வலைப்பதிவில் தேட...

Friday, April 17, 2009

அம்பேத்கர் பிறந்த நாள்நண்பர்களே

நான் ஒரு தலித் என்பது எனக்கு விபரம் தெரியும் வரை நிச்சயமாக தெரியாது. அப்பா ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளி . ஆசை ஆசையாக எனது அம்மாவோடு புணர்ந்து தான் என்னையும் மற்றவரைப்போல் எனது அப்பா என்னை உருவாக்கியிருப்பார் . பெயர் வைத்திருப்பார் பாராட்டியிருப்பார் சீராட்டியிருப்பார் எனது அம்மாவும் கூடவேதான் எப்படி கொஞ்சியிருப்பார்கள் என்னை. என் பெயரோ நாராயணன் போதாதா நான் ஒரு ஹிந்து என்பதற்கும் படி நிலை சமூகத்தின் அங்கம் என்பதற்கும் சாட்சிதான் வேண்டுமோ என்ன. ஹிந்துவாக இருக்க வேண்டும் பிறகு தாழ்ந்த ஒரு தொழிலை செய்ய வேண்டும். அவன் நிச்சயம் தலித்துதான்.

அறிவர் அம்பேத்கர் பிறந்த நாள் கூட்டத்திற்கு போய்இருந்தேன் . என்னை பேச சொல்லி அன்புக்கட்டளை இட்டார்கள் நண்பர்கள். அந்த கூட்டத்திற்கு மொட்டை அடித்த ஒரு நண்பர் வந்திருந்தார். நான் அம்பேத்கர் அவர்களின் கொள்கைப்படி நான் இந்துவாகப்பிரந்தேன் இந்துவாக இறக்கமாட்டேன் என்று சபதம் பூண்டு இருபது ஆண்டு காலம் யோசித்து இறுதியில் புத்த மதத்துக்கு மாறினார் ஆகவே நாம் இந்து மதத்தில் இருப்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் இன்னும் நாம் மொட்டை அடித்துக்கொண்டு இருக்ககூடாது . கடவுள் நம்பிக்கையிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற கருத்து பதியம்படியாகவும் மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி பிராமணர்களையும் ஒன்றிணைத்து மாபெரும் கூட்டணியாக உத்திரப்பிரதேசத்தில் உருவாக்கியிருக்கிறார் . அந்த வழியை பின் பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினேன் .

தலித்துகளை அரசின் பிராமணர்கள் என்று விளித்தது போக தலித் தலைவியான மாயாவதி ஒரு பிராமணரை தனது செயலாளராக வைத்துக்கொண்டு ஏழை பிராமணருக்கும் இட ஒதுக்கீடு உண்டு என்று அறிவிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார் ஆனால் நாமோ குறிப்பாக தமிழகத்தில் பல்லன் பறையன் சக்கிலியன் குறவன் புதிரைவண்ணன் என பிரிந்து கிடக்கிறோம் குறைந்த பட்சம் இந்த உட்பிரிவுகளை களைந்து விட்டு ஒற்றுமை காக்க கிளர்ந்தேளுவோம் என்றும் குறிப்பிட்டேன் .

மறு நாள் தொலைபேசியில் ஒரு அன்பர் அழைத்தார் . நீங்கள் பேசியது உங்களுக்கே சரியா என்றார். கடவுளை மறுத்து பேசியது முறையாகுமா என்று வினா தொடுத்தார். பெரியாரும் அம்பேத்கரும் அவரது குருவான ஜோதிராவ் புலேயும் தமிழகத்தின் முதல் போதுவுடமைவாதியுமான சிங்காரவேலரும் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை அண்ணலுடைய பிறந்த நாளில் கூட இன்னும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை நமது சிதறுண்ட மக்கள் (தலித்) நான்கில் ஒரு பகுதி மக்களின் இழி நிலை தீர்க்க இன்னும் எத்தனை காலம் தான் காத்திருக்க வேண்டுமோ


எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
என் மக்களுக்கு ஏன் இன்னும புரிய
வைக்க மாட்டாயோ

என நான் இறைவனை அல்ல அறிவை கேட்டேன்.

Saturday, April 11, 2009

கோத்ரா நாட்கள் 2


கோத்ராவிலிருந்து தகொத் ஒரு முறை சென்று கொண்டிருந்தோம் அலுவலக வாகனத்தில். ஒரு ராஜஸ்தானிய நண்பரைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும் . அவர் பெயர் பன்ஸிதர் குப்தா . டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஏராளமான புகைப்படங்களும்
கலவரங்கள் பற்றிய செய்திகளும் வந்துகொண்டிருந்த நேரம் அது. மோடியை கொலைகாரன் (Chief Monster)என்று அந்தப்பத்திரிகை எழுதவும் கூட செய்தது . நண்பருக்கும் எனக்கும் ஒரு விவாதம் வந்தது. நடந்து முடிந்த இந்தக்கொலைகள் கலவரங்கள் பற்றி. நான் ஒரு கட்டத்தில் சொன்னேன் எந்த மதமும் வன்முறைக்கு இடம் தருவதில்லை . எனவே மக்களுக்குள் மோதல் ஏற்படுத்தும் மதங்கள் மக்களுக்குள் ஒற்றுமையை விதைக்கவேண்டும் பிரிவினையை அல்ல . அவர் சொன்னார் இல்லை இல்லை இவர்களுக்கு நாம் யார் (இந்துக்கள்...) என்பதைக்காண்பித்தாகவேண்டும் என்றார்.


வழி நெடுக தீ எரிந்து போனதின் எச்சங்கள். 58  பேருக்கு பதிலாக 2000 பேர் என்கிற ரீதியில் உயிர்க்கொலைகள் நடந்து முடிந்துவிட்டது 20000 இருசக்கரவாகனங்கள் 4000 நான்கு சக்கர வாகனங்கள் என சேதாரம் ஆகிப்போனது நிம்மதி இழந்து 2 லட்சம் பேர் அகதிகளாக உள் நாட்டிலேயே என்று நாடே உற்றுப்பார்க்கும் ஒரு சாவதேச முக்கிய நகரமாக ஆகிப்போனது கோத்ரா  நரேந்திர மோ(டி)தி சிரித்த முகத்துடன் டிவியில் வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு பனிரெண்டு நாட்கள் நாங்கள் அலுவலகம் செல்ல முடியவில்லை . ஊரடங்கு உத்தரவு ஊரெங்கும். இடையில் ரேடியோவில் மாவட்ட ஆட்சியர்  (நம்ம ஊருக்கார ஜெயந்தி ரவி) குஜராத்தியில் சொல்லும் நேரம் மட்டும் காய் வாங்கிக்கொள்ளலாம்.
கடந்து போய்விட்டது அந்தக்கடுமையான நாட்கள் .
குப்தாவுக்கு ராஜஸ்தான் மாற்றல் வந்தது. நாங்களெல்லோரும் கோத்ரா ரயில் நிலையம் சென்றோம் வழியனுப்ப . எலும்புக்கூடாக s 6 ரயில் பெட்டி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது . ஆளுக்கொரு தேங்காய் வாங்கி வந்து பயணம் செல்பவர்களின் கையில் கொடுப்பது என்பது மரபு அங்கே.
ஜானி என்றொரு அதிகாரி வந்தார். ரயில் கிளம்ப இன்னும் சில மணித்துளிகள். அவர் பங்குக்கு ஒரு தேங்கையை குப்தாவின் கைகளில் கொடுத்தார் . பதிலுக்கு குப்தாஅவரது  கால்களை நமஸ்கரித்தார். வயது மூத்தவரை காலைத்தொட்டு கும்பிடுவது என்பது அங்குள்ள வழக்கம். மரபு . குனிந்து எழுந்தவன் கண்ணில் தாரைதாரையாகக் கண்ணீர்த்துளிகள் .

