வலைப்பதிவில் தேட...

Monday, December 27, 2010

தீண்டாமைச்சுவர்கள்

உடுமலைப்பேட்டை அருகில் ஜே ஜே நகர் பகுதியில் ஒரு தீண்டாமைச்சுவர் இப்போது கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.தலித் மக்களை அவர்களது குடியிருப்புப்பகுதிகளை முற்றிலுமாக உயர் சாதியென்று கருதுவோர் சுவர் வைத்து பிரித்து தனது சாதீய மேலாண்மையை நிறுவும் முயற்சிதான் இது போன்ற சுவர்களைக்கட்டுவது.

இதற்கு சற்றே முன்பாகத்தான் கோவை நாகராஜபுரம் சுவர் தெரிய வந்தது. அதற்குமுன் திருச்சியில் உள்ள ஒரு இடுகாட்டில் இதே போன்ற சுவர் இருந்தது மக்களின் பார்வைக்கு(சிந்தனைக்குதான் ) வந்தது.

அதற்கும் முன்பாக மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் நீண்ட தீண்டாமைச்சுவர் முதன் முதலாக வெளி வந்தது.


பிரகாஷ் காரட் வரவை ஒட்டி மே 8, 2008 அன்று ஒரு 15 அடி தூரம் இடிக்கப்பட்டது.ஆனாலும் அதை முழுவதுமாக "திருக்குலத்தார்" பயன் படுத்த முடியாத சூழல் இன்னும் இருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களைப்பிரியமாக அழைத்த வார்த்தைதான் திருக்குலத்தார் என்பது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்குதான் எத்தனை எத்தனை பெயர்கள்?
மொத்தமாக அவர்களைக்குறிப்பிடும்போது பஞ்சமர்கள் அல்லது சண்டாளர்கள் அடுத்த கட்டமாக  ஹரிஜனங்கள் ( காந்தியின் பரிசு இது) தாழ்த்தப்பட்டவர்கள், அட்டவணை சாதியினர். அதன் பிறகு தமிழக அரசின் உத்தரவுப்படி ஆதி திராவிடர். அண்ணலின் வார்த்தையின் படி தலித்துகள் ( நொறுக்கப்பட்ட மக்கள்.) இருக்கட்டும் பிரச்னையைப்பார்ப்போம். இம்மக்களுக்குள் உள்ள உட்சாதியினரைப்பற்றி இங்கே குறிப்பிடவில்லை.

திருச்சியில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் இடுகாட்டு சுவரும் கூட கொஞ்சமாக ஆட்கள் நடமாடும் அளவுக்கு இடிக்கப்பட்டது.
கோவையிலும் கூட மொத்தம் 1000 அடியில் ஒரு முப்பது இன்னொரு 23 அடி என்ற கணக்கில் இடிக்கப்பட்டது.

உடுமலைப்பேட்டையிலும் இதுபோல இடிக்கப்படக்கூடும்.
இம்மாதிரியான தீண்டாமைச்சுவர்களின் நீளம் உலகிலேயே இரண்டாவதாக அறியப்படும் மெரினா கடற்கரையின் நீளத்தையும் மிஞ்சுமோ

அல்லது சீனப்பெருஞ்சுவரையும் விஞ்சுமோ என்பதுதான்  இன்றைய  மில்லியன் டாலர் (ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் !!!!) கேள்வி.

Thursday, December 16, 2010

சைவமும் அசைவமும்

காரைக்குடி நண்பர் சித்திரவேலு (முன்னாள் இந்தியன் வங்கி ஊழியர்)தற்போது கேஸ் ஏஜென்சி, பெட்ரோல் பங்க், பஸ் போன்ற நிறுவனங்களின் தலைவர். அவரது பையன் காமேஷுக்கும்  மருத்துவர் பாண்டியன் அவர்களின் மகள் மாள்விகாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. 15/12/2010 அன்று நானும் எனது மனைவியும் சென்றிருந்தோம்.

எங்களது திருமண வரவேற்பும் கூட இதே நாளில் ஹோட்டல் சுகம் இன்டர் நேஷனல் வரவேற்பரையில் நடந்தது தோழர் ஈரோடு ராஜு தலைமை மூட்டா கணபதி வாழ்த்துரை. இன்னும் FNTO சங்கப்பிரதி நிதியாக நார்மன். NFTE  செயலர் வெங்கடேசன், கேசவன், சுப்ரமணியன், ராதாகிருஷ்ணன் அவரது மனைவி மாதர் சங்கத்தின் கமலா NFPE சார்பில் அழகு BTTU   சார்பில் ராஜு, ராஜகோபால், DYFI சார்பில் பாக்கியராஜ் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். வங்கி ஊழியர் சார்பில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் தோழர் சித்திரவேலு. அவரது மகனின் திருமண வரவேற்புதான் நான் குறிப்பிட வந்தது.

வரவேற்பு பகுதியில் கல்கண்டு சந்தனம் மற்றும் மலர்களுடன் மாதர் சங்கத்தி்ன் தோழர் கமலாவும் அவரது கணவரும்  ராதாவும்  சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.

நானும் மனைவியும் அங்கு சென்றதன் அடிப்படை காரைக்குடியை விட்டு வந்து இருபது ஆண்டுகள் நகர்ந்து விட்டன.  இருந்த போதிலும் விட்ட குறை தொட்ட குறையென
தொழிற்சங்க நண்பர்கள்,
தொலைத்தொடர்புத்துறை  நண்பர்கள்,
கல்லூரிபபேராசிரியர்
முதல் ரிக்ஷாக்காரர் வரையான ஒரு இழையோடிய உறவுகளின் முகத்தைப்பார்க்கவும் அவர்களின் மனதின் பகிர்வுக்காகவும்  ஒரு ரவுண்டு பார்த்து பேசிவிட்டு (அளவளாவி விட்டு என்று கொள்க)  வந்து விடலாம் என்றுதான் இந்தப்பயணம் அமைந்தது.

காலை எட்டரை மணிக்கு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஹோட்டல் மெரினாவில் டிஃபன் சாப்பிட உட்கார்ந்த போதே எதிர்ப்பட்டவர் தோழர் எம் என் எஸ் வெங்கட்டராமன். தூரத்தில் இருந்த தோழர் எஸ் ஏ பெருமாள் (தோழர் எஸ் ஏ பி தான் எனது திருமணத்தை 10/12/1986 அன்று விருது நகர் சிமினி நந்தவனத்தில் தலைமை தாங்கி நடத்தி வைத்தவர் என்பது ஒரு முக்கிய விஷயம்).

கல்யாண வரவேற்பில் கோட்டையூர் மெல்லிசைக்கச்சேரி விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

பேராசிரியை ஆவுடையம்மாள், சி பி ஐ கட்சியின் பி எல் ராமச்சந்திரன், மாதா ஜுவல்லர்ஸ் பரஞ்சோதி, வங்கி மாரியப்பன், பத்து என்கிற பத்மனாபன். போஸ்டல் அழகு, அண்ணன் வீரமாகாளி, மோகன் தாஸ்,    ராதாகிருஷ்ணன், வீ. கே பரமசிவன், பாலு, பூமி, சுப்பிரமணியன்,  ரகுபதி ( சயின்டிஸ்ட்) என்று ஒரு பெரிய பட்டியலின்  நண்பர்களைச்சந்தித்தோம்.

காரைக்குடிப்பக்கம்  விருந்து என்றால் அது செட்டி  நாடு சமையல்விருந்துதான். கல்யாண  வீடுகளில் பெரும்பாலும் நான்-வெஜ் உணவுதான் இருக்கும்.
வெஜ்  என்றால் கூட்டம் குறையும். 
குறிப்பாக வெஜ்-ஐ விடவும்
நான்-வெஜ்  மிகவும் பிரமாதமாக இருக்கும்.கோழி, மீன், ராட்டு, நண்டு, எலும்பு சூப்,  நுரையீரல் கூட்டு, முட்டை, மட்டன் சுக்கா கோலா உருண்டை இஞ்சித்துவையல் இன்னும் இது போல...

மண்டபத்தில் சாப்பிட இருபகுதியாகப்பிரித்திருந்தார்கள். ஒன்று சைவம் மற்றொன்று அசைவம. நல்லவேளையாக வைணவ சமையல் என்று எதுவும் இல்லை.

நியாயப்படி பார்த்தால் மரக்கறி உணவு என்றும் புலால் உணவு என்றும் இருந்திருக்க வேண்டும் அதுதான் முறைமை. வழமை பண்பாடு என்று கொள்ள முடியும்.  சைவம் என்று சொல்லுகிறபொழுதில் அதைத்தான் தழுவி சென்று கொண்டிருக்கிறோமா என்று நினைக்கக்கூட நேரம் இல்லாதவர்கள் விரும்பி சாப்பிடுவது புலால் உணவைத்தான்.

புத்தர் தோன்றியதற்கு முன்பிலிருந்து ஆரியர்கள் கூட ஆடு மாடு மேய்த்து வந்த காரணத்தால் அதன் புலாலையே உண்டிருக்கிறார்கள்.  கொல்லாமையென்பதே இப்படிப்பட்ட பழக்க வழக்கத்தை எதிர்த்து உருவானதுதான்.  அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கரர் சைவத்தை வளர்க்க முற்பட்ட நேரத்தில் தான் இராமானுஜர் வைணவத்தை வளர்த்தெடுத்திருக்கிறார். தீண்டாதவரை இவர் அழைத்தது "திருக்குலத்தார்" என்று மரியாதையாக.

காலப்போக்கில் வைணவம் சைவம் இரண்டும் "இந்து" என்கிற பந்தமாகிப்போனதோ? என்னவோ தெரியவில்லை...
புத்தம் சீக்கியம் ஜைனம் எல்லாமே சைவத்தின் கிளையாகிப்போனதோ? பதிலில்லை...
உணவிலும் கூட சைவம் பெரிதென்று ஆகிப்போனதன் விளைவு மாற்றுச் சொல்லாடலாக அசைவம் என்று உருவெடுத்து விட்டதோ என்னவோ!

Saturday, November 20, 2010

சுகப்பிரசவம் அல்லது பேறுகாலம்

முத்துராமன் பட்டி ரயில்வே கேட் அருகில்தான் ரிக் ஷா ஸ்டாண்டு. எதிரே மாரியப்பன் டீ கடை. அடுத்ததாக இளைஞர்கள் மன்றம். பெரும்பாலும் குமரி அனந்தன் அவர்களின் பேச்சு முழங்கிக்கொண்டிருக்கும். எல்லாம்டேப் ரெக்கார்டர் மூலமாத்தான். சி டி
 டிவிடி அப்போதெல்லாம் இல்லவே இல்லை. காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பின் (அரசியல் கட்சியின் தலைவராக அவர் அப்போது இருந்தார்)

அடுத்தாற்போல்  நந்தவனத்துடன் கூடிய தெலாக்கிணறு( துலாம்) கிணற்றுக்கு ஊடாக பெரிய இரண்டு பட்டிக்கல் (ஒழுங்காக வடிவமைக்கப்ப்ட்ட பாறாங்கல்தான்). சில பெட்டிக்கடைகள்.சலூன் ஒன்று வாடகை சைக்கிள் கடை ஒன்று  இப்படி..
 ரயில்வே கேட்டின் வடக்காக கேட் கீப்பர் உட்காரும் ஒரு அறை. தெற்காக முனிசிபாலிடி சார்பிலமைக்கப்பட்ட குடி நீர்  பொதுக்குழாய்
கேட் கீப்பர் ரூமுக்கு கிழக்கே மணி நகரம் செல்லும் ரோடு. அதன் எதிரில் சாலையைக்கடந்தால் டி இ எல் சி சர்ச் வளாகம் அதன் மூலையில் பர்மா கடை.

வழக்கமாக இரவு நேர ரிக் ஷா வாடகைக்கு எடுத்து ஓட்ட வேண்டிய நிலைமையில் நான். சொந்த ரிக் ஷா என்னிடம் இல்லை. ஒரு நாள் இரவு மட்டும் வாடகை ரூ 1.50 . காலையில் வண்டி மாத்த வரும் ரிக்சாக்காரருக்கு பர்மாக்கடையிலிருந்து அல்லது மாரியப்பன் கடையிலிருந்து ஒரு டீயுடன் வாடகையும் தரவேண்டும். மாலைய்ல் வண்டி எடுக்க நான் வரும்போது ஒரு டீ உண்டு.

இப்படித்தான் அன்றைக்கு இரவு  நியு முத்து டாக்கீசுகு ஒரு சவாரி மட்டும் போய் விட்டு ஜேப்பில் ஒன்னாரூபாயோடு இருந்த நேரம்.  மணி பதினொன்றைத்தொட்டிருக்கும். சவாரி ஒன்றும் வரவில்லை. நான் ரிக் ஷா மெத்தையில் படுத்துவிட்டேன்.


பனிரென்டரை மணி சுமாருக்கு ஒருவர் சைக்கிளில் வந்து படுத்திருந்த என்னை எழுப்பி
சவாரி வருமா என்றார். 
சரி என்றேன்.
காட்டாஸ்பத்திரி போகணும்
வண்டியை இழுத்து அவர் பின்னாலேயே போனேன். சிவந்திபுரம் சந்து அது. இடையில் ஒரு கல் வேறு வண்டியை லாவகமாக ஒடித்து வீட்டின் முன் நிறுத்தினேன்.
பிரசவ வலியோடு அவரது மனைவி பக்கத்து வீட்டம்மாவின் துணையோடு  கையில் துணிப்பையோடு ஏற்றிக்கொண்டேன்.

வண்டியை எகிறி எகிறி மிதிக்கத்துவங்கினேன். முத்துராமன் பட்டி கேட்டிலிருந்து  நியூ முத்து டாக்கீஸ் வரை ஓரே மேடுதான்.  மணி நகரம் அப்புறம் ஒன்னாம் நம்பர் பால் பண்ணை, வாடியான் கேட், புதுத்தெரு தாண்டி, தந்தி மர ரயில்வே கேட், காமராஜ் நகர் போர்டைக்கடந்து வலதுபுறம் திரும்பி  ராமமூர்த்தி ரோட்டில் சென்று, ஆஞ்சனேயா லாட்ஜ் தாண்டி அதே திக்கத்தில் கடைசியில் இருந்த காட்டாஸ்பத்திரி கொண்டு போய் சேர்த்தேன்.  தாதிகள் வந்து பிரசவ வலியுடன் துடித்துக்கொண்டிருட்ந்த அந்த கூலிக்காரரின் மனைவியை அழைத்து உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.

துண்டை எடுத்து வியர்வையை அழுந்தத்துடைத்துக்கொண்டேன்.
சைக்கிளில் பின்னாலேயே  அந்த கூலிக்காரரும் வந்து சேர்ந்தார்.
வாடகை எதுவும் முதலில் பேசவில்லை நான்.
அவரிடம் வாடகை கேட்டேன். அவர் அரக்கப்பரக்க முழித்தார்.
சரிதான் காசு இவரிடம் இல்லை போல என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அதிக நேரம் பிடிக்க வில்லை.

சரி என்று வண்டியை எடுத்துகொண்டு திருப்பி போக எத்தனித்தேன். தற்செயலாக ரிக்ஷாவின் உள்ளே  பார்ததேன் ரிக்ஷாவின் தொட்டியில் (ஆட்கள் உட்கார்ந்து கொள்வது மெத்தை கால் வைக்கும் இடம் தொட்டி)
 ஒரே தண்ணீர்க்காடு. பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த அந்தப்பெண்ணுக்கு கன்னிக்குடம் உடைந்து அப்படி ஆகியிருக்கிறது. எனக்கு ஒரே கவலையாகிப்போய் விட்டது.  வண்டிக்காரன் கையில் காலையில் வண்டியை கொடுக்கும்போது வாடை கடை இருக்கக்கூடாது என்றுதான்  எனது கவலை.

மெத்தையைதூக்கிப்பார்த்தேன் பழைய துணி இருந்தது. ஆனால் இந்த ஈரத்துக்கு அது சரிப்பட்டு வராது.

வாடியான் கேட் அருகில் பங்க் பர்மாகடையில் போய் ஒரு பதினைஞ்சு பைசா மஞ்சக்கலர் செல்லம் சோப் வாங்கிக்கொண்டேன்.

வண்டியை நேராக முத்துராமன் பட்டி கேட்டு குழாய்க்கு விட்டேன். அப்போதெல்லாம் எந்த நேரமும் தண்ணீர் வரும்

தண்ணீரைப்பிடித்து ஊத்தி ஊத்தி நன்றாககழுவினேன்
சற்றே வாடை குறைந்தது.
பசி எடுத்தது
மணி மூன்றை நெருங்கிவிட்டது.
பர்மா கடையில் சூடான மொச்சை ரெடியாகிக்கொண்டிருந்தது.

Friday, November 19, 2010

சமையல்காரன்

எழுபதுகளின் மத்தியில் பிள்ளையோ பிள்ளை, பூக்காரி படங்களுக்குப்பிறகு சமையல்காரன் என்ற ஒரு படம் வந்தது மு க முத்து நடித்தவை இம்மூன்று படங்களும். எம்ஜி ஆர் கூட " நீதிக்குத்தலைவணங்கு " என்ற ஒரு படத்தில் சமையல் காரனாக நடித்திருப்பார். "ஆக்கப்பொறுத்த அம்மாவுக்கு ஆறப்பொறுக்கலை" என்ற வரியில் லதாவுக்கு பதில் சொல்லி அவர் பாடியிருப்பார் ( டி எம் எஸ் குரல்தான்)

எண்பதுகளின் துவக்கக்த்தில் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி ஆன பிறகு ரிக் ஷாக்காரனாக கொஞ்ச நாள் பிழைப்பு ஓடியது.
வயித்துப்பாடு என்றுதான் சொல்லவேண்டும்.
என்னுடன் படித்து மூன்றாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திய ராஜேந்திரன் என்னோடு வா சமையல் வேலைக்குப்போவோம் என்றான். என்னதான் அந்த வேலை என்று பார்த்து விடலாம் என்று அவனோடு போனேன்.

