வலைப்பதிவில் தேட...

Friday, January 14, 2011

விகடன் வரவேற்பறையில் நான்

ஆனந்த விகடன் (19.01.2011) வார இதழின் வரவேற்பறையில்  எனது அழகிய நாட்கள் வலைப்பூ பற்றிய ஒரு சிறிய அறிமுகம் கிடைத்திருக்கிறது.

உலகம் முழுமைக்கும் இணைய தளம் மூலம் மட்டுமல்லாது விகடன் மூலமாகவும் பயணம் செய்ய  நேர்ந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிற தருணமாக இனிக்கிறது. வலையில் தேடி அதை வரவேற்பறை வரை கொண்டு வந்த விகடன் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுகளும் நன்றியும் என்றென்றைக்கும் உரித்தாகட்டும்.

பிரபு சாலமனின் மைனா படத்திற்கு விகடன் விருது 2010 அளிக்கப்பட்டு இருக்கிறது இந்த இதழில். 
வெயில் படத்தின் இயக்குனர் வசந்த பாலன் நம்ம ஊர்க்காரர். அவரது வெயில் திரைப்படத்திற்கான முதல் பாராட்டு விழா விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் எனது தலைமையில் நடந்தது. அவருக்கு சிறந்த கதைக்காக (அங்காடித்தெரு) கிடைத்திருக்கும் விருதும் போற்றுதலுக்குரியது.



அம்பேத்கர் திரைப்படம் பற்றிய தனது பதிவாக பிரியத்துக்குரிய த மு எ க ச வின் மாநிலப்பொதுச்செயலர் ச. தமிழ்செல்வனின் பேட்டி முத்தாய்ப்பாக வந்திருக்கிறது இந்த இதழில். அம்பேத்கர் ஒரு தேசீயத்தலைவர் என்பதைக்கூட சகித்துக்கொள்ள முடியாதவர்கள்  தியேட்டரில் அவரை தீண்டாமைக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை என்னவென்று சொல்லுவது ?  இது போன்ற  நிகழ்வுகளை  இனியும் இந்தியா பொறுத்துக்கொள்ள வேண்டுமா என்ன? 

ஏற்கனவே வந்த சில தலைவர்களின் படங்களுக்கெல்லாம் இந்த   நிலைமை இல்லை. மகாத்மா காந்தி, பாரதி, கிங் மேக்கர் காமராஜர், பெரியார் போன்ற படங்களுக்கு வரி விலக்கு அறிவித்ததைப்போல் இப்படத்திற்கு  அறிவிக்காமலிருக்கும் தமிழக அரசை யார் கேட்பது?

1897 இல் விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய சமயம் சென்னையில் அவரைக்காண பட்டியலின மக்கள் ( இனிமேல் ஆதிதிராவிட மக்கள் இல்லை) அலை மோதியிருக்கிறார்கள். அவர்களைப்பக்கத்தில் வர விடாமல் விரட்டி அடித்திருக்கிறது மற்றொரு மனிதக்(!)கூட்டம் அப்போது ஏற்பட்ட சினத்தில் விவேகானந்தரே குறிப்பிட்டாராம் "கிறுக்கர்களின் தேசம் இது" என்று.

அம்பேத்கர் திரைப்படத்திற்குக்கூட தீண்டாமை நிகழும்  இன்றைய இந்திய தேசம் கிறுக்கர்களின் தேசமாகவே தோன்றுகிறது.

2 comments:

THOPPITHOPPI said...

அழகிய நாட்கள் வலைப்பூ பற்றிய ஒரு சிறிய அறிமுகம் கிடைத்திருக்கிறது.

/////////////////////////

வாழ்த்துக்கள்

அழகிய நாட்கள் said...

அன்புள்ள தொப்பி தொப்பி!
தங்களது வருகை எனது உவகை. தங்களது பின்னூட்டம் முழு மகிழ்வு