வலைப்பதிவில் தேட...

Monday, October 11, 2010

பதின் வயது நினைவுகள் 1

அப்போது பதினோராம் வகுப்பு ( பெரிய பத்து) படித்துக்கொண்டிருந்தேன். பள்ளித்தலைமை ஆசிரியர் தான் வகுப்பின் பொறுப்பாசிரியர். அவருக்குள்ள வேலைப்பளுவின் காரணமாக தமிழாசிரியர் ஒருவரை வகுப்பாசிரியர் போல் நியமித்துக்கொண்டார். தலைமை ஆசிரியர் ஆங்கிலப்பாடம் எடுப்பார். அப்போது ஆறு பாடங்கள் படிக்க வேண்டும்.  தமிழ், ஆங்கிலம், கணிதம், சரித்திரம் &பூகோளம், விஞ்ஞனம் (அதாவது தமிழ், ஆங்கிலம்,கணக்கு, வரலாறு&புவியியல் மற்றும் அறிவியல்). இந்த ஐந்து பாடங்களுடன் கூடஒன்று அது  விருப்பப்பாடம். நான் எடுத்தது ரசாயனம்( வேதியியல்தான்).  நான் படித்த பள்ளி முஸ்லிம் நிர்வாகத்தினரால் நடத்தப்பெறும் அரசு உதவி பெறும் உயர் நிலைப்பள்ளி (மேனிலைப்பள்ளி அல்ல)  எனவே வாய்த்த தமிழாசிரியர் ஒரு முஸ்லிம் ஆக இருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

ஒரு நாள் பள்ளியில் அவர் நடந்து கொண்ட விதம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராக இருக்கும் ஒருவர் கூட சாதிக்கட்டுமானத்ததுக்குள் கறாராக இருக்கிறார்  என்ற எண்ணத்தை ஆழமாக என்னுள் அவர் படர விட்டு  விட்டார். இந்தப்பதிவிற்குக்காரணமே அந்த பாதிப்புதான் என்றால் அது மிகையல்ல..

அன்றைக்கு ஒரு  நாள் .மதிய நேரம் சாப்பாட்டுக்குப்பின் பள்ளி துவங்கியது. தமிழாசிரியர் வகுப்பறைக்குள் வந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வகுப்பறைக்குள் இருந்த மாணவர்களைப்பார்த்து ஒவ்வொருவராக எழுந்து அவரவர் அப்பாவின் பெயரை சாதிப்பெயருடன் சேர்த்து சொல்லுங்கள் என்றார்.
நான் நான் காவது பென்ஞ்சில் இருப்பது தெரியாமல் கூனிக்குறுகி..

நான் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகன். தெருவில் சக்கிலியப்பயக என்பார்கள்.  சம்சாரிமார்கள் சிலபேர் பகடைகள் என்பார்கள் சுடுகாட்டு வேலை செய்வதால் வெட்டியான் என்பார்கள். அல்லம்பட்டியில் உள்ள செட்டிமார்கள் 'மாதாரி அக்கிளு' (மாதாரிப்பசங்க) என்று சொல்லுவார்கள். எந்தச்சாதியின் பெயரை எல்லோர் முன்னிலையிலும்  சொல்லித்தொலைப்பது என்று புரியவில்லை.
அந்த நேரம் வகுப்பறையை விட்டு வெளியே ஓடிப்போகலாமா என்று கூட யோசித்தேன். ஆனாலும் அடி பெத்து சாக வேண்டுமே என்று உட்கார்ந்திருந்தேன். நிமிடங்கள் யுகங்களாகக்கரைந்து கொண்டிருந்தது. 

சக மாணவர்கள் ஒவ்வொருவராக  அவர்கள் அப்பாவின்  பெயர் எல்லாம் 'ர்' விகுதியில் முடியும் சாதியின் பெயரை சொல்லி சொல்லி கம்பீரமாக அமர்ந்தார்கள். எனக்குள் எந்த சாதியின் பெயரை சொல்லுவது என்ற குழப்பம் தலை கிறுகிறுக்கும் அளவுக்கு இருந்தது.  எனக்குத் தெரிந்த ஒரு ஆதிதிராவிட மாணவன் அவன் பெயர் காளிமுத்து அவனது அப்பாவின் பெயரை சொல்லும் நேரம் வந்தது. அவனது அப்பாவின் பெயரோ சங்கையா. அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை அவனது  அப்பாவின் பெயரை  மரியாதையாக "ர்" விகுதியொட்டுடன் கூடிய ஒரு சாதிப்பெயருடன் இணைத்து 'சங்கையா..........ர்' என்று சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டான் சமர்த்தாக.. ஒருகணம் நானு யோசித்தேன் இதே போல மரியாதைக்குரிய சாதிப்பெயர்களில் ஒன்றை ஒற்றாக இணைத்து எனது அப்பா பெயரையும் குறிப்பிட்டுவிட்டால் என்ன? என்று கூட ஒடியது மனதில்... அதற்கான தைரியம் வரவில்லை. சரி விஷயத்துக்கு வருவோம்.

என் பெயர் நாராயணன் அப்பாவின் பெயர் அர்ஜுனன். பிறந்தது முதல் குடியிருப்பது மாத்த நாயக்கன் பட்டி பாதை   என்ன வந்தாலும் சரி அப்பாவின் பெயரை சாதிய ஒட்டு இல்லாமல் சொல்லிவிடவேண்டியதுதான் என்று இறுதியாக முடிவெடுத்தேன்.
என்னுடைய நேரம் நெருங்கியது. மூர்ச்சையாக விழாத குறைதான்.

' என் அப்பாவின் பெயர் அர்ஜுனன்'    - நான்.

'அர்ஜுனன்'    ம்ம்ம்ம்ம்     -ஆசிரியர்.

அடுத்தவனை எழுப்பி அவனது அப்பாவின் பெயரை சாதியின் ஒட்டோடு சொல்ல ஆணையிட்டார் ஆசிரியர்

2 comments:

விமலன் said...

வலி மிகுந்த பதிவாக உள்ளது.பள்ளிகளில் மட்டும்தானா அப்படி?....,,,,

திலிப் நாராயணன் said...

தோழர் விமலன்!
வலிகள், ரணங்களாகிப்போனதாலும், அழுக்கான வாழ்வு கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாகிப்போனதினாலும் நினைவுகளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடவில்லை;
மனதின் பதிவுகள் அனைத்தையும் வெளியிடவே "அழகிய நாட்கள்" என்ற பிளாக் உருவானது. உண்மையில் அழகம்மாள் என்பது எனது தாயாரின் பெயர். அவரது நினைவாகவே அழகிய நாட்கள் எனப்பெயரிட்டேன். மற்றபடி அழுக்கும் வறுமையும் வேதனையும் நிறைந்த பதிவுகள் மட்டுமே அதிகமாக வெளியிட என்னால் முடியும்.