வலைப்பதிவில் தேட...

Monday, December 24, 2012

மூன்றாம் பாலினம் என்றால் முதல் பாலினம் யார்?

இந்த உலகத்தில் "மூன்றாம் பாலினம்" என்ற சொல்லாடல்  திரு நங்கையர் உலகத்தைக்குறிப்பிடுவதென்று கொண்டால் முதல் பாலினம் யார்? ... லிவிங் ஸ்மைல் வித்யாவோ அல்லது பிரியா பாபுவோ ஒரு பேட்டியில் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்கள். திரு நங்கை என்பது மூன்றாம் பாலினம் என்றால் தனித்துச் சொல்லத் தேவையில்லை.பொதுப்புத்தியில் இது உறைந்தே கிடக்கிறது.  இது ஆணாதிக்க சமூகம். ஆகவே ஆண் முதலாகவும் பெண் இரண்டாவதாகவும்  நடை முறைப்படுத்தப்பட்டு விட்ட ஒரு சமூகத்தில் அவரது  கேள்வி மிகவும் அற்பமாக அல்ல; எனக்கு மிகவும் அற்புதமாகப்பட்டது.

மில்லியன் டாலர் கேள்வி என்பார்களே அது இதுதான் என நான் நினைக்கிறேன்.


சமீபத்தில் சு சமுத்திரம் ( 1941-2003) எழுதிய வாடாமல்லி நாவல் படித்தேன். அதில் மூன்றாம் பாலினம்,பொட்டை, அலி, அவனோ, அவளோ,அதுவோ,அரவாண் என்று சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். அதில் சுயம்பு என்ற ஒரு இளைஞன் எஞ்சினியரிங் கல்லூரியும் மெடிக்கல் கல்லூரியும் இருக்கிற சிதம்பரத்தில் முதலாண்டு படிக்கும்போது பெண்மைத்தன்மை அதிகமாகி நடை உடை பாவனைகள் மாறி செயற்கையாக அசைவுகளை உள்ளடக்கி மாணவர்களுடன் இருக்க முடியாமல் கிளம்பி ஊருக்குப்போகிறான். போகிற பஸ்ஸில் ஒரு பெண்ணின் இருக்கைக்குப்பக்கத்தில் உட்காரப்போக( ஆண்கள் பக்கம் உட்காரப்பயம் பெண்மைத்தன்மைத்தொற்றிக்கொண்டு விட்டதால்) ஊருக்குப்போகும் பாதி வழியில் அவனது சூட்கேஸ் உடன் வெளியே வீசப்படுகிறான். அழுது கொண்டே கிராமத்துக்குப்போகிறான்.

அங்கே அவனது அக்காவின் பாவாடை சேலையை உடுத்தி அழகு பார்த்துக்கொள்ளுகிறான். அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையை இவன் போய் பார்க்கப்போகிறான். அவனுடைய  நடை  பாவனை மற்றும் உடல் அசைவுகள் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.திருமண நாளில் சேலை அணிந்து கொண்டு இருப்பதைப்பார்த்த மாப்பிள்ளை வீட்டார் அக்காவின் கல்யாணத்தை நிறுத்தி விட்டு போய்விடுகிறார்கள்.  ஊருக்குள் இருக்க முடியாமல் ஓடப்பார்க்கிறான். ஒரு ஆசுபத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்க்க அவனது அப்பா அம்மா ஏற்பாடு செய்கிறார்கள். அங்கே அம்மா போல ஒரு திரு நங்கை அவனை அழைத்துக்கொண்டு சென்னை செல்கிறாள். அவன் ஒரு புதிய உலகத்தில் காலடி வைக்கிறான். போலீஸிடம் சிக்கிச் சீரழிகிறான்.இயலாமையை வெளிப்படுத்து யாரையும் சாபம் விட "ஒன் வீட்டுல ஒரு பொட்டை விழ..".... என்பதாக அவர்களின் வசையை வெளிப்படுத்தியிருக்கிறார் சு.சமுத்திரம்.


