வலைப்பதிவில் தேட...

Monday, August 8, 2011

"வெயில்" திரைப்படத்திற்கு ஒரு பாராட்டு

விருது நகரில் தேசபந்து மைதானம் என்றொரு  நகரின் மையமான  இடம் இருக்கிறது.வரலாற்றில் இந்த தேசமே எனது நண்பன் என்று பறை சாற்றி ஒரு சரித்திர  நடவடிக்கையாக தனது  பெயரை வடிவமைத்துக்கொண்ட திரு சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் பெயரால் வெகு மரியாதையோடு அழைக்கப்பெறும் ஒரு நகராட்சிக்குச்சொந்தமான  பொது இடம்.

அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலத்தின் முடிவில் நடைபெறும் கூட்டங்களும் உண்ணாவிரதங்களும் புத்தக விழாக்களும் என எப்போது பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். பக்கத்தி ஒரு சுதந்திர தின நினைவுத்தூண் நகர தபால் அலுவலகம் யானைகட்டிக்கிடக்கக்கூடிய ஒரு அம்மன் கோவில், வருஷம் பூராவும் தகரக்கொட்டகையில் முடங்கிக்கிடக்கும் தேர் முட்டி( ஒரு நாள் மட்டும்  சனங்கள் இழுக்க அந்தத்தேர் ஓடும்)

திருவிழாக்காலங்களில் தினசரி நடக்கும் நாடகங்கள். எப்படியும் ஊருக்குள் வசிப்பவர்கள் ஒரு தடவையாவது  அந்த வழியாக  வெள்ளரிக்காய் வெங்காயம் பூண்டு பிளாஸ்டிக் சாமான் கள் என வாங்குவத்ற்கென்றே வந்தாக வேண்டும். காமராஜர்,அண்ணா, கருனா நிதி, ஆசைத்தம்பி, பெ. சீனிவாசன்,  எம் ஜி ஆர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித்தலைவருமே ஏறிப்பேசிய ஒரு மேடை அது. இன்றைய தலைவர்களும் கூடத்தான்.  கலை இலக்கிய இரவுகள் முழு இரவும் 90 களின் துவக்கத்திலிருந்து இன்று வரை அவ்வப்போது என பல அதிர்வுகளைத்தாங்கி நிற்கும் மைதானம் தேசபந்து மைதானம். பொட்டல் என்றும் குறிப்பிடுவார்கள்.காங்கிரஸ் காரர்களின் பெயர் தேசபந்து என்பதால் திராவிடக்கட்சிகள் அம்மன் கோவில் திடல் என்றும் சொல்லுவார்கள்.

பேரா மாடசாமி சொல்லுவார்: ஒரு மக்குத்தலை இன்று மகுடம் சூட்டிக்கொண்டது. அது போன்ற ஒரு நிகழ்வுக்கு விருது நகர் த மு எ ச அமைப்பின் சார்பில் நான் தலைமை ஏற்கும்படியாக ஆனது. ஆமாம் எனது மக்குத்தலையில்  மகுடம் சூட்டி விருது நகரைச்சார்ந்த திரு வசந்த பாலன் என்ற இயக்கு நருக்கு ஒரு பாராட்டு விழாவிற்கான தலைமை அது. டிசம்பர் 2006 இல் அந்தப்படம் வெளியானது. விருது நகர் அப்சரா திரையரங்கில்.
 

