வலைப்பதிவில் தேட...

Friday, December 13, 2013

பிராமணமயமாதல் தவிர்க்கவே முடியாத ஒன்றா?

மனுதர்மத்தின் படி படைக்கும் கடவுளான பிரம்மனின் முகத்தினின்றும் பிராமணன்(வேதம் சொல்லுபவன்), தோளினின்றும் சத்திரியன் (அரசாட்சி செய்பவன்) தொடையினின்றும் சூத்திரன்( உடல் உழைப்பாளர்கள்) என்று படைக்கப்பட்டதாகக்கூறுகிறார்கள். இந்தக்கதையெல்லாம் இந்தியா என்ற தேசத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. வெளி நாடுகளுக்கெல்லாம் செல்லுபடி ஆகாது. நிற்க...
   
இந்திய நாட்டு ஜனத்தொகையில்  நாலில் ஒருபகுதி மக்கள் பஞ்சமர்களாக/ சண்டாளர்களாக அறியப்படுகிறார்கள். வெட்டியான் என்று கூட இவர்கள் அனைவரையும் கூற முடியும் மனுவால். இவர்கள் வேலை இதுதான் என வரையறுக்கப்படவில்லை. அவனைப்போல வேதம் மட்டும் சொல்லி உடல் வளர்க்க இவனுக்கு விதிக்கவில்லை. எனவே வெட்டியானாக ஆக்கப்பட்டான் அல்லது விளிக்கப்பட்டான்.

உண்மையில் பார்க்கப்போனால் உழைக்காமல் வெட்டியாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு அனைவருக்கும் இலவசமாக அல்ல; காசு வாங்கிக்கொண்டு வேதங்களை அவர்கள் புரியாத மொழியில  (சத்திரியர், வைஸ்யர் மற்றும் சூத்திரர்கள் தான்) சொல்லி காசு அரிசி  பருப்பு உயிருள்ள மாடு கன்று என வாங்கி பிழைக்கும்  ஒருவர் தான் வெட்டியான் உண்மையில்.

அறிவியல் ரீதியாகப்பார்த்தால் உண்மையில் ஒரு ஆண் ஒரு பெண் சேர்ந்து கலவி செய்தால்தான் குழந்தைகள் பிறக்கின்றன. ஆதாம் யாவாள் கதையில் கூட யாவாள் சாப்பிடக்கூடாத கனியை உண்டதால் பாவியாகி மனுஷரை ஈன்றெடுத்து உலகுக்கு சமர்ப்பிக்கிறாள். எனவே எல்லோரும் பாவியாகிப்போனோம்.

சரி ஒருவர் பிறப்பால் தலித் என்று கொள்வோம். கல்வி மறுக்கப்பட்ட சமூகம் இயல்பாகவே. காலப்போக்கில் இவர் கல்வி கற்று அரசு வேலைக்கு வந்திருக்க முடிகிறது. வருடங்கள் ஆகிறது ஒரு பத்துப்பதினைந்து வருடங்கள் சேவை முடித்தவுடன் ஒரு சிறிய இடமாக பார்த்து வாங்குகிறார்
அப்புறம் அங்கே ஒரு வீட்டைக்கட்டுகிறார்.அவரது குல வழியான விழா என்று சொன்னால் தனது சுற்றத்தாரை அழைத்து மாடு ஒன்றை அடித்து விமரிசையாக புது மனைபுகுவிழா கொண்டாடவேண்டும். இதுதான் அவருக்கு நல்லது.தன்னை உலகுக்கு அடையாளப்படுத்தவும் உதவும்.

நடப்பில் நிலைமை அப்படி இல்லை தான் இன்ன சாதி என்று கூற முடியாத நிலைமையில் அவர் இருக்கிறார். எனவே பிராமண மயமாக (SANSCRITISATION) எத்தனிக்கிறார்.

விளைவாக கணபதி ஹோமம் செய்ய ஐயரைத்தேடுகிறார். ஒரு பத்தாயிரம் ரூபாய் அவருக்கு காணிக்கை கொடுக்கிறார். இரவெல்லாம் புகையைப்போட்டு மந்திரம் சொல்லி வீடு கட்டிய தம்பதியினரை காலை நாலுமணிமுதல் சாத்திரங்கள் சொல்லி ஒரு பசுமாட்டையும் கன்றையும் கொண்டுவந்து புது  வீட்டுக்குள் விட்டு அது மூத்திரம் பெய்தால் யோகம். மாடு கிடைக்கவில்லையென்றால் அதன் மூத்திரத்தைக்கொண்டு மூலை மூலைக்கு தெளித்து, வாங்கி வரச்சொன்ன அத்தனை தேங்காய் அரிசி பலசரக்கு பலகாரம் எல்லத்தையும் அள்ளிக்கொண்டு போய் விடுகிறார் பணத்தையும் வாங்கிக்கொண்டு...

சமீபத்தில் ஒரு கிரகப்பிரவேச வீடு. கணபதி ஹோமம் ஐயர் மாடு கோமியம் எல்லாம் ஆயிற்று. காலை சிற்றுண்டி, மதியம் மரக்கறி சாப்பாடு இரவு டிபன் முடிந்தது.

மறு நாள் கறி சாப்பாடு போடவேண்டும் அல்லவா.  ஒரு ஐந்து கிலோ ஆட்டுக்கறியும் இரண்டு கிலோ கோழிக்கறியும் எடுக்க புது வீட்டைக்கட்டிய தம்பியும் எனது மருமகளும் சொன்னார்கள்.  நாம் எல்லோரும் சின்ன வயசிலிருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுப்பழகியவர்கள். எதற்கு ஆட்டுக்கறிஎல்லாம் என்று சொல்லிவிட்டு மாட்டுக்கறி அந்த ஊரில் எங்கே கிடைக்கும் என்று எனது  நண்பரிடம்  போனில் கேட்டு  அங்கே போய் ஒரு பத்து கிலோ மாட்டுக்கறி எடுத்து வந்தேன்..
அப்புறம் சாவகாசமாக கறிக்குழம்பு வைத்து கொஞ்சம் சுக்காவறுவல்  என சமையல் ஆனது. மாட்டுக்கறி சாப்பிடாதவர்களுக்கு ஒரு இரண்டு கிலோ கோழிக்கறி குழம்பு ஆனது. கறிக்குழம்பு புது வீட்டில் மணம் வீசி ஆகிக்கொண்டிருந்த நேரம் ஐயர் வந்தார். அந்த செங்கலால் கட்டிய ஹோமத்தைக்கலைத்துக்கொண்டே ஒரு டீ கேட்டார்.

வந்திருந்த உறவு முறை அனைவரும் மனதார சாப்பிட்டு பிரிந்து அவரவர் ஊர் சென்றோம்...Wednesday, November 20, 2013

பந்திச் சோறும் எச்சில் இலையும்

அப்போது  பத்து வயது இருக்கும். நான் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தேன். என்னோடு பள்ளியில் சேர்ந்த ராஜேந்திரன், மாரியப்பன், சந்திரன், சின்ன கருப்பையா எல்லாரும் பள்ளியிலிருந்து நின்று போய் இருந்தார்கள். படிப்பு வரவில்லை என்று சொல்லிக்கொண்டார்கள்.


பெற்றோர்கள் நாம்தான் படிக்கவில்லை இவர்களாவது படித்து வேலைக்குப்போய்  நிழலில் வேலை செய்து நன்றாக இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டிருந்ததைப் பொய்யாக்கி புளியமுத்து வைத்து செதுக்கு முத்து , தீப்பெட்டிப்படம்  சில நேரங்களில் சிகரட் அட்டைகள் பை நிறைய வைத்துக்கொண்டு வைத்து விளையாடிசெயித்து அல்லது தோத்துக்கொண்டிருப்பார்கள். லீவு நாட்களில் அவர்களோடுதான் ஆட்டம். மட்டுமல்ல குண்டு, கிட்டி(கில்லி) என்று பொழுதுகள் களவாடப்படாமல் போய்க்கொண்டிருந்த நேரம் அது.


இப்போதைய இளவட்டங்களுக்கு இந்த விளையாட்டுக்கள் தெரியுமா எனத்தெரியவில்லை. கம்ப்யூட்டரில் எவனையாவது அடித்து அல்லது முந்திக்கொண்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். சில நேரங்களில் எம் ஜி ஆர் படங்களின் பிலிம் வைத்து ஒரு வேட்டியை சுவற்றில் கட்டி, குண்டு பல்பில் தண்ணீர் ஊற்றி ஒரு கண்ணாடி வைத்து ஒளியடித்து பெரிதாக்கி வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு ஸ்டில்லாகப்பார்த்து மகிழ்ந்திருந்த நாட்கள் அது....
அந்த ரோடு முழுவதுமே கிட்டத்தட்ட கல்யாண மண்டபங்கள்தான் நிறைந்திருக்கும். பதின் வயதுகளில் இது போல ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட நினைத்து போய் இருக்கிறோம்.
"போட்டிருக்கிற சட்டை நல்லா இருக்கா மாப்ளே" என்று கேட்டுக்கொள்வோம். சனிக்கிழமை சாயங்காலம் அந்த ரோட்டுப்பக்கம் போனால் மைக்செட் அலங்காரம் வைத்து கல்யாண மண்டபங்கள் குதூகலித்து இருக்கும். அவரவர் சத்துக்குத்தகுந்தபடி அந்தக்கல்யாண வீட்டை பெரிய கல்யாண வீடு/ சின்ன கல்யாண வீடு என தீர்மானிக்க முடியும் எங்களது அறிவுக்குட்பட்டு.அழையா விருந்தாளியாகக் காலையில் டிபன் சாப்பிட ஓசியில் எந்த வீட்டுக்குப்போகலாம் என்பது எங்களின் திட்டமாக இருந்திருக்கிறது பல நாட்களில் சில கல்யாண வீடுகளில் ஒருவர் நிற்பார். கல்யாண வீடு சம்பந்தப்படாதவர்கள் யாரேனும் அவரது கண்ணுக்குத்தட்டுப்பட்டால் விரட்டி விடுவார். அதையும் மீறி மண்டபத்துக்குள் நுழைவது கஷ்டம். சில நேரங்களில் அப்படி நுழைந்து விட்டாலும் பந்தியில் உட்கார வேண்டும். இலைகள் போட்டு தண்ணீர் தெளித்து கேசரி வருமுன் யாரேனும் கண்டுபிடித்து யார்ரா நீ என்று கேட்டு வெளியே போடா என்று சொல்லி விடுவதும் நடக்கும்.அப்புறம் எங்கே தேங்கா சட்னி இட்லி சாம்பார் எல்லாம். சில நேரங்களில் அடி கூட விழும். நாம் தயாராக இல்லையென்றால்.அடி வாங்கிவிடாமல் ஓடுவதே ஒரு கலைதான் அந்த நாட்களில். ஒரே ஓட்டம்தான். அப்புறம் அந்த மண்டபத்துக்கு அடுத்து முகூர்த்தத்துக்குதான்.


கல்யாண வீட்டுக்கு சம்பந்தமில்லாதவர்கள் என்று சொன்னால் மைக் செட்காரர்,   சாரட்டுக்காரர், யானைப்பாகன், தந்தி கொடுப்பவர்,அந்த மண்டபத்து வாட்ச் மேன் ( சில மண்டபங்களில் அவர்களது குடும்பமும்) எச்சில்  இலை அள்ளும்/ கக்கூஸ் சுத்தம் செய்யும்  தலித், என்று ஒரு பட்டியல். அவர்கள் சாப்பிட்டுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பந்தியில் சிலருக்கு, மிச்சம் விழுந்த சோறு குழம்பு சட்டியில் பாக்கிப்பேருக்கு...


மாப்பிள்ளை யும் நானும் இப்படியாக ஒரு நாள் பந்திக்குப்போனோம் சட்டை நல்லா இருப்பதாக பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சர்டிபிகேட் கொடுத்துக்கொண்டே....  அந்த மண்டப வாசலில் இருந்த ஒருவர் எங்களை நுழைய விட வில்லை... வேறு வழியில்லை சாப்பிட்ட எச்சில் இலைகள் வெளியே வந்து விழுந்து கொண்டிருந்தன. அதை எடுத்து சாப்பிட இரண்டு மூன்று பேர் தலைக்கு எண்ணெய் தடவாத இளைஞர்கள்இருவரும்  ஒரு ரிக்ஷா ஒட்டுபவரும்...


மாப்பிள்ளை மாரியப்பன் ஒரு ஐடியா கொடுத்தான். பசியா இருக்கு மாப்பிள்ள எச்சில் இலை  இன்-சார்ஜ் எனக்குத்தெரிந்தவர்தான் பெரிய முத்து. அவரிடம் கேட்டு சாப்பிடலாமா. வீட்டுக்குதெரிந்து விடும் என்றேன். உனக்கும் எனக்கும் தான் தெரியும் இந்த மேட்டரு நான் சொல்ல மாட்டேன் நீயும் யாருகிட்டயும் சொல்லிடாதே என்றான். பசி வந்தால் பத்தும் பறக்குமாமே பசி மட்டுமே பறந்தால் இப்போதைக்கு சரி என்றேன்.


மாப்பிள்ளை தயங்கி சென்றான்... பெரிய முத்துவிடம் எங்களுக்கு பசிக்குது நாங்களும்  சாப்பிடனும் என்று தெரிவித்தான்...


ஆலமரத்துப்பட்டியான் என்ற ஒரு கருத்தவர் ரவுடி ரேஞ்சில் இருந்தார்.அவர் பெரியமுத்துவுக்கு பாஸ் போல இருந்தார். பெரியமுத்துவையும் எங்கலயும் பார்த்து விட்டு  கண்ணாலே சம்மதம் குறித்தார்.


