வலைப்பதிவில் தேட...

Thursday, September 24, 2015

தென்னிந்தியாவின் முதல் சமதர்மவாதி

"சிந்தனைச்சிற்பி சிங்காரவேலு வாழ்வு சிந்தனையும்"

                                                                             - கே. முருகேசன்/சி எஸ் சுப்பிரமணியம்
                                                                               வெளியீடு பாரதி புத்தகாலயம்
                                                                               பக்கங்கள்:432
                                                                               விலை ரூ 200/-

பிறப்பு:  18, பிப், 1860  மறைவு: 11 பிப், 1946

புத்தர் அவர்களின் 2443 ஆவது  இறந்த நாள் நினைவுக்கூட்டம் ஒன்று சிங்காரவேலர் வீட்டில் (22, கடற்கரை வீதி, திருவல்லிக்கேணி, சென்னை) 1899 ஆம் ஆண்டு நடைபெற்றது.

1921இல் ஒத்துழையாமை இயக்கத்தில் முன்னின்று போராடியவர்.

அந்த சமயத்தில் மகாத்மா காந்திக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதியவர். அவரது சனாதன ஆதரவு மற்றும் தீண்டாமை ஒழிப்பு கொள்கைகளைச்சாடியவர். எட்டு கோடி தீண்டாத ஜாதியினரை கோவிலுக்குள் நுழைவித்தால் போதும் என்று நினைக்கும் காந்தி அவர்களது வாழ்வின் ஏழ்மை நிலை, கஷ்டங்களினின்றும் மீட்க ஏதும் செய்வதற்கு தயாரனவராக காந்தி இல்லை என்பதை தெளிவாக விண்டுரைத்தவர்.

பாரதியாரின் நண்பர். அவரது இறுதி நாட்களில் திருவல்லிக்கேணியில் உடன் இருந்தவர்.

1923 இல் முதன் முதலாக சென்னையில் மே தினம் கொண்டாடிய மாபெரும் மனிதன்.

1930 இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தடம் பதித்தவர்
சென்னையில் பல  தொழிற்சங்க இயக்கங்களுக்கு தலைமேற்றவர். பி அண்ட் சி மில், ரயில்வே, டிராம் ஊழியர்களின் வெற்றி கரமானவேலை நிற்த்தப் போராட்டங்களின் தலைவர்.

திரு வி சக்கரை செட்டியார் திரு வி கலியாண சுந்தரனார் ஆகியோருடன் தோழமை கொண்டவர்.

1931 விருது நகர் மா நாட்டில் நாடார்கள் சமையல் நடக்கும் என்று அறிவித்தார் பெரியார் அப்போது வரை பிராமணர்கள்தான் கூட்டங்களுக்கு சமைத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த மா நாட்டில் தான் கைம்பெண்களுக்கு மறு விவாகம் நடைபெற்றது. அந்த மா நாட்டில் பங்கேற்க சிங்கார வேலர் உடல் நிலை அனுமதியாத போதும் அருமையான வாழ்த்து அனுப்பியவர்.அந்த வாழ்த்தில் இருந்து...
"தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு பூனூலையும் சந்தியா வந்தனத்தையும் வைத்துக்கொண்டிருத்தல் வஞ்சனை அல்லாது வேறில்லை.தீண்டாமையை விட்டவர்கள், ஏன் ஆச்சாரியார்கள் எனவும், ஐயர், ஐயங்கார்கள் எனவும் அழைக்க சம்மதிக்க வேண்டும்!".

தந்தை பெரியாருடன் சுய மரியாதை இயக்கங்களில் சேர்ந்து பணியாற்றிவர்
மீரட் சதி வழக்கிலிருந்து மீண்டு வந்து குடியரசு பத்திரிகைக்கு "கம்யூனிசமும் மதமும்" என்ற தலைப்பில் 1930 களில் தொடர் கட்டுரைகள் வரைந்தவர்.


1946 இல் சாகும் தருவாயில் வெளி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட  10000 க்கும் மேற்பட்ட புத்தங்களை பொதுவுடைமைக்கட்சிக்கு கொடுத்து சென்றவர்.

இனி அவரது எழுத்துகளிலிருந்து:

காங்கிரஸ் திட்டத்திலும் சொத்துரிமையும் மதவுரிமையும் ஜாதியுரிமையும் காக்கப்படப்போகின்றது. நிலச்சுவானும் பண்னை ஆளும் காங்கிரஸ் திட்டத்தில் இருந்தே தீரப்போகின்றனர். தொழிலாளரும் முதலாளியும் பங்காளி தத்துவ முறையைக்கொண்டாடப்போகின்றனர். இவ்வெருவருக்கும் எலிக்கும் பூனைக்கும் உள்ள சம்பந்தந்தான் ஏற்படப்போகின்றது. குடிக்கூலி வாங்கும் வீடடைந்தவனும் குடக்கூலி கொடுக்கும் குடியானவனும் இருக்கப்போகின்றனர். வர்த்தகமும் சிலரிடத்தே தங்கப்போகின்றன. பொதுவுடைமையோ சமதர்மவுடைமையோ, காங்கிரஸ் ஆட்சியில் காணப்போவதில்லை.

நாட்டுக்கு நல்லரசன் வந்தாலும், தோட்டிக்குப்புல் சுமக்கும் வேலை இருந்தே தீரப்போகிறது.