சமையல் வேலையின் காண்ட்ராக்ட் எடுத்து செய்பவர்தான் கொத்தனார்.
அவர் ஆணையின் படி சொல்லும் வேலைகளை  நாம் செய்ய வேண்டும். மண்டபத்திற்கு சமையல் பாத்திரங்களுடனும், காய்கறி, பலசரக்கு சாமான் களோடும்  (விறகையும் சேர்த்துதான்) மதியம் மூன்று மணிக்குமேல் வாக்கில் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு சேர்ப்பதில் அந்த சமையல்காரன் வேலை துவங்கும்.

இப்போதெல்லாம் மண்டபங்களில் சமையல் கேஸ் இருக்கிறது.
உட்கார்ந்து சாப்பிட பெஞ்ச் ஏற்பாடு இருக்கிறது. அப்போதெல்லாம் ஒரு பந்திப்பாய்தான் விரிக்க சுருட்ட கொட்டிய கழிவை விளக்கமாறு வைத்து கூட்டி சுத்தம் செய்ய என்று இருந்தது.

ஒரு நாலு மணியைப்போல பால் வந்தவுடன் பிசுபிசுவென்று திக்கான ஒரு காபி கிடைத்தது. ஒரு சாக்கை எடுத்து பிரித்துக்கொட்டச்சொன்னார் கொத்தனார். அது நிறைய பச்சைப்பட்டாணி. இன்னொரு மூட்டையை பிரிக்கச்சொன்னார். அது நிறைய சின்ன வெங்காயம் ( சென்னை வெங்காயம் என்றுவடக்கே மும்பை, குஜராத்தில் சொல்லுகிறார்கள்; அங்கேயெல்லாம் வெங்காயம் என்றால் நாம் இங்கே சொல்லுகிறோமே "பெல்லாரி" அது மட்டும்தான் கிடைக்கும்)

பச்சைபட்டாணியை உரிக்க ஆரம்பித்தோம் மலைபோல் இருந்தது குறையவில்லை இரண்டு மணி நேரத்திற்கும் மேல் இருக்கும் கைகள் ஒய்ந்து போய் விடும் வரை பட்டாணிதான்.மதியச்சாப்பாட்டுக்குதான்

அடுதது சின்ன வெங்காயம் மூக்கையும் வாலையும் வெட்
வெட்டிக்குவிக்கவேண்டும். காலை இட்லிக்கும் மதிய சாப்பாட்டுக்கும் சாம்பாருக்குதான்.

எட்டுமணி சுமாருக்கு இரவுசாப்பாடு ரெடியாகி விட்டது. கல்யாண வீட்டுக்காரர்கள்
அனைவரும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சாப்பிடும் வரை பந்திப்பாயில் உட்காரவைத்து சாப்பாடு போட வேண்டும்.
கடைசியாக எங்கள் முறை. ஒருவர் அமர இன்னொருவர் பரிமாற என்று
புளிக்கூட்டு, பால்சாதம் ;புளிக்குழம்பு;  இரண்டு கூட்டு (ஒன்று பொரியல் மற்றொன்று கூட்டு).

மறு நாள் காலை டிஃபன்  கலர் கேசரி,வெண் பொங்கல்,இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி , காரசட்னிக்கான வேலைகள் ஆரம்பமானது
இட்லி அவிக்கும் வேலை ஒன்று இருக்கிறது. பெரிய இட்லிசட்டியில் இட்லிஊத்தி வைக்கும் வேலை நமது.  விறகுக்கட்டை அடுப்பில் எரிய அதற்கே உரிய புகை கண்ணை என்ன சேதி என்று கேட்க, தூக்கம் ஒருபக்கம் வர இரவு இரண்டு மணி வரை வேலை.

ஒரு ஐந்து மணிக்கெல்லாம் இறக்கை கட்டிக்கொண்ட சுறுசுறுப்பில் காலையின் காபியோடு
முகூர்த்த நேரம் முடியும் முன்பாக டிஃபன் பரிமாற வேண்டும்.
இரவில் வந்தவர்களை விட அதிகமான விருந்தினர்கள் வந்திருந்த படியால் நீண்ட பந்தியில் உட்கார்ந்த அனைவருக்கும் ஓரேமூச்சில் குனிந்த தலை நிமிராமல் பரிமாறிக்கொண்டே செல்ல வேண்டும். இடையில் நிமிர்ந்தால் கொத்தனார் கத்துவார். குறுக்கு செத்துப்போகும்.

திருப்பூட்டு( தாலி கட்டுவதுதான்) முடிந்தவுடன் மதிய சாப்பாடு தொடங்கி விடும். சீர்திருத்தக்கல்யாணம்தான் அதிக பட்சம். ஹோமம் வளர்த்து அதில் நெய்யை விட்டு புகை மண்டலததை உருவாக்கும் வேலை இங்கே அறவே இல்லை.

முப்பதுகளில் இவ்வகை சீர்திருத்தக்கல்யாணத்தை விருது நகரில் பெரியார் அவர்கள் முதன் முறையாக நடத்தி  நல்லதொரு துவக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.  அதே போல பிராமணர்கள் சமையல்தான் பிரதானம் என்பதையும் மாற்றி தம்முடைய கட்சியின் (தி.க) மா நாடுகளில் விருது நகர் நாடார்கள் சமையல் நடை பெறும் என்ற அறிவிப்பையும் செய்ததாக அவரது வரலாற்றின் பக்கங்களிலிருந்து  அறிய முடிகிறது.

அதுசரி. நமது சமையல் கலையில் அடுத்த நிகழ்வு என்பது இதுதான். தாலிகட்டி முடிந்தவுடன் அடித்துப்பிடித்துக்கொண்டு பந்தியில் உட்கார வருவார்கள் திருமண விழாவிற்கு வந்தவர்கள்.
திரும்பவும் பந்திப்பாய், பரிமாறுதல், வாளிகள் மாறும்,  சட்டிகள் மாறும் வேலை மட்டும் இருந்துகொண்டே இருக்கும். ஜாம்,ஊறுகாய், உப்பு, பட்டாணி, கத்தரிக்காய் கூட்டு,உருளைக்கிழங்கு கூட்டு, முட்டைக்கோஸ் பொரிகறி, அப்பளம் சாதம் சாம்பார், ரசம், பாயாசம், மோர் என்று வரிசைப்படி பரிமாற பந்திகள் முடியும்.

அனைவரும் சாப்பிட்டு முடிய மணி ஒன்றரை இரண்டு ஆகிவிடும் அதற்கடுத்தபடியாக நமக்கான சாப்பாடு. சில  காய்கறிகள் காலியாகியும் இருக்கும் இருப்பதை வைத்து சிறப்புடன் வயிறு அளவுக்கு ஒரு வெட்டு.

அப்புறம் பாத்திரங்களை கழுவவேண்டும்.திரும்பவும் தள்ளுவண்டி. சாமான் கள் எல்லாம் அருப்புக்கோட்டை ரோடு மண்டபத்திலிருந்து தெப்பம் மேற்கிலிருக்கும் சமையல் கார சங்கத்தில் ஒப்படைத்து விட்டு சில கிளாசுகள் குறைந்தால் அந்தக்கணக்கு வேறு.
அப்படியே வீட்டுக்குப்போய் படுத்தால் பிணம்தான்.

இரவு எட்டு மணி சுமாருக்கு திரும்பவும் கொத்தனாரைத்தேடி சம்பளம் வாங்க தெப்பம் மேற்குப்பகுதிக்கு. அவர் கல்யாண வீட்டுக்காரர்களிடம் சிட்டையை முடித்து பணப்பட்டுவாடா வழங்குவார்.

எனது சம்பளமாக ஒரு 15 ரூபாய் எனக்கு வழங்கப்பட்டது இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கிறது.

Thursday, October 21, 2010

ரிக் ஷாக்காரன்

பட்டப்படிப்பு முடிந்தது.
விடுமுறையும் வேலையின்மையும் சேர்ந்து விரட்டத்துவங்கியிருந்தது.
பத்துரூபாய்க்காசுக்கு வேலை கிடைப்பது அரிது.
என்னுடன் படித்த நண்பன் ராஜேந்திரன் இரண்டாவதிலோ அல்லது மூன்றாவதிலோ படிப்பை நிறுத்திக்கொண்டவன்.

முத்து ராமன் பட்டி சைக்கிள் ரிக் ஷா ஸ்டாண்டில் வண்டி ஓடிக்கொண்டிருந்தான். வீட்டில் சும்மா இருக்கப்பிடிக்காமல் ரிக் ஷா ஸ்டாண்டுக்குப்போய் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
பர்மாக்கடை டீ அப்போது இருபத்தைந்து பைசா.

முததுராமன் பட்டியிலிருந்து வரும் சவாரிகள் பொதுவாக பஸ் ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி,( அப்போதெல்லாம் ஒரு ஆஸ்பத்திரி கூட முத்துராமன் பட்டியில் இல்லை; அதிகபட்சமாகப்போனால்  லைசாண்டர் ஆஸ்பத்திரி அல்லது அரசு ஆஸ்பத்திரி அதுவும் இல்லையென்றால் காட்டாஸ்பத்திரி (பிரசவ ஆஸ்பத்திரிதான் அது)) என்று இருக்கும் சில  நேரங்களி தியேட்டர் சவாரியும் அமையும்.

படித்து விட்டு வெறுமனே அல்லது "சிவனே"
என்று யாரும் இருக்க முடியாது நான் மட்டும் விதி விலக்கா என்ன?

பகலில் ஏதாவது பஸ் ஸ்டாண்டு அல்லது ரயில்வே ஸ்டேஷன் சவாரி வந்தால் ஏற்றிக்கொண்டு போய் இறக்கி விட்டால் ஒன்னரை ரூபாய் (பஸ் ஸ்டாண்டுக்கு) அல்லது இரண்டரை ரூபாய் ( ரயிலடிக்கு) தருவார்கள்.

வண்டிக்காரனிடம் சொல்லிவிட்டு ஒரு சவாரி போய் விட்டு வந்தால் எழுதப்படாத சட்டமாக வாங்கிய கூலியில் பாதி ( பவுஸ்) கிடைக்கும்.

ரிக் ஷா வண்டி ஓட்டப்பழகியது ஒன்றும் பெரிய வேலையாக எனக்குப்படவில்லை. ஏனென்றால் ராஜேந்திரன் போன்ற நண்பர்களின் வண்டியில் அவ்வப்போது பழகியது.

அனேகம் பேருக்கு அது சைக்கிள் ஒட்டுவது போல் அவ்வளவு எளிதில்லை
அது ஒரு மூன்று சக்கர வாகனமாகையால் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டு போய் கவிழ வேண்டியிருக்கும்.

எம்ஜியார் ரிக் ஷாக்காரன் படம்  நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த போது வெளீயானது. நான் எட்டாவது வார வால் போஸ்டரை ரசித்துப்பார்த்து இருக்கிறேன். அதில் மீசைக்கார எம்ஜியார் ஜஸ்டினும் போடும் சண்டைக்காட்சி இருக்கும். இந்தப்படத்துக்குதான் எம்ஜியார்  "பாரத்" பட்டம் பெற்றார் என்பது என் நினைவுக்கு வருகிறது.

கடைசியில் நானும் அவரைப்போலவே ஒரு ரிக் ஷாக்காரன் ஆனேன்.
பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு சவாரி வந்தது. ஒன்னாரூபாய் பேசி, என்னை கொண்டு போய் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுவிட்டு வரச்சொன்னான் மாப்பிள்ளை மாரியப்பன்.

முத்து ராமன் பட்டி ரயில்வே கிராசிங் தாண்டி, செந்தி வினாயகபுரம் தெரு. மாங்கா மச்சி பள்ளி, அறிவியல் மன்றம் தாண்டி, கீழக்கடை பஜார் திரும்பி, வல்லக்காலில் பல் ஆஸ்பத்திரி. அப்போதுதான் இடது புரமாக எதிரே வந்த கை வண்டிக்காக வளைக்கிறேன் ஆசாமி என்ற பேரில், ஒரு வீலை (இடது) வல்லக்காலில் ஆஸ்பத்திரிக்கு நேர் எதிரில் இறக்கி விட்டேன்.

உட்கார்ந்திருந்த சவாரி இருவர் (கணவன் மனைவி) என்னைத்திட்டிக்கொண்டே இறங்கினார்கள். இன்னொரு ரிக் ஷாக்காரர் அவரது வண்டியை ஒரங்கட்டி நிறுத்தி விட்டு வந்து விழுந்து கிடந்த  இடது வீலைத்தூக்கி ரோட்டில் வைத்து,  சவாரி இருவரையும் திரும்ப ரிக்ஷாவில் உட்கார வைத்து எந்த ஸ்டாண்டு? புதுசா? பார்த்துப்போ! என்று சொல்லிவிட்டு போனார்.

காசுக்கடை பஜார் வந்து  நாராயணன் புக் ஸ்டோர் கடந்து மாரியம்மன் கோவில் முன்பாக வந்து தேரடி வெயிலுகந்தம்மன் கோவில், கொடிமரம் தாண்டி பீட் திரும்பி சென்ட்ரல் சினிமா கடந்து சக்தி ஹோட்டலுக்கு எதிராக நிறுத்தி சவாரியை இறக்கி விட்டேன்.

வியர்வையைத்துடைத்துக்கொண்டே காசை வாங்கினேன் ஒரு ஒரு ரூபாய்     நோட்டும் ஒரு எட்டணாவும் எனது கைகளில் சிரித்தது.
அதில் முக்கால் ரூபாய் எனது உழைப்பிற்கானதாக்கும்!

Tuesday, October 19, 2010

பதின் வயது நினைவுகள் 3

விருது நகர் பராசக்தி மாரியம்மன் கோவில்  பொங்கல் திருவிழா வருடாவருடம் ஏப்ரல் முதல் வாரத்தில் (தமிழ் மாதம் பங்குனி கடைசியில்)  நடை பெறுகிறது. பொங்கல் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும். அன்றைக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு கையில் வேப்ப இலைகளுடன் வலம் வருவார்கள்.  மறு நாள் பக்தர்கள் அம்மனுக்கும் நேர்ந்து கொண்டபடி கயிறு குத்துவது, தீச்சட்டி எடுப்பது, மாவிளக்கு எடுப்பது, ஆயிரங்கண் பானை வாங்கி சமர்ப்பிப்பது, கண் மலர், கை கால், முழு உருவ பொம்மை (ஆண் பெண்) , தவழும் குழந்தை போன்ற மண் படைப்புகளை
அம்மனுக்கு படைப்பது, அலகு குத்துவது, பின் முதுகில் இரு இடங்களில் குத்தி ஒரு சிறிய தேரை இழுப்பது என்று நிறைய பக்தியின் முறைகள் இருக்கிறது.  இன்றைக்கும் இத்திருவிழா பிரசித்தி பெற்றது இந்தப்பகுதியிலும் விருது நகர் சுற்றுப்பட்டி மற்றும் வட்டாரங்களிலும்.

எங்கள் பதின் வயதுகளில்  மார்பெல்லாம் சந்தனம் பூசி, புதிய வேட்டி கட்டி
புதிய தலைப்பாகை கட்டிக்கொண்டு, தோளில் தொங்கிக்கொண்டிருக்கும்
"கிடுக்கட்டி" என்னும் ஒரு தோல் கருவியின் உதவியால்"டன் டன டன் டன" என்று அடித்துக்கொண்டு சரியாக பொங்கல் திருவிழாவிற்கு 21 நாட்களுக்கு முந்தைய ஒரு இரவில் திருவிழாவினைப்பற்றி உரக்க அறிவித்துக்கொண்டு வருவார். (நெல்லை மாவட்டங்களில் இத்தகைய திருவிழக்களுக்கு "கொடை" என்று சொல்லுகிறார்கள். இங்கே அப்படியெல்லாம் கிடையாது. பொங்கல் திரு நாள் என்று கூட சொல்லுவதில்லை வெறுமனே "பொங்கல்" என்று மட்டுமே குறிப்பிடுவார்கள் இன்றைக்கும்கூட)
நாங்களெல்லாம் பின்னாடியே ஓடுவோம்.

பொங்கல் அறிவிக்கப்படுவதை 'சாட்டுதல்' என்று சொல்லுவார்கள். சாட்டியது முதல் எங்களுக்கெல்லாம் ஒரே 'கவுண்ட் டவுன்' தான்.
என்னும் எத்தனை நாள் இருக்கிறது? நம்ம தெருவில் யார் யாரெல்லாம் கயிறுகுத்துகிறார்கள்? யார் யாரெல்லாம் தீச்சட்டி( அக்கினிச்சட்டி) எடுக்கிறார்கள்.பொங்கலுக்கு முன்பாக ஒருவாரகாலத்திற்கு  பொட்டலில் நடக்கும் நாடகங்கள் போவது, ராட்டினங்கள் சுத்தப்போவது என்று மிகவும்
ஆர்வமாக இருப்போம்.

வருடா வருடம்  குறைந்தது  இரண்டு ராட்டினங்கள் ஒன்று குடைவடிவிலானது மற்றொன்று மேலிருந்து கீழாக சுற்றி வருவது  என்று போட்டு இருப்பார்கள். அப்போதெல்லாம் அறுபது அடி ராட்ஷச ராட்டினம் இல்லை.  நாடகம் பார்க்கப்போய், அது ஆரம்பிக்க லேட் ஆனதால்
நண்பர்கள் சிலபேருடன் சேர்ந்து ராட்டினம் சுத்தக்கிளம்பினோம். ஒருவர் கையிலும் காசு என்பது இல்லை. அந்த குடை ராட்டினத்தின் மேல் கொஞ்சம் ஆசை. மேல் கீழ் ராட்டினத்தில் ஏறினால் குடலைப்புரட்டிஎடுக்கும். வாந்தி வரும் தலை சுற்றும், கிறு கிறுப்பும் வரும்


கருப்பையா சுருக்குப்பையோடு நிற்கும் அந்த ராட்டின உரிமையாளர் பெண்ணிடம் போய் அப்பாவியாக நின்று கேட்டான். நாங்கள் நான்கு பேர். உங்களுக்கு உதவியாக ராட்டினம் சுத்த எங்களை அனுமதிப்பீர்களா? என்று அந்தப்பெண்மனி நீங்கள் ராட்டினம் ஏறி சுத்த வேண்டுமென்றால் நான் சொல்லும் வரை ஏறி உட்கார்ந்திருப்பவர்களுக்காக  நீங்க்ள் சுற்ற வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்கள்.

சரி என்று ஒத்துக்கொண்டோம். கருப்பையா, நான் மற்றும் இரண்டு பேர் ராட்டினத்தில் ஏறி ஜம்பமாக உட்கார்ந்திருக்கும் எங்கள் வயதொத்தவர்களை சுத்தினோம். அந்தக்குதிரை வடிவில் உட்கார்ந்திருப்பவனுக்கு மட்டற்ற சந்தோஷம் இருக்கும்.
கொஞ்ச நேரம் சுத்தி விட்டால் நாமும் அந்த குதிரை வடிவிலான பொம்மை ராட்டினத்தில் ஏற வாய்ப்பு கிடைக்குமே என்று எண்ண அலைகள் சுற்றியது. கொஞ்ச நேரம் சுத்தி விட்டு விட்டு அப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

கூட்டம் குறைந்து விட்டது போலத்தெரிந்ததும், அந்த அம்மா எங்களை ஏறி உட்கார சொன்னார். குதிரையில் நான் உட்கார்ந்தேன்.  நாங்களே தள்ளி விட்டு நாங்களே சுத்தும்படியான் ஒரு நிலமை வந்தது. கொஞ்ச நேரத்தில் கிறு கிறுவென்று வந்தது. ராட்டினத்தை விட்டு விலகி தூரப்போய் படுத்துக்கொண்டேன். 
கொஞ்ச நேரம் கழித்து நன்றாக ராட்டினத்தில் ஆடிவிட்டு கருப்பையா கொஞ்சம் கூட அசராமல் வந்தான் என்னை எழுப்பினான் பிளாஸ்டிக் கிளாஸ் தண்ணியோடு. நான் நிமிர்ந்து பார்த்தேன்.மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தேன் வீடு    நோக்கி கருப்பையாவின் தோளில் கை போட்டபடி.

Tuesday, October 12, 2010

பதின் வயது நினைவுகள் 2

எட்டாவது வரைதான் அப்போது விருது நகர்  முத்துராமன்பட்டியில் இருக்கும் சௌடாம்பிகை பள்ளியில் படிக்க முடியும். அது அப்போது ஒரு நடு நிலைப்பள்ளி.( இப்போது அது ஒரு மேனிலைப்பள்ளி) அதற்குப்பிறகு கே வி எஸ், ஹாஜி பி,சுப்பையா நாடார் அரசுப்பள்ளி என  உயர் நிலைப்பள்ளிக்கல்வி படிக்க இயலும். அப்படித்தான் ஒன்பதாவது வகுப்பில் ஹாஜிபி செய்யது முகமது உயர் நிலைப்பள்ளியில் அப்பா சேர்த்து விட்டிருந்தார். விருது நகர் மெயின் பஜாரில் உள்ள மாரியம்மன் புக் சென்டருக்கு எதிர்த்த ரகுமானியா சூ மார்ட்டில் அப்பா செருப்பு சரி செய்யும் வேலை செய்து வந்தார்.

மதியம் 12 40 க்கு பள்ளி முடியும். 2 மணிக்கு மறுபடியும் வகுப்பு தொடங்கும். முத்துராமன் பட்டியின் கடைசியில் இருக்கும் வீட்டுக்கு போய் வர நேரமாகும் என்றெண்ணி மதிய நேரங்களில் அப்பா வேலை செய்யும் கடைக்கு சில நாட்களில் வந்து விடுவது உண்டு.  பொட்டலில் அப்போதெல்லாம் இரண்டு மூன்று தள்ளுவண்டிக்கடைகளில்
10 பைசா பாயாசம் படு ஜோராக விற்பனையாகும். அப்பாவிடம் போனால் கால்ரூபாய் (25 பைசா) கிடைக்கும். அப்படியே பொட்டலில் ஒரு பாயாசம் குடித்து விட்டு மிச்சம் 15 பைசாவோடு பள்ளிக்கு சென்று விடுவேன். இல்லை என்றால் பெ. சி. தெருவில் மாம்பழப்பேட்டைக்கு எதிர்த்த சந்தின் முகப்பில் ஒரு கிளப் கடை (ஹோட்டல்தான்) இருக்கும். அங்கே ஐ ஆர் 8 அரிசியில் சமைத்த சாப்பாடு ஒரு கப் கத்தரிக்காய் சாம்பார் சகிதமான மதிய நேரச்சாப்பாட்டை முடித்துக்கொள்ளலாம்.
 
இப்படித்தான் அன்றைக்கும் ஒரு கால் ரூபாயை வாங்கிக்கொண்டு பள்ளியை நோக்கி நடந்தேன். பாயாசம் கூட குடிக்கவில்லை. பாம்பாட்டிக்காரன் மகுடியுடன் தனது வேலையை அப்போதுதான் துவங்கியிருந்தான். ஒரு கோழி முட்டை ஒரு செவலை நிறப்பாம்பு அது சரியான சோம்பேறி. நெளிந்து கொண்டு இருந்தது. அந்த மோடி மஸ்தானைச்சுற்றி கூட்டம் நின்றது. சிறிது நேரத்தில் அனைவரையும் அவனது கவனத்துக்குள் கொண்டு வந்து விட்டான். திடீரென ஒரு பையன் கூட்டத்திலிருந்து அவனது கட்டுப்பாட்டுக்குள் எலும்புகூடு பக்கத்தில் ஒடிப்போய் படுத்துக்கொண்டான்.  ஒரு துணியை எடுத்து அவனது முகத்தை மூடி அதன் மேல் ஒரு தாயித்தை வைத்து பிறகு ஆரம்பித்தான் பேச..
 
வா இந்தப்பக்கம்
வந்தேன்
கேட்டால்
சொல்வேன் என வியாபார உத்தியை உசுப்பி  விட்டான்
அவன் கையிலிருந்த தாயித்தை எல்லோரும் வாங்கிப்போகும் படியாக சொன்னான்.
 
பயந்த சிலர் வாங்கினார்கள். கடமையே என நினைத்து சிலர் வாங்கினார்கள். பெருமையாகவும் சிலர் வாங்கினார்கள். பார்த்ததற்கான கட்டணமாக நினைத்து சிலர் வாங்கினார்கள். சிலர் காசு இருந்தும் வாங்காமல் இருந்திருக்கலாமா என்பது தெரியவில்லை
 
எனக்கு பயம் வந்து விட்டது
இருக்கும் கால் ரூபாயை விட்டு விட்டு (அவனிடம் கொடுத்துவிட்டு)போகவா என்று பசியில் எச்சிலை முழுங்கிக்கொண்டிருந்தேன்.
காசு இருந்தும் போடாமல் போனால் மூனே நாளில் ரத்தம் கக்கிச்சாவான் என்று சாபமும் விட்டான்.
நான் காசு போடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.
கொஞ்ச நேரத்தில் எல்லோரையும் கலைந்து போகச்சொன்னான்.
நான் தான் கடைசில் போனவனாக இருப்பேன்.
மயக்கத்தில் விழுந்த என் வயதுப்பையன் இப்போது எழுந்தான்.
சிரித்தான்
அவனது வாய் வெற்றிலை போட்டு சிவந்தது போல் இருந்தது.

Monday, October 11, 2010

பதின் வயது நினைவுகள் 1

அப்போது பதினோராம் வகுப்பு ( பெரிய பத்து) படித்துக்கொண்டிருந்தேன். பள்ளித்தலைமை ஆசிரியர் தான் வகுப்பின் பொறுப்பாசிரியர். அவருக்குள்ள வேலைப்பளுவின் காரணமாக தமிழாசிரியர் ஒருவரை வகுப்பாசிரியர் போல் நியமித்துக்கொண்டார். தலைமை ஆசிரியர் ஆங்கிலப்பாடம் எடுப்பார். அப்போது ஆறு பாடங்கள் படிக்க வேண்டும்.  தமிழ், ஆங்கிலம், கணிதம், சரித்திரம் &பூகோளம், விஞ்ஞனம் (அதாவது தமிழ், ஆங்கிலம்,கணக்கு, வரலாறு&புவியியல் மற்றும் அறிவியல்). இந்த ஐந்து பாடங்களுடன் கூடஒன்று அது  விருப்பப்பாடம். நான் எடுத்தது ரசாயனம்( வேதியியல்தான்).  நான் படித்த பள்ளி முஸ்லிம் நிர்வாகத்தினரால் நடத்தப்பெறும் அரசு உதவி பெறும் உயர் நிலைப்பள்ளி (மேனிலைப்பள்ளி அல்ல)  எனவே வாய்த்த தமிழாசிரியர் ஒரு முஸ்லிம் ஆக இருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

ஒரு நாள் பள்ளியில் அவர் நடந்து கொண்ட விதம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராக இருக்கும் ஒருவர் கூட சாதிக்கட்டுமானத்ததுக்குள் கறாராக இருக்கிறார்  என்ற எண்ணத்தை ஆழமாக என்னுள் அவர் படர விட்டு  விட்டார். இந்தப்பதிவிற்குக்காரணமே அந்த பாதிப்புதான் என்றால் அது மிகையல்ல..

அன்றைக்கு ஒரு  நாள் .மதிய நேரம் சாப்பாட்டுக்குப்பின் பள்ளி துவங்கியது. தமிழாசிரியர் வகுப்பறைக்குள் வந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வகுப்பறைக்குள் இருந்த மாணவர்களைப்பார்த்து ஒவ்வொருவராக எழுந்து அவரவர் அப்பாவின் பெயரை சாதிப்பெயருடன் சேர்த்து சொல்லுங்கள் என்றார்.
நான் நான் காவது பென்ஞ்சில் இருப்பது தெரியாமல் கூனிக்குறுகி..

நான் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகன். தெருவில் சக்கிலியப்பயக என்பார்கள்.  சம்சாரிமார்கள் சிலபேர் பகடைகள் என்பார்கள் சுடுகாட்டு வேலை செய்வதால் வெட்டியான் என்பார்கள். அல்லம்பட்டியில் உள்ள செட்டிமார்கள் 'மாதாரி அக்கிளு' (மாதாரிப்பசங்க) என்று சொல்லுவார்கள். எந்தச்சாதியின் பெயரை எல்லோர் முன்னிலையிலும்  சொல்லித்தொலைப்பது என்று புரியவில்லை.
அந்த நேரம் வகுப்பறையை விட்டு வெளியே ஓடிப்போகலாமா என்று கூட யோசித்தேன். ஆனாலும் அடி பெத்து சாக வேண்டுமே என்று உட்கார்ந்திருந்தேன். நிமிடங்கள் யுகங்களாகக்கரைந்து கொண்டிருந்தது. 

சக மாணவர்கள் ஒவ்வொருவராக  அவர்கள் அப்பாவின்  பெயர் எல்லாம் 'ர்' விகுதியில் முடியும் சாதியின் பெயரை சொல்லி சொல்லி கம்பீரமாக அமர்ந்தார்கள். எனக்குள் எந்த சாதியின் பெயரை சொல்லுவது என்ற குழப்பம் தலை கிறுகிறுக்கும் அளவுக்கு இருந்தது.  எனக்குத் தெரிந்த ஒரு ஆதிதிராவிட மாணவன் அவன் பெயர் காளிமுத்து அவனது அப்பாவின் பெயரை சொல்லும் நேரம் வந்தது. அவனது அப்பாவின் பெயரோ சங்கையா. அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை அவனது  அப்பாவின் பெயரை  மரியாதையாக "ர்" விகுதியொட்டுடன் கூடிய ஒரு சாதிப்பெயருடன் இணைத்து 'சங்கையா..........ர்' என்று சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டான் சமர்த்தாக.. ஒருகணம் நானு யோசித்தேன் இதே போல மரியாதைக்குரிய சாதிப்பெயர்களில் ஒன்றை ஒற்றாக இணைத்து எனது அப்பா பெயரையும் குறிப்பிட்டுவிட்டால் என்ன? என்று கூட ஒடியது மனதில்... அதற்கான தைரியம் வரவில்லை. சரி விஷயத்துக்கு வருவோம்.

என் பெயர் நாராயணன் அப்பாவின் பெயர் அர்ஜுனன். பிறந்தது முதல் குடியிருப்பது மாத்த நாயக்கன் பட்டி பாதை   என்ன வந்தாலும் சரி அப்பாவின் பெயரை சாதிய ஒட்டு இல்லாமல் சொல்லிவிடவேண்டியதுதான் என்று இறுதியாக முடிவெடுத்தேன்.
என்னுடைய நேரம் நெருங்கியது. மூர்ச்சையாக விழாத குறைதான்.

' என் அப்பாவின் பெயர் அர்ஜுனன்'    - நான்.

'அர்ஜுனன்'    ம்ம்ம்ம்ம்     -ஆசிரியர்.

அடுத்தவனை எழுப்பி அவனது அப்பாவின் பெயரை சாதியின் ஒட்டோடு சொல்ல ஆணையிட்டார் ஆசிரியர்

Friday, September 24, 2010

வரும் நாட்கள் அழகானதாக இருக்குமா?

எனது வலைத்தளத்திற்கு அழகிய நாட்கள் என்று பெயரிட்டு இத்துடன் 50 ஆவது பதிவாகிறது. உண்மையில் சொல்லப்போனால் இள வயது பதின்வயது நினைவுகளில் அலை ஓட்டத்தைப்பதிவு செய்யவே அழகிய நாட்கள் என்று பெயரிட்டேன்.

"பட்டிக்காடா பட்டணமா" படத்தில் ஒரு காட்சி வரும்.  நகர்ப்புற மனைவி ஒரு கள்ளிச்செடியை வீட்டுக்குள் கொண்டு வந்து ஏற்கனவே வைத்திருந்த கலப்பையை அகற்றி விட்டு அந்த  இடத்தில் கள்ளிச்செடியை வைத்து விடுவார்.    நாட்டுப்புற கணவன் மூக்கையா வீட்டுக்கு வந்து அதிர்ச்சியாகி கேட்பார். கலப்பையை ஏன் எடுத்தாய் என்று அதற்கு அந்தப்பெண் பதில் சொல்லுவாரே " அழகும் ஆபாசமும் பார்ப்பவர் கண்களில் இருக்கிறது" எனவே நான் செய்ததில் ஒன்றும் தவறில்லை என்பார்.

கிட்டத்தட்ட இந்த நிலைமையில் தான் இன்றைக்கு நாடு இருக்கிறது.
செப் 24 அலகாபாத் நீதி மன்றம் பாபரா ராமரா என முடிவு செய்ய இருக்கிறது அதை ஒட்டி நாடு முழுதும் ரணகளமாகாமல் இருக்க முழுப்பக்க விளம்பரங்கள் வேண்டுகோள்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த தீர்ப்பும் வருகிற செப் 28 க்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  அமைதி நிலவினால் அழகிய நாட்கள் இருக்கும்

அக் 3 முதல் 14 வரை நடக்க இருக்கும் காமன் வெல்த் விளையாட்டுகளில் சரியான மைதானம், தங்குமிடம் அமைக்கப்படவில்லை என்பது ஒரு செய்தியாகி இருக்கிறது. 36000 கோடி ரூபாய் செலவழித்தும் நிறைவடையவில்லை பணிகள். ஊழல் அதிகாரிகள் சிலர் சுரேஷ் கல்மாதிக்கு மிக  நெருக்கமான அதிகாரிகள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ  நான் ஒரு ஆயிரம் கோடி ரூபாய்க்குதான் பொறுப்பேற்பேன் என்று சொல்லுகிறார்.
டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தோ ரூபாய் 780 கோடியை SC/ST  நிதியிலிருந்து இந்த காமன் வெல்த் விளையாட்டுக்காக ஒதுக்கி விட்டு 
ஒரு கல்யாண வீடு போலத்தான் இந்த விளையாட்டு. சின்னச்சின்ன குறைகள் எல்லாம் சரியாகப்போய்விடும் என்கிறார்.

பிரதமரோ அவசர அவசரமாக கூட்டம் போட்டு எல்லாம் சரியாக நடக்கட்டும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் என்கிறார் சிறந்த நிர்வாகி என்ற பட்டத்தை அமெரிக்கா அறிவித்த கையோடு.

கங்கையும் யமுனையும் பிரம்மபுத்திராவும் வெள்ளத்தில் ஜனங்களை மூழ்கடித்து சில நூறு பேர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கிறது.

மூன்று லட்சம் ஊழியர்களில் ஒரு லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்ப அரசு நிறுவனமான பி எஸ் என் எல்லில் திட்டம் தயாராக இருக்கிறது

பத்து லட்சத்துக்குமேற்பட்ட இளைஞர்கள் வேலையின்றி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போக்கு கூடிக்கொண்டு இருக்கிறது

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாமல் நீங்க வேண்டும்
என்ற பட்டுக்கோட்டையின் கனவு
மட்டும் அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது மனதை.

Thursday, September 16, 2010

தியாகி இம்மானுவேல் சேகரன்

1957 செப்டம்பர் 11 அன்று பாரதி  நினைவு நாள். அவரது நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த இம்மானுவேல் சேகரன் என்ற ஒரு இளைஞரை ஒன்றினைந்த ராம நாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி நகரில் 33  வயது நிரம்பிய ஒரு மாவீரனை ஒரு கோழையர்கள் கூட்டம் வெட்டி வீழ்த்துகிறது. அப்போது காங்கிரசின் காமராஜர் ஆட்சி நடந்து  கொண்டிருந்தது. தலித் மக்களுக்கான விடுதலைக்காக போராடத்துவங்கிய கொஞ்ச நாட்களிலேயே அந்த முன்னாள் ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டார்.  2010  செப்டம்பர் அன்று அவரது 53  ஆவது நினைவு நாள்.

பரமக்குடியில் அரசு ஊழியர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய ஒரு சமாதியில் அஞ்சலி நிகழ்ச்சி வருடாவருடம் அதாவது கடந்த 53  வருடங்களாக நடந்து வருகிறது.
கடந்த ஆறேழு வருடங்களாகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்து அஞ்சலி செலுத்தும் தலித் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்று மருதமலர் ஆசிரியர் உமாசங்கர் குறிப்பிடுகிறார்.

இந்த முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமேற்பட்டு  செப்டம்பர் 11 அன்று பரமக்குடி வரை சென்று வர ஒரு மகிழுந்துவில் விருது நகரிலிருந்து நண்பர் வைரமணி மற்றும்  விருது நகர் முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் அகியோருடன் சென்றேன்.
கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் சாரை சாரையாக மக்கள் வெள்ளம். லோடு வேன், கார், பஸ், லாரி இருசக்கர வாகனங்கள், நடை என்று கூட்டமோ கூட்டம். நாங்கள் பரமக்குடி அரசு மருத்துவ மனைக்கு மேல்  வாகனத்தில் செல்ல முடியவில்லை.
ஒரு நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் காட்டுப்பரமக்குடி  தாண்டி  நடந்து சென்றோம்.  வழியெங்கும் ஃப்ளக்ஸ் போர்டுகள் சுவரொட்டிகள். ஆதித்தமிழர் பேரவை, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற இயக்கங்களின் சார்பாக வாழ்த்து சுவரொட்டிகள்.


76  வகையான தலித்துகளில் பிரதானமாக அறியப்படுவது பள்ளர், பறையர், சக்கிலியர்
அநேகமாக இந்த மூன்று சாதியினரும் பங்கேற்கும் மாபெரும் விழாவாக இருக்கிறது இந்த குருபூசை நிகழ்ச்சி. குறைந்த எண்ணிக்கையிலான குறவர், புதிரைவண்ணான்  போன்ற மற்ற தலித்துகளும் விடுபடாமல் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெறுகிறது. ஐந்தில் ஒரு பகுதியாக அறியப்படும் தலித்துகளின் ஒன்று பட்ட எழுச்சியைப்பார்ர்க முடிந்தது.
அரசு விழாவாக இந்த குருபூசை நிகழ்ச்சியை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட வலுவாக எழுந்திருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். ஏனெனில்  ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்கள்  ஒருங்கிணைந்து வருகிறது என்பது தான் ஆதாரம்.

Wednesday, September 8, 2010

சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்.

"சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்
வெறும் சோற்றுக்கே வந்ததிப்பஞ்சம்"
-மகா கவி பாரதி.

"அரசு உணவுக்கிடங்குகளில் தகுந்த முறையில் பாதுகாக்க வழியின்றி அழுகிக்கொண்டிருக்கும் அல்லது எலிகள்சாப்பிட்டுக்
கொழுத்துக்கொண்டிருக்கும் சுமார் 7 லட்சம் கோடி டன் உணவுப்பொருளை   தேசம் முழுதும் பரவிக்கிடக்கும் 37 கோடி ஏழை ஜனங்களுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும்"
- உச்ச நீதி மன்றம்

"உச்ச நீதி மன்றம் குறிப்பிட்டது ஆணையல்ல;
வெறும் வழி காட்டுதலே அல்லது ஆலோசனை மட்டுமே "
-மத்திய வேளாண் மந்திரி சரத் பவார்.

ஆலோசனை ஒன்றும் வழங்கவில்லை;
உண்மையிலேயே ஏழைகளுக்கு இலவசமாக உணவுப்பொருட்களை வழங்கவே உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது
-மறுபடியும் உச்ச நீதிமன்றம்.

அரசின் கொள்கைகளில் தலையிடுவதற்கு உச்சநீதி மன்றத்தின் வேலையல்ல. இலவசமாக விளை பொருட்களை வழங்கினால் அது விவசாயப்பெருங்குடி மக்களுக்கு செய்யும் துரோகம்
- பாரதப்பிரதமர் மன்மோகன் சிங்

'பெரிய மனுஷன் சொன்னா பேப்பரிலே போடுவாங்க
சின்ன மனுஷன் சொன்னா ஜெயிலிலே போடுவாங்க'
- கலைவாணர் என். எஸ் கே.

சரியான ஒரு தீர்ப்புக்கு மிகச்சரியான நேரத்தில் ( ?)
பத்திரிகையாளர் மத்தியில் தனது அக்கரையை (!)
வெளிப்படுத்தியிருக்கிறார் பிரதமர்.

இதேபோல தொலைத்தொடர்புத்துறையில் நடந்த
2 ஜி ஏலத்தின் போது (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்)
பிரதமரின் ஆலோசனைப்படிதான் குறைந்த விலைக்கு
ஏலம் விடப்பட்டது என்று தொடர்ச்சியாக சொல்லிகொண்டிருந்த
மந்திரியின் குரலுக்கு

இதுவரை வாய் திறக்காத நமது பிரதமரை நினைத்தால்....

உண்மையிலே சொல்லக்கொதிக்குது நெஞ்சம்.

Monday, August 30, 2010

கோத்ரா நாட்கள் 3

ஆமதாபாத்தும், பரோடாவும் கோத்ரா ரயில் எரிப்பின் (58 பேர் ரயில் எரிப்பில் சாம்பலானார்கள்) பின்னணியில் மனித உயிர்களின் கருகல் புகை மண்டலத்தில் ( சுமார் இரண்டாயிரம் பேர் வரை படுகொலை செய்யப்பட்டனர்) மிதந்து கொண்டிருந்த நேரம் அது.
பரோடாவில் (வடோதரா என்பது தற்போதைய பெயர்)  முக்கிய வீதியில் இருந்த ஒரு மசூதிகூட
(தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அது வரை இருந்து வந்தது) இடிக்கப்பட்டது.

நான் கோத்ராவில் மொத்தம் வாழ்ந்திருந்த இரண்டரை ஆண்டுகளில் எட்டு முறை விருது நகருக்கு வந்து போய் இருந்திருக்கிறேன்.
பரோடா ரயில் நிலையம் இருப்பது மகாராஜா சாயாஜிராவ் (MS UNIVERSITY)பல்கலைக்கழகத்தின் எதிரில். அண்ணல் அம்பேத்கர் பணியாற்றிய பெருமையுடையது. சிறந்த கல்விமானாகிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குப்பணி செய்ய நியமிக்கப்பட்ட ஒரு சாதி வெறியனால்   குடிக்ககூட தண்ணீர் மொண்டு கொடுக்க/ கோப்புகளைத்தூக்கிச்செல்ல மறுத்த காரணத்தால்குறைந்த காலத்தில் இந்தப்பல்கலைக்கழகத்தினின்றும் வெளியேறி மறுபடியும் பம்பாய் ( 1995 முதல் மும்பை) சென்று குடியேறினார் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இந்துத்துவா பரிசோதனைக்கூடமாக மோடி குஜராத்தை மாற்றியமைக்க முடிவெடுத்தன் பின்னணியில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு எம் எஸ் பல்கலைக்கழகப்பேராசிரியர் பணிக்கர் இந்துத்துவா ஆட்களால் தாக்கப்பட்டார் என்பதை நாம் அறிவோம் பணிக்கர் அவர்களது   மாணவர்களது ஓவியங்களுக்காகவும் அதில் உள்ள உணர்வுகள் மதககோட்பாடு ரீதியாகவும் தங்களை புண்படுத்துவதாகவும் முடிவெடுத்தடன் விளைவாக இந்தக்கொடுமை நடந்தேறியது. கோத்ராவுக்கும் பரோடாவுக்கும் 75 கி மீ தூரம்.  ஒன்றரை மணி நேர ரயில்/பேருந்து பயணம்.

மதக்கலவர நாட்களில் ஒரு முறை இப்படித்தான் விருது  நகருக்கு கிளம்பி வர ஒரு முறை நேர்ந்தது. அவ்வப்போது விடுமுறையில் எட்டுநாட்கள் வந்து விட்டுப் போவதை பாப்பா "எப்போப்ப முழுசா வருவீங்க" என்று கேட்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இரவு  பத்து மணிக்கு கோத்ராவிலிந்து புறப்பட்டு பரோடா பஸ் ஸ்டேஷன்  சேர்ந்தேன்.   பனிரெண்டு மணியளவில் ரயில்  நிலையம் இரண்டாம் வகுப்பு தங்கும் அறைக்கு சென்றேன். (திரு நெல்வேலியில் ஜங்க்ஷனுக்கு பக்கத்தில் பஸ்  நிலையம் இருப்பதுபோல்தான் பரோடாவிலும்  ஜங்க்ஷனுக்கு எதிரில்  பஸ்  நிலையம் இருக்கிறது)

டிக்கெட் பரிசோதகர்  வ ந்து டிக்கெட்கேட்டார்.நான் பேருந்தில் வந்த விபரம் சொன்னேன். ரயில் டிக்கெட் கேட்டார். காலை எட்டரை  மணிக்கு செல்லவேண்டிய  நவ ஜீவனின் டிக்கட்டை காண்பத்தேன். வெளியே போக ஆணையிட்டார். பெட்டியோடு வாசலுக்கு வந்தேன். எம் எஸ் பல்லைக்கழக நுண்கலை மாணவர்கள் சிலர் லைவ் ஒவியங்களுக்காக சிரத்தை எடுத்துக்கொண்டிருந்தார்கள். பலர்  விடுதிக்கு சென்று விட்டார்கள் போல.

என்னைப்போலவே விரட்டப்பட்டவர்கள்   நிறை ந்து கிடந்தார்கள். ஆட்டோக்காரர்கள் பிச்சைக்காரர்கள் பயணத்திற்கு காத்திருப்பவர்கள் என விழித்திருக்கும் மதுரை போல பரோடா ஸ்டேஷன் மின்னியது.
உட்கார்ந்து கொண்டேதூங்க முயற்சித்தேன்
இரணடு மணி ஆகியது
மணி மூன்றைக்கடந்தது
கண்கள் செருகின
துணி மணி அடங்கிய பெட்டி பறி போய்விடுமோ என்ற பயம வேறு என்னைத் தொல்லைப்படுத்தியது.  பெட்டியில்  கை வை த்து அப்படியே தலைசாய்த்து நன்றாக அசந்திருப்பேன் மணி  ஐந்தரை.  சந்த டி அதிகமானது. கண்கள்
நெரு  நெரு வென எரிச்சலுடன்.
பெட்டியைத்தூக்கிக்கொண்டுமீண்டும் இரண்டாவது வகுப்பு வெயிட்டிங்க ஹாலுக்குப் போனேன் முகத்தைக்ழுவ.
டிககெட்
செக்கர் யாரும் இல்லை.

Sunday, August 8, 2010

நெஞ்சில் உரமுமின்றி .....

"நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத்திறமும் இன்றி
வஞ்சனை செய்வாரடி
கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி"
பாரதியின் பொன் வரிகள் இது.


அது 1999 மத்தியில் ஆண்டு கொண்டிருந்தது
தேசீய ஜன நாயக முன்னணி (பா. ஜ. க தலைமை)
வழக்கொழிந்து கொண்டிருந்த( இன்றைக்கும் கூட)
சமஸ்கிருதத்தை செம்மொழியாக அறிவித்து
ஆயிரம் கோடிரூபாயில் அம்மொழியின்
பெருமை, தொன்மை பற்றிப்பறை சாற்ற
வேண்டிய ஏற்பாடுகள்  நாடு முழுவதும் தூள்
பறந்து கொண்டிருந்தன.


மதுரையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத்
தேர்வு செய்யப்பட்ட மோகன் தனது கன்னிப்பேச்சைத்
தாய்த்தமிழில் துவக்கி முழங்குகிறார்.  அதற்கான
முன்னொப்புதலை முறையாகப்பெற்றுதான்.
1999ஆம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக அறிவித்ததைப்போல்
2000 ஆவது ஆண்டை தமிழ் மொழியைல் செம்மொழியாக அறிவித்திட
வேண்டும் என்ற கோரிக்கையை அவர் உரத்து எழுப்பினார்.


உலகத்தின்தொன்மையான மொழிகள் என்றால்  கிரேக்கம், லததீன்,தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவதான். இயேசு நாதம் போதித்த ஹிப்ரு மொழி கூட இப்போது வழக்கில் இல்லை எனப்படுகிறது.


அதே மதுரையிலிருந்து பத்தாண்டுகள் இடைவெளிக்குப்பிறகு( 2009இல்) தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு. மு. க. அழகிரி. மத்திய ரசாயனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர்.  பாராளுமன்றத்துக்கு சென்று சுமார் ஒன்னேககால் வருடம் கழித்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது கன்னிப்பேச்சை (த்தமிழில் அல்ல) ஆங்கிலத்தில் எழுதிப்படித்திருக்கிறார்.  தமிழுக்காக போராட்டம் நடத்தி தமிழே மூச்சு என்று வாழ்ந்திருக்கும் திமுக உறுப்பினருக்கு இந்த கதியாவென நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.

எட்டாம் அட்டவணையில் தற்சமயம் 22 மொழிகள் அங்கீரிக்கப்பட்டு இருக்கிறது மத்திய அரசால். ஆனாலும் மந்திரியாக இருப்பவர்கள் பாராளு மன்றத்தில்பேசவேண்டும் என்றால் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச அனுமதிக்கப்படுவார்களாம்.

இந்தி தெரிந்த தயா நிதி மாறன் போன்றவர்களுக்கு இந்தப்பிரச்னையெல்லாம் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் 9 மொழிகளில் பேசிக்கொள்ளலாம் அனைத்து மொழிகளிலும் கேட்கும் "மொழிமாற்ற வசதியோடு"

இன்றைக்கு இருக்கிற நவீன தொழில் நுட்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கும் இந்த வசதி செய்தது தர முடியும் என்கிறார்  சீதாராம் எச்சூரி எம்.பி.

கோவையில் உலகச்செம்மொழித்தமிழ்  நாடு மாநாடு ( மானாட மயிலாட போலல்ல) நடந்து முடிந்திருக்கிறது. தலைக்குடிமகள் பிரதீபா வந்து சென்றிருக்கிறார்.  அதே நேரத்தில்தான்  உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாட போராடிக்கொண்டிருந்தார்கள்.
பாராளுமன்றத்தில் அவரவர் தாய் மொழியில் பேசுவதற்கான ஏற்பாடு ஒன்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடவும் வாய்ப்பு வாய்க்கப்பெறும் நாள் எந்த நாளோ.

"கூட்டத்தில் கூடி நின்று
கூவிப்பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி
நாளில் மறப்பாரடி"

என்னும் பாரதியின் வரிகள் மெய்ப்படக்கூடாது

Thursday, August 5, 2010

மாண்பு மிகுந்தவர்கள்...

காமன் வெல்த் போட்டி வரும் அக்டோபரில் நடக்க இருக்கிறது. டெல்லிமாநகரத்தில். ரூபாய் 36000 கோடி அளவுக்கு  ஊழல் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக கும்பகோணம் மாண்பு மிகு எம்.பி மணிசங்கர அய்யர் தெரிவித்து இருக்கிறார். அவர் காங்கிரஸ் மந்திரிசபையிலும் கூட இருக்கிறார்.

சுமார்    ஏழு  நூறு கோடி ரொக்கப்பணம் டெல்லி மாநில அரசாங்கத்தால் அட்டவணை சாதியினருக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தனி நிதியினின்றும் இந்த விளையாட்டுப்போட்டிக்கு  ஒதுக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. RTI  சட்டத்தின் அடிப்படையில் வந்த புள்ளி விபரங்களை தன்னார்வ நிறுவனம் ஒன்று கையில் வைத்திருக்கிறது.

இதே போலத்தான் நமது மதுரை எம். பி மற்றும்  உர மந்திரி செம்மொழி மா நாட்டுப்பந்தலிலிருந்து பறந்து சென்று பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு
காபினெட்டில் சம்மதம் தெரிவித்து விட்டு வந்தார். பெட்ரோல் உயர்வு சிறிதளவேனும்  மக்களைப்பாதிக்கத்தான் செய்யும் என்று பொன்மொழி விடுத்தார் கோவையில்.

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் பணிகள் முடங்கும் அளவுக்கு விவாதங்கள் வாதப்பிரதிவாதங்கள் தெரித்துக்கொண்டிருக்கிறது.

முப்பத்தி மூன்று சதமான மகளிர் ஒதுக்கீடு
இந்தப்பரபரப்பில் நிறைவேறத்தான் வேண்டும்.


பாதி மந்திரிமார்கள் பாராளுமன்றத்திலும், ராஜ்ய சபையிலும் கோடீஸ்வரர்களாக வயது வரம்பின்றி குழுமி இருப்பதை அவ்வப்போது ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள்  அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்   ஒரு லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாகக்கூறப்படும் தொலைத்தொடர்பு மந்திரி
எந்த பாதிப்பும் இல்லாமல்  3 ஜி யில் அரசுக்கு அதிக லாபம் செய்துகொண்டிருக்கிறார்.

பி எஸ் என் எல்  நிறுவனத்திடமிருந்து ரூபாய் 18 500 கோடி ரூபாய் அரசுக்கு 2ஜி சேவைக்காகவும் அகன்ற கற்றை சேவைக்காகவும் அரசுக்கு கப்பம் கட்டிய வகையிலும் முழுமையான அரசு நிறுவனமோ மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டுவதைப்போன்று
அல்லது அரசு நிர்ணயித்தபடி பணம் கட்டி சேவை செய்வதன் விளைவாகவும்
முதன் முறையாக ரூபாய்   1823  கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கித்துவங்கியிருக்கிறது.

ஆனாலும் என்ன மக்களின் பிரதி நிதிகளான நமது மாண்பு மிகு உறுப்பினர்களின் சம்பளம்தான் உயரப்போகிறதே! அவர்கள் தற்சமயம் பெற்று வருவதைப்பாருங்கள்:
மாதசம்பளம்                                                 : ரூ 12000
மாத தொகுதி செலவு                              : ரூ 10000
மாத அலுவலக செலவு                         : ரூ 14000
மாத பயண செலவு                                    : ரூ 48000
தினசரி படி                                                      : ரூ     500
முதல் வகுப்பு ஏ சி ரயில் பயணம்( அகில இந்திய அளவில்) எத்தனை முறையேனும்.
விமானப்பயணம் வருடத்திற்கு            40  முறை
(மனைவியுடன்/உதவியாளருடன்)
எம் பி தங்கும் வீடு டெல்லியில்           : இலவசம்
மின்சார செலவு  அதிகபட்சம்                   50000 யூனிட்டுகள்
இலவச தொலைபேசி அழைப்புகள்    170000  கால்கள்
மாத செலவு மட்டும்                                    2.66  லட்சங்கள்.
வருடத்திற்கு சுமாராக                               32  லட்சங்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு சராசரியாக
 ஒரு எம் பிக்கு  ஆகும் செலவு            : 1,60,00,000
(ஒரு கோடியே அறுபது லட்சம் மட்டும்தான்).

இந்த சலுகைகளும் சம்பளமும் போதாதென்று ஒவ்வொரு எம்.பிக்கும் ஆகும் செலவை நடப்புக்கூட்டத்தொடரிலேயே
ஐந்து மடங்கு அதிகரிக்க முடிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன்என்பதில் பெருமை கொள்ள வேண்டிய தருணமாகவும் நம்மை நாமே
இவர்களோடு சமகாலத்தில் வாழும் திறன் படைத்த  பாக்கியவான்களாகக் கருதிக்கொள்ளவுமான  நேரமல்லாமல் வேறென்ன?

Saturday, July 31, 2010

'தேரை' மனிதர்கள்


'இவன் தேற மாட்டான்' என்று எப்போதாவது யார் மூலமாவது  நமது வாழ்வில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கேள்விப்பட்டிருப்போம். தேரை விழுந்த குழந்தைகளைப்பற்றி ஒரு உண்மை நிகழ்வைப்பார்ப்போம். தேரை விழுந்த தேங்காயைப்பற்றிக்கேள்விப்பட்டு இருப்பீர்கள். பாம்பு மேலே ஊர்ந்து  சென்றபடியாகயால் கசக்கும் வெள்ளரிக்காயைப்ப்ற்றியும் கூட நமக்கு சிலர் சொல்லியிருப்பார்கள். தேரை விழுந்த குழந்தை சரியான நோஞ்சானாக இருக்கும். வாகான வளர்ச்சி இருக்காது. கிட்டத்தட்ட வறுமையில் தத்தளித்துக்கொண்டிருந்த சோமாலியாக்குழந்தைகளைப்போல் பார்ப்பதற்கு இருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டாதுகள்.  பால் குடித்தால் திரள் திரளாக வாந்தி யெடுப்பார்கள். கண்கள் சொருகினாற்போல் இருக்கும். வரிவரியாக விலாத்தட்டு எலும்புகள் தெரிய சுறு சுறுப்பில்லாமல், சிரிக்கக்கூட வழியில்லாமல் இருப்பார்கள். நான்கு மாதத்திலிருந்து ஒருவருடத்துக்குள் இந்தக்குழந்தைகளை தேரைக்குழந்தைகள் என பெற்றோர்கள் அனுமானித்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்கென்று ஒரு எளிய வைத்தியமுறை இருந்தது நான் சிறுவனாக இருந்தகா லங்களில். இப்போதுநடைமுறையில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. தேரை விழுந்த குழந்தையை பிரதான வீதியில் அல்லது மேற்குப்பக்கம் குடியிருக்கும் சம்சாரிகள் தூக்கிக்கொண்டு ஊருக்குக்கிழக்குப்பக்கத்தில் குடியிருக்கும் அருந்ததியர் சமூக மக்களிடம் கொண்டு செல்வார்கள். அவர்களிடம் உலர வைத்த மாட்டு நரம்பு (பாடம் செய்தது) கிடைக்கும். தோல் தொழிலும் செய்வார்கள். மாட்டை உரித்து அதன் தோலை பதப்படுத்தி தோல் பொருட்கள் செய்வதில் பரம்பரையாக வந்தவர்கள். வழக்கமாக சம்சாரிமார்களின் வீட்டுக்குதேவையான கமலை,வார், மாட்டுக்கு மணிவார், கழுத்துப்பட்டை,சாட்டைக்குச்சிக்கான தோல் போன்ற வேலைகள் செய்வது இம்மக்களது வழக்கம். எனது தந்தையாரும் இந்தவே லைகள் செய்வார்.

தேரை விழுந்தகுழந்தைக்கானமருந்துவேறொன்றுமில்லை. அதிகாலையில் எழுந்து ஏதாவது   வாழைத்தோப்புக்குப்போய் வாழைமரத்துக்குள் பாதுகாப்பாக குடியிருக்கும் மிருதுவான பளபளப்பான தேரை ஒன்றை அப்பா பிடித்து வருவார். அதற்குமு்ன்பாக தோலினால் ஆன ஒரு சிறு பை (2"X2" சைஸ்) தயாரித்து வைத்திருப்பார். நரம்பும் கூடவேதான். அந்தநாட்களில் குழந்தையை க்காலையில் தூக்கிகொண்டு தாய்மார்கள் ஒன்னேகால் ரூபா காணிககை மற்றும் தேங்காய், பழம், சூடம், சாம்பிராணி, வெற்றிலை, தெக்கம்பாக்கு சகிதம் வீட்டு வாசலில் வந்து காத்திருப்பார்கள். வீட்டுக்குள் வருவது மரபான ஒன்றல்ல அவர்களைப்பொருத்த வரையில் ஏனென்றால் இது சேரி ஜனங்களின் (பஞ்சமர்கள்)குடியிருப்பு அவர்கள் விவசாயம் செய்யும் சூத்திரர்கள்.

வாழைத்தோப்பிலிருந்து அப்பா வந்ததும், அவர் மேற்கு பார்த்து உட்கார்ந்துகொ ண்டு குழந்தையக் கிழக்குப்பார்த்து காட்டசொல்லுவார். வெற்றிலை மேல் கொஞ்சம் அடுப்புசாம்பலை வைத்து அதன் மேல் சூடத்தைப்பற்றவைத்து தேங்காயை சூடு காண்பித்து தட்டக்கல்லில் ஒரு தட்டு தட்டுவார். தேங்காய்த்தண்ணியை மூன்று முறை சுறறி தெளித்து விட்டு ஏற்கனவே செய்துவைத்திருந்த தோல் பைக்குள் தேரையை வைத்துத்தைத்து, நரம்பு வழியாகக்கோர்த்து( நரம்பு இல்லையென்றால் மாட்டுத்தோலில் சாட்டைக்குச்சிக்கு செய்வதைப்போல் ஒரு மெல்லிய கயிறு போல அறுத்து ஆஸ் செய்து ) ஒரு மாரடியைப்போல் (பிராமணர்களின் முப்புரி  நூல் மார்பில் கிடப்பதைப்போல) குழந்தையின் நெஞ்சில் வைத்து கட்டி விடுவார்.
அப்புறம் குழந்தையின் தாயிடம் குழந்தையைத்தூக்கிக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் அவர்களது வீட்டுக்கு கொண்டு போகசொல்லுவார்.
அந்தக்குழந்தைகளின் உடம்பின் மேல் கிடக்கும் இத்தகைய தேரை மருத்துவ மாரடிகள்   சில நாடகளில் கீழே விழுந்துவிடும்.
நடப்பிலேயே அவர்கள் பால் குடிக்க, சிரிக்க,கொஞ்சம் விளையாட , நடக்க என்று இயல்பான குழந்தையாக நாளடைவில் (ஒருவருடத்துக்குள்) மாறி விடுவார்கள்.

இன்னும் சில ஆண் குழந்தைகள் அடிக்கடி தங்கள் பிறப்புறப்பை பிடித்துக்கொண்டிருப்பார்கள். அதைப்"பிணி" என்று  அம்மாகூட சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன் . தோலை ஒரு இரண்டு இன்ச் அளவுக்கு வெட்டி அதை அறைஞாண் கயிற்றில் கோர்த்து விட்டுவிடுவார் அப்பா.
பிறகு அந்தக்குழந்தைகள் இந்தவாரைப்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

Friday, July 30, 2010

நோயாளியாக வேண்டாம்

அரச வாழ்வு வாழ்ந்து வந்த சித்தார்த்தன் இந்த சமூகத்தில்  மனம் மாறியதற்கு மூன்று காரணங்கள் உண்டு; நோயாளி, வயது முதிர்ந்தவர், மரணமடைந்தவர். என்பனவேஅவை. அந்த வழியில் நோயாளி என்ற முறையில் மனமிறங்கினார் புத்தர்.
ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்லும் முன்பாக கிங்கரர்கள் போல் இருவர் படுக்கையிலிருந்து ஸ்ட்ரெச்சருக்கு மாற்றி, ஸ்ட்ரெச்சரிலிருந்து மற்றொரு தடவை ஆபரேஷன் செய்யும் படுக்கைக்கு மாற்றி வைக்கிறார்கள். பச்சைக்கலர் முகமூடியும் அதுவுமாய். மூக்கில் ஒரு குழாயை மாட்டி, மயக்கமடையவைக்கிறார்கள். அப்புறம் ஒருமணி நேரம் கழித்து கிட்டத்தட்ட விழிப்பு அல்லது சுய நினைவு வரும் நேரம் சுருக் சுருக் என்று கிழித்த இடத்தைத்தைப்பது கொஞ்சம் சுயமான உணர்ச்சியை வரவழைக்கிறது. விழிக்கட்டுமென்று செல்லமாக கன்னத்தில் தட்டி பெயரைசொல்லி எழுப்புவது சற்றே காதில் விழுகிறது. அத்தோடு, குண்டுக்கட்டாகத்தூக்கி, பழையபடியும் ஸ்ட்ரெச்சருக்கு மாற்றி உயரத்தை உயர்த்தி விருவிருவென்று உருட்டிக்கொண்டு போய் நோயாளீயின் அறைக்குக்கொண்டு சென்று அன்பாக அப்படியே தூக்கி படுக்கையில் போட்டு விட்டு நகருகிறார்கள் அந்த்மு ரட்டு மனிதர்கள்.

ஒருமணி நேரம் கழித்து சற்றே உணர்வு வரவும், குடும்பத்தாரை,உறவினரை, நண்பர்களைப்பார்க்க விழிகள் கசிகிறது. மாமா மகன் குமார் சிரித்தான். அந்த கிங்கர மனிதர்களைப்பற்றிக்கேட்டேன். அவர்கள் முரட்டுத்தனமாக மனிதர்களை ஏன் இப்படி கையாளுகிறார்கள் என்றேன். அவன் சொன்னான் "மாமா அவர்களை நான் கொஞ்சம் கவனித்தேன் உங்களைத்தியேட்டருக்குக்கொண்டு போகும் முன்" என்றான்.

நோய் அல்லது விபத்து என்று யாருக்கும் வந்து விடக்கூடாது என்று நான் எனக்குள் நினைத்தேன் அதை அப்படியே என் மனைவியிடமும் பகிர்ந்துகொண்டேன்.
மனித உயிர் மகத்தானது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
ஆயிரம் மனிதர்களை "கேசுகளாக"ப்பார்க்கும் அந்த தியேட்டர் மனிதர்களின் நடவடிக்கையில் அத்தகைய மனிதம் இருக்கவில்லை.

உலக சுகாதார மையம் (WHO)  நோயற்றவர்களை ஆரோக்கியமானவர்கள் எனறு வகைப்படுத்தவில்லை. சரியான கல்வி, அந்த கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு, சரியான சம்பளம்(அதனுடன் கலந்த கலாச்சார வாழ்க்கை), ஓய்வு  என்ற 5 அம்சங்களில் உள்ளங்கியிருக்கிறது மனித வாழ்க்கை என்று வரையறுத்திருக்கிறது. 80% பேர் ஒரு நாளைக்கு இருபதுரூபாய் சம்பாத்தியத்தில் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் நமது நாட்டில் இது எந்த அளவுக்கு சாத்தியம் ?

மருத்துவ மனையில்...

கடந்த ஜூலை 5ஆம் தேதி வெளியிட்ட இடுகையில் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விபரம் மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். விருது நகர் திருவேங்கடம் மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் வண்டியில் கையில் ஒரு ட்ரிப்ஸ் பாட்டிலுடன் எனது மனைவி தம்பி அழகு, நண்பர் சீனி ஆகியோரோடு போய் முதல்மாடியில் உள்ள ஒரு அறையில் (203 )ஸ்ட்ரெச்சரிலிருந்து இறக்கி விடப்பட்டேன். தொடர்ச்சியாக பாட்டில்கள் மாறிகொண்டிருந்தது. சோறு சாப்பிடும் தேவை இல்லாமல் போயிருந்தது. ஒரு கார் அமர்த்திக்கொண்டு தம்பி வைரம் நண்பர்களோடு வந்து விட்டிருந்தான். தகவல்கள் பறக்க, பாப்பா தியாகராஜர் பொறியியற்கல்லூரியிலிருந்து 'அப்பாவுக்கு என்ன ஆச்சு' என்று அழுகையுடன் வந்த விதம் என்னை கண் கலங்க வைத்தது. மீண்டும் மீண்டும் மனைவியின் அழுகை வேறு  அடிவயிற்றை என்னவோ செய்தது. கோயமுத்தூரிலிருந்து  மகன் திலிப் மறு நாள் ஆபரேஷனுக்கு முன்பாக வந்து விட்டான். மதுரையில் இருக்கும்  மாமா மகன் குமார் மற்றும் பி எஸ் என் எல் அதிகாரிகள்/ஊழியர்கள் என்று  பத்து இருபது பேர் சகிதம் ஆபத்துக்கு உதவி எனும் வாக்கின் படி அரக்கப்பரக்க வந்திருந்தார்கள். ஒன்றும் ஆகாது கவலைப்படாதீர்கள் என்ற ஆதரவு வார்த்தைகள் அனைவர் வாயிலிருந்தும் வந்து விழுந்துகொண்டிருந்தன. கண்ணீருடன் அவற்றை எதிர் கொண்டது எனது மனைவி மட்டும்தான்.
  நியூரோ மற்றும் ஆர்த்தோ மருத்துவர்கள், தாதிகள் பரபரப்புகளுடன். எமெர்ஜென்ஸி வார்டிலிருந்து ஸ்கேன் பகுதிக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டேன். அப்போது அந்த வண்டியைத்தள்ளிக்கொண்டு வந்த பணிப்பெண்"எப்படி சார் விழுந்தீங்க" என்றார். நான் உங்களுக்காக "இனி ஒரு முறை விழுந்துகா ண்பிக்க முடியாத சூழலில் இருக்கிறேன்" என்றேன்.
16ஆம் தேதி விபத்து நடந்தது. 17ஆம்தேதி இரவு 0830 மணீக்கு ஆப்பரேஷன் வலது காலர் எலும்பை சர்ஜரி செய்யவேண்டும் என்று குறித்துவிட்டார்கள். இதற்கிடையில் தரை தளத்திலிருக்கும் ஒரு அறைக்கு ( A20) மாற்றி விட்டார்கள்.

Monday, July 5, 2010

ஒரு சிறிய விபத்து

அகில இந்திய அளவில் ஆர்ப்பரிப்புடன் பி எஸ் என் எல் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் 16/06/2010 அன்று ஒரு நாள் மாவட்ட மாநில மற்றும் டெல்லி தலைமைஅலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திட்டமிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மாபெரும் வேலை  நிறுத்தத்தின் விளைவாக போடப்பட்ட மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகிப்போனதால் மீண்டும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடப்பட்டிருந்தது.  இந்த அகில இந்திய தர்ணா( பழி கிடத்தல்) போராட்டத்துக்கு முன்னோடியாக 14/06/2010 அன்று மதிய வேளை ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடத்தி விட்டிருந்தோம். 

16/06/2010 அன்று காலை பத்துமணி சுமாருக்கு எனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். மாவட்ட அளவிலான போராட்டத்துக்கு தலைமை ஏற்கும் பணி என்னுடையது.  அப்போதுதான்   நான் சற்றும் எதிர்பாராத வகையில் ஒருவர் சாலையைக்கடக்க எத்தனிக்க மதுரை சாலை பி ஆர் சி பணி மனைக்கு எதிர்புறம் இருக்கின்ற சி ஐ டி யு சங்க அலுவலகத்தின் முன்பாக சாலையில் தடுமாறி சாலையின் இடது புறம் அவர் விழ சாலையின் வலது புறம் வண்டி பிரேக் பிடிக்காமல் போக, கீழே விழுந்ததில் இரண்டு முட்டிக்கால்கள், வலது கை முட்டி,வலது நெற்றியில் காயம், வலது தலையின் பின்புறம் தலையில் ரத்தக்காயம் ( மூன்று தையல்கள் முதலுதவிச்சிகிச்சையிலேயே),  வலது காதிலிருந்து குருத்தெலும்பு ஒடிந்து இரத்தம் ஒழுக, வலது காலர் எலும்பு முறிய, புத்தி பேதலித்த ஒரு சூன்ய நிலையில் இரத்தம் ஒழுக நான்.

