துரையின்
வலதும் இடதுமாக செயல்பட்ட
கந்தன் பகடை பொட்டிபகடை

அந்தோ பரிதாபம்
அவர்களும் கூட
உங்கள் வரலாற்றின்
பக்கங்களில் இருந்து
விரட்டப்பட்டிருக்கிறார்கள்
என்பதை அறிந்தோம்;

நெல்லை சீமையில்
சனாதனி யாகப்பிறந்த
"முத்துப்பட்டன்"
"பொம்மக்கா" " திம்மக்கா" வை
மணம்முடித்தான்...

பிராமணன் ஒருவன்
"அருந்ததி "யாவதோ
என்று அவனையும்
படு கொலை செய்தீர்கள்;


'சிக்கி முக்கி' கற்களில்
அக்னியைகட்டுபடுத்தும்
சூட்சுமம் அறிந்தவனே |
சமுதாயக்கோட்படுகளால்
சாதியின் சூழ்ச்சியால்
'சக்கிலியன்' ஆனதென்ன;

குதிரைப்படைக்கு
தோல் பட்டைகள்
செய்து தேர்ந்தவனே|
படை வீரனாய்
வலம் வந்தவனே|
இன்று சனாதனக் குதிரை
தள்ளி விட்ட
இழிசனராய்
சவக்குழி தோண்டுவதென்ன|

மா அதியனாய்
நீ பாராண்ட திறத்திற்கு
சாட்சியாய்
அவ்வையே நட்பு பாராட்டி
நெல்லிக்கனி கொடுத்ததென்ன|


இன்று
மாதியனாய்
மலக்குழியில்
வீழ்ந்து கிடப்பதுவும் என்ன|

இழப்பதற்கு எதுவுமில்லை;
அடிமைத்தனத்தைத் தவிர
ஒழிப்பதற்கு சாதி
இருக்கிறது;
எழுந்து வா
கரம் கோர்த்து |

மாடறுத்து, செருப்புதைக்க,
பறையடித்து, எழவு சொல்ல ,
பிணந்தூக்கி, மலமள்ள...
என ஒரு
ஏவல் சாதி இல்லை என்பதை
ஊருக்கு உரைப்போம்
விரைந்து வா |


உங்களின்
கொலைகள்
மதுரை வீரனில் தொடங்கி
நக்கலமுத்தையன்பட்டி
ஜக்கையன் வரை
நீட்சி பெற்றுக்கொண்டு
இருக்கிறது...
நிறுத்துங்கள் நீசத்தனத்தை|


மனுவின் பெயரால்
நீங்கள்
ஆண்டது போதும்|
நாங்கள் மாண்டது
போதும்|


இனி பொறுப்பதில்லை
என
போர்ப்பரணி பாடி வா|
அக்னிக்குஞ்சாக வா
அமைப்பாக உருவெடுத்து ...

அப்போது
சாதிச்சிமிழ்கள் உடையும்
சம நீதிப்பயிர்கள்
துளிர் விடும்...

8 comments:

மாதவராஜ் said...

மனதில் பட்டதை எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். கவிதையாக இன்னும் முயற்சி செய்ய வேண்டும்.

kashyapan said...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மண்டிக்கிடந்த கோபம் பொங்கி வழியட்டும் நண்பரே.அந்தப்பிரவாகத்தில் அத்துணையும் அடித்துச்செல்லப்படும்.வாழ்த்துக்கள்.....காஸ்யபன்

AkashSankar said...

நெருப்பாக இருக்கிறது கவிதை...

அழகிய நாட்கள் said...

மாதவராஜ்
காஸ்யபன்
ராச ராச சோழன்
அனைவருடைய பின்னூட்டத்திற்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
'எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டத்தின் வரலாறு' இது மார்க்ஸ் அவர்களின் பொன் வரிகள். ஒரு பகுதி மக்களின் வரலாறு இன்னும் வாய் மொழி வரலாறாகத்தான் தொடர்கிறது. ஏனெனில் அவர்களுக்கு இன்றளவும் கல்வி மறுப்பு எனபது தொடர்கிறது. அந்த உணர்வினின்றும் பட்டுத்தெரிக்கிற ஒரு பொறியாக இருக்கவே பதிவுலகில் கால் வைத்தேன்.

இரா. பிரபாகர் said...

கவிதையாகத்தான் இருந்தாகவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. ஆனால் சுதந்திரமாகவும் தன்மானத்தோடும் வாழ்வதற்கு ஆண்ட பரம்பரையாகத்தான் இருக்கவேண்டுமா? மனிதனாக வாழ்வதற்கு நமக்கிருக்கும் உரிமையை நிலைநாட்ட எந்த வரலாற்றையும் தோண்டிப்பார்க்கவேண்டிய அவசியமில்லை.
கோபம் தொடரட்டும்.
ப்ரபா

அழகிய நாட்கள் said...

பிரபா அவர்களுக்கு வணக்கம். தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. ஒடுக்கப்பட்ட இந்த குறிப்பிட்ட இனக்குழுவின் சார்பில் ஒருவர் ஆண்டிருக்கிறார் என்றால் அது அதியமான் மட்டுமே என்று நினைக்கிறேன். மற்றபடி எல்லாரும் சொல்லிக்கொண்டிருப்பதைப்போல 'ஆண்ட பரம்பரை' என்று சொல்லித்திரிவதில் எனக்கு எந்த வித உடன்பாடும் இல்லை.

MuthuOndiveeran said...

Really very nice to see this words, Its absolutely reflecting Arunthathiyars life,explaining them. who should take care them after wards in this caste-ist world?

I am happy to see this lines, Thanks to this writer

அழகிய நாட்கள் said...

திரு முத்து ஒண்டி வீரன் அவர்களே! தங்களது வருகைக்கும் கருத்தைப்பதிவு செய்தமைக்கும் நன்றி.
அன்புடன்
திலிப் நாராயணன்