வலைப்பதிவில் தேட...

Tuesday, April 13, 2010

ஆசீர்வாதம்


பிரேமச்சந்திரன் நாயர் என்பது அவரது பெயர்.
பிப்ரவரி இருபத்தியேழு, 2002 அன்று முதல் உலகப்பிரசித்தியடைந்த போன கோத்ராவில் நாங்கள் ஒன்றாக வேலை பார்த்தோம். 2001 மே மாதம் முதல் நாங்கள் அங்கே தங்கி இருந்தோம் ....

திருவல்லா அவரது ஊர் (நாடு) . "ப்ரேஞ்சந்திரன்" என்று தான் அவரை மலையாள அன்பர்கள் அழைப்பார்கள் . பணி மாற்றம் நிமித்தம் நான் கோத்ரா சென்ற போது அன்பாக 'வாங்க வாங்க' என்று தமிழ் பேசி வரவேற்றவர். ஒவ்வொரு முறையும் அவரது சீட்டுக்கு போகும்போதும அதே போல் வாங்க வாங்க என்பார். அடுத்ததாக 'உக்காரு' என்பார். ரசிக்கும்படியாக இருக்கும். மனசுக்கு இதமாக இருக்கும். அது கோத்ராவில் ரயில் எரித்த நேரம் . அவருக்கு எனக்கும் கலெக்டர் அலுவலகத்தில் ஸ்பெஷல் பாஸ் கொடுத்திருந்தார்கள். எனது பெயர் 'நாராயண்' (நாராயணன் என்பது தெற்கே மட்டும்தான் என்பது அப்போது தான் புரிபட்டது) என்றும் அவரது பெயர் பி சி நாயர் என்றும் கொடுத்திருந்தார்கள் அதை வைத்துக்கொண்டு காய்கறி மார்க்கெட் திறந்திருக்கும் நேரம் ரேடியோவில் கலெக்டர் ஜெயந்தி ரவி (சென்னைக்காரர்) அவர்கள் குஜராத்தியில் சொன்னதைக்கேட்டு அதன் பிறகு மார்கெட்டுக்கு நானும் அவரும் செல்வோம்....

நாய் குறுக்கே சென்றால் பாத்து பாத்து 'நாய் வரார்' என்பார். மழலைததமிழ் போல அவருடையது மலையாளத்தமிழ். வசீகரமுடையது நெருக்கமானது. சுதந்திரம் வாங்கிய அந்த மாதத்தில் (ஆகஸ்ட் 1947) பிறந்தவர். சரியாக அறுபது வயதில் அவர் பணி நிறைவு செய்தார் அப்போதெல்லாம் நானும் எனது குடும்பத்தினருடன் திருவல்லா செல்ல திட்டமிட்டிருந்தோம். முடியவில்லை...

அவரது பையன் எம் பி பி எஸ் முடித்துவிட்ட ஒரு டாக்டர் . ஏப்ரல் 9 கல்யாணம் கண்டிப்பாக வரவேண்டும் என்று போனில் பேசிவிட்டு கையேடு பத்திரிகையும் அனுப்பிவிட்டார். ஒரே ஒரு திருத்தம் மட்டும். திருமணம் திருவல்லாவில் இல்லை மாறாக திருவனந்தபுரத்தில். மணமகளும் ஒரு டாக்டர் . அவரது ஓய்வுக்கான விழாவில் கலந்து கொள்ள திருவல்லா செல்ல முடியவில்லை எனவே கண்டிப்பாக இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டி நானும் எனது மனைவியும் சென்றோம். காலை பத்து மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு . நாங்கள் ஒன்பது மணிக்கெல்லாம் மண்டபத்தில் ஆஜராகினோம். ஒருவர் கூட இல்லை.3

இடபழஞ்சி ஆர் டி ஆர் மண்டபம அது. சரியாக பத்து மணி. மாப்பிள்ளை ஒரு காரில் வந்து இறங்கினார். பெண் வீட்டார் வழக்கம் போல் ஆர்த்தி விளக்கு வைத்து வரவேற்றனர். நாயர் சாரை மட்டும காணவில்லை. விசாரித்ததில் அவர் பஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறார் முகூர்த்தம் பனிரெண்டு இருபதுக்குமேல் பனிரெண்டும் நாற்பது வரைக்கும் தான் ....

மணமேடைக்கு மாப்பிள்ளை ஒருபுறமும் பெண் ஒரு புறமும் சென்றனர். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பரிசுப்பொருட்கள் அவரவர் அறைக்கு சென்று கொடுத்த வண்ணம் இருந்தார்கள் நமது ஊரில் கல்யாணம் முடிந்த பிறகுதான் கொடுக்கிறார்கள். பதினோரு மனி சுமாருக்கு நாயர் சார் வந்தார் நல்லவேளையாக ...

மலையாள பெண்மனிகளோடு பாரியாளை உட்காரவைத்து விட்டு வாசல் பக்கம் அப்படியே நின்று கொண்டிருந்தேன். அப்போட்துதான் எதிர்ப்பட்டார் பிரேமச்சந்திரன் நாயர். மண்டபத்தின் உள்ளே நுழையும் போதே என்னைப்பார்த்து விட்டார்.  "என்ன எப்போ வந்தாச்சி;வீட்டிலே எங்கே விட்டிருக்கே" என்று விசாரித்தார்.

அவர்கள பாணியில் நாமும் மணமகன் அறைக்கு சென்று பரிசுப்போருளைக்கொடுத்துவிடலாம் என்று நானும் எனது மனைவியும் நினைத்திருந்தோம். அதன் படி நாயர் சாரை உடன் அழைத்துக்கொண்டு மணமகன் அறைக்கு உள்ளே நுழைந்தோம் வீடியோ காமிரா சகிதம் மணமகன் அறையே ஒளிவீசியது. ' பிரசன்னம் கொடு' என்று மகனிடம் சொல்லிவிட்டு என்னருகே நின்று கொண்டார் கூடவே எனது மனைவியும்...

ஒரு வெற்றிலை பச்சையான ஒரு கொட்டைபாக்கு இரண்டு ரூபாய் காணிக்கை வைத்து எனது கையில் அந்த டாக்டர் மாப்பிள்ளை கொடுத்ததோடல்லாமல் எனது மற்றும் எனது மனைவியின்  கால்களில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வேண்டி நின்றார். நான் சற்றும் இதை எதிர் பார்க்கவில்லை. விழித்தேன்..

கண்களில் கண்ணீர் வராத குறை எனக்கு அந்த விளக்குகள் அதையும் செய்திருக்கும் சிறிது நேரம் ஆகியிருந்தால் . உடனே சுதாரித்துக்கொண்டு கையில் கொண்டு போன சிறிய பரிசை அந்த மாப்பிள்ளை கையில் கொடுத்தேன். வீடியோ போட்டோ முடிந்து வெளியே வந்தேன் மனைவியோடு . ஒரு டாக்டருக்கு படிச்ச பையன் என் காலில் விழுந்தது என் மனதுக்கு நெருடலாக இருந்தது. மனைவியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து கொண்டே மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்....

நானும் 1977 மற்றும் 1980 இரண்டு தரம் எம் பி பி எஸ் படிப்புக்காக வேண்டி மனு கொடுத்து அலைந்து திரிந்த எனது வலி என் மனைவிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போல தெரிந்தது..

No comments: