வலைப்பதிவில் தேட...

Sunday, December 11, 2011

மண நாள் 25ஆவது ஆண்டு
1986 ஆம் ஆண்டு டிசம்பர்த்திங்கள் 10 ஆம் நாள் எனது திருமணம் நடைபெற்றது. விருது நகரில் அருப்புக்கோட்டை சாலையில் இருக்கும் சிமினி நந்தவனத்தில் நடைபெற்றது அதையொட்டி நான் அடித்த அழைப்பிதழ் இது. முகூர்த்த நேரம் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை ஆகவே. திருமண நேரம் காலை 10 மணி அளவில் என்று குறிப்பிட்டு இருந்தேன். காரைக்குடியில் அப்போது வேலை பார்த்து வந்தேன். நான் பிறந்த சாதியில் முதன் முதலாகப்பட்டப்படிப்பு படித்து வந்தவனும் முதன் முதலாக கல்யாண மண்டபம் பிடித்து  மணம் முடித்தவனும் நானே.
ஒரு கூட்டம் போல அமைத்திருந்தேன் அழைப்பிதழை. காரைக்குடியில் அப்போது சீனா தானா என்ற ஒரு எம் எல் ஏ இருந்தார். அவருக்கு சொந்தமான "அரசு அச்சகம்"  வ உ சி சாலையில் இருந்தது. எம் எல் ஏ எல்லாம் எனக்கு அப்போதைக்கு  அறிமுகம் கூட கிடையாது. அங்கிருக்கும் அச்சுக்கோர்க்கும் மற்றும்  பைண்டிங் செய்யும் தொழிலாளர்கள் எல்லாமே பழகி விட்டிருந்தார்கள்.  நான் எழுதிக்கொடுத்தபடி அழைப்பிதழ் அச்சடித்துக்கொடுத்தார்கள். ஆங்கிலத்தில் அச்சேற்றுவது பிடிக்காது என்பதால் தமிழில் அழைப்பிதழ் வடிவமைத்தேன். கூட்டத்திற்கு நிர்ணயம் செய்தவர்கள் எல்லாமே தொழிற்சங்கத்தலைவர்கள் அனுபவஸ்தர்கள். திரு எஸ் ஏ பெருமாள் இன்றைய செம்மலர் ஆசிரியர் அன்றைக்கு த மு எ ச வின் முன்னோடி. அவர்தான் காலம் தோறும் திருமணங்கள் மற்றும் இ ந் நாட்களில் நடைபெறும் திருமணத்தைப்பற்றிய ஒரு அறிமுகத்துடன் திருமணத்தை நடத்தி வைத்தார். நமது சாதி சனமெல்லாம் மூன்று வேளை சாப்பாடு அதாவது முதல் நாள் இரவு சாப்பாடு விருதுநகர் மாடலில்  மிளகாய்ச்சட்டினி, பால்சாதத்துடன்., மறு நாள் முகூர்த்தமன்று காலை கேசரி, வெண்பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் என. அப்புறம் திருப்பூட்டு முடிந்தபிறகு ஜாம், பாயாசத்துடன் பிரமாதமான மரக்கறி உணவு.
தொழிற்சங்கத்தலைவர் திரு  ஏ கேசவன் தலைமை ஏற்க,
அப்போது வரை கல்யாணமே ஆகாமல் (ஆனால் காதலித்துக்கொண்டிருந்த)  திரு வி சுப்பிரமணியன் வரவேற்பு வழங்க 
வாழ்த்துரையாக
திரு மோகன்தாஸ் கோவில்பட்டி, 
திரு கருப்புராஜ் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம்
திரு எஸ் ஏ பெருமாள் த மு எ ச என்று வடிவமைக்கப்பட்டிருந்தது. 15/12/1986 அன்று காரைக்குடி ஹோட்டல் சுகம் இன்டர் நேஷனலில் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தேன். அதில் ஈரோடு ராஜு தலைமை தாங்கினார். மற்ற தொழிற்சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டார்கள். சி ஐ டி யு, மூட்டா, தீயணைக்கும்படை  நண்பர்கள், அரசு ஊழியர்கள், தொலைபேசி நிறுவனத்தின் அத்துனை சங்கங்கள் என பங்கேற்பு இருந்தது. சுவையான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அது ஒரு கார்காலம் அல்லது கனாக்களின் காலம்.