சின்னப்பிரிவையே தாங்கமட்டாத இவனா அன்றைக்கு வன்முறையாளனாக அன்றைக்கு நாம் யார் என்பதை காண்பித்தாகவேண்டும் என்று சொன்னவன் என்று எனக்கு ஏகப்பட்ட ஆச்சர்யம்

Thursday, April 9, 2009

கோத்ரா நாட்கள் 1அப்படி ஒன்றும் அழகிய நாட்கள் இல்லைதான் . 2002 பிப் 27 துவங்கியது அந்த கலவரம் கரசேவைத்தொண்டர்கள் ராமசேவைத்தொண்டர்களாக மாறியிருந்தார்கள். ஆனால் கலவரம் மட்டும் அதேபாணிதான்.
அயோத்தியில் ஒரு கட்டிடத்தை இடித்தார்கள்.
இங்கே ஒரு எஸ் 8 என்ற எண்ணுள்ள சபர்மதி எக்ஸ்பிரஸ் வண்டியின் "கோச்"சை எரித்தார்கள்.

58 பேர்கள் எரிந்து கரிக்கட்டை ஆனார்கள். காலை8மணி சுமாருக்கு எனக்கு ஒரு தொ்லைபேசி வந்தது. அப்போதிலிருந்து கோத்ராவைப்பரபரப்பு தொற்றிக்கொண்டது. நடந்த விஷயம் இதுதான். ராமசேவைத்தொண்டர்கள் எனப்பட்டவர்கள் கோத்ராவுக்கு முன் தகோத் ஸ்டேஷனில் "சாயா"விற்ற தாடிக்கார சிறுபான்மையினரை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் தாடி யையும்சேர்த்தேதான். கூடவே "ஜெய் ஷ்ரீராம்" கோஷமிடச்சொல்லி என ஆரம்பித்து அதே வேலை அடுத்த ரயில் நிலயமான கோத்ராவிலும் தொடர S6 என்ற இலக்கப்பெட்டி கொளுத்தப்பட்டது.

அடுத்த சில நாட்களில் நான் விடுமுறைக்கு தமிழகம் வரவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட அதையொட்டிய சம்பவம் ஒன்று வைகை எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஒரு முஸ்லிம் குடும்பம் கோழி பிரியாணியும் கையுமாக அனைவரும் ஆசை ஆசையாக பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள். பக்கத்திலே ஒரு பிராமணக்குடும்பம். தயிர் சோறுசகிதம் அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள்.
பிரச்னைஎன்னவென்றால் பொது இடத்திலே இப்படியா நான்வெஜ் சாப்பிடுவாங்க என்றார் தயிர்ச்சோறுக்கு சொந்தக்காரர்.
எனக்கு தாகோத்தில் ராமசேவகர்கள் செய்தது ஞாபகம் வந்து தொலைத்தது. 

தமிழகத்தின் தந்தை பெரியார் வைகையின் வேகத்தைவிடவும் என் நினைவில் வந்தார்.

அழகிய நாட்கள்

அடுத்த நிமிடம் தரவிருக்கும் ஆச்சர்யங்கள் நிறைந்த நமது வாழும் சூழல்
என்னை இந்த பறந்து  கிடக்கும் வையக வலை விரிவில் ஒரு கண்ணியாக இணைத்துக்கொள்ள தூண்டியது. வாய்ப்பு சமமானதாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கல்வி கற்கும் வாய்ப்பு மட்டும் எல்லோருக்கும் கிடைத்திருந்தால் இந்தியாவில் இன்னும் முப்பத்தைந்து விழுக்காடு எழுதப்படிக்க தெரியாதவர் பட்டியலில் இருக்க நேரிடுமா என்ன? 


இரண்டு மூன்று பேர் இந்த உலகை புரட்டிபோடும் சிந்தனையை உருவாக்கி அளித்தவர்கள்  என நினைக்கிறேன். 'குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' என்ற மாபெரும் தத்துவம் சொன்ன சார்லஸ் டார்வின் தொழிலாளர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை அடிமை விலங்குகளைத்தவிர என்று உரக்கச்சொன்ன கார்ல் மார்க்ஸ்  


தியரி ஆப் ரிலேடிவிட்டி வரைவு செய்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 

எனது அனுபவங்கள் தொடரும் வரும் பதிவுகள் மூலமாக...