வலைப்பதிவில் தேட...

Monday, January 24, 2011

தலித் இலக்கியம் நோக்கி ...

//கல்லூரியின் வகுப்பறையிலிருந்து வெட்டியான் மகனே பிணத்தைப் புதைக்க குழிவெட்டனும் வாடா வெளி யேன்னு இழுத்து வரப்பட்டிருக்கிறீர் களா? 

பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சாதி கேட்ட நொடியில் மற்றவன் எல்லாம் பெருமிதமாகச் சொல்ல, தன் சாதிப் பெயரைச் சொல்ல முடியாது கூசி நின்றதுண்டா நீங்கள்?

மாதச்சம்பளக் காரனாக மாறி அழுக்கு வேட்டி களைந்து தேய்த்த சட்டையோடு போய் வாடகைக்கு வீடு கேட்டு அவமானப் படுத்தப்பட்டதுண்டா நீங்கள்? 

கடந்து போகும் பீவண்டியைப் பார்த்து முகம் சுழித்து மூக்கைப்பொத்தும் உங்களால் எப்படி மலக்கூடையை தலையில் சுமந்தலையும் எங்களின் வாழ்வைக் கலைப்படைப்பாக்க முடியும் என உரத் துக் கேட்டார்கள்.//

- ம.மணிமாறன்

தீக்கதிர் நாளிதழில் திங்கட்கிழமை தோறும் வெளியாகும்  இலக்கியச்சோலையில் தோழர் ம.மணிமாறன் அவர்கள் சொல்லித்தீராதது: பத்தாண்டு  நாவல்கள் குறித்த வாசகக்குறிப்புகள் என்ற தலைப்பில்  இதுவரையிலும் 17 கட்டுரைகள் ( அனைத்தும் 2000க்குப்பின் வந்த தலித் மற்றும் விளிம்பு நிலை மாந்தர்களின் அதாவது  கிறித்துவ, இஸ்லாமிய, பெண்கள், திரு நங்கைகள் இவர்களைப்பற்றி வெளி வந்த  நாவல்கள் அவரால் ஆய்வு ரீதியில் பதிவு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

நாளிதழில் அரைப்பக்கத்திற்கு அற்புதமான நடையில் நாவலைப்பற்றிய கதைக்கள ஒட்டத்தோடு மனிதர்களின் இன்றைய நிலைமையையும் சேர்த்து குழைத்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்  ம.மணிமாறன். 

தோழர் மாதவராஜ் அவரது "தீராத பக்கங்களி"ல் அநேகமாக  அந்த  நாவல்களின் எல்லா  ஆய்வுக்கட்டுரைகளையும்   தனது  வலைப்பூவில் மாலையாகத் தொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

அவரது   தலித் நாவல் பற்றிய ஒரு கட்டுரையில் வெளியிடப்பட்ட ஒரு  பாராவைத்தான் முதலில் நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

அது அத்தனையும் நான் அனுபவித்தவைகள். நானும்  மணிமாறனும் அறிவொளி நாட்களில் தொண்ணூறுகளில் அலைந்து திரிந்த போது பரிமாறிக்கொண்ட சில சமூகப்பிரச்சனைகள்.

தவிரவும் சில  நினைவுகள்  பதிவில் கொண்டு வரப்பட வேண்டி இருக்கிறது. ஒரு செருப்புத்தைப்பவர் செருப்பணிந்த கால்களை வைத்தே வந்தவரின் முகம் பார்க்காமல் பெயரைசொல்லும் அளவு தேர்ச்சி பெற்றவராக இருப்பார்.
ஆனால் அவரிடம் செருப்பை சரிசெய்ய வந்தவர் அந்த செருப்பைக்கொடுக்கும் விதமே ஒரு வித தீண்டாமை வாடையோடுதான் இருக்கும். இதையும் பதிவு செய்ய வேண்டி இதுபோல் நூற்றுக்கணக்கான அனுபவப்பதிவுகள் தேவையாக இருக்கிறது இப்போது..

2 comments:

சிவகுமாரன் said...

\\\ஆனால் அவரிடம் செருப்பை சரிசெய்ய வந்தவர் அந்த செருப்பைக்கொடுக்கும் விதமே ஒரு வித தீண்டாமை வாடையோடுதான் இருக்கும்///.

இந்த மனப்பாங்கு இப்போது குறைந்திருக்கிறதாய் எண்ணுகிறேன் நான் , முக்கியமாய் நகர்ப்புறங்களில். உங்களின் கருத்து ?

திலிப் நாராயணன் said...

திரு சிவகுமாரன்!
நகர்ப்புறத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் 'ஹிந்து' பத்திரிகையில் ஒரு ஆறு மாத காலத்திற்கு முன்பாக ஒரு செருப்பு தைப்பவரின் பேட்டி வந்திருந்தது. அவர் மதுரை நத்தம் ரோட்டில் இருக்கும் ஒரு போலீஸ் அலுவலகத்தின் முன் செருப்பு சரி செய்பவர். தனது குழந்தைகளை படிக்க வைத்து நல்ல நிலைமையில் கலியாணம் கட்டிக்கொடுத்து விட்டவர். அவர் சொல்லுகிறார் "என்னோடு இந்தத்தொழில் புரிபவர் யாரும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் "use and throw" நடை முறை செருப்புக்கும் (Reynalds பேனா நமது கைகளில் வந்தது போல) வந்து விட்டது"