10/12/2011 எனது கல்யாணத்தின் வெள்ளி விழா நாளில் விருது நகர் மாவட்ட கோ ஆபரேடிவ் வங்கியில் 5 பவுன் சங்கிலியுடன் அடமானத்திற்காக நிற்கிறேன்.  மனைவி மதுரை வடமலையான் ஆசுபத்திரியில் அவரது அம்மாவிற்கு முடியவில்லை என்று ஐ சி யு வில் இருக்கிறார். தியாகராசர் பொறியியற்கல்லூரியில் பயிலும் பாப்பாவும் அவரது அம்மாவோடு. லோன் கிடைக்க 12 மணிக்கும் மேலாக ஆகி விட்டது. கிடைத்த லோன் தொகை  அறுபதினாயிரம். ஏற்கனவே நண்பன் கிருஷ்ண குமாரிடம் வாங்கிய ரூபாய் 23,000/- த்தை க் கொடுத்து விட்டு பாக்கியை மதுரைக்குக் கொண்டு சென்று  கொடுக்க நான் போகவேண்டும். ஒரு காரில் போகலாமென்று யோசனை. பஸ்ஸில் ரயிலில் செல்லும்போது பணம் பறி போய் விட்டால் என்ன செய்வது என்ற காரணம்தான். ஒரு காரும் ஏற்பாடாகிவிட்டது நானும் நண்பர்கள் அழகு, சீனி, மருது மூவரும் மதுரைக்குப் பயணமானோம். 


வடமலையான் ஆசுபத்திரி சென்று ஐ சி யுவுக்கு முன்னால் வரமிருக்கும் எனது மனைவியிடம் மிச்சப்பணத்தைக் கொடுக்கிறேன் . காய்ச்சலில் படுத்திருந்த எனது மகள் விழித்துக்கொண்டு என்னப்பா காரிலா வந்தீர்கள் என்று கேட்கிறார். ஆம் என்றேன். இதோ வந்து விடுகிறேன் என்று போய் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பரிசுப்பொருளுடன் பெரிய வெட்டிங் அனிவெர்சரி கேக் கொண்டு வந்து என்னை வெட்டச்சொல்லுகிறார்.  ஆனந்தத்தாண்டவம் என்பது இதுதான் என நான் நினைத்துக்கொண்டேன்.


நண்பர்கள் முகத்தில் பலத்த மகிழ்ச்சி. எனது மனைவியைப்பார்த்தேன் இருபத்தைந்தாவது கல்யாண நாளுக்காக அவர் வாங்கியிருந்த பத்தாயிரம் ரூபாய்  ஆலுக்காஸின்  வைர மூக்குத்தியை விடவும் பூரிப்பு அவரத முகத்தில்.

11 comments:

Rathnavel said...

எங்களது மனப்பூர்வ வாழ்த்துகள்.
காலங்கள் மாறும். கவலைப் படாதீர்கள்.

kashyapan said...

வாழ்த்துகள் தோழரே! உங்கள் மனைவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள் உங்கள் மகளுக்கு.---காஸ்யபன்

திலிப் நாராயணன் said...

உயர்திரு ரத்தினவேல் அவர்களே! தங்களது மனம் கனிந்த வாழ்த்துகள் வாழ வைக்கும் எங்களை
நம்பிக்கையுடன்,
திலிப் நாராயணன்.

திலிப் நாராயணன் said...

உயர்திரு காஸ்யபன்! தங்களைத்தங்கள் இணையுடன் விருதுநகரில் சந்தித்ததை விடவும் தங்களது பின்னூட்டம் நிறைவாக இருக்கிறது.
பேரன்புடன்,
திலிப் நாராயணன்.

சிவகுமாரன் said...

வாழ்த்த வயதில்லை. தங்களையும் அம்மாவையும் வணங்குகிறேன்.

தமிழ்தாசன் said...

உங்கள் திருமண உறவு !
தமிழ் போல் வளரட்டும் தோழா

திலிப் நாராயணன் said...

திரு சிவகுமாரன்!
உங்களது நெகிழ்ச்சியான வார்த்தைகள் நெஞ்சம் நிறைய வைக்கிறது.
என்றென்றும்,
திலிப் நாராயணன்

திலிப் நாராயணன் said...

திரு தமிழ்தாசன் !
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

nagoreismail said...

சார், உங்கள் எழுத்துக்களை படிக்க துவங்கியிருக்கின்றேன்

திலிப் நாராயணன் said...

திரு நாகூர் இஸ்மாயில் !
எனது எழுத்துக்களைப்படிக்கத்
துவங்கியிருக்கும் தங்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். படியுங்கள் கருத்துக்களைப்பதிவு செய்யுங்கள்.

phantom363 said...

reading your blog. i love it. belated wedding anniversary greetings to you and your beloved wife. hope to see you posting more often. thank you.