வலைப்பதிவில் தேட...

Monday, May 31, 2010

முதல் பட்டதாரி

இந்த கல்வி ஆண்டு முதல் (2010-2011) எந்த ஒரு குடும்பத்திலிருந்தும் முதன் முதலாக தொழிற்கல்வி பயிலும் பட்டதாரி மாணவர்களுக்கு/மாணவிகளுக்கு கல்விக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 1980 ஆம் வருடம் நானும் கூட அப்படி வெளி வந்த ஒரு அறிவியல் பட்டதாரிதான். விருது நகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் அப்போதெல்லாம் ஒரு வழக்கம் இருந்தது. பட்டம் முடித்து வெளியேறும் மாணவர்களில் (அப்போது ஆண்கள் மட்டுமே படிக்கும் ஒரு கல்லூரி அது) முதலாவதாக அதாவது அதிக மதிப்பெண் பெறுபவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும்.(இப்போதும் இது நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை!)

தாவணிக்கனவுகள் படத்தில் பாக்கியராஜ் கூட அது போல பதக்கம் வாங்கிய பட்டதாரியாக நடித்திருப்பார். அவர் தங்க மெடல் வாங்கும்போது இது போன்ற இளைஞர்களின் கையில் எதிர் காலம் இருக்கிறது என்று பதக்கம் வழங்குபவர் குறிப்பிடுவார். கொஞ்ச நாட்கள் கழித்து குடும்பசூழல், வேலையின்மை காரணமாக குடிப்பதற்கு ஆரம்பித்து விடுவார். அப்போது அவரது கையில் சாராய கிளாஸ் இருக்கும். வேதாந்தச்சிரிப்பினால் சூன்யத்தை ப்பார்ப்பார் அவர் . நிற்க...நான் பட்டம் வாங்கும் வ்ரை அந்தப்பதக்கம் வாங்குவதற்கான தகுதி பற்றி எனக்குத்தெரியாதுநான் வாங்கிய மதிப்பெண்கள் 1250/1800 (69.4% முதல்வகுப்பில் தேர்ச்சி; அந்த ஆண்டு தாவரவியல் பட்டப்படிப்பில் முதலாமவன்). தங்கப்பதக்கம் எனக்குக்கிடைக்கவில்லை. மாறாக எனக்கு அடுத்தபடியாக மதிப்பெண் பெற்ற வி. பிரபாகரனுக்கு அது கிடைத்தது. விசாரித்ததில் சொன்னார்கள் எந்த ஒரு பாடத்திலும்  ஆறு செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திலும் கூட பெயில் ஆகியிருக்கக்கூடாது என்று. நான் தான் INORGONIC CHEMISTRY  என்கிற பேப்பரில் இரண்டு அட்டெம்ப்ட்டு ஆச்சே!

சரி எல்லோரும் பட்டமளிப்பு விழாவின் போது கருப்பு அங்கி அணிந்து தலையில் தட்டையாக ஒரு குஞ்சம் வைத்து கையில் பட்டத்தை சுருட்டி வைத்து ஒரு போட்டோ  எடுத்துக்கொள்வார்களே அது போல ஒரு பட்டமளிப்பு விழா வரும் ஆசையாக ஒரு படம் பிடித்து வைத்துக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பில் மண் விழுந்தது போல் அந்த வருடம் பார்த்து பட்டமளிப்பு விழா என்று எதுவும் கிடையாது எல்லோரும் கல்லூரி அலுவலகத்தில் வந்து கையெழுத்து போட்டு விட்டு பட்டத்தை வாங்கி செல்லுங்கள் என்று அழைப்பு வந்தது. போட்டோ கண்ணிலேயே நின்று விட்டது.

அப்போதெல்லாம் மூன்று கல்லூரிகளில்தான் M Sc., தாவரவியல் இருந்தது
பழனியாண்டவர் கல்லூரி பழனி,  சரஸ்வதி நாராயணன் கல்லூரி மதுரை, தியாகராசர் கல்லூரி, மதுரை.  எனக்கு சரஸ்வதி நாராயணன் கல்லூரியில்  எம் எஸ் ஸி படிக்க அழைப்புக்கடிதம் வந்தது ருபாய் 411/- கட்டச்சொல்லி ப்ரின்சிபால் கையொப்பமிட்ட கடிதம் வந்தது.  வீட்டில் அங்கே இங்கே என்று
ஒரு 250/- ரூபாய்  வரை திரட்டி விட்டார்கள் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து. அதற்கு மேல் முடியவில்லை... கனவாகிப்போனது  PG.

30/05/2010 அன்று கோவை  CIT கல்லூரியில்  பட்டமளிப்பு விழா:  திலிப் சுகதேவுக்கு(எனது பையன்தான்)  AICTE அமைப்பின் பொறுப்பாளர் எஸ் எஸ் மந்தா என்பவரின் கையால் திலிப் பட்டம்  வாங்கினான். கருப்பு அங்கி கழுத்தில் ஒரு சிகப்பு பார்டருடன் கூடிய கருப்பு வளையம் அணிந்து பட்டம் பெற்றான்

கையில் வைத்திருந்த டிஜிட்டல் காமிராவினால் ஏழெட்டு போட்டோக்கள் எடுத்துத்தள்ளினேன். அப்படியே  பக்கத்தில் இருந்த எனது மனைவியிடம் சொன்னேன். எனக்கு கையெழுத்து போட்டு பட்டம் வாங்கிக்கொண்டுவந்தேன் இது போன்ற விழாவிற்காக ஏமாந்து போனேன் இன்றைக்கு ஒரு காரியம் செய்யப்போகிறேன் தம்பியிடமிருந்து அந்த அங்கியை  வாங்கி  நான் அணிந்து கொண்டு  அவனை ஒரு ஸ்னாப் எடுக்க சொல்லப்போகிறேன்.  ஓரே சிரிப்பு எனது மனைவிக்கு.
பட்டமளிப்பு விழா முடிந்தது. திலிப் எங்களிடம் வந்தான்  அங்கியை தற்செயலாகக்கழற்றிக்கொண்டே.  கூடவே அவனது நண்பன் நான்கு வருடமாக அவனுடன் தங்கிப்படித்த சரவணன். நான் திலிப்பின் அங்கியை அவசரமாக அணிந்து கொண்டேன் அந்த வட்டக்கழுத்துப்ப்ட்டையையும் சேர்த்தேதான். சிலர் வேடிக்கையாகப்பார்த்தார்கள். மனைவி வாய் விட்டு சிரிக்க தம்பி திலிப்போ வேண்டாம்பா என்று அங்கே இங்கே பார்த்துக்கொண்டிருக்க என்னை இரண்டு மூன்று ஸ்னாப்கள் எடுத்துதள்ளினான் சரவணன்.
முப்பது வருடங்களில் இரண்டு பட்டதாரிகள் ஒரு குடும்பத்தில்..

3 comments:

ரமேஷ் கார்த்திகேயன் said...

sir photo enka sir

அமைதி அப்பா said...

கல்லுரி நாட்களை நினைவில் கொண்டுவந்துவிட்டீர்கள். நானும், எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு போட்டோவைப் பார்த்து கல்லுரி சென்றவன்தான். போட்டோதான் எடுக்கவில்லை.
நல்ல பகிர்வு.

திலிப் நாராயணன் said...

நண்பர் ரமேஷ் கார்த்திகேயன், வணக்கம்
திலிப்பிடம் காமெரா இருக்கிறது. அவன் கோவையில் இருக்கிறான். நண்பனின் லேப் டாப் மூலம் மெயில் அனுப்புவதாகச்சொல்லியிருக்கிறான். அனுப்பியபிறகு போட்டோவை பதிவேற்றுகிறேன்.

அமைதி அப்பா அவர்களுக்கு வணக்கம். தங்களது வருகைக்கும் கல்லூரி நாட்கள் தங்களின் நினைவுகளில் மின்னலடித்துச்செல்லக்காரணமாகவிருந்த பதிவை பாராட்டியதற்கும் நன்றி