இரவு நேரம் பதினோரு மணி சுமார் இருக்கும். சாவடியின் மையப்பகுதியில் திம்மைய நாயக்கர் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். அந்த பாடாவதி தூங்கி வழியும் சாவடியில் அவரைச் சேர்ந்த ஆட்கள் கம்பீரம் தெறிக்க உட்கார்ந்ததும் நின்று கொண்டும் பரபரப்பாக பேசிக்கொண்டும் இருந்தார்கள். அது ஒரு மாநகரமும் இல்லாமல் சிற்றூரும் இல்லாத ஒரு பேரூராட்சிக்கு அடுத்தபடியான ஒரு ஊர். பிராது இதுதான். சுடுகாட்டில் குழி தோண்ட வேண்டிய, பிணம் பொசுக்கவேண்டிய இனத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஒரு இளைஞன் நாயக்கமார் சமூகத்தைச் சார்ந்த ஒரு நடுவயதுக்காரரை சுடுகாட்டில் பிணம் புதைக்கிற இடத்தில் வைத்து அடித்து துவைத்து விட்டான். மயான அமைதி என்று சொல்லுவார்கள். மயானத்தில் வைத்து சண்டை போட்டுக்கொண்டால் சரியாக இருக்காது எல்லாம் வீட்டில் வைத்து பேசிக்கொள்ளலாம் என்கிற உயர் சாதிப்பொதுப்புத்தி மட்டுமே என்று சொல்லுவது கூட சரியாக இருக்கும். இல்லையென்றால் மயானத்திலாவது அக்மார்க் அமைதி நிலவுவதாவது. பலசாதிகளில் சண்டை ஆரம்பிக்கும் இடமே சுடுகாடாகத்தான் இருக்கும்.
முக்கியப்புள்ளியாகக் கருதப்பட்ட ஒரு மனிதர் இறந்து விட்டார். பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது இயற்கைதானே. இதைப்புரிந்து கொள்வதில் எவ்வளவு வேறுபாடுகள் மனிதர்கள் மத்தியிலும் மதியிலும். சேவகம் செய்வதற்கென்றே சில சாதிகளும் அவர்களை அதட்டி வேலை வாங்குவதற்கென்றே மேலே பலவகையான சாதிகளும் என்ற அடுக்குமுறை நிலவும் சமுதாயம் நமதென்று நாமறிவொம். அந்த வகையில் ஆறுமுகம் ஒரு தலித் அல்லது அருந்ததிய சகோதரன். நாயக்கமார், தேவமார், செட்டிமார், ஆசாரிமார் போன்ற சமுதாய மக்கள் இடை நிலை சாதியென்றும் அவர்களுக்கு மேலாக பிள்ளைமார் மற்றும் பார்ப்பனர்கள் வருண தருமப்படி மேலே அமர்ந்திருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். மேல் சாதியாவும் கீழ் சாதியாகவும் மனிதர்களுக்குள் படி நிலையில் சாதிய அமைப்பை ஏற்றுக்கொண்ட நியதிதான் நமது. பொதுவாக நமக்கு மேலே இருக்கும் சாதியினரைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் கீழே ஏதாவது ஓரிரெண்டு சாதியேனும் இருக்கவேண்டும் என நினைக்கிற சமூக அமைப்பு நம்முடையது.
அந்த வகையில் பார்த்தால் நமது ஆறுமுகத்தின் அப்பா ஒரு காணிக்காரர். அதாவது இடை நிலை சாதியர் எவர் வீட்டிலும் எழவு விழுந்தால் அங்கே ஆஜர் ஆக வேண்டியது அவர் பொறுப்பு. அவனுடைய அப்பா ஒரு செருப்புத்தைக்கும் ஒரு சாதாரணப்பட்டவர். அவர் செய்த ஒரே தவறு நாம் தான் படிக்கவில்லையே நமது பிள்ளையாவது நாலெழுத்து படிக்கட்டுமே என்பதுதான். அதில் வந்ததுதான் வினை. ஆறுமுகம் நினைத்தால் சுடுகாட்டுக்குப்போய் அந்த இடைநிலை சாதியினருக்கு சேவை செய்திருக்கவேண்டியதில்லைதான். அப்பாவோ ஒரு காச நோயாளி. அவர் அடிக்கடி படுத்த படுக்கையாகி விடுவார். ஆகவேதான் ஆறுமுகத்தின் தலையில் விழுந்தது குலத்தொழில் என்கிற கோடாரி.
அம்மாவோ மூத்தவன் ஆறுமுகம் உள்ளிட்ட நாலு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி சம்சாரிமார்களின் காடு மேடு, கழனி களம் அறுவடை வயற்காடு வரப்பு என்று குழந்தைகளின் பராமரிப்பு வேண்டி தீராத உழைப்புக்கு ஆட்பட்டிருந்தாள். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை அவருக்கு ஊர் பார்க்கும் காணிக்காரன் என்ற அற்புத வாய்ப்பு கிடைக்கும். ஆறுமுகம் ஐந்தாவது படிக்கும் போது அவனது அப்பாவுக்கு ஊர் காணிக்காரன் வேலை வாய்த்தது. அப்போதெல்லாம் அப்பா தாட்டியமாக இருந்தார். அவரே மயானத்துக்கு சென்று குழி தோண்டுவார். ஆழக்குழி வெட்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொன்னூறு முட்டை என்பது ஒரு பழமொழியாக தமிழராகிய அனைவரும் அறிந்திக்கிறோம். ஆனால் செத்துப்போன ஒரு சக மனிதனுக்கு ஒரு குழி வெட்டினவன் இதை எழுதியிருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
பிணம் அந்தப்பகுதியில் விழுந்து விட்டது என்று தகவல் சொன்ன அடுத்த நிமிடத்தில் அவசரகதியில் அப்பா இறங்கி விடுவார். பங்காளிகளில் நெருக்கமானவர்களை அழைப்பதும் எழவு வீட்டில் இருந்து ஊர்வாரியாகப் பட்டியல் வாங்குவதும் (எழவு சொல்லத்தான்), சுடுகாட்டில் யாருக்கோ கட்டிய தேரை ரிக்ஷா வண்டியில் கொண்டு வருவதும் புதிய தேர் கட்டச்சொன்னால் பச்சை மூங்கிலில் கட்டித்தருவதும் பழைய சேலைகளையும் அவர்கள் வாங்கி வந்த கேந்திப்பூக்கள் உள்ளிட்ட கதம்ப மற்றும் ரோஜாமலர்களால் தேரை சிங்காரிப்பதும் இரண்டாள் உயரமுள்ள பாடைக்கம்புகளை தோ¢ல் கட்டுவதும் மண் சட்டியில் கங்கு போடுவதும் என்று அனைத்து வேலைகளும் அப்பாவுக்கு அத்துப்படி.
சட்டையில்லாத ஒடிசலான உடம்புடன் ஒரு கையில் கங்கு புகையும் கயிறு கட்டப்பட்ட மண்சட்டியும் தோளில் மண் வெட்டியும் தலையில் உருமாக்கட்டுமாக வேகமாக தேருக்கு முன்னால் செல்லும் வேகம் நேரமேலாண்மை சம்பந்தப்பட்டது. செத்தவன் நல்லவனாக இருந்தால் அவனது சாதியிலேயே நன்றி உள்ள நாலு பேர் தேறி சுடுகாடு வரை பிணத்தை தூக்க முன் வருவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அப்பாவே அவரது சாதியில் நான்கு பேரை கூலிக்கு எற்பாடு செய்து பிணத்தை வாடவிடாமல் நேரத்தில் தூக்க வழி வகை செய்து விடுவதிலும் கெட்டிக்காரர். நமது ஆறுமுகமோ அவ்வப்போது சுடுகாட்டுக்கு விடுமுறை நாட்களில் அப்பாவின் வேலைகளை வேடிக்கை பார்த்தும் பார்வையிடுவதுமாகதான் காலம் கழிந்தது. அம்மா அடிக்கடி சொல்லுவாள். எந்த வேலை ஆனால்தான் என்ன கண்ணு பாக்கணும் கையி செய்யணும் என்று. அதை எல்லாம் உள் வாங்கியவனாகத்தான் ஆறுமுகம் இருந்தான். ஆனாலும் அவன் படித்ததற்கான பாணியைக் கடைப்படித்ததால் தான் அந்த நிகழ்வு என்பது மட்டும் உறுதி.
அப்போது அவன் பெரிய பத்து படித்து முடித்து விட்டு விடுமுறையில் வீட்டில் சும்மா சுற்றிக்கொண்டிருந்தான். மூத்த பையனான ஆறுமுகத்தை அம்மாவும் அப்பாவும் ஏதாவது வேலைக்குப் போய் என்னமாவது கொண்டு வந்தால் தான் என்ன என்று கேட்டும் இவன் அசைந்து கொடுப்பதாக இல்லை. வினையாய் வந்தது அந்த சின்னப்ப நாயக்கரின் சாவு. சம்சாரிமார் தெருவிலிருந்து ஒரு சாவு செய்தி வந்தது. ஊர் பார்க்கும் காணிக்காரன் யாரப்பா என்ற கேள்வி ஆறுமுகத்தையும் தட்டு மண்வெட்டியைத் தூக்க வைத்தது; தட்ட முடியாமல் சுடுகாடு செல்லவேண்டியிருந்தது.
அந்த ஊரில் ஒரு பழக்கம் இருந்தது. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது தான் கணக்கு. ஒரு பங்காளியின் காணிக்காரப்பணி முடிந்து மற்றொரு பங்காளிக்கு மாறும் நேரம் அப்போதுதான் துவங்கும். இவன் (ஆறுமுகம்தான்) பெரிய பத்து முடித்து லீவில் இருப்பதற்கும் அப்படியாக இவனது அப்பாவுக்கு ஊர் காணிக்காரன் வேலை() வருவதற்கும் சரியாக இருந்தது. சுப்பிரமணியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு இவன் சுடுகாட்டுக்குச்சென்று குழி தோண்ட கடப்பாரையும் மண்வெட்டியும் எடுத்து சென்றான்.
அங்கே தான் வந்தது வினை. ஆறுமுகம் அவனுக்கு துணையாக சுப்பிரமணியனை அழைத்துக்கொண்டு மயானத்திற்கு சென்றானல்லவா. குழி வெட்டுவதென்றால் அவ்வளவு எளிதல்ல. புதியாதாகக் குழி வெட்டுவதை விடவும் தோண்டிய குழியை வெட்டுவதென்பது எளிதானது என்பது தொன்று தொட்டு வரும் மரபு. ஏற்கனவே ஆறுமுகம் அவனது சுடுகாட்டுக்குப்போய் வந்த பழக்கத்தில் பார்த்து பழகிய அனுபவம் இது. பாறையையும் மண்ணையும் வெட்டி புதிய குழி வெட்டினால் மூச்சுத்திணறித்தான் போகும். ஆறு மாதத்துக்கு முன்னால் மூடிய குழியை தோண்டும் போது ஒருவித நாற்றம் அடிக்குமே; அம்மாடி குடலைப் புரட்டிபோட்டு விடும் என்பார்களே உண்மையில் இந்த வேலை செய்யாதவர்கள் குத்துமதிப்பாக சொல்லித் திரிவதில் அர்த்தம் இருப்பதாகப்படவில்லை. உயிரின் வாதை அது. சில நேரங்களில் குழியில் கிடக்கும் கை எலும்பு கால் எலும்பு மண்டை ஒடு நைந்த துணி தலைமுடி என்று வெளியே அள்ளிப் போட வேண்டும். குறைந்தது கழுத்து மட்டத்துக்கு குழி இருக்கவேண்டும். அப்போதெல்லாம் பிளாஸ்டிக் பாட்டில்கள் புழக்கத்தில் இல்லை. தண்ணீர் கொண்டுபோக வழியுமில்லை. அது பற்றித் தெரியவும் செய்யாது. தாகமமெடுத்தால் பக்கத்தில் இருக்கும் கௌசிகா நதியின் உப்பு நீரைத்தான் அது எந்த நிலையில் இருந்தாலும் குடிக்கவேண்டும். குழிவெட்டுவதில் ஒரு நுணுக்கம் இருக்கிறது மற்ற எந்த தொழிலையும் போல. செத்துப்போன ஆளின் உயரத்துக்கு அதாவது செத்த பிறகு அவன் இருக்கும் நீளத்துக்கு சற்றும் குழியின் நீளம் இருக்கக்கூடாது.
எவன் கண்டு பிடித்தானோ? அப்படி கொஞ்சம் பெரிய சைஸாக வெட்டி விட்டால் இறந்த சாதியிலிருந்து பிரிதொரு பிணத்தை அந்த சுடுகாடு பலி கேட்குமாம். இது என்ன வகை அறிவியலென்று மனிதன் சந்திரனுக்கு சென்றுவந்த நான்கைந்து ஆண்டுகள் ஆன பிறகான காலத்திலும் கூட தெரியவில்லை. ஆறுமுகமும் அவன் நண்பன் சுப்பிரமணியனும் சேர்ந்து குழி வெட்டி விட்டார்கள். மற்ற வேலைகளை மேளம் உட்பட படுத்த படுக்கையிலிருந்தபடியே அவரது அப்பாவே ஏற்பாடு செய்துவிட்டார்.
சாதாரணமாக பிணம் வந்து சேரும் வரை சுடுகாட்டிலிருந்து வீட்டுக்கு குழி தோண்டும் எவரும் வீட்டுக்கு வருவதில்லை. நமது ஆறுமுகத்துக்கோ அனுபவமில்லை. பொழுது மயங்கும் வேளை ஆகிவிட்டது. செத்துப்போன சின்னப்ப நாயக்கரின் மகள் மதுரைக்குப்பக்கம் இருந்து வருவதற்கு நேரம் ஆனதால் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்குடன் பிணம் சுடுகாடு வந்து சேர்ந்தது. சங்கு ஊதிக்கொண்டே சோலை வந்தார். அவரே மொட்டை போட ஆட்களை அழைத்தார். வேட்டிகளை இடுப்பில் வைத்துக்கொண்டு வந்தார் ராக்கன். அவர்தான் வண்ண மயமாக துணிகளை அவர்களுக்கு வெளுத்துத்தருபவர். வாய்க்கரிசி போடத்சொல்லி ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்தான். அவரவர் கையில் இருந்த 10 பைசா கால்ரூபா என்று போட்டார்கள்.
சற்றும் எதிர்பாராத வகையில் சாராய போதையில் இருந்த இறந்துபோன சின்னப்ப நாயக்கரின் மருமகன் நடையநேரி நரிய நாயக்கர், 'எந்த சக்கிலியப்பயடா குழி வெட்டுனது' என்று கேட்டுவிட்டார். சாதாரணமாக குழியின் நீளமோ அகலமோ கூடவோ குறையாகவோ இருக்கக்கூடாது. பொதுவாக 51/2 அடி உயரமுள்ள ஒரு ஆளுக்கு 5 அடி குழி வெட்டிவிடுவதும், தலைப்பகுதியில் ஒரு 1/2 அடி பாந்தம் பரித்து விடுவதும்தான் வழக்கம். அந்த முறையில் தான் நமது நாயகன் ஆறுமுகமும் அவனது நண்பனும் சிரமேற்கொண்டு செய்திருந்தார்கள் சவக்குழியை. ஆறுமுகத்துக்கு சாதியின் பெயரைக் கேவலமாக சொன்னார் நரிய நாயக்கர் என்கிற ஆத்திரத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். நரிய நாயக்கர் சரிந்தார் குழியின் மேலிருந்த குவிக்கப்பட்ட மண் மேட்டில். நாயக்கர் அடிபட்டதைப் பார்தத் உடனே எளவட்ட நாயக்கமார்கள் பதிலுக்கு ஆறுமுகத்தை அடித்து உதைத்தனர். நடு வயது பெரியவயது நாயக்கர்கள் எல்லாம் கைகலப்பில் இறங்கியவர்களை சத்தம் போட்டு எளவட்டங்களை தடுத்து ஆறுமுகத்தையும் சுப்பிரமணியத்தையும் வேலையை முடிக்கச்சொல்லி ஆணையிட்டனர். குழி மூடப்பட்டது. கோபுரம் போல இருபுறமும் ம்ண்ணைக் குமித்து வைத்தார்கள். மண்வெட்டியைப் புரட்டிப்போட்டு செம்மி வைத்தான் ஆறுமுகம். கொஞ்சம் கரம்பைமண் எடுத்து பிள்ளையார் செய்து வைத்தான் சுப்பிரமணி.
