வலைப்பதிவில் தேட...

Wednesday, November 20, 2013

பந்திச் சோறும் எச்சில் இலையும்

அப்போது  பத்து வயது இருக்கும். நான் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தேன். என்னோடு பள்ளியில் சேர்ந்த ராஜேந்திரன், மாரியப்பன், சந்திரன், சின்ன கருப்பையா எல்லாரும் பள்ளியிலிருந்து நின்று போய் இருந்தார்கள். படிப்பு வரவில்லை என்று சொல்லிக்கொண்டார்கள்.


பெற்றோர்கள் நாம்தான் படிக்கவில்லை இவர்களாவது படித்து வேலைக்குப்போய்  நிழலில் வேலை செய்து நன்றாக இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டிருந்ததைப் பொய்யாக்கி புளியமுத்து வைத்து செதுக்கு முத்து , தீப்பெட்டிப்படம்  சில நேரங்களில் சிகரட் அட்டைகள் பை நிறைய வைத்துக்கொண்டு வைத்து விளையாடிசெயித்து அல்லது தோத்துக்கொண்டிருப்பார்கள். லீவு நாட்களில் அவர்களோடுதான் ஆட்டம். மட்டுமல்ல குண்டு, கிட்டி(கில்லி) என்று பொழுதுகள் களவாடப்படாமல் போய்க்கொண்டிருந்த நேரம் அது.


இப்போதைய இளவட்டங்களுக்கு இந்த விளையாட்டுக்கள் தெரியுமா எனத்தெரியவில்லை. கம்ப்யூட்டரில் எவனையாவது அடித்து அல்லது முந்திக்கொண்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். சில நேரங்களில் எம் ஜி ஆர் படங்களின் பிலிம் வைத்து ஒரு வேட்டியை சுவற்றில் கட்டி, குண்டு பல்பில் தண்ணீர் ஊற்றி ஒரு கண்ணாடி வைத்து ஒளியடித்து பெரிதாக்கி வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு ஸ்டில்லாகப்பார்த்து மகிழ்ந்திருந்த நாட்கள் அது....
அந்த ரோடு முழுவதுமே கிட்டத்தட்ட கல்யாண மண்டபங்கள்தான் நிறைந்திருக்கும். பதின் வயதுகளில் இது போல ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட நினைத்து போய் இருக்கிறோம்.
"போட்டிருக்கிற சட்டை நல்லா இருக்கா மாப்ளே" என்று கேட்டுக்கொள்வோம். சனிக்கிழமை சாயங்காலம் அந்த ரோட்டுப்பக்கம் போனால் மைக்செட் அலங்காரம் வைத்து கல்யாண மண்டபங்கள் குதூகலித்து இருக்கும். அவரவர் சத்துக்குத்தகுந்தபடி அந்தக்கல்யாண வீட்டை பெரிய கல்யாண வீடு/ சின்ன கல்யாண வீடு என தீர்மானிக்க முடியும் எங்களது அறிவுக்குட்பட்டு.அழையா விருந்தாளியாகக் காலையில் டிபன் சாப்பிட ஓசியில் எந்த வீட்டுக்குப்போகலாம் என்பது எங்களின் திட்டமாக இருந்திருக்கிறது பல நாட்களில் சில கல்யாண வீடுகளில் ஒருவர் நிற்பார். கல்யாண வீடு சம்பந்தப்படாதவர்கள் யாரேனும் அவரது கண்ணுக்குத்தட்டுப்பட்டால் விரட்டி விடுவார். அதையும் மீறி மண்டபத்துக்குள் நுழைவது கஷ்டம். சில நேரங்களில் அப்படி நுழைந்து விட்டாலும் பந்தியில் உட்கார வேண்டும். இலைகள் போட்டு தண்ணீர் தெளித்து கேசரி வருமுன் யாரேனும் கண்டுபிடித்து யார்ரா நீ என்று கேட்டு வெளியே போடா என்று சொல்லி விடுவதும் நடக்கும்.அப்புறம் எங்கே தேங்கா சட்னி இட்லி சாம்பார் எல்லாம். சில நேரங்களில் அடி கூட விழும். நாம் தயாராக இல்லையென்றால்.அடி வாங்கிவிடாமல் ஓடுவதே ஒரு கலைதான் அந்த நாட்களில். ஒரே ஓட்டம்தான். அப்புறம் அந்த மண்டபத்துக்கு அடுத்து முகூர்த்தத்துக்குதான்.


கல்யாண வீட்டுக்கு சம்பந்தமில்லாதவர்கள் என்று சொன்னால் மைக் செட்காரர்,   சாரட்டுக்காரர், யானைப்பாகன், தந்தி கொடுப்பவர்,அந்த மண்டபத்து வாட்ச் மேன் ( சில மண்டபங்களில் அவர்களது குடும்பமும்) எச்சில்  இலை அள்ளும்/ கக்கூஸ் சுத்தம் செய்யும்  தலித், என்று ஒரு பட்டியல். அவர்கள் சாப்பிட்டுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பந்தியில் சிலருக்கு, மிச்சம் விழுந்த சோறு குழம்பு சட்டியில் பாக்கிப்பேருக்கு...


மாப்பிள்ளை யும் நானும் இப்படியாக ஒரு நாள் பந்திக்குப்போனோம் சட்டை நல்லா இருப்பதாக பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சர்டிபிகேட் கொடுத்துக்கொண்டே....  அந்த மண்டப வாசலில் இருந்த ஒருவர் எங்களை நுழைய விட வில்லை... வேறு வழியில்லை சாப்பிட்ட எச்சில் இலைகள் வெளியே வந்து விழுந்து கொண்டிருந்தன. அதை எடுத்து சாப்பிட இரண்டு மூன்று பேர் தலைக்கு எண்ணெய் தடவாத இளைஞர்கள்இருவரும்  ஒரு ரிக்ஷா ஒட்டுபவரும்...


மாப்பிள்ளை மாரியப்பன் ஒரு ஐடியா கொடுத்தான். பசியா இருக்கு மாப்பிள்ள எச்சில் இலை  இன்-சார்ஜ் எனக்குத்தெரிந்தவர்தான் பெரிய முத்து. அவரிடம் கேட்டு சாப்பிடலாமா. வீட்டுக்குதெரிந்து விடும் என்றேன். உனக்கும் எனக்கும் தான் தெரியும் இந்த மேட்டரு நான் சொல்ல மாட்டேன் நீயும் யாருகிட்டயும் சொல்லிடாதே என்றான். பசி வந்தால் பத்தும் பறக்குமாமே பசி மட்டுமே பறந்தால் இப்போதைக்கு சரி என்றேன்.


மாப்பிள்ளை தயங்கி சென்றான்... பெரிய முத்துவிடம் எங்களுக்கு பசிக்குது நாங்களும்  சாப்பிடனும் என்று தெரிவித்தான்...


ஆலமரத்துப்பட்டியான் என்ற ஒரு கருத்தவர் ரவுடி ரேஞ்சில் இருந்தார்.அவர் பெரியமுத்துவுக்கு பாஸ் போல இருந்தார். பெரியமுத்துவையும் எங்கலயும் பார்த்து விட்டு  கண்ணாலே சம்மதம் குறித்தார்.


அப்புறம் என்ன விழுந்த இலைகளில் இருந்த கேசரி, தேங்காய்சட்னி, ஒழுகினது போக இலையில் மிஞ்சிய சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு பிய்ந்து போன பூரி என்று ஒவ்வொரு இலையாக விரித்து லாவகமாக ஒரு நல்ல இலையில் வைத்து வயிறு முட்டும் அளவு (வயிறுதானே அளவு... அதற்குமேல் போதும் என்று சாப்பாட்டை சொல்ல மட்டுமே முடியும் அந்த நேரத்திற்கு... மற்றெதையும் போது என்று சொல்லும் மனப்பக்குவம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்...) சாப்பிட்டு மாப்பிள்ளையும் நானும் ஒருவருக்கொருவர் புளகாங்கிதமாகப்பார்த்துக்கொண்டோம்... யாருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டோம்.


மணி எட்டரை ஆகி விட்டது... ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பியது. ஒரே ஒட்டம் மாப்பிள்ளையிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு...ராஜூ வாத்தியார் விசில் அடித்து எல்லோரையும் பிரேயருக்கு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார் 0845 முதல் பெல் அடித்தது அரக்கப்பரக்க ரெட்டுப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். அடுப்படியில் இருந்த சாம்பலை நெற்றி நிறைப்பூசிக்கொண்டு (அது பூசவில்லையென்றால் அவர் அடிப்பார். விபூதி வாங்க வசதி இல்லை என்பதறிக...)


வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்றார் பாரதியார்.


ஒரு நாய் பட்டினி கிடப்பதைக்கூட நான் சகித்துக்கொள்ள மாட்டேன் என்றார் ஒரு பஞ்சத்தை நேரடியாகக்கண்ட சுவாமி விவேகானந்தர்.