வலைப்பதிவில் தேட...
Thursday, April 29, 2010
மீனாட்சி கல்யாணம்
மதுரையில் ஆண்டு தோறும் சித்திரை மாத பவுர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிக்கொண்டே இருக்கிறார்.. அதற்கு முதல் நாள் அழகருக்கு பக்தர்களின் சார்பில் எதிர்சேவை. அதற்கு முந்திய நாள் தேரோட்டம் அதற்கு ஒரு நாள் முன்பாக மீனாக்ஷி கல்யாணம். வருடா வருடம் தவறாமல் திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்க்கிறார்கள். ஆனால் கள்ளழகர் மட்டும் திருமணத்தை தவறவிட்டு வைகை வடகரை வழியாக துலுக்க நாச்சியாரை சந்திக்கவும் மண்டூக முனிவருக்கு சாபம் கொடுக்கவும் இரவில் தசாவதாரம் என்று போக்கொண்டு இருக்கிறார். நிஜத்தில் பல அழகிய பெண்கள் வயதாகியும் கூட திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். ஒரு பாடல் பாரதி கிருஷ்ணகுமார் கரகரத்த குரலில் பாடக்கேட்டு இருக்கிறேன்.
'மதுரை மீனாட்சிக்கும் காஞ்சி காமாட்சிக்கும்
மாசமொரு கல்யாணமாம்
தேர் மேல மாப்பிள்ளை ஊர் கோலமாம்
எங்க எதித்த வீடு பொண்ணு வயசாகி நாளாச்சி
எப்பதான் கல்யாமம் -அவ
கண்ணில் எப்பவும் நீர்க் கோலமாம்'
அழகரை சேவித்துவிட்டு பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லி விட்டு சூடம் கலந்த வாசத்துடன் சக்கரை தருவார்களே அதை வாங்கித்தின்ற நாட்கள்; வெயில் என்றும் பாராமல் ராமராயர் மண்டகப்படி பக்கம் நெற்றியில் கரைந்த குங்குமத்தோடு நாமத்துடன் அலைந்த நாட்கள் அலைமோதுகின்றன.
அப்பா எனக்கு முதல் மொட்டை அழகர் ஆற்றில் இறங்கிய அன்று போட்டதாகசொல்லுவார்.
பச்சை பட்டு அணிந்து ஆற்றில் இறங்கினால் அனைத்து வெள்ளாமையும் சிறக்கும் என்பார்கள்
சிகப்பு பட்டு என்றால் மிளகாய் வத்தல் விளைச்சல் பொங்கி வருமாம்
வெள்ளை பட்டு உடுத்தி வந்தால் பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்குமென்றும் சொல்லுவார்கள்.
கடந்த பத்தாண்டுகளில்
பி டி பருத்தி விவசாயம் செய்த விவசாயிகள் சுமார் இரண்டு லக்ஷம் பேர் தற்கொலை செய்து மடிந்து இருக்கிறார்கள...
ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூலியில் காலத்தை வென்று கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நமது ஜனத்தொகையில் 70 சதமானம் என்று ஒரு கணக்கு நம் முன் காட்டப்படுகிறது..
ரூபாய் 50 ,000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் 54 பேர என்று சொல்லப்படுகிறது...
வருடா வருடம் மீனாக்ஷி திருக்கல்யாணம் நடந்து கொண்டேதான் இருக்கிறது
வருடாவருடம் அழகர் வந்து கொண்டிருக்கிறார்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment