நாலாவது ஐந்தாவது படிக்கும் சமயங்களில் பள்ளி முடிந்ததும் அம்மா எந்த களத்தில் (கம்பு, உளுந்து, பாசிப்பயறு ,சோளம் ,இருங்கு சோளம், கேப்பை என்று விளை பொருள்களின் அடிப்படையிலான களங்கள்)
தவிர விளைகின்ற காடு சார்ந்துதான் அந்தக்களங்கள் அமைந்திருக்கும். எந்த சம்சாரியின் காடு எங்கே என்று தேடிகண்டுபிடிக்குமுன் போதும் போதுமென்று ஆகி விடும். சில நாட்களில் எங்கள் பள்ளியின் அருகில் கூட களம் இருக்கும். அவித்த அமெரிக்க கோதுமைச்சோற்றை சாப்பிட்டுவிட்டு எதுக்களிக்க ஒடிச்சென்று அம்மாவைப்பார்க்கும்போதெல்லாம் வெயில்ல நிக்காத பள்ளிக்கொடத்துக்கு போ என்று வண்டு கட்டிய தலையோடு சொல்லுவார்கள். ஒரு நாள் தலைமை ஆசிரியர் 'கேர்' எடுக்க சென்றதால் பள்ளியில் மதியச்சோறு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். (மதிய உணவுக்கு வேண்டிய அந்த பனைமரத்து எண்ணெய், கோதுமை வாங்கி வருவதுதான் 'கேர்' எடுப்பது என்பது பிறகு தெரிந்து கொண்டேன்). பசியோடு வீட்டுக்குப்போனால் புளிச்ச தண்ணிப்பானையின் அடியில் கையைவிட்டுக்கோதினாலும் பருக்கை சிக்கவில்லை. ஒரு செம்பு நீச்ச தண்ணீயைக்குடித்துவிட்டு மதியம் பள்ளி சென்றேன். நாலரை மணிக்கு பள்ளி விட்டதும் ஒவ்வொரு களமாக அம்மாவைத்தேடினேன். இருட்டும் நேரம் ஆகியும் களம் முடியவில்லை. கொஞ்ச நேரம் அங்கேயே விளையாடிப்பார்த்தும் வேலை முடிவதாக இல்லை. ஒருவழியக ஏழரை மணி சுமாருக்கு களம் முடிந்தது. கூலியை அம்மா பெட்டியிலும் முந்தியிலும் வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்தார்கள். வாங்கி வந்த கூலி இருங்கு சோளம் . அவ்வளவு சாமானியத்தில் அதன் தோலை உரித்து எடுத்துவிட முடியாது. ஒரு உடந்த மண் பானையில் சோளத்தைப்போட்டு வறுத்து அந்த சூடு போகுமுன் உரலில் போட்டு இடித்தால் சுத்த வெள்ளையாக வராவிட்டாலும் செங்களிச்ச ஒரு நிறத்தில் சோளம் வெளிப்படும். அதை கஞ்சி காய்ச்சிக்குடிக்க ஆசையாக அம்மா தருவார்கள். கள்ளன் போலிஸ் எல்லாம் விளையாடி ஆகிவிட்டது. ஆனாலும் அம்மா அடுப்பு பத்தவைக்கவில்லை. வேலிக்கருவேலை முள் தான் எரி பொருள். அம்மாவுக்கும் பசிதான் இருந்திருக்கும். அத்தோடுதான் இந்த இருங்கு சோளத்தோடு போராடிக்கொண்டிருந்தார்கள். தங்கை தம்பிகளோடு அம்மா சோளச்சோறு ஆக்கி முடிக்குமுன் நான் தூங்கிப்போனேன்.
No comments:
Post a Comment