வலைப்பதிவில் தேட...

Wednesday, October 2, 2013

காமராஜர் மரணம்... ஒரு நினைவு...

அது அக்டோபர் 2, 1975ஆம் ஆண்டு. அண்ணல் காந்தியின் பிறந்த நாள். எமர்ஜென்சி அமலில் இருந்த நேரம். நான் பெரிய பத்து படித்துக்கொண்டிருந்த காலம். எனது சித்தப்பா ஒருவர். அவர் பெயர் அம்மாசி.அம்மாவசி அன்று பிறந்ததால் அவருக்கு இந்தப்பெயர்...

வாடா என்று என்னை அழைத்துக்கொண்டு  குல்லூர்சந்தை ரோட்டில் இருக்கும் மணி கடை சலூனுக்கு அழைத்து சென்றார். காமