வலைப்பதிவில் தேட...

Saturday, April 11, 2009

கோத்ரா நாட்கள் 2


கோத்ராவிலிருந்து தகொத் ஒரு முறை சென்று கொண்டிருந்தோம் அலுவலக வாகனத்தில். ஒரு ராஜஸ்தானிய நண்பரைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும் . அவர் பெயர் பன்ஸிதர் குப்தா . டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஏராளமான புகைப்படங்களும்
கலவரங்கள் பற்றிய செய்திகளும் வந்துகொண்டிருந்த நேரம் அது. மோடியை கொலைகாரன் (Chief Monster)என்று அந்தப்பத்திரிகை எழுதவும் கூட செய்தது . நண்பருக்கும் எனக்கும் ஒரு விவாதம் வந்தது. நடந்து முடிந்த இந்தக்கொலைகள் கலவரங்கள் பற்றி. நான் ஒரு கட்டத்தில் சொன்னேன் எந்த மதமும் வன்முறைக்கு இடம் தருவதில்லை . எனவே மக்களுக்குள் மோதல் ஏற்படுத்தும் மதங்கள் மக்களுக்குள் ஒற்றுமையை விதைக்கவேண்டும் பிரிவினையை அல்ல . அவர் சொன்னார் இல்லை இல்லை இவர்களுக்கு நாம் யார் (இந்துக்கள்...) என்பதைக்காண்பித்தாகவேண்டும் என்றார்.


வழி நெடுக தீ எரிந்து போனதின் எச்சங்கள். 58  பேருக்கு பதிலாக 2000 பேர் என்கிற ரீதியில் உயிர்க்கொலைகள் நடந்து முடிந்துவிட்டது 20000 இருசக்கரவாகனங்கள் 4000 நான்கு சக்கர வாகனங்கள் என சேதாரம் ஆகிப்போனது நிம்மதி இழந்து 2 லட்சம் பேர் அகதிகளாக உள் நாட்டிலேயே என்று நாடே உற்றுப்பார்க்கும் ஒரு சாவதேச முக்கிய நகரமாக ஆகிப்போனது கோத்ரா  நரேந்திர மோ(டி)தி சிரித்த முகத்துடன் டிவியில் வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு பனிரெண்டு நாட்கள் நாங்கள் அலுவலகம் செல்ல முடியவில்லை . ஊரடங்கு உத்தரவு ஊரெங்கும். இடையில் ரேடியோவில் மாவட்ட ஆட்சியர்  (நம்ம ஊருக்கார ஜெயந்தி ரவி) குஜராத்தியில் சொல்லும் நேரம் மட்டும் காய் வாங்கிக்கொள்ளலாம்.
கடந்து போய்விட்டது அந்தக்கடுமையான நாட்கள் .
குப்தாவுக்கு ராஜஸ்தான் மாற்றல் வந்தது. நாங்களெல்லோரும் கோத்ரா ரயில் நிலையம் சென்றோம் வழியனுப்ப . எலும்புக்கூடாக s 6 ரயில் பெட்டி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது . ஆளுக்கொரு தேங்காய் வாங்கி வந்து பயணம் செல்பவர்களின் கையில் கொடுப்பது என்பது மரபு அங்கே.
ஜானி என்றொரு அதிகாரி வந்தார். ரயில் கிளம்ப இன்னும் சில மணித்துளிகள். அவர் பங்குக்கு ஒரு தேங்கையை குப்தாவின் கைகளில் கொடுத்தார் . பதிலுக்கு குப்தாஅவரது  கால்களை நமஸ்கரித்தார். வயது மூத்தவரை காலைத்தொட்டு கும்பிடுவது என்பது அங்குள்ள வழக்கம். மரபு . குனிந்து எழுந்தவன் கண்ணில் தாரைதாரையாகக் கண்ணீர்த்துளிகள் .

சின்னப்பிரிவையே தாங்கமட்டாத இவனா அன்றைக்கு வன்முறையாளனாக அன்றைக்கு நாம் யார் என்பதை காண்பித்தாகவேண்டும் என்று சொன்னவன் என்று எனக்கு ஏகப்பட்ட ஆச்சர்யம்

No comments: