வலைப்பதிவில் தேட...

Wednesday, November 30, 2011

மூன்று குட்டுகளும் மூன்று மறுத்தல்களும்

உச்ச நீதிமன்றத்தின் மூன்று குட்டுகளை தமிழக முதல்வர் வாங்கியபோதும் அசராமல் மூன்று கட்டண விகிதங்களை (பஸ், பால்  மற்றும் பவர்) உயர்த்தியிருக்கிறார்.

முதலாவதாக ஆட்சிப்பொறுப்பேற்ற கையோடு சமச்சீர் கல்வியை முடமாக்கத்துணிந்து செயல்பட்டார்  மூன்று மாதங்களாகக்குழந்தைகளைப்பாடப்புத்தகங்களினின்றும் தள்ளி வைத்தார் (ஆனாலும் 6 முதல் 14 வயது வரையிலான் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கல்வி அளிக்கப்பட சட்டமொன்று இயற்றப்பட்ட் நடைமுறையிலிருக்கிறது.) உயர் நீதி மன்றம் சமச்சீர் கல்வியை அமல் படுத்தச்சொல்லியும் உச்ச நீதிமன்றம் வரை சென்றார். அங்கு அவருக்கு ஆதரவான தீர்ப்பு வரவில்லை; சமச்சீர் கல்வி குழந்தை களுக்கு அரை மனதுடன் பாடப்புத்தகங்களில் வெட்டி ஒட்டி கொடுக்கப்பட்டது. முழுமையாகச்சென்றடைந்ததா பள்ளிகளுக்கும் குழந்தைகளுக்கும் என்பது ஆய்வுக்கு உட்பட்டது.

இரண்டாவதாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த( ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய 1991-1996 காலத்தில்) வழக்கில் 14 ஆண்டுகள் ஆனபிறகும் ஒரு முறை கூட ஆஜராகாமல் இருந்த வந்த நிலைமையைக்கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை பெங்களூரு நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது அக். 2011 இரு  நாட்கள் விமானத்தில் சென்று  1337 கேள்விகளில் பாதி வரை பதில் சொல்லிவிட்டு வந்தார்.

பாக்கி கேள்விகளுக்கு பதில் சொல்ல உரிமை கேட்டு உச்ச நீதிமன்றம் சென்றது வழக்கு. இம்முறையும் பெங்களூரு சென்று பதில் சொல்ல வேண்டும். வழக்காடு மன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனச்சொல்லி உச்ச நீதி மன்றம் ஆணையிட்டது. மீண்டும் இரண்டு நாட்கள் நவ 2011 இல் சென்று அனைத்துக்கேள்விகளுக்கும் பதில் சொன்னார். சென்னை வந்தார்.

மூன்றாவதாக 13000 சாலைப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப ஆணையிட்ட அம்மாவின் ஆணையை ரத்துசெய்து தமிழ் நாட்டில் என்னதான் நடக்கிறது? முந்தைய ஆட்சியில் எது செய்திருந்தாலும் மாற்றித்தான் ஆணையிட வேண்டுமா? பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை உடனே வேலைக்கு தமிழக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என மூன்றாவது முறையாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அம்மாவின் தலையில் மூன்றாவது முறையாகக்குட்டி உள்ளது.

(பின் குறிப்பு: பின் தொடரும் நிழலின் குரல் போல இவரது குரல் மனுதர்மத்தை அடிப்படையாகக்கொண்டது என்றால் வியப்பேதும் இல்லை.
1,70,000 அரசு ஊழியர்களை ஒரே உத்தரவில் வேலை நீக்கம் செய்தது; ஆடு கோழி கோவில்களில் வெட்டத்தடை விதித்தது; மதம் மாற்றத்தடைச்சட்டம் கொண்டுவந்து இந்துத்வா பரிசோதனைக்கூட குஜராத் மோடியையும் மிஞ்சியது; வேத பாடசாலைகள் கொண்டு வரவேண்டும் என்று முரளி மனோகர் ஜோஷியையும் மிரட்டியது எனத்தொடருகிறது அவரது கைங்கரியங்கள். இந்த ஆட்சியிலும் தொடருகிறது. ஒரு திராவிட இயக்கத்தலைமை மனுவாதியின் கையில் இருக்கிறதென்றே தோன்றுகிறது.)

அடுத்தவர் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்( இந்நாள் பிரதமர்) உறுதியான கருத்துக்களை மூன்று முறை உரக்கக்கூறி அவரது வர்க்க சார்பு நிலையை நிலை நிறுத்தியிருக்கிறார்.


உணவுக்கிடங்குகளில் எலிகள் சாப்பிட்டுக்கிடக்கும்
வீணாகும் உணவுப்பொருட்களை வறுமைக்கோட்டுக்கீழே இருக்கும் மக்களுக்கு(அர்ஜுன் சென் குப்தா அறிக்கையின் படி நாட்டில் ஒரு  நாளைக்கு இருபது கூட சம்பாதிக்க முடியாமல் 80 கோடிப்பேர் இருக்கிறார்கள்) இலவசமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டபோது அரசின் கொள்கை முடிவுகளில் நீதி மன்றம் தலையிடக்கூடாது என்றார்.

பெட்ரோல் விலை நிர்ணயிப்பது அரசின் வேலை யில்லை அது எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களின் வேலை என்று கையைக்காட்டி விட்ட நிலையில், பெட்ரோல் விலை கடந்த 30 மாதங்களில் 13 முறை உயர்த்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் இது பற்றி அறிக்கைகள் விட்ட நேரத்தில் சரியான நேரத்தில் கோபப்பட்டு இன்னும் எத்தனை நாளைக்குதான் அரசு மானியம் கொடுக்க முடியும் ? பணம் என்ன மரத்திலா காய்க்கிறது? என்று கேட்டு சீறினார்.

கடைசியாக அந்நிய நேரடி முதலீடு குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை மிகவும் முக்கியமானது. "சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவு, அவசர கதியில் எடுக்கப்பட்டதல்ல; ஆழ்ந்த பரிசீலனைக்குப் பிறகே எடுக்கப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"அன்னிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழைவதால், நம் நாட்டில் உள்ள சிறிய தொழில்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தவறான கருத்து. சிறிய தொழில்கள் நலிவடையாமல் இருப்பதற்குத் தேவையான பல கட்டுப்பாடுகள் அன்னிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன"

"அறுக்குறப்பவும் பட்டினி
பொறுக்குறப்பவும் பட்டினி
பொங்கல் அன்னைக்கும் பட்டினி
பொழுதன்னைக்கும் பட்டினி"

என்ற ஒரு சொலவடை படித்தேன்.

அநேகமாக நமது நாட்டு மக்களின் நிலைமை இதுதான்.
(ஆனால் வறுமைக்கோட்டின் அளவு நகரென்றால் ஒரு நாளைக்கு வருமானம் ரூ 32/- கிராமப்புறமென்றால் ஒரு நாளைக்கு ரூ 26/- என்று நீட்டி முழங்குகிறார் அலுவாலியா என்று ஒருவர் இவருக்குத்துணை போனவர்).

"பேச்சுப்படிச்ச நாய்
வேட்டைக்கு ஆகாது"

"அங்காடிக்காரிய
சங்கீதம் பாடச்சொன்னா
வெங்காயம் கருவேப்பிலைன்னுதான் பாடுவா"

இந்த சொலவடைகள் அர்த்தம் பெறுவதாக நான் நினைக்கிறேன். நீங்கள்...

Friday, November 18, 2011

சுகிர்த ராணியின் கவிதையும் நானும்

த மு எ க ச மா நில மா நாடு   விருது நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில்  நடை பெற்றது. தலித்தியக் கவிதைகள்  வாசலில் சில   தோரணங்களாகக் கட்டப்பட்டு இருந்தன.   ஆதவன் தீட்சண்யா, சுகிர்தராணி, இராசை கண்மணி ராசா ,யாழி, மகுடேஸ்வரன் என    கவிதைகள் தொகுப்பு பார்ப்பவர்களை ஈர்த்துக்கொண்டது.  அவற்றுள்  எனக்கு பட்டுத்தெரித்த ஒரு  பிடித்த கவிதையொன்று:"செத்துப்போன மாட்டை
தோலுரிக்கும் போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம்  நின்று வாங்கிய
ஊர் சோற்றைத்தின்று விட்டு
சுடு சோறென பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில்  எதிர்ப்படும்போது
முகம் முறைத்து கடந்து விடுவேன்
அப்பாவின் தொழிலில்ஆண்டு வருமானம்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்
தோழிகளற்ற
பின்  வரிசயிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்றுசொல்லி விடுகிறேன்
பறச்சி என்று"

-சுகிர்தராணி.

அவரது  வாழ்வின் ரணங்களை  இப்படி அவர் வரித்திருக்கிறார்.

எனதும் அப்படியான ஒரு வாழ்க்கைதான்.மாடுகள் செத்துப்போனால் அன்றைக்குப் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு மாடு தூக்க, மாடு  உரிக்க பெரியவர்களுக்கு  உதவியாக காலைப்பிடிக்க (மட்ட மல்லாக்கக்கிடக்கும் மாட்டின்  காலைத்தான்) அலுமினியச் சட்டியில் ரத்தம் பிடிக்க, புராதன     பொதுவுடமை சமூகம் சொல்லிக்கொடுத்த இருப்பதைப்பொதுவாக்கி சாப்பிடுகின்ற முறைமையில் அனைத்து  சொந்தங்களுக்கும் மாட்டின் கறியைப் பங்கு போட்டுக் கொடுக்க. கொஞ்சம் கறியை அந்த இடத்திலேயே வேகவைக்க சுள்ளி பொறுக்க அடுப்புக்கூட்ட  ஓலை  பெறக்கி வர, சாராயம் ( அப்போதெல்லாம் வேலி கருவேலை புதருக்குள்  ஒரு கேனில் இருந்து ஒரு சாயா கிளாஸ் சரக்கு  ரெண்டு ரூபாய்க்கு கிடைக்கும்; சிலபேர்  பார்மசி என்ற பெயரில் விற்கும் மதுகஷாயம் கூட குடிப்பாரகள் ஆனால் மருந்துக்குகூட ஐ எம் எஃப் எல் சரக்கு இல்லை) குடித்த பெருசுகளுக்கு அரை குறையாக வெந்த கறி கலந்த ரத்தப்பொறியலைப் பறிமாற      ( சில நேரங்களில் மாட்டின் ரததம் தோய்ந்த தோலிலேயே ஆவி பறக்க போட்டு சாப்பிட்டு) என  கவிதையின் முதல் வரிகள் அப்படியானநாட்களை மனதில் கொண்டு வந்தது.

சம்சாரி மார் வீட்டிலிருந்து நல்ல நாள் பொல்ல நளைக்கு வாங்கி வரும் அந்த சோளத்தோசையும் பாடாவதி பொங்கலும் பல வீட்டு ருசி என்பதால் வாய்க்கு வாகாக இல்லாவிட்டாலும் (விளங்காவிட்டாலும்கூட) ருசித்துத்தின்றநாட்கள்; கல்யாண வீடுகளில் மிச்சமான 'கொத்து' (சோறு ,சாம்பார், அப்பளம், ரசம், பாயாசம், காய் கறி, கூட்டு, ஜாம் உள்ளிட்ட அனைத்தும் கலந்த ஒரு கலவை) அலுமினியத்தட்டுகளின் ஏந்தித்தெருவில் தின்று திரிந்த நாடகள், மற்றும் பள்ளி நாட்களில் வீட்டிலிருந்து கொண்டு செல்லும்  மதிய  உணவை (பழைய  சோறுதான்) யாரும் பார்த்து விடக்கூடாதே என்று தள்ளித்தள்ளிப்போய் யாரும் இல்லாத இடத்தில் உட்கார்ந்து அஞ்சு பைசா ஊறுகாயுடன் கடத்திய நாட்களும்கூடவே அலைமோதியது இரண்டாவது வரிகளில்.

அப்பா செருப்புத்தைக்கும் இடம் வந்தபோது மறக்காமல் என்னுடன் வரும் நண்பர்கள் டேய்  ஒங்கப்பாடா எனச்சொல்லி; டீச்சருக்கு செருப்பு அறுந்து விட்டால்  இவன் அப்பாவிடம் கொடுத்தால் தைத்துக்கொடுப்பார் என என்னை ஏளனத்தால் பரிகசித்து  கூனிக்குறுகச் செய்த எனது பள்ளி காலத்து  சாதீய நண்பர்கள்  நிழலாடினார்கள் மூன்றாம் வரிகளில்.

அப்பாவிடம் ஆண்டு    வருமானம் ரூ 1080 போடவாடா எனக்கேட்கும் முன்சீப்  கோபால் நாயக்கர்   கையெழுத்துப்போட்ட கையோடு  ரூ 5 வாங்கிக்கொள்ளும் லாவகமும்

எல்லாரும் அவரவர் அப்பாவின் பெயரை சாதிப்பெயரோடு சேர்த்துச்சொல்லுங்க என்று சறறும் முகம் சுளிக்காமல் உத்தரவிட்ட அந்த  முகமதிய  ஆசிரியரின் முகம் இன்றைக்கும் எனக்கு மறக்கவில்லை. எல்லோரும் "ர்" விகுதியுடன் கூடிய சாதிப்பெயரை அவர்களது அப்பாவின் பெயரோடு ஒட்டாக நிமிர்ந்து நின்று சொல்ல என் பங்கு வரும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு     நெஞ்சம் பதைத்தது  எனக்கும் மட்டுமன்றோ தெரியும்.
இந்த நினவுகளைக் கிளறியது கவிதையின்  நான்காம் வரிகள்.

நாம் மட்டும்தான் இப்படி இழிவாகப்பிறந்து விட்டோமா என்று நண்பர்கள் இல்லாத நேரத்தில் சூனியத்தை வெறித்த நாட்கள், மனிதனாக நாமெல்லாம் பிறருக்குச்சமமாக வாழத்தான் வேண்டுமா என பிரமை பிடித்து அலைந்த நாட்கள் அவரது ஐந்தாவது வரிகளில்தெளிவாத்தெரிந்தது.

இப்போதும் கூட யாரும் என்னை சந்திக்க நேரும் நேரங்களில்  நீங்க எந்த ஊர் எனற கேள்விக்குப்பிறகு என்ன சாதி என்று அறிய முற்படும் எந்தத்தெரு என்ற அடுத்த கேள்வி எழும் முன்  நான் படாரென சொல்லி விடுவதுண்டு "முத்துரமன்பட்டி சக்கிலியன்" என்று.

சக்கிலியப்பயல், மாதாரி, பகடைப்புள்ள, தோட்டி, வெட்டியான் என எத்தனை எத்தனை  பேர்கள் ( நல்லவேளை பேறுகள் இல்லை) என்று சம்சாரிகளும்(?!) படிக்காதவர்களும் சாதீயப்படி  நிலையில்  சற்றே மேலே இருப்பதாக எண்ணிக்  கவுரவம் கொண்டிருக்கும் அனைவரும்  அழைத்ததெல்லாம் ஒரு காலம் .
ஒரு சிறிய மாற்றம். படித்த பிறகு  என்னை நானே சக்கிலியனென்று பிரகடனப்படுததிக்கொள்ள   முடிகிறது இன்றைக்கு.

"பிச்சை புகினும் கற்கை நன்றே"

என்று தமிழ் மூதுரை கூறினாலும் கூட

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"

என்ற சமண முனியின் வரி சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களினின்றும் அழித்து விட்டாலும் தமிழன் மனதை உலுக்கிக் கொண்டே இருந்தால் நலம் என எண்ணத் தோன்றுகிறது.