பிறகு ஊருக்கு ஓடிவருகிறான். அங்கிருந்து ரயில் ஏறி டெல்லி வந்து சேருகிறான். டெல்லி ரயிலில் அவனது தன்மைக்கு மரியாதை கிடைக்கிறது.  அங்கே சென்று அவர்களின் குழுவில் ஐக்கியமாகிறாள். அவளை ஒரு அம்மாவாக ஒருத்தி ஏற்றுக்கொண்டு அவளுக்கு மகள் என்ற அந்தஸ்தைத்தருகிறாள். வழக்கப்படி  ஒரு சடங்கு செய்கிறார்கள். அவனது பிறப்புறுப்பை வெட்டி எறிகிறார்கள். மணிமேகலை என்று பெயர் மாற்றம் கூட செய்து கொள்ளுகிறான் சுயம்பு.  ஒரு மருந்து கலந்த எண்ணெய் பூசி 40 நாள் பக்குவமாகப் பார்த்துக்கொள்ளுகிறார்கள்.

நல்ல வசதியான வாழ்க்கை டெல்லியில் கை கூடுகிறது.கூவாகம் திருவிழாவிற்கு கூட்டமாக வருகிறார்கள். அந்த சடங்குகளை எல்லாம் செய்கிறார்கள்.திரும்பும் வழியில் சென்னை செல்கிறார்கள். இவனை  ஏற்கனவே மகளாக ஏற்றுக்கொண்டவர்  இறந்து போய் விடுகிறார். தனது கூட்டத்தாரைப் பார்த்து ஆறுதல் சொல்லி பணம் கொடுத்து விட்டு ஒரு நாளில் திரும்பவும் வேஷ்டி சட்டை அணிந்து கிராமத்துக்கு காரில் பயணம் செய்கிறான் சுயம்பு என்ற மணி மேகலை. ஆனாலும் அந்த அங்க அசைவுகளை உடல் மொழியை மறைக்க இயலவில்லை... அப்பா அண்ணன் எல்லோரையும் பார்க்கிறான். அக்கா இறந்து விட்ட தகவல் அறிந்து வேதனை கொள்ளுகிறான்.அக்காவின்  ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொள்ளுகிறான் கையில். அப்பாவோ நீ சேலையே கட்டினாலும் பரவாயில்லை " இங்கேயே இருடா"  என்கிறார். அவனால் முடியவில்லை.அப்பாவின் கையில் பணம் கொடுத்து அண்ணனிடம் அழுகிறான். விடை பெறுகிறான்.

மீண்டும் டெல்லிப்பயணம்.


இந்திராகாந்தியைக்கொலை செய்து விடுகிறார்கள். அங்கே போக வேண்டும் என்று இவனது அம்மா சொல்ல, அங்கே போலீஸ் கலவரம் என்றாகி அவர் உயிரை விடுகிறார். அந்த இடத்தின் பொறுப்பு சுயம்புவிற்கு வருகிறது.
இவர்கள் குழுவாக சென்று ஆசீர்வாதம் செய்வது பல பெரிய பணக்காரர்கள் இவர்களை ராசியானவர்களாககருதி இவர்களுக்குப்பணம் தருவது என்பது போன்ற காரியங்களால் வரும் பணம் அதிகமாக, அதிகமாக அதை கணக்குவைத்து தம்மைப்போன்ற ஜீவன் குழுக்களிடம் இருந்து ஏதேனும் கோரிக்கை வந்தால் அ தைஉடனடியாக நிறைவேற்றுவது என்று நடைமுறை மாறுகிறது.
சென்னையில் தங்களது குழுவினருக்குப்பிரச்சனை
உடனே பொறுப்பை பிரிதொரு  நபரிடம் கொடுத்து விட்டு சென்னை செல்கிறார்கள். அரசு இயந்திரம் இயங்க ஆரம்பிக்கிறது , முதன் முறையாக இவர்களது குரலைக்கேட்கத்துவங்குகிறது... டேப் ரெக்கார்டரில் அவர்களின் குரல் ஆவேசமாகப் பதியப்படுகிறது.


நிறைய மனிதர்களை சந்தித்து நாவலை வடித்தெடுத்திருக்கிறார்.
அவரே ஒரு காட்சியில் திரு நங்கையரின் பிரச்சனையைப்படம் பிடிக்கச்செல்லும் மத்திய அரசின் அலுவலராக ஒரு காட்சியில் இயல்பாக தன்னை நிறுத்தி சபாஷ் பெறுகிறார். அவர் மறைந்தாலும் எழுத்துக்களால் அதிலும் விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்சனையை எளிய நடையில் தமிழ் உலகறிய க்கொடுத்துச் சென்றிருக்கிறார்.

பாவை பப்ளீகேஷன்ஸ்  வெளியீடு...