எல்லாம் முடிந்தது. வேட்டியைவிரித்து பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் மருத்துவர் சோலைக்கான 'சுதந்திரம்' வழங்கப்பட்டது. சலவைக்காரர் ராக்கனுக்கும் கூட வழங்கியாகி விட்டது. வாய்க்கரிசிக்காசு உட்பட ஒரு பைசா ஆறுமுகத்துக்குத் தரப்படவில்லை. ஊர்க்கூட்டம் போட்டு இந்தப்பயல்களை ஒரு முடிவு செய்வதாகச் சொல்லி கூலி மறுக்க்கப்பட்டது. சேவகத்தொழில் தர்மம் காப்பாற்றப்பட்டது.
ஆறுமுகத்தின் அப்பாவுக்கு இந்த இழிதொழில் செய்வதில் ஈடுபாடு இல்லை என்பதை தனது மகன் ஆறுமுகத்திடம் பலமுறை சொல்லியிருக்கிறார். தனக்கும் தன்னைச் சார்ந்த சமூகம் மொத்தத்திற்கும் ஏற்பட்ட சமூகத் தளர்வுக்கும் காரணம் இது போன்ற இழிதொழில் செய்வதனால்தான் என்பதை உணர்ந்து வைத்திருந்தார். இந்த நிலைமை தனது சந்ததியினருக்கு தொடரக்கூடாது என்றும் கூட நினைத்திருந்தார். தனது பங்காளிகள் பகுத்தாளிகள் அனைவரிடமும் இதைப்பகிர்ந்து கொண்டிருக்கிறார். முடிந்தால் இந்த தொழிலை விட்டுவிடவேண்டும் என்றும் சொல்லுவார். ஆனாலும் ஒரு சமூகக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு செய்யவேண்டியிருக்கிறதே என்று வருத்தமும்பட்டிருக்கிறார். அந்த உணர்வு குறையாத நிலையிலும் அவர் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் அந்த ஊர்க்கூட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார். மயானத்திலும் இல்லாத அமைதி சாவடியில் நிலவியது.
சாவடியில் அவர்கள்.
கீழே இவர்கள்.
அவர்கள் கேள்விகள் மௌனத்தில் கரைந்தன. மௌனத்தை உடைத்தொரு குரல் ஒலித்தது. அது நமது ஆறுமுகத்தின் அப்பாவின் குரல்தான்.
தீர்க்கமாக ஆனால் தெளிவாக அவர்களின் கேள்விக்கு பதில் கொடுத்தார்.
‘இனிமேல் நாங்கள் உங்கள் பிணம் விழுந்தால் குழி தோண்ட மாட்டோம் எழவு சொல்லிப்போகமாட்டோம் மாடு செத்தால் தூக்க மாட்டோம் மேளம் கொட்ட மாட்டோம். உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்'.
துண்டை உதறித்தோளில் போட்டுகொண்டு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போல் நடக்க ஆரம்பித்தார் தமது பகுதி நோக்கி.
ஒரு தளபதியின் ஆணைக்கு இணங்கிய போர் வீரர்கள்போல ஆறுமுகத்தின் சொந்தங்கள் வீறு கொண்டு அவரது அப்பாவைப்பின் தொடர்ந்தனர்.
- திலிப் நாராயணன்
( நன்றி கீற்று இணைய இதழ்)
No comments:
Post a Comment