நிலம் இல்லாதவன் நிலம் இல்லாமலும், ஜமீன் தாரன்  ஜமீன் தாரனாகவும், முதலாளி முதலாளியாகவும் , தொழிலாளி தொழிலாளியாகவும், புரோகிதன் புரோகிதனாகவும், கோயில் கோயிலாகவும், பிராமணன் பிராமணனாகவும், பறையன் பறையனாகவும் இருந்தே தீரப்போகின்றனர்.
இந்தத்திட்டமே நமக்குள்ள சமூகத்திட்டமாக 5000 வருஷங்களாக இருந்து வருகின்றது.
இனி வரப்போகும் சைமன் திட்டத்திலும் சொத்துரிமை, மதப்பற்றுரிம, ஜாதி வித்தியாச உரிமைக்காப்பை அளித்துள்ளனர். இக்காப்பினை காங்கிரஸ் நிராகரித்ததாகத்தெரியவில்லை.

நமது மூன்றாம் வட்ட மேசை, ஜாதியை ஆசீர்வதித்து விட்டது!. அவனவன் ஜாதி அவனவனது  ஜாதி வித்தியாசங்களை அவனவனுக்கே விட்டுவிட வேண்டும். வருண பேதத்தை சட்ட முறையால் நீக்க முடியாது. எங்களுக்கு, வெள்ளையர்களுக்கு ஜாதி வேற்றுமை இல்லாமல் இருப்பினும், ஜாதி வேற்றுமையை ஆதரிபவர்களைத் தொடப்படாது.

 நான்கு வகை ஜாதியானாலும் சரி, 4418 ஜாதியானாலும் சரி. இவைகள் ஆட்சேபணை இன்றி யாவரும் அனுஷ்டிக்கலாம் என்ற கருத்தைக்கொண்டுள்ளது வட்ட மேசை!.

பார்ப்பான் பார்ப்பானாக இருத்தல் வேண்டும்!. பறையன் பறையனாகவே இருத்தல் வேண்டும்!!. ஒன்றிலொன்று நுழையக்கூடாது!!

புத்தர் காலம் முதல் ஜாதி கண்டிக்கப்பட்டும், கலப்புத்திருமணங்கள் நடந்தும், ஜாதி ஒழிந்தபாடில்லை.

நமது இந்திய நாட்டு மக்களில் 7, 8 கோடி மக்கள் (இந்தியாவின் மக்கள் தொகை 1932 இல் 34 கோடிகள்) தீண்டாத வர்களென்றும், தாழ்த்தப்பட்டவர்களென்றும்,பஞ்சமர்களென்றும், பறையர்களென்றும் வழங்கி வருகின்றார்கள். ஒடுக்கப்பட்டவர்களென்ற பிரத்தியேக ஜாதியார் நம்முடைய ஊரைத்தவிர மற்றெங்கும் இல்லை.

ஆஸ்திகம் ஒழிந்து நாஸ்திகம் பரவ வேண்டும்

ஆனாலும் சரி, அல்லது தேசத்து வறுமை நீங்க வேண்டும். ஆனாலும் சரி, இனி வரும் அரசியல்கள் சமதர்ம ஒழுங்கின்படி அமைய வேண்டும்.

நமது நாட்டிலுள்ள சாமான்ய மக்கள் உண்மை சுதந்திரம் பெற்று, பசி இல்லாமலும், மத கற்பனை இல்லாமலும், ஜாதி சமயம் இல்லாமலும், உண்ண, உடுக்க, இருக்க, பிடிக்க, வசதிகள் யாவருக்கும்  சரி நிகர் சமான வாழ்வைப்பெற, சமதர்ம ராஜ்ஜியத்தை ஸ்தாபியுங்கள். 

சமதர்மமென்றால் என்ன? நாட்டில் விளையும் விளை பொருளும், செய்யப்படும் செய்பொருளும், அந்நாட்டிலுள்ளயாவருக்கும் சரி சமத்துவமாகவே வினியோகமாகும் சமூகம் எதுவோ, அதுதான் சமதர்ம சமூகமெனப்படும் என்பதறிக.

உழைப்பவனுக்கு உரியது உழைபின் பயன் என்பதுதான் சமதர்மத்தின் தருமம். சமதர்ம சமூகத்தில்தான் செய்த வேலையின் முழுப்பயன் தனக்கே கிடைக்குமாதலால், ஆசையுடனும் அவாவுடனும் அவனனுக்கிட்ட வேலையைச்செய்வான்.

சுதந்திரம் அடையும் முன் அவர் காலமாகிப்போய்விட்டார். அவரது கருத்துகள் இன்னும் உயிருடன் இருக்கின்றன. சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன பிறகும் நிலைமையில் இன்னும் மாற்றங்கள் வேண்டி நிற்கிறது.

கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகள் கழிந்த நிலையிலும் கூட அவரது கருத்துகள் போதனைகள் இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படுகிறது, மத எதிர்ப்பு மூட நம்பிக்கை எதிர்ப்பு, காங்கிரஸ் கொள்கை எதிர்ப்பு, காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு  எதிர்ப்பு,பொதுவுடைமையின் தேவை இன்றைக்கும் இந்தியாவுக்கு அவசியப்படுகிறது.

2 comments:

Geetha M said...

வணக்கம்.வலைப்பதிவர் திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.

Arjunan Narayanan said...

வந்தேன். வரவேற்பில் மகிழ்ந்தேன். முக்கனியுடன் மதிய விருந்து உண்டேன்.புதுகை பதிவர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல ஒரே உடை அணிந்து தங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளி போல உளம் உவகை பூக்க விருந்தோம்பல் செய்தீர்கள். பேரன்பு செலுத்தியமைக்கு பிரதி உபகாரமாக எனது நன்றிகள் பல