அப்புறம் என்ன விழுந்த இலைகளில் இருந்த கேசரி, தேங்காய்சட்னி, ஒழுகினது போக இலையில் மிஞ்சிய சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு பிய்ந்து போன பூரி என்று ஒவ்வொரு இலையாக விரித்து லாவகமாக ஒரு நல்ல இலையில் வைத்து வயிறு முட்டும் அளவு (வயிறுதானே அளவு... அதற்குமேல் போதும் என்று சாப்பாட்டை சொல்ல மட்டுமே முடியும் அந்த நேரத்திற்கு... மற்றெதையும் போது என்று சொல்லும் மனப்பக்குவம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்...) சாப்பிட்டு மாப்பிள்ளையும் நானும் ஒருவருக்கொருவர் புளகாங்கிதமாகப்பார்த்துக்கொண்டோம்... யாருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டோம்.


மணி எட்டரை ஆகி விட்டது... ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பியது. ஒரே ஒட்டம் மாப்பிள்ளையிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு...ராஜூ வாத்தியார் விசில் அடித்து எல்லோரையும் பிரேயருக்கு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார் 0845 முதல் பெல் அடித்தது அரக்கப்பரக்க ரெட்டுப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். அடுப்படியில் இருந்த சாம்பலை நெற்றி நிறைப்பூசிக்கொண்டு (அது பூசவில்லையென்றால் அவர் அடிப்பார். விபூதி வாங்க வசதி இல்லை என்பதறிக...)


வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்றார் பாரதியார்.


ஒரு நாய் பட்டினி கிடப்பதைக்கூட நான் சகித்துக்கொள்ள மாட்டேன் என்றார் ஒரு பஞ்சத்தை நேரடியாகக்கண்ட சுவாமி விவேகானந்தர்.
Wednesday, October 2, 2013

காமராஜர் மரணம்... ஒரு நினைவு...

அது அக்டோபர் 2, 1975ஆம் ஆண்டு. அண்ணல் காந்தியின் பிறந்த நாள். எமர்ஜென்சி அமலில் இருந்த நேரம். நான் பெரிய பத்து படித்துக்கொண்டிருந்த காலம். எனது சித்தப்பா ஒருவர். அவர் பெயர் அம்மாசி.அம்மாவசி அன்று பிறந்ததால் அவருக்கு இந்தப்பெயர்...

வாடா என்று என்னை அழைத்துக்கொண்டு  குல்லூர்சந்தை ரோட்டில் இருக்கும் மணி கடை சலூனுக்கு அழைத்து சென்றார். காமராஜர் இறந்து விட்டார். எனக்கு மொட்டை போடு என்று அந்த சலூன் கடைக்காரரிடம் சொல்லுகிறார்.  நான் உடன் சென்று அவரோடு உட்கார்ந்திருக்கிறேன்.

தேசத்தந்தை என்று அழைக்கப்படும் ஒரு மனிதனின் பிறந்த  நாள் அது அக்டோபர் 2 1869. அவரது பெயர் மோகன் தாஸ். கரம்சந்த் அவரது தந்தையார் பெயர். அவரது (சர் நேம்) சாதிப்பெயர் காந்தி. இந்த காந்தி என்ற பெயர் இன்றைக்கு எப்படி  எல்லாம் பயன் படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அவரது பெயர் பெரோஸ்கான் அவர் ஒரு பார்சி( டாடா போல).ஆனால் அவர் பணக்காரர் இல்லை.  அவர்களுக்கு ஒரு இடுகாடு மும்பை மலபார் மலையில் இருக்கிறது. யாரேனும் இறந்து பட்டால் அவரது பிணத்தை அங்கே கொண்டு சென்று இடுகாட்டில் வைத்து விட்டு வந்து விடுவார்கள். ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் போது எப்படி இருந்தான் என்பதல்ல.. இறந்த பிறகேனும் அவனது உடல் பயனாகட்டும் என்பது அவர்களது வழக்கு... வழமை... கழுகுகள் பிணத்தைத்தின்ன காத்திருக்கும் அங்கே..

காஷ்மீர் பண்டிட் ( பிராமணர்தான்) ஜவஹர்லால்  நேருவின் மகள் இந்திரா பிரியதர்ஷினி என்பவரைக் காதலிக்கிறார். மணம் முடிக்கிறார். அவருக்கு காந்தியின் மேல் அபாரப்பிரியம். தனது பெயரை பெரோஷ் காந்தி என்று மாற்றிக்கொள்ளுகிறார்.

அதற்குப்பிறகு தான்  இந்திரா பிரியதர்ஷினி இந்திரா காந்தி என்று அறியப்படுகிறார். அப்புறம் என்ன... சஞ்சை காந்தி, ராஜீவ் காந்தி, மேனகா காந்தி, வருண் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என பட்டியல் நீளுகிறது. ராகுல் மணம் முடித்தால் அவரது வாரீசு கூட இந்தப்பெயரை கைக்கொள்ளுவார்கள்... நிற்க...

ஒரு மனிதன் இறந்து பட்டால் அவருக்கு அவரது நேரடி ரத்த வாரீசுகள் மொட்டை அடிப்பதும் சடலத்துக்குத்தீவைப்பதும் ( கொள்ளி) பொதுவாக இந்து தர்மத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

கோயமுத்தூரில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்ற நிறுவனம் பிராமணர்களுக்கென்று ஒரு சுடு காடு அமைத்து அங்கே நடக்கும் இறந்தவரின் இறுதிச்சடங்கை ஒருவர் அமெரிக்காவில் இருந்து நெட்டில் பார்த்து அங்கேயே அவரது முறைமையை முடித்துக்கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு இருக்கிறது...

ராஜாஜி காலத்தில் 6000 பள்ளிகளை பள்ளிகளை மூடியிருக்கிறார்கள். குலக்கல்வி முறையைப்புகுத்த எத்தனித்திருக்கிறார்கள்.

டாக்டர் முத்து லட்சுமி ரெட்டிதேவதாசி முறையை எதிர்த்து ராஜாஜியிடம்/சத்தியமூர்த்தியிடம் இது வரை எங்களது பெண்கள் பொட்டுக்கட்டியது போதும் இனிமேல் உங்கள் இனத்துப்பெண்களை பொட்டுகட்ட ஆணையிடுங்கள் என்று சட்டசபையிலேயே கேள்வி கேட்டு ராஜாஜியை மடக்கியிருக்கிறார்கள்...

காமராஜர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் மூடப்பட்ட பள்ளிகளைத்திறந்த கையோடு கூடுதலாக 14000 பள்ளிகளைத்திறக்க உத்தரவிட்டு மதிய உணவுக்கும் வகை செய்திருக்கிறார்.அப்படிப்பள்ளிகள் திறக்கப்பட வில்லையென்றால் என்னைப்போன்று முதல் தலைமுறைப்பட்டதாரிகள்  வந்திருக்க முடியாது...


அவர் மணம் முடிக்க வில்லை

ஆகவே குழந்தைகள் (வாரீசு) எவரும் இல்லை...

அவர் இறந்த அந்த நாளில் எத்தனை பேர் அவரது வாரீசாக எண்ணி மொட்டை போட்டுக்கொண்டார்களோ தெரியவில்லை...

எனினும் எனது சித்தப்பா அம்மாசியும் அதில் ஒருவர்.

1969 இல் அண்ணா இறந்த சமயம் கின்னஸ் சாதனையாக அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. ரயில் மேற்கூரையில் பயணம் செய்து மடிந்தவர்கள் உட்பட...

பதின் வயதில் எனக்கு ஏற்பட்ட ஒரு முக்கிய நிகழ்வு இது...

நாங்கள் வாழ்ந்த முத்துராமன் பட்டியில் இருந்து காமராஜர் அவரது அம்மா சிவகாமி அம்மையாரின் இறப்புக்கு  வருகிறார் என்பதறிந்து நெல் வயல்களினூடே வரப்பில் விழுந்து எழுந்து இரும்புப்பாலம் (ரயில் பாலம் )தாண்டி, மண்பாலம்( சாத்தூர் செல்லும் சாலையில் உள்ள வெள்ளைக்காரன் கட்டிய சிறிய பாலம்... இரண்டுமே கௌசிகா  மகா நதியினூடே கட்டப்பட்டது  ) சென்று காமராசரைக்ண ஓடோடி சென்றதும் ஒரு நீங்காத நினைவுதான்... அவர் காருக்குள் உட்கார்ந்திருந்தார் அமைதியாக இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துக்கொண்டே சென்றார். இரண்டு போலீஸ் மெதுவாக ஊர்ந்து சென்ற அவரது காரின் இருபக்கத்திலும் இருந்தார்கள்..

மோகன் தாஸ் அவர்களின் பிறந்த நாளும் கர்ம வீரர் காமராஜரின் இறந்த நாளும் ஓரே தேதியில் பதிவு செய்யப்பட்டு விட்டது வரலாற்றில்...

Monday, September 30, 2013

பெல்லாரி வந்த பிறகு வாசித்த சில புத்தகங்கள்...

பெல்லாரி வந்து கிட்டத்தட்ட ஓராண்டு முடியப்போகிறது ( அக்டோபர் 11,2013 உடன்) சு சமுத்திரம் எழுதிய வாடாமல்லி படித்து முடித்து அதை ஒரு பதிவாகவும் எழுதியிருக்கிறேன்.

 மூன்றாம் பாலினம் என்றால் முதல் பாலினம் யார்தோழர் எஸ் ஏ பெருமாள் எழுதிய காலமென்னும் பெரு நதி படித்து
முடித்தேன்.
ஒரு நூறு கட்டுரைகள் மிகவும் எளிய நடையில் அது மார்க்ஸ் தொடங்கி பகத்சிங், ஹிட்லர்,அம்பேத்கர்,நடப்புகள் புதிய பொருளாதாரக்கொள்கை, பண்பாட்டளவில் தீபாவளி,கார்த்திகை பற்றிய பொருள் முதல்வாதக்கருத்தோட்டத்தில் விளைந்த கட்டுரைகள் இவற்றோடு அவர் இடதுசாரியான விதம் குறித்த நேர்காணல் (புத்தகம் பேசுது இதழில் வெளி வந்தது) மாற்று மருத்துவம் குறித்து 2000 ஆண்டில் வெளி வந்த நேர்காணல் என ஒரு அருமையான தொகுப்பு அது.

ஹோவர்ட் ஃபாஸ்ட்  எழுதிய சவுத் விஷன் பாலாஜி அவர்களின் மக்கள் பதிப்பான   ஸ்பார்டகஸ்முன்னூறு பக்கங்களுக்கும் மேல் இருக்கும் ஸ்பார்டகஸ் என்னும் அடிமை தன்னை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த ஆதிக்கவாதிகளை அவர்களின் ஆயுதக்கிடங்கிலிருந்தே தனது அடிமை வம்சத்தோழர்களின் உதவியுடன் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடிய கதை. வழி நெடுக அடிமைகளை தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் நெடி நம்மை நிலை குலையச்செய்கிறது. அடிமைகள் யாரும் ஆண்டைகளை எதிர்க்க நினைத்தால் இந்த கதிதான்  ஏற்படும் என்பதை குறிப்பாக இல்லை வெளிப்படையாகச்சொல்லிச்செல்லும் அடிமைகளின் விடுதலைச்சரித்திரம். கி மு வில் ரோமில் நடந்த நிகழ்வு இது...


எஸ். எஃப். ஐ வெளியீட்டில் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான பெரியார் கல்விச்சிந்தனைகள்  ஆயிற்று...
சூத்திரர்கள் என்று மனுவில் குறிப்பிட்டு இருப்பது உடல் உழைக்கும் வர்க்கத்தினரைத்தான் அதன் அர்த்தம் வேசியின் மகன் அல்லது தேவடியாள் மகன் என்பதாகும் என்ற வலுவான சிந்தனையையும் கல்வி வேலைவாய்ப்பில் எங்கனம் தாழ்த்தப்பட்டவர்களும் சூத்திரர்களும் ( கன்ஷிராம் மொழியில் சூத்திரர்களை பகுஜன் எனக்கொள்ளலாம்) காலந்தோறும் வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். தமிழ் வாழ்த்து, இறை வணக்கம் கூட்டங்களின் தேவைதானா என்பதை பெரியார் அவரது பாணியில் கன்னத்தில் அறைந்தார்போல் சொல்லியிருக்கிறார். அ. மார்க்ஸ் அவர்கள் தொகுத்திருக்கிறார்கள். இமையம் எழுதிய  பெத்தவன் படித்து முடித்தாயிற்று.
.

இன்றையச்சூழலில் ஒரு தலித் மேல்சாதிப்பெண்ணை காதலித்து திருமணம் செய்தால் என்னாகும் என்பதை வெளிப்படையாக சமகாலத்தில் இளவரசன், மரணம் திவ்யா  நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் முன்னால் பெத்தவன் என்ற சிறு கதையை ஒரு நாற்பது பக்கத்தில் பாரதி புத்தகாலயம் திரு இமையம் அவர்களின் அனுமதி பெற்று பரவலாக தமிழ் சமூகத்திற்கு இந்த வகையான பதிவுகள் போய்ச்சேரவேண்டும் என்று செய்திருக்கும் ஒரு மிகச்சிறந்த படைப்பு.


 பாமா எழுதிய   கருக்கு


வெள்ளைக்காரன் வருகைக்குப்பின் மதம் மாறியவர்கள் மீனவர்கள், நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். சில பிள்ளைகளும் ரெட்டிகளும் கூட மதம் மாறியிருக்கிறார்கள் ஐயர் வகுப்பினர் மதம் மாறினார்களா தெரியவில்லை. அப்படி மதம் மாறி, கன்னியாஸ்திரியாக மாற நினைத்து அவர்களது உண்டு உறைவிடப்பள்ளியில் பயின்று, தேறி  கிறித்துவ நிறுவனங்களின் தொல்லை காரணமாக ( தாழ்த்தப்பட்டவர் என்பதால்) அதைத்துறந்து தனது ஊரில் வத்திராயிருப்பு புதுப்பட்டி( விருது நகர் மாவட்டம்) நிகழ்ந்த நினைவுகளை அப்படியே படம் பிடித்திருக்கிறார். அருந்ததியர் வாழும் வரலாறு நூலைத்தொகுத்த ஃபாதர் மாற்குவின் தூண்டுதலின் பேரில் எழுதிய ஒரு படைப்பு. அவர் அவரது சாதி மக்களின் (பறையர்)பார்வையிலிருந்து பள்ளர் சக்கிலியர்களைப் பார்ப்பது இடையில் ஒரு இடத்தில் தென்படுகிறது. பள்ளர்களும் சக்கிலியர்களும் சொகுசாக வாழ்வதாகவும் பறையர்கள் மட்டும் கஷ்டத்தில் இருப்பதாகவும் தோற்றம் அளிக்கும் ஒரு பதிவு அது. உண்மையில்  அட்டவணை சாதியினர் அனைவரும் பாதிப்புக்குள்ளானவர்கள்தாம்...