27/01/2007 அன்று விழா ஏற்பாடு ஆகியிருந்தது.  ஐம்பது நாளைக்கண்டிருக்க வேண்டிய வெயில் திரைப்படம் அப்போது அப்ஸரா தியேட்டரை விட்டு அகன்றிருந்தது. அந்த விழாவில் நான் தலைமை ஏற்றேன். முதல் படத்துக்கு இசை அமைத்த ரகுமான் அவர்களின் அக்காள் மகன் திரு ஜி வி பிரகாஷ் குமார் வந்திருந்தார்( அப்போது அவருக்கு 18 வயதுதான்). விருது நகரில் வாழும் சிலர் வெயில் படத்தில் நடித்திருந்தார்கள்.பசுபதிக்கு இளவயதுப்பையனாக நடித்தவர், சிரித்துக்கொண்டே தீப்பெட்டி அடுக்கும் சிறுமி( அவர் பெரிய மனுசியாகிவிட்டபடியால் கலந்து கொள்ள முடியவில்லை) நண்பர் போட்டோ பாண்டி, செந்தில் (இவர்கள் ரவி மரியாவுக்கு அடியாளாக வருவார்கள்) ரவி மரியாவும் விருது  நகர்க்காரர்தான். 90 களில் அறிவொளியில் பங்கேற்று இருக்கிறார். திரு வசந்த பாலன் அவரது தம்பி சீத்தாராமன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தார்கள். விளம்பர ஏஜென்சி முத்லாளியாக நடித்த திரு கந்தசாமி, மோகன் போன்றவர்களும் வந்திருந்தார்கள்.


தமுஎ ச மா நிலக்குழு உறுப்பினர் ம.மணிமாறன் திரைப்படத்தைப்பற்றிப்பேசினார். த மு எ ச மாவட்டத்தலைவர் தேனி வசந்தன் மற்றும் த மு எ ச மா நிலப்பொதுச்செயலாளர் ச. தமிழ்செல்வன் படத்தின் நிறை குறைகளை அலசி வாழ்த்திப்பேசினார்கள். இடையிடையே எனது  தலைமைக்குறுக்கீடல்கள்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்ட திரு வசந்த பாலன் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இருவருக்கும் மறைந்த மண்ணின் எழுத்தாளர் மறைந்த  திரு தனுஷ்கோடி ராமசாமி எழுதி மறு பதிப்பாக தோழர் மாதவராஜ் முய்ற்சியால் வெளியிடப்பட்ட "தோழர்" நாவலை ஆளுக்கொன்றாக தலைவர்  என்ற முறையில் பரிசளித்து ,

வெற்றியை தலைக்கும் தோல்வியை நெஞ்சுக்கும் கொண்டு செல்லாதிருக்கும் மன நிலையை இருவரும் தகவமைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு முடித்தேன். நாவலைப்படித்த பிறகு இ மெயில் மூலம் பதிலளிக்கவும் புத்தகத்தின் முதற்பக்கத்தில் எழுதிக்கொடுத்தேன்.

இ மெயில்  இன்று வரை  வருமென்று காத்திருக்கிறேன் இருவரிடமிருந்தும்.

6 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

எத்தனை பெரிய விருதாயினும்
எந்த நாட்டில் போய் பெற்றாலும்
சொந்த ஊரில் பெறுகிற பாராட்டுக்கு
நிச்சயம் ஈடாகாது
பாராட்டப் படவேண்டிய படம்
பாராட்டியதும் பாராட்டுத்தக்கது
ஆயினும்
கடைசி பாராவைப் படிக்கையில்
எவரையும் சராசரியாக மாற்றிவிடும்
சினிமாவின் வல்லமையை எண்ணி
கொஞ்சம் சங்கடப் பட்டதை தவிர்க்க
இயலவில்லை

அழகிய நாட்கள் said...

திரு ரத்னவேல் அவர்களே!
தங்களின் தொடர் பின்னூட்டம் உற்சாகமளிக்கிறது. நன்றி!

அழகிய நாட்கள் said...

திரு ரமணி அவர்களே!
அது ஒரு நட்சத்திர உலகம் . இரவில் பளிச்சென்று மின்னும். ஆனாலும் பகலில் அது தென்படுவதில்லை. வருவார்கள் படைப்பார்கள் செல்வார்கள் நிரந்தர இடம் இருக்க வாய்ப்பில்லை.

vimalanperali said...

நல்ல படைப்பு.பாராட்டுக்கள்.நல்ல படைப்பு.பாராட்டுக்கள்.

அழகிய நாட்கள் said...

தோழர் விமலன்!
தங்களின் பாராட்டுக்கு நன்றி. தவிரவும் தங்களின் பதிவுகளை கவனமாகப்படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டமிடுகிறேன்.