 நல்லவேளையாக அந்த வழியாக  வ்ந்த ஒரு நண்பர் எனது செல்லை எடுத்து வீட்டு எண்ணை அழைத்து விஷயத்தை சொல்ல, எனது துணைவியாரோ பதறியடித்து பக்கத்து வீட்டு அக்காவுடன் ஓடி வர  ஒரு சில ஆட்டோக்காரர்கள் இரத்தக்காயம் பட்ட என்னை ஏற்றிச்செல்ல மறுக்க, ஒரு நல்ல அட்டோக்காரரின் உதவியால் என்னுடன் காயம் பட்ட அந்த அவரையும் ஏற்றிக்கொண்டு  ராமமூர்த்தி சாலையில் உள்ள திருவேங்கடம்  மருத்துவமனை அழைத்துசெல்லப்பட்டோம்.
முதலுதவி சிகிச்சை முடிந்தகையோடு அவர்களது மருத்துவமனை ஆம்புலன்சிலேயே பாதுகாப்பாக மதுரை வடமலையான் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள் என்னை. கீழே விழுந்தவருக்கு லேசான காயம் என்பதால் அவர் திருவேங்கடம் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

Wednesday, June 2, 2010

தீண்டாமை ஒழிப்பு மாநாடு

"தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"
என்று எல்லா தமிழ் நாடு அரசுப்பாட நிறுவன புத்தகங்கள் அனைத்திலும் அச்சிடப்பட்டு இருக்கிறது.

முதலில் பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கு
தீண்டாமை என்பது என்னவென்று தெரிந்திருக்க வேண்டும்.

"இவர்கள் செய்வது இன்னவென்று தெரியாமல் செய்கிறார்கள். 
இவர்களை மன்னித்தருளும் பிதாவே" 

என்பது போல தீண்டாமையைக்கடைப்பிடிப்பவர்கள் தாங்களாகவே பள்ளிப்பருவம் முதல் ஆட்பட்டு தன்னையும் அறியாமல் நம்மில் நான்கில் ஒருவரை தன்னிலும் கீழாக தள்ளி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த 28/05/2010 மற்றும் 29/05/2010 இரண்டு நாட்களாக புதுக்கோட்டையில் நடைபெற்ற  தீண்டாமை ஒழிப்பு   முதல்  மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில்    நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் தமிழகத்தில் 7000 கிராமங்களில் தீண்டாமை கொடுமை   நிலவி வருவதாக கள ஆய்வு  சிது அதை வரிசைப்படுத்தி சமன் செய்யச்சொல்லி   இருக்கிறார்கள் இந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்.

"திருக்குவளை இருந்தென்ன
இரு குவளை இருக்கிறதே"

என்ற ஒரு கவிதை வரிக்கிணங்க,

தமிழ் நாடு முழுதும் இரட்டைக்குவளை முறை இன்று முதல் ஒழிக்கப்படுகிறது என்ற நிர்வாக ரீதியான ஒரு உத்தரவை ஒரு தலித்தை தனது சம்பந்தியாக ஏற்றுக்கொள்கிற  மனப்பக்குவத்தில் இருக்கிற ஒரு முதல்வரால் முடியாமல் வேறு யாராலும் முடியாது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமிருக்க முடியாது. (இவரால் ஒரு 400 கோடி ரூபாயை செலவழித்து ஒரு சட்டசபைகட்டிடத்தை ஒரு ஆண்டுக்குள் கட்ட முடிந்திருக்கிறது: ஒரு 400 கோடி ரூபாயில் உலகத் (செம்மொழி)தமிழ் மா நாட்டை நடக்க வைக்க முடிகிறது)

இந்துக்கள் மட்டுமல்லாது இங்கே( இந்தியாவில்தான்) உள்ள கிறித்தவர்களும், முஸ்லிம்களும் கூட தங்களால் ஆன தீண்டாமையைக்கடைப்பிடித்துக்கொண்டே  இருக்கிறார்கள்.
தங்களுக்கு சமமாகக்கருதும் சாதியினரை "மாமா" என்று விளிக்கும் முஸ்லிம்கள் கூட  தலித்துகளை  "மாமா" என்று அழைப்பதில்லை என்பதை எனது பதிவு http://sugadevnarayanan.blogspot.com/2010/02/blog-post_23.html இல் குறிப்பிட்டு இருந்தேன்.

"ஏழையென்றும் 
அடிமையென்றும்
எவனுமில்லை சாதியில்                                         
இழிவு கொண்ட மனிதரென்பார் 
இந்தியாவில் இல்லையே"
என்பார் பாரதி.

"வேதங்கள் ஓதும் பார்ப்பானின்     
செயலைவிடவும்
மேன்மையானது
ஒரு செருப்புதைப்பவனின்
படைப்பு "
என்பார் விவேகானந்தர்.

Monday, May 31, 2010

முதல் பட்டதாரி

இந்த கல்வி ஆண்டு முதல் (2010-2011) எந்த ஒரு குடும்பத்திலிருந்தும் முதன் முதலாக தொழிற்கல்வி பயிலும் பட்டதாரி மாணவர்களுக்கு/மாணவிகளுக்கு கல்விக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 1980 ஆம் வருடம் நானும் கூட அப்படி வெளி வந்த ஒரு அறிவியல் பட்டதாரிதான். விருது நகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் அப்போதெல்லாம் ஒரு வழக்கம் இருந்தது. பட்டம் முடித்து வெளியேறும் மாணவர்களில் (அப்போது ஆண்கள் மட்டுமே படிக்கும் ஒரு கல்லூரி அது) முதலாவதாக அதாவது அதிக மதிப்பெண் பெறுபவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும்.(இப்போதும் இது நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை!)

தாவணிக்கனவுகள் படத்தில் பாக்கியராஜ் கூட அது போல பதக்கம் வாங்கிய பட்டதாரியாக நடித்திருப்பார். அவர் தங்க மெடல் வாங்கும்போது இது போன்ற இளைஞர்களின் கையில் எதிர் காலம் இருக்கிறது என்று பதக்கம் வழங்குபவர் குறிப்பிடுவார். கொஞ்ச நாட்கள் கழித்து குடும்பசூழல், வேலையின்மை காரணமாக குடிப்பதற்கு ஆரம்பித்து விடுவார். அப்போது அவரது கையில் சாராய கிளாஸ் இருக்கும். வேதாந்தச்சிரிப்பினால் சூன்யத்தை ப்பார்ப்பார் அவர் . நிற்க...நான் பட்டம் வாங்கும் வ்ரை அந்தப்பதக்கம் வாங்குவதற்கான தகுதி பற்றி எனக்குத்தெரியாதுநான் வாங்கிய மதிப்பெண்கள் 1250/1800 (69.4% முதல்வகுப்பில் தேர்ச்சி; அந்த ஆண்டு தாவரவியல் பட்டப்படிப்பில் முதலாமவன்). தங்கப்பதக்கம் எனக்குக்கிடைக்கவில்லை. மாறாக எனக்கு அடுத்தபடியாக மதிப்பெண் பெற்ற வி. பிரபாகரனுக்கு அது கிடைத்தது. விசாரித்ததில் சொன்னார்கள் எந்த ஒரு பாடத்திலும்  ஆறு செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திலும் கூட பெயில் ஆகியிருக்கக்கூடாது என்று. நான் தான் INORGONIC CHEMISTRY  என்கிற பேப்பரில் இரண்டு அட்டெம்ப்ட்டு ஆச்சே!

சரி எல்லோரும் பட்டமளிப்பு விழாவின் போது கருப்பு அங்கி அணிந்து தலையில் தட்டையாக ஒரு குஞ்சம் வைத்து கையில் பட்டத்தை சுருட்டி வைத்து ஒரு போட்டோ  எடுத்துக்கொள்வார்களே அது போல ஒரு பட்டமளிப்பு விழா வரும் ஆசையாக ஒரு படம் பிடித்து வைத்துக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பில் மண் விழுந்தது போல் அந்த வருடம் பார்த்து பட்டமளிப்பு விழா என்று எதுவும் கிடையாது எல்லோரும் கல்லூரி அலுவலகத்தில் வந்து கையெழுத்து போட்டு விட்டு பட்டத்தை வாங்கி செல்லுங்கள் என்று அழைப்பு வந்தது. போட்டோ கண்ணிலேயே நின்று விட்டது.

அப்போதெல்லாம் மூன்று கல்லூரிகளில்தான் M Sc., தாவரவியல் இருந்தது
பழனியாண்டவர் கல்லூரி பழனி,  சரஸ்வதி நாராயணன் கல்லூரி மதுரை, தியாகராசர் கல்லூரி, மதுரை.  எனக்கு சரஸ்வதி நாராயணன் கல்லூரியில்  எம் எஸ் ஸி படிக்க அழைப்புக்கடிதம் வந்தது ருபாய் 411/- கட்டச்சொல்லி ப்ரின்சிபால் கையொப்பமிட்ட கடிதம் வந்தது.  வீட்டில் அங்கே இங்கே என்று
ஒரு 250/- ரூபாய்  வரை திரட்டி விட்டார்கள் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து. அதற்கு மேல் முடியவில்லை... கனவாகிப்போனது  PG.

30/05/2010 அன்று கோவை  CIT கல்லூரியில்  பட்டமளிப்பு விழா:  திலிப் சுகதேவுக்கு(எனது பையன்தான்)  AICTE அமைப்பின் பொறுப்பாளர் எஸ் எஸ் மந்தா என்பவரின் கையால் திலிப் பட்டம்  வாங்கினான். கருப்பு அங்கி கழுத்தில் ஒரு சிகப்பு பார்டருடன் கூடிய கருப்பு வளையம் அணிந்து பட்டம் பெற்றான்

கையில் வைத்திருந்த டிஜிட்டல் காமிராவினால் ஏழெட்டு போட்டோக்கள் எடுத்துத்தள்ளினேன். அப்படியே  பக்கத்தில் இருந்த எனது மனைவியிடம் சொன்னேன். எனக்கு கையெழுத்து போட்டு பட்டம் வாங்கிக்கொண்டுவந்தேன் இது போன்ற விழாவிற்காக ஏமாந்து போனேன் இன்றைக்கு ஒரு காரியம் செய்யப்போகிறேன் தம்பியிடமிருந்து அந்த அங்கியை  வாங்கி  நான் அணிந்து கொண்டு  அவனை ஒரு ஸ்னாப் எடுக்க சொல்லப்போகிறேன்.  ஓரே சிரிப்பு எனது மனைவிக்கு.
பட்டமளிப்பு விழா முடிந்தது. திலிப் எங்களிடம் வந்தான்  அங்கியை தற்செயலாகக்கழற்றிக்கொண்டே.  கூடவே அவனது நண்பன் நான்கு வருடமாக அவனுடன் தங்கிப்படித்த சரவணன். நான் திலிப்பின் அங்கியை அவசரமாக அணிந்து கொண்டேன் அந்த வட்டக்கழுத்துப்ப்ட்டையையும் சேர்த்தேதான். சிலர் வேடிக்கையாகப்பார்த்தார்கள். மனைவி வாய் விட்டு சிரிக்க தம்பி திலிப்போ வேண்டாம்பா என்று அங்கே இங்கே பார்த்துக்கொண்டிருக்க என்னை இரண்டு மூன்று ஸ்னாப்கள் எடுத்துதள்ளினான் சரவணன்.
முப்பது வருடங்களில் இரண்டு பட்டதாரிகள் ஒரு குடும்பத்தில்..

Tuesday, May 18, 2010

சர்வ தேச கீதம்

அது எண்பதுகளின் தொடக்கம். புரட்சி நடிகராக இருந்து புரட்சித்தலைவராக உயர்ந்த ஒருவரின் ரசிகனாக இருந்தேன் அது வரை. புரட்சி என்பதற்கான அர்த்தமே தெரியாது. சின்னமுனியாண்டி என்ற தோழர் அந்த வார்த்தையின் அர்த்தம் பற்றி சொல்லும் வரை. அது விவசாயிகள், தொழிலாளர்கள் இணைந்து போராடி வெற்றி பெற வேண்டிய மாபெரும் பணி என்பது குறித்து விளக்கமாகவும்  புரியும் படியும் பேசினார்.


அப்படியே ஒரு நாள் சாத்தூருக்கு தெற்கே பாலத்தைத்தாண்டி இயங்கி வந்த முருகன் தியேட்டரில் ஒரு கூட்டம் நடக்கிறது வாருங்கள் போகலாம் என்று அழைத்து சென்றார். அது தோழர் பி. சீனிவாசன் தாலுகா செயலாளராக இயங்கி வந்த சி பி எம் கட்சியின் தாலுகா மா நாடு. விருது நகர் தாலுகா அப்போது பிரிக்கப்படவில்லை. மாவட்ட செயலாளராக இருந்தவர் தோழர் எஸ். ஏ. பெருமாள். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். தோழர்கள் விவாதம் மேற்கொண்டார்கள்.  மக்கள் நலனுக்காக சில தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். மதியம் எளிமையான ஒரு மதிய உணவு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதிய கூட்டம் தொடங்குமுன் வக்கீல் பாலதண்டாயுதம் "சோசலிசம் வந்துவிட்டால் சுகம் எல்லாமே வந்து விடும் அந்த கம்யூனிசம் மலர்ந்து விட்டால் மனக்கவலைகள் மறந்து விடும்" என்ற நாகூர் ஹனிபாவின் அல்லாவை நாம் தொழுதால் துயர் எல்லாமே ஒடி விடும்  என்ற மெட்டில் பாடினார். மாலையில் கூட்டம் நிறைவடைந்தது. அப்போது சர்வதேச கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும்  கம்பீரமாக எழுந்து நின்று கூட்டாகப்பாடினர். அந்தப்பாடலை இந்தப்பதிவில் பார்ப்போம்.

பட்டினிக்கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள் வீறு கொண்டு தோழர்காள்
கொட்டு முரசு கண்டன முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட


பண்டையப்பழக்கம் என்னும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேட்சை கீதம் விடுதலை பிறந்தது
இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திட
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்


முற்றிலும் தெளிந்த முடிவான போரிதாகுமே
முகமலர்ச்சியோடு உயிர்த்தியாகம் செய்ய நில்லுமே
பற்றுக்கொண்ட மனித ஜாதி யாரும் ஒன்றதாகுமே
படிமிசைப் பிரிந்த தேச பாஷையும் ஓர் ஐக்கியமே


பார் அதோ மமதையின் சிகரத்திருமாந்துமே
பார்க்கிறான் சுரங்க மில் நிலத்தின் முதலாளியே
கூறிடில் அன்னார் சரித்திரத்தில் ஒன்று கண்டதே
கொடுமை செய்து உழைப்பின் பயனைக்கொள்ளை கொண்டு நின்றதே


மக்களின் உழைப்பெல்லாம் ஒளித்து வைத்து ஒரு சிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்றதறிகுவீர்
இக்கணம் அதைத்திரும்ப கேட்பதென்ன குற்றமோ
இல்லை நாம் நமக்குரிய பங்கைக்காட்டி கேட்கிறோம்.


தொன்று தொட்டு உழைத்த விவசாய தொழிலாளி நாம்
தோழராகினோம் உழைப்போர் யாவரேனும் ஓர் குலம்
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச்சொல்லுவோம்
உழைப்பவர் யாவருக்கும் சொந்தம் இந்த நிலமெல்லாம்


வேலை செய்யக்கூலி உண்டு வீணர்கட்கிங்கிடமில்லை
வீண் வார்த்தை பேசி உடல் வளர்க்கும் காதர்கர்க்கிங்கிடமில்லை
நாளை எண்ணி வட்டி சேர்க்கும் ஞமலிகட்கிங்கிடமில்லை
நாமுணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங்கிடமில்லை


பாடுபட்டு உழைத்தவர் நிணத்தைத்தின்ற கழுகுகள்
பரந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளிலே
காடு வெட்டி மலை உடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்
கவலையற்ற போக வாழ்வு சகலருக்குண்டாக்குவோம்

Monday, May 17, 2010

ரா(நா)மதாரி

தாத்தாவை எல்லோரும் ராமதாரி (நாமதாரி என்பதைத்தான்...) என்று கூப்பிடுவார்கள். அவரது பெயர் அழகரப்பன். தினமும் காலையில் குளித்துவிட்டு நாமம் வ 'Y'  வடிவத்தில்  போட்டுக்கொள்வார்.  இரண்டு பெரிய பட்டைகள் அடியில் மெலிந்து மேலே செல்ல செல்ல சற்று அகலமாகிக்கொண்டே போகும். நடுவில் சிகப்புக்கலரில் ஒரேசீராக ஒரு கோடு. இடது கையில் நாமக்கட்டியைக்குழைத்து வாகான ஐஸ் குச்சி போன்ற ஒரு மெலிந்த குச்சியால் வழித்து கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே நெற்றியில் போட்டுக்கொள்ளுவார். நாமப்பெட்டி ஒன்று வைத்திருப்பார். அதில் இரண்டு குழிகள் இருக்கும் ஒன்றில் நாமக்கட்டியும் மற்றொன்றில் குங்குமம் நிறைந்திருக்கும். குச்சியை வைப்பதற்கு நடுவில் ஒரு சிறிய இடம் அதற்கென்று வகுத்தெடுத்தது போல் இருக்கும் அந்த பெட்டியின் மூடியில் கண்ணாடி பதித்திருக்கும்.

'U' வடிவத்தில் நாமம் போடுவோர்கள் இருக்கிறார்கள். நாட்டுப்புறப்பாடலில் ஒரு வரி வரும். " நாங்க ஒத்தை ராமம் போடக்கூடிய ஒசந்த கொல சாதி"   சிகப்புக்கலரில் குங்குமத்தைக் குழைத்து வெள்ளை 'ஸ்டாண்டு' வைத்து நாமம் போட்டுக்கொள்வார்கள் அல்லது 'ஸ்டாண்டு' இல்லாமலும் இட்டுக்கொள்வார்கள் நானும் எனது தங்கை பகவத் கீதையும் அவர் நாமம் போட்டுக்கொண்டு இருக்கும் காலை வேளையில் போனால் எங்களுக்கும்  நாமம் போட்டு விடுவார். தங்கைக்கு சிகப்பு கலர் மற்றும் சிறிய வெள்ளை நிற ஸ்டாண்டு. எனக்கு முழு ராமம் (நாமம்). பெண்களுக்கு வெள்ளை நிறப்பட்டை இட்டுக்கொள்ள அனுமதி இல்லை போலும்.

நான் மூன்றாவது படித்துக்கொண்டிருக்கு போது  சடையாண்டி எனது பேனாவை எடுத்து வைத்துக்கொண்டான். நான் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தேன் தாத்தாவிடம் சொன்னேன். இரவு 7 மணி இருக்கும். அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கென்று இரவு 8 30 வரையில் "நை ட்ஸ்டடி"  என்ற 'ராப்பாடம்' பள்ளியில் நடக்கும்.' வாடா என்னோடு ' என்று என் கையைப்பிடித்து வேக வேகமாக பள்ளிக்கு அழைத்து சென்றார். தலைமையாசிரியர் இரவுப்பாடத்துக்கு வந்திருந்த மாணவ மாணவிகளை மேற்பார்வை இட்டுக்கொண்டு இருந்தார்.பள்ளியின் வாசலிலிருந்து தாத்தா சத்தமிட்டார்.
"யார்யா வாத்தியாரு இந்தப்பையனோடபேனாவை ஒருத்தன் எடுத்துக்கிட்டானாம் அதை வாங்கிக்குடுய்யா முதல்ல நீயெல்லாம் என்னயா வாத்தியார் வேலை பார்க்குறே.."
என்னதான் 'ராமதாரி' யாக இருந்தாலும் அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியாகத்தான்  சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுத்தப்படுகிறார்.
ஆசிரியர் ஆசாரி. தாத்தாவின் பேச்சு சூடு தாங்காமல் ' நீங்க போங்கைய்யா நான் நாளைக்கு காலையில வாங்கிக் கொடுத்திர்ரேன். என்றார்.
அதே போல வாங்கியும் கொடுத்து விட்டார்.

மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டு முடிக்கும் வரை என்னை உண்டு இல்லைன்னு ஒரு கை பார்த்து விட்டார். அடி பின்னி எடுத்து விடுவார்.
நான் மூன்றாம் வகுப்பு முடிக்கு முன் தாத்தா இறந்து போனார்.

டைசி காலம் என்று அவர் கருதியிருக்க வேண்டும் தான்  குடியிருந்த கூரை வீட்டை விற்று விட்டார். எனவே நோய் வாய்ப்பட்ட நிலையில் எங்களது வீட்டுக்கு அம்மா கால் பக்கம் பிடித்துக்கொள்ள, அப்பா தலைப்பக்கம் அணைவாக பிடித்துக்கொண்டு  தூக்கிக்கொண்டு வந்தார்கள். எங்கள் வீடும் சூரிய ஒளி தாராளமாக விழும் கூரை வீடுதான். தாத்தாவின் கணக்குப்படி வீட்டை அடுத்தவனுக்கு விற்றாகி விட்டது அவனது வீட்டில் சாகக்கூடாது. தூக்கி வரும்போது அவர் சொன்ன வார்த்தைகள் : 'ஏண்டா சும்மா தூக்கிட்டு போறீங்க கோவிந்தா |கோவிந்தா| ன்னு சொல்லுங்கடா' என்றார்.

றந்த பிறகு கேட்க முடியாத கோஷத்தை உயிருடன் இருக்கும் போது கேட்க ஆசைப்பட்டிருக்கிறார் என்று இப்போது நினைத்துகொள்கிறேன்.

Saturday, May 15, 2010

முத்து ராமன் பட்டி

விருது நகரில் முத்து ராமன் பட்டி என்ற ஒரு பகுதி இருக்கிறது. இதன் பெயர்க்காரணம் குறித்து" விருது நகர் வரலாறு" (ஆசிரியர் ஜெகனாதன்) என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதனுடைய சுருக்கம் இதுதான்:

அதாவது விருது நகரில் டி இ எல் சி என்ற கிறித்துவ அமைப்பின் நடு நிலைப்பள்ளி ஒன்று  நகரின் மையப்பகுதியில் உள்ள பெரிய காளியம்மன் கோவில் தெருவில் இருக்கிறது. இந்தப்பள்ளியைச்சுற்றிய பகுதியிலும்  வன்னியன் தெருவிலும் அருந்ததிய இன மக்கள் குடியிருந்து வந்திருக்கிறார்கள்.

காலப்போக்கில் இந்த இன மக்களில் ஒரு சிலர் டி இ எல் சி பள்ளியில் படிக்கவும் செய்திருக்கிறார்கள். அவர்கள் மேற்படி பள்ளியில் படித்த காரணத்தால் அது "சக்கிலியன் பள்ளிக்கூடம்" என்று அறியப்பட்டிருக்கிறது. எனது தந்தையார் திரு அர்ஜுனன் அவர்களும் கூட அந்தப்பள்ளியில்தான் ஆறாவது வரை படித்திருக்கிறார். அதனால்  அவருக்கு எழுதப்படிக்கத்தெரியும்.

சில காலம் கழித்து அவர்கள் பவுண்டு தெருவுக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள்.
(பவுண்டு என்பது அரசுக்கு சொந்தமான ஒரு கட்டிடம் நான்கு பக்கம் மதில் சுவரும் ஒரு கேட்டும் இருக்கும். அத்து மீறி யாருடைய வெள்ளாமையிலும் மேய்ந்த ஆடு மாடு கழுதை இவற்றை கொண்டு வந்து அடைக்கப்பயன் படும் இடம்) அந்தத்தெருவில் ஒரு காளியம்மன் கோவில்  அருந்ததிய இன மக்களுக்கு சொந்தமானது இன்றைக்கும் இருக்கிறது.

இதே காலகட்டத்தில் அருப்புக்கோட்டை சாலையில் டி. இ.எல்.சி சர்ச் வளாகத்தில் குடியிருந்த வெள்ளைக்கார துரைகளுக்கும் குதிரை பராமரிப்பு பணியில் முத்தன் ராமன் என்ற இரண்டு அருந்ததிய சகோதரர்கள் ஈடுபட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். (அருந்ததியர் என்பது அவரது புத்தகத்தில் இல்லை)

முத்தன் ராமன் சகோதரர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் முத்து ராமன் பட்டி என்று அன்று முதல் அழைக்கப்படுவதாக அவரது குறிப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அது சரி. அப்படி குடியிருந்தவர்களின் வாரீசுகள் இப்பொழுது எங்கே..
பவுண்டுத்தெருவிலிருந்து  இடமாற்றம் கண்டு மாத்த நாயக்கன் பட்டி பாதை என்ற பகுதிக்கு குடியேறி இருந்திருக்கிறார்கள். (நான் இந்த மாத்த நாயக்கன் பட்டி பாதை என்ற முகவரியில் பிறந்ததாக எனது தகப்பனார் கூறியிருக்கிறார்.)

Friday, May 14, 2010

இருப்பதும் இல்லாததும்


மனித இனமே வெட்கித்தலைகுனியும் அளவுக்கும் அதிகமாகவே வகுப்புவாதத்தீ குஜராத்தில் எரிந்து கொண்டிருக்கிறது.
72 மணி நேரத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி விட்டேன் என்று சுய சான்றிதழ் வழங்கிக்கொண்டிருக்கிறார்  குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி.

முதல்வராகத்தொடர்வதற்கு அவரை விட்டால் யாருமில்லை; அவர்தான் முதல்வர்; அவரேதான்... என்று வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி;
அதை அப்படியே வழி மொழியும் பாரதப்பிரதமர் வாஜபாய் அவர்கள்.

பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ராவில் பற்றிய மே 9 அன்று 72 நாட்களைத்தொட்டும் தொடருகிறது அவலம்.
பற்றி எரிகிறது தலை நகர் அகமதாபாத்.

அரசுப்புள்ளி விபரங்களின் படி,

*இது வரை 1420 பேர் வன்முறைக்கு  பலியாகியிருக்கிறார்கள்
*முகாம்களில் தஞ்சமடைந்துள்ள உடைமையிழந்தவர்களின் எண்ணிக்கை 2     லட்சத்துக்கும் மேல்
* சொத்துக்களுக்கும் ஏற்பட்ட சேதாரம் ரூபாய் 5000 கோடியை த்தாண்டும்
* 22560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
* 43000 பேர் கைது செய்ய்யப்பட்டு இருக்கிறார்கள்
* 4000க்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும்
* 20000 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தீயிலிடப்பட்டன.
*போலீசார் சுட்டதில் மட்டும் 200 பேர்  மடிந்திருக்கிறார்கள்.
*தொழிற்துறையில் மற்ற மாநிலங்களை விட இருபதாண்டுகள்  பின்னோக்கிச்  சென்று விட்டது குஜராத் மாநிலம்.

2001 ஜனவரி 26ல்   நிகழ்ந்த  பூகம்ப அதிர்வுகளின் போது ஏற்பட்ட இழப்புக்கு சற்றும் குறைந்ததாகப்படவில்லை இப்போது நடைபெற்றுக்ககொண்டிருக்கும் மத பூகம்பம்.

இவ்வளவு அழிவுக்கும் பின்னர் செயலற்ற ஒருமுதல்வரை மாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

உலக அளவில் இந்தியாவுக்கு அழியாத அவப்பெயரை கோத்ரா நிகழ்வும் அதனைத்தொடர்கின்ற  படுகொலை வன்முறைகளும் ஏற்படுத்தியிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
பாராளுமன்றத்தில் 296 பேர் அரசை ஆதரிக்க, 182 பேர் எதிர்க்க மத்திய அரசு வென்றிருக்கிறது.

போதுமான பலம்  ஆளும்  தேசிய ஜன நாயக கூட்டணிக்கு இல்லாததால்
ராஜ்ய சபாவில் அவர்களே எதிர்கட்சிகளை ஆதரித்து ஒருபக்க "கோல்" போட்ட கதையும் நாடு கண்டது.

"நேற்று இருந்தவர் இன்றில்லை
இன்றிருப்போர்  நாளை 
இல்லாமற் போவர்
இருப்பதும் இல்லாததும்
இதே ரீதியில் நடந்து கொண்டிருக்கும்
........................................................

உண்மை என்ன?
இருப்பதும் இல்லாததும் இரண்டுமே 
உண்மையா....?"


பிரதமர் வாஜ்பாயி அவர்களின் கவிதை வரிகள்தான் மேலே உள்ளவை.

குஜராத்தில் செயல்படாத  முதல்வர் ஒருவர்
இருப்பது ம் இல்லாததும் உண்மையா என
கேட்கத்தோன்றுகிறது நமக்கு.

(மே 2002 கோத்ராவில் இருந்த நேரம் எழுதிய கட்டுரை இது)

Thursday, May 13, 2010

இரட்டைக்குவளை ஒழிந்தது..

"பொது கிளாசில் டீ கேட்க
தனி கிளாசில் டீ கொடுக்க
ஒரு டீயின் விலை
ஒன்பது உயிர்களாக
மலிந்து கிடக்கிறது.."
                                          -கவிஞர் கந்தர்வன்.

தீண்டாமை ஒழிப்பு ஆண்டு என்று அரசால்
நான் கைந்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது
அதை ஒட்டி எழுதிய கவிதை இது..

சேரியிலிருந்து ஒரு குரல்:

எத்தனை நாளைக்குதான்
எங்களுக்குத் தனி கிளாஸ்ல
டீ தருவீக
ஒங்களைப்போல
அவங்களைப்போல
நாங்களும் எட்டுச்சாணு
ஓசரமுள்ள மனுஷங்கதானே?

ஊருக்குள் இருந்த  டீக்கடை
மனிதன் ஒருவன்:

ஆயிரத்துக்கும் அதிகப்படியான
ஊருகள்ல தனிக்கிளாஸ் இருக்க
பொதுக்கிளாசில் டீ குடுக்க
நாங்க மட்டும்
பைத்தியக்காரப்பயலுகளா?

மந்திரி முழங்கினார்:

"தீண்டாமை எந்த வடிவத்தில்
நடைமுறைப்படுத்தப்பட்டாலும்
ஒழித்துக்கட்டி விட்டுதான்
மறு வேலை எங்கள் அரசுக்கு
இது மத்ச்சார்பற்ற சமூக
நல்லிணக்க
தீண்டாமை ஒழிய வேண்டிய ஆண்டு"

ஊர்க்காரர்களும் முக்கியஸ்தர்களும்
முடிவெடுத்து அறிவித்தனர்

கொண்டுவாங்கப்பா அந்த
டிஸ்போசிபிள் கிளாசை
நம்ம ஊருல எல்லாம் தாயா
பிள்ளையா இருப்போம்
கிளாசுக்கு எட்டணா கூட
குடுத்திருங்கப்பா...
இந்தா பிடி
டீயைக்குடி

கலெக்டர்  கடிதம் எழுதினார்:
"மாண்பு மிகு முதல்வர்
அவர்கள்
மா நிலத்திலேயே
முதலாவதாக
இரட்டைக்குவளை
முறையை ஒழித்த
............. கிராம சபைக்கூட்டத்தில்
தாங்கள் அவசியம்
பங்கேற்க வேண்டும்....."

Monday, May 10, 2010

சாதிப்பெயரை நீக்குக

எண்பதுகளில் சாதி அடிப்படையில் அமைந்த தெருக்களின் பெயரை நீக்க உத்தரவிட்டார் தமிழக முதல்வர் எம் ஜி ஆர்.

சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆனபிறகும், சாதியின் பெயரால் அமைந்திருக்கும் கிராமத்தின் பெயரை மாற்றவேண்டும் என்று கோரி  NHRC
(தேசிய மனித உரிமைகள் கமிஷன்) அமைப்புக்கு கடந்த இருபது வருடங்களாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். (The Hindu 10/05/2010) ராஜஸ்தான் மா நிலம் 'தாசா' மாவட்டத்தில் இருக்கிற ஒரு கிராமம் 'குவன் கா வாஸ் ' .அந்த கிராமத்தின்  பெயரை வருவாய்த்துறை ஊழியர்கள்' 1987 இல் 'சமரோன் கா வாஸ்' என்று மாற்றியிருக்கிறார்கள்.(பெயர் சொன்னாலே தெரியும் அளவுக்கு) சமரோன் என்றால் தோல் பொருட்கள் மற்றும் செருப்பு தைக்கும் தொழில் செய்யும் ஒரு பகுதி மக்களைச்சுட்டும் சொல் என்று சொல்லத்தேவையில்லை. ஒரு 31 பேர் NHRC அமைப்புக்கு 2006 முதல் மனுச்செய்து கொண்டு இருக்கிறார்கள். மனித உரிமைகள் கமிஷனின் தலைவரின் விசாரணையின் போது  பிப்ரவரி 2002 இல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அந்த கிராமம் "கோவிந்தபுரா" என்று பெயரிடப்படுவதாக கிராம மக்களின் சம்மதத்துடன் தெரிவித்து இருக்கிறார். சாதியக்கட்டுமானமும் அதிகாரவர்க்க தோரணைகளும் சேர்ந்து இந்த பெயரை செயல் பட விடாமல் தடுத்து இருக்கிறார்கள். NHRC அனுப்பிய நோட்டிசுக்கு அரசு 'குஷால்புரா" என்று பெயர் வைக்க விரும்புவதாக தலைமைச்செயலர் பதில் அனுப்பி இருக்கிறார்.

 மத்திய உள்துறையில் ஒரு புதிய செய்தி தந்திருக்கிறார்கள்.ரயில்வே ஸ்டேஷன் பட்டியலில்  "குஷால் புரா" என்ற பெயர் வைப்பதில் சிரமம் இருக்கிறது ஏனென்றால் "குஷால்புரா ஹால்ட் ' என்ற பெயரில் பக்கத்தில் ஒரு ரயில் நிலயம் இருப்பதாகச்சொல்லி இருக்கிறார்கள். செப்டம்பெர் 2009 இல் மாவட்ட ஆட்சியரால் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு பெயர் மத்திய  உள்துறைக்கு அனுப்பி அதுவும் கடந்த ஜனவரி 2010 வரை  எந்த வித நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் இருக்கிறதாக தகவல்கள் சொல்லுகின்றன.
இறுதியாக NHRC ஆறு வார காலத்திற்குள்  எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று மத்திய உள்துறை செயலரைக்கேட்டு இருக்கிறார்கள்.

'யாதும் ஊரே யாவருங்கேளிர்'

என்ற வைர வரிகள்  ஐக்கிய நாடுகள் சபையை அலங்கரித்துக்கொண்டிருப்பதாக சொல்லுகிறார்கள்.
அப்படிப்பட்ட நமது தமிழ் மண்ணில்தான்
'வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து க்கழகம்' என்று விருது நகரை தலைமையிடமாகக்கொண்டு செயல் பட இருந்த வேளையில்
சாதியின் பெயரால் உருவாக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களின் பெயர்களும் வாபஸ் பெறப்பட்டது தமிழகஅரசால்..
சமத்துவம் வாழ்க..
ஆனால் 60 ஆண்டுகளாகியும் சாதியின் பெயரால்
என்று தணியும் இந்த 
சாதீய ப்  பிரசசனை ..

Friday, May 7, 2010

கற்பாறைகளும் தப்பவில்லை

நேற்று வரை
காடுகளை அழித்தீர்கள்
காற்றைக் கணக்கின்றி
களங்கப்படுத்தினீர்கள்
நிலத்தடி நீரை
அபகரித்தீர்கள்
விண் வெளி கூட
விண்கலங்களின்
குப்பைக்கூடை
ஆகிப்போனது
இன்று
கற்பாறைகள் கூட
கற்பழிக்கப்படுகின்றன
உங்களால்
உலகமயம்
இவ்வளவுதானா
இன்னும் இருக்கிறதா
மிச்சம்.
இக்கவிதை எழுதியது செப்டம்பர் 2002

(குலு மணாலியில் கோக், பெப்சி நிறுவனங்கள் பாறைகளில் விளம்பரம் செய்தன;
அதை ஒட்டி நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால்   கோடிக்கணக்கான ரூபாய்கள் பன்னாட்டு நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டது.)

Thursday, May 6, 2010

இவர்கள் மக்களில் சேர்த்தி இல்லையா

2001 ஜனவரி 26:  குஜராத் மாநிலம் பூஜ் நகரில் பூகம்பம் வந்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம் கள்அமைக்கப்பட்டது. ஆதிக்க சாதி வெறிதலைக்கேறிய 'படேல்'கள் முகாம்களை விட்டு வெளியேறினார்கள். அப்போது  அவர்கள் சொன்ன காரணம் "என்னை விடதாழ்ந்த சாதியைச்சேர்ந்த மனிதனோடு நானும் எப்படி ஒன்றாக தங்கி இருக்க முடியும் ?" நல்லவேளை இயற்கைக்குத்தான் எந்த பேதமும் இல்லை மனிதர்களுக்கு  நிறையத்தான் இருக்கிறது போலும்.

2002 பிப்ரவரி 27:  குஜராத் மாநிலம் கோத்ராவில் எஸ் 8 என்ற பெட்டி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில்எரிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த வன்முறைகளில்முகமதியர்கள் இரண்டாயிரம் பேர்கொல்லப்பட்டனர் .ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆனார்கள். அப்போது கூட ஒரிரு இடங்களில் முகாமகள் அமைக்கப்பட்டது.அகமதாபாத் பகுதியில் இந்துக்களுக்கென்று அமைக்கப்பட்ட முகாமகளில்மறுபடியும் இதே பிரச்சனை வெடித்ததைடைம்ஸ் ஆஃப் இந்தியாவெளிப்படுத்தியது.

2004 டிசம்பர் 24: நாடு ,தேசம் ,மொழி, இனம் என்று எதுவும் பாராமல் மனிதர்களைக்கொள்ளை கொண்டது "சுனாமி" என்னும் இயற்கைப்பேரழிவு இரண்டரை லட்சத்துக்கும் மேல் உலக மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் தற்காலிக முகாம் கள் அமைக்கப்பட்டது. தலித்துக்ளின் துணையோடு சவக்குழியில் விழத்தயாராக இருக்கும் சாதி, உயிரோடு இருக்கும் தலித்துகளோடு தங்குவதற்கு இடம் கொடுக்க வில்லை. இன்னும் கொடுமை என்னவென்றால்  அழுகிக்கிடக்கும் சவங்களைக் கூட தூக்குவதற்கு  சாதிமனம் ஒத்துக்கொள்ள வில்லை. கடைசியில் சாதாரண  மரணங்களின் போது சேவை செய்யும் அருந்ததி இன மக்கள்தான் கும்பல் கும்பலாக அனைத்து சாதிப்பிணங்களையும் பெரிய குழிகளில் சவ அடக்கம் செய்தார்கள்.
மக்களுக்காக 'இறுதி' வரை  உழைக்கும் பகுதியினரை 'ஆட்டைக்கு சேர்க்காமல்' எத்தனைக்காலம்தான் இழுத்தடிப்பது ....?

Friday, April 30, 2010

உழைப்பவர் தினம்

உலகத்தொழிலாளருக்கெல்லாம் 
எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர கலாசார வாழ்க்கை
எட்டு மணி நேர உறக்கம்

அன்று
சிகாகோ வீதிகளில் சிந்திய இரத்தம் 
இன்று ஏ சி அறைகளுக்குள்
அடைபட்டுக்கிடக்கும் 
ஐ டி இளைஞர்களுக்கும
சேர்த்துதான்

மீண்டும்
அதே கோரிக்கையை
அவர்களின் தியாகங்கள்
பேரால் உறுதி ஏற்க
வேண்டிய தருணம்
எனப்படுகிறது  

Thursday, April 29, 2010

மீனாட்சி கல்யாணம்

மதுரையில் ஆண்டு தோறும்  சித்திரை மாத பவுர்ணமி அன்று  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிக்கொண்டே இருக்கிறார்.. அதற்கு முதல் நாள்  அழகருக்கு பக்தர்களின் சார்பில் எதிர்சேவை. அதற்கு முந்திய  நாள் தேரோட்டம் அதற்கு ஒரு நாள் முன்பாக மீனாக்ஷி கல்யாணம். வருடா வருடம் தவறாமல் திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்க்கிறார்கள். ஆனால்  கள்ளழகர் மட்டும் திருமணத்தை தவறவிட்டு வைகை வடகரை வழியாக துலுக்க நாச்சியாரை சந்திக்கவும் மண்டூக முனிவருக்கு  சாபம் கொடுக்கவும் இரவில் தசாவதாரம் என்று போக்கொண்டு இருக்கிறார். நிஜத்தில்  பல அழகிய பெண்கள் வயதாகியும் கூட திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். ஒரு பாடல் பாரதி கிருஷ்ணகுமார் கரகரத்த குரலில் பாடக்கேட்டு இருக்கிறேன்.

'மதுரை மீனாட்சிக்கும் காஞ்சி காமாட்சிக்கும் 
மாசமொரு கல்யாணமாம் 
தேர் மேல மாப்பிள்ளை ஊர்  கோலமாம்
எங்க எதித்த வீடு பொண்ணு வயசாகி நாளாச்சி 
எப்பதான் கல்யாமம் -அவ 
கண்ணில் எப்பவும் நீர்க் கோலமாம்'

அழகரை சேவித்துவிட்டு பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லி விட்டு சூடம் கலந்த  வாசத்துடன் சக்கரை தருவார்களே அதை வாங்கித்தின்ற  நாட்கள்; வெயில் என்றும் பாராமல்  ராமராயர் மண்டகப்படி பக்கம் நெற்றியில்  கரைந்த குங்குமத்தோடு நாமத்துடன் அலைந்த நாட்கள் அலைமோதுகின்றன.
அப்பா எனக்கு முதல் மொட்டை அழகர் ஆற்றில் இறங்கிய அன்று போட்டதாகசொல்லுவார்.
பச்சை பட்டு அணிந்து  ஆற்றில் இறங்கினால் அனைத்து வெள்ளாமையும் சிறக்கும் என்பார்கள்
சிகப்பு பட்டு  என்றால் மிளகாய் வத்தல் விளைச்சல் பொங்கி வருமாம்
வெள்ளை பட்டு உடுத்தி வந்தால் பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்குமென்றும் சொல்லுவார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் 
பி டி பருத்தி விவசாயம் செய்த விவசாயிகள் சுமார் இரண்டு லக்ஷம் பேர் தற்கொலை செய்து மடிந்து இருக்கிறார்கள...
ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூலியில் காலத்தை வென்று கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை  நமது ஜனத்தொகையில் 70  சதமானம் என்று ஒரு கணக்கு நம் முன் காட்டப்படுகிறது..
ரூபாய்  50 ,000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் 54 பேர என்று சொல்லப்படுகிறது...
வருடா வருடம் மீனாக்ஷி திருக்கல்யாணம் நடந்து கொண்டேதான் இருக்கிறது
வருடாவருடம் அழகர் வந்து கொண்டிருக்கிறார்...

Monday, April 26, 2010

அருந்ததியர்


                                                                             


அன்று ...
தாய் மண்ணின் சுதந்திரம்
வேண்டி
வெள்ளையனை அவனது
கூடாரத்தில் "ஒண்டி"யாகவே
சந்தித்து
மடிந்து போனான்
மா "வீரன்" ஒருவன்

அவனுக்கான இடம்
சுதந்திர வரலாற்றில்
தேடிக்கொண்டிருக்கிறோம்
தட்டுப்படவில்லை;

பிறகு...
மா "மதுரை "யில்
கள்ளர்களிடமிருந்து
உங்கள் வாழ்வைக்
காத்திருக்கிறான்
மற்றொரு மகத்தானவன்
அவன் ..." வீரன்"

மாறுகால் மாறுகை வாங்கி
"மீனாட்சி" க்கு காவலாய்
"கீழ் " வாசலில் காவல் தெய்வமென
பெயரிட்டு
வெளியே நிற்க வைத்தீர்கள்;

அடுத்து...
ஊமைத்துரையின்
வலதும் இடதுமாக செயல்பட்ட
கந்தன் பகடை பொட்டிபகடை

அந்தோ பரிதாபம்
அவர்களும் கூட
உங்கள் வரலாற்றின்
பக்கங்களில் இருந்து
விரட்டப்பட்டிருக்கிறார்கள்
என்பதை அறிந்தோம்;

நெல்லை சீமையில்
சனாதனி யாகப்பிறந்த
"முத்துப்பட்டன்"
"பொம்மக்கா" " திம்மக்கா" வை
மணம்முடித்தான்...

பிராமணன் ஒருவன்
"அருந்ததி "யாவதோ
என்று அவனையும்
படு கொலை செய்தீர்கள்;


'சிக்கி முக்கி' கற்களில்
அக்னியைகட்டுபடுத்தும்
சூட்சுமம் அறிந்தவனே |
சமுதாயக்கோட்படுகளால்
சாதியின் சூழ்ச்சியால்
'சக்கிலியன்' ஆனதென்ன;

குதிரைப்படைக்கு
தோல் பட்டைகள்
செய்து தேர்ந்தவனே|
படை வீரனாய்
வலம் வந்தவனே|
இன்று சனாதனக் குதிரை
தள்ளி விட்ட
இழிசனராய்
சவக்குழி தோண்டுவதென்ன|

மா அதியனாய்
நீ பாராண்ட திறத்திற்கு
சாட்சியாய்
அவ்வையே நட்பு பாராட்டி
நெல்லிக்கனி கொடுத்ததென்ன|


இன்று
மாதியனாய்
மலக்குழியில்
வீழ்ந்து கிடப்பதுவும் என்ன|

இழப்பதற்கு எதுவுமில்லை;
அடிமைத்தனத்தைத் தவிர
ஒழிப்பதற்கு சாதி
இருக்கிறது;
எழுந்து வா
கரம் கோர்த்து |

மாடறுத்து, செருப்புதைக்க,
பறையடித்து, எழவு சொல்ல ,
பிணந்தூக்கி, மலமள்ள...
என ஒரு
ஏவல் சாதி இல்லை என்பதை
ஊருக்கு உரைப்போம்
விரைந்து வா |


உங்களின்
கொலைகள்
மதுரை வீரனில் தொடங்கி
நக்கலமுத்தையன்பட்டி
ஜக்கையன் வரை
நீட்சி பெற்றுக்கொண்டு
இருக்கிறது...
நிறுத்துங்கள் நீசத்தனத்தை|


மனுவின் பெயரால்
நீங்கள்
ஆண்டது போதும்|
நாங்கள் மாண்டது
போதும்|


இனி பொறுப்பதில்லை
என
போர்ப்பரணி பாடி வா|
அக்னிக்குஞ்சாக வா
அமைப்பாக உருவெடுத்து ...

அப்போது
சாதிச்சிமிழ்கள் உடையும்
சம நீதிப்பயிர்கள்
துளிர் விடும்...

Saturday, April 24, 2010

கோத்ரா கலவரம்

நேற்றுதான் ...
நில மகளின் களேபரம்
அடுக்குமாடிகளின்
குடிசை வீடுகளின்
இடிபாட்டில் எம் மக்கள்
தீப்பெட்டிக்குள் மூச்சிழந்த
பொன் வண்டுகளென ...

தப்பியவர்களின் கூடாரங்களில்
அணைக்கமுடியாத
தீண்டாமைத்தீ ...
தனது நாக்கைத்துழாவியது

இயற்கையின் கலவரத்தில்
செயற்கையாய் சாதியின்
தாண்டவம் ....

இன்று ...
மீண்டவர்கள்
கையூன்றி எழும் நேரம்
கலவர்த்தீயில் காந்தி தேசம்
ஆண் பெண் குழந்தைகள்
அனைவரும்
மத வெறியால் மாய்க்கப்பட்டனர்...

வாதத்துக்கு மருந்து உண்டு
மத வாதத்துக்கு என்ன உண்டு?
ஒரு உறைக்குள் ஒரு கத்திதான்
இருக்க முடியும் ...

உனக்குள்ளும் அப்படித்தான்
மதவாளை உடைத்தெறி ...
மனிதக்கேடயம்
கையிலேந்து ...

கோத்ரா வில் பணியாற்றிய போது (மார்ச் ௨00௨ இல் எழுதிய கவிதை இது)

Thursday, April 22, 2010

மகத்தான வேலை நிறுத்தம்


உலகின் தொலைதொடர்புநிறுவனங்களில் ஏழாவது இடத்திலும்
இந்திய நாட்டின் முதன்மையான
நிறுவனமாகவும் இருப்பது
பி எஸ் என் எல்.
அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு ஆகப்பெரிய நிறுவனம்பி எஸ் என் எல் .
சுமார் மூன்று லகஷம் கிலோமீட்டர் கண்ணாடிஇழை கேபிள்களை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பதித்து சேவை புரிந்து வருகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக் அளவில் தொலைதொடர்பு இருப்பது இந்தியாவில்தான்.(மொத்த இணைப்புகள் வயருடன்உள்ள டெலிபோன் மற்றும் மூன்று வயர் ஐம்பத்தாறு கோடியே இருபத்தியிரண்டு லக்ஷத்து பத்தாயிரம் - டெலி டென்சிட்டி இந்தியா: நாற்பத்திஎட்டு சதம் .இந்திய நாட்டின் ரயில்வே தண்டவாளத்தின் மொத்த நீளமே அறுபதினாயிரம் கிலோமீட்டர்தான்)
சாம் பிட்ரோடா என்ற தொலைதொடர்பு நிபுணரின்(?) தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை இப்படிசொல்லிச்செல்லுகிறது :

இருக்கின்ற
மூன்று லக்ஷம் ஊழியர்களில் ஒரு லக்ஷம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது;

பி எஸ் என் எல் பங்குகளில் முப்பது சதமான பங்குகளை விற்று விடுவது; (அரசின் பெயரிலேயே அனைத்து பங்குகளும் இருப்பதால் பி எஸ் என் எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்று ஒரு பைசாகூட வராது)

காப்பர் கேபிள்களை தானியாருக்கு தாரை வார்ப்பது ;

ஏழு பெரிய நகரங்களில் நிறுவனத்தின் வசம் இருக்ககூடிய இருபத்திமூன்று லக்ஷம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலங்களை விற்பது ;(இருக்கின்ற சொத்துக்கள் ஒன்று கூட அரசின் பெயரிலிருந்து இன்று வரை மாற்றப்படவில்லை) விற்கிற காசெல்லாம் அரசுக்குத்தான் செல்லும்.

நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பிரதமரின் ஆணைப்படி அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை எப்படி இருக்கிறது?
இத்தோடு
தொண்ணூற்றி மூன்று மில்லியன் ஜி எஸ் எம் கருவிகளுக்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்வது;

உயர்மட்டத்தில் இருக்ககூடிய ஆயிரத்து ஐந்நூறு ஐ டி எஸ் அதிகாரிகளை பத்தாண்டு காலமாக நிறுவனத்திற்குள் கொண்டு வராமல் இருக்கும் அரசின் மெத்தன போக்கு;

நிறுவனத்தின் பணிகளை அவுட் சோர்சிங் மூலம் செய்வது;

எல்லா பிரச்னைகளும் ஊழியர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
விளைவாக,
ஜே எ சி என்கிற ஒரு அமைப்பு அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்களை உள்ளடக்கி உருவானது.
அந்த அமைப்பின் கூட்டு முடிவு மற்றும் வழி காட்டுதலின் அடிப்படையில் ஐ டி எஸ் அதிகாரிகள் தவிர்த்து அனைத்து அதிகாரிகள் அமைப்புகளும் அனைத்து ஊழியர் சாங்கங்களும் காலவரையற்ற ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடப்பட்டது

வரலாற்றில் முதல் முறையாக வங்கி ஊழியர்களைப்போல் எல் ஐ சி ஊழியர்களைப்போல் அதிகாரி தொழிலாளி பேதம் இன்றி மாபெரும் வேலை நிறுத்தப்போர் நடைபெற்றது. ஏப்ரல் எருபதம்தேதி காலை ஆறு மணிக்கு துவங்கியது வேலை நிறுத்தம். நாடு முழுவதும் பல அலுவலகங்கள் பூட்டப்பட்டன. கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பதினோரு மணிக்கு மத்திய மந்திரி ராஜா அவர்களின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு. ஜே எ சி தலைவர்களுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. மாலை மூன்றரை மணிக்கெல்லாம் போராட்டம் முடித்துகொள்ளப்பட்டது.
இது ஒரு துவக்கம் தான்
இனிமேல் ஊழியர்களைப்பாதிக்ககூடிய எந்த ஒரு பிரச்னைஎன்றாலும்
ஒன்று பட்ட போராட்டங்கள் தொடரும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.