நடப்பில் படித்துக்கொண்டிக்கும் நூல்கள்:

ராஜ் கௌதமன் தமிழாக்கம் செய்த
விடியல் பதிப்பகத்தின் டார்வினின் உயிரிங்களின் தோற்றம்

எஸ் எஃப் ஐ
வெளியீட்டில் ரவிக்குமார் எழுதிய  அம்பேத்கர் கல்விச்சிந்தனைகள்

 டி செல்வராஜ் எழுதிய மலரும் சருகும்,

பேரா ச மாடசாமி தொகுத்த சொலவடைகளும் சொன்னவர்களும்,  

பேரா அருணனின் கொலைக்களங்களின் வாக்கு மூலம்,

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்

பூமணியின் ஐந்து நாவல்கள் தொகுப் பு(பிறகு, வெக்கை, நைவேத்தியம் உள்ளிட்ட)  பற்றியும் எழுத வேண்டி இருக்கிறது.

 பிரிதொரு பதிவில் சந்திப்போம்.

Saturday, June 29, 2013

ஆறடி நிலம் கூட யாருக்கும் சொந்தமில்லை

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா ....ஆறடி நிலமே சொந்தமடா"
என்ற ஒரு பாடல் தமிழ் சினிமாவில்  உண்டு.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களும் " குட்டியாடு தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம் என்ற பாடலில்

 "தட்டுக்கெட்டெ மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்"

என்று ஒரு வரி சொல்லியிருப்பார்.

உறவினர்கள்/ நண்பர்கள்/ அலுவலக உறவுமுறை என்று  யாராவது செத்துப்போனால் சுடுகாட்டுப்பக்கம் போய் பழக்கமுள்ளவர்களுக்கும்
செத்தபிறகு சுடுகாட்டுக்குப்போனால் போதும் என்று இருப்பவர்களும்,
முன்ன பின்ன செத்தாதானே சுடுகாது தெரியும் என்று சொல்பவர்களும் இருக்கிற பூமி இது.

சுடுகாட்டிலிருந்து வாழ்க்கையைத்துவங்கியவர் அல்லது எவனாவது செத்தால்தான் நமக்கு சோறு என்ற நிலையில் இருக்கும் விளிம்பு நிலை
ஆறடி நிலம் என்பது உண்மையல்ல 6க்கு 2 என்பதுதான் ஸ்டாண்டர்டு சைஸ்... அதைத்தான் பட்டுக்கோட்டை எட்டடி என்பார். அது உண்மையில் 12 சதுர அடி...சுடுகாட்டில் குழி தோண்டுபவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும் அது ஏற்கனவே தோண்டிய குழியைத்தோண்டுவது. புதுக்குழி தோண்டுவது மிகவும் கடினம் என்பதால்தான் அது. நான் குழி தோண்டும் காலங்களில் மகாலிங்கம் என்ற ஒரு பெரியப்பா என்னோடு இருந்தார். அவர் பழைய குழிகளை காலப்பெட்டகம் போல வைத்திருப்பார்.

அவன் செத்து 2 வருஷம் ஆச்சிடா அந்தக்குழியை வெட்டு என்பார். தோண்டினால் அதில் சில எச்சங்கள் கால் எலும்பு. மண்டை ஓடு, செமிக்காத மயிர்கள் கந்தலான ஆடைகள் என பல ஐட்டங்கள் கிடக்கும் அதையெல்லாம் மண்வெட்டியால் அள்ளி தட்டில் போட்டு  புதிய பிணத்தின் சொந்தக்கங்களின் கண்களுக்குத்தட்டுப்படாமல் தூரக்கொண்டுபோய் போட்டு விட்டு வரசொல்லுவார். அந்த வீச்சம் ( வாசம்தான்) குடலைப்பிறட்டும்...

ஆகவே வாழும் போது காடு வீடு மனை மனைவி மக்கள் சொத்து சுகம் என்று வாழ்ந்தவர்கள் சுவிஸ் வங்கி உட்பட பேங்க் பேலன்ஸ் வைத்தவர்கள் அனைவரின் கவனத்திற்கு சொல்லுவதெல்லாம் இதுதான்...

பிறக்கும் போது அம்மணம்

போகும் போது ஒரு மல்லுத்துணி மற்றபடி அதுவும் அம்மணம்தான்

நகை நட்டு பிடுங்கப்படும்

ஆனால் வாழும் போது மட்டும்

ஒரே சவடால்கள்...

ஆர்ப்பரிப்புகள்...

நான் இன்ன சாதி...

நீ குறைந்தவன்...

நான் இன்ன கல்வித்தகுதி உள்ளவன்...

நீ என்னை விட க்கம்மி...

எனக்கு எல்லாம் தெரியும் ...

நான் தான் சிறந்தவன்....

நான் சொல்லுவதுதான் சரி


நான் மட்டும் இல்லையின்னா இது நடந்திருக்குமா...

என பல விளாசல்கள்...


எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...

ஒரு ஆறடி நிலம் கூட யாருக்கும் சொந்தம் இல்லை என்பதுதான்


நிதர்சனமான  உண்மை..


Monday, June 24, 2013

ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது.

தோழர்  ச.தமிழ்செல்வன் எழுதிய" ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது"  என்ற புத்தகம் பாரதி புத்தகாலயத்தின் சார்பில்  கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. சமையல் குறிப்பு போல சில வகை சாதங்கள் குழம்புகள் செய்முறை போலத்தான் அப்புத்தகம் இருக்கும். ஆனாலும் ஒரு விஷயத்தை உரக்கச்சொல்லும்... அது இதுதான். காதலிப்பதற்கு ஏற்ற இடம் சமயலறை மட்டுமே என்பதுதான் அது.

காதலிக்க ஏற்ற இடம் பார்க் ,பீச், தியேட்டெர் என்றெல்லாம் அலைய வேண்டாம் சமயலறை மட்டுமே போதுமானது என்கிறார் அவர். சமயலறையில் கலக்கப்படும் சமையல் பொருட்கள் அது கிளப்பும் புதிய வாசனை  என சமையலறை  நமக்குக்காட்டும்  ஒரு அறிவியல்  அது ஒரு சரிவிகித அறிவியல். பெண்கள்மட்டுமே சமையல் வேலை செய்ய வேண்டும் ஆண்கள் அதன் சுவையை மட்டுமே தெரிவிக்க வேண்டும் அவர் மனதில் இவர் நீங்காது இடம் பெற வேண்டும் போன்ற கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து சிந்தனைகளை சிதறடிக்கும் புத்தகம் அது.

உலகில் சரிபாதி பெண்கள். அவர்கள் இல்லாமல் எந்தவித புரட்சியையும் நடத்தி விட முடியாது என்பார் லெனின்.அவரே பிரிதொரு இடத்தில்  நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களை விடுதலை செய்யாமல் நாம் அடுத்த கட்டத்தை நோக்கிப்பயணிக்க முடியாது என்றுகுறிப்பிடுகிறார்.

நேற்று 23/06/2013 அன்று  சமையலறையில் ஆர்வமடைந்தவர்கள்  சோர்ந்து போனவர்கள் என்று இரு சாரார் சங்கமிக்க கோபி நாத் அவர்கள் நடத்திய விஜய் டிவியி நீயா நான நிகழ்வில் தோழர் தமிழ்செல்வன் பங்கேற்றார். ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது என்ற புத்தகத்தை கையில் வைத்திருந்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. கோபி நாத்.

அகில இந்திய அளவில் பணியாற்றும் என்னைப் போன்றவர்கள் குஜராத்திலும் சரி இப்போது கன்னட தேசத்திலும் சரி( பெல்லாரி)  சமையல் என்பதை ஒரு ஆர்வமான அவசியமான விஷயமாகப்பார்க்கிறோம். இரண்டரை ஆண்டுகாலம் கோத்ராவிலும் (அப்போதுதான் நரவேட்டை நடத்தினார் நரேந்திர மோடி) இப்போதும் கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாக சுய சமையல் செய்யும் ஒருவன் நான்.

என் தோழர் திரு ராதாகிருஷ்ணன் மும்பையில் பணியாற்றிய நேரம் (2008)   நானும் நண்பர்கள் இருவரும் சென்றிருந்தோம். அப்போது அவரும் அவருடன் பணியாற்றும் திரு சங்கர குமார் இருவரும் தங்கள் கைப்படவே எங்களுக்கு சமைத்து ப்பறிமாறினர். அப்போது அவர் ஒரு விஷயத்தைக்குறிப்பிட்டார். எல்லா ஆண்களும் சமைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் படும் கஷ்டம் என்னவென்று புரியும் என்றார்...

கற்பென்று சொன்னால் அது இருபாலர்க்கும் பொதுவில் வைப்போம் என்றார் பாரதியார். சமையல் என்று சொன்னாலும் கூட அது இருபாலருக்கும் உகந்ததாக இருக்கட்டும் என்பது தான் இன்றை தினத்தேவை.. வேலைக்குப்போவதும் போகாததும் இதில் கணக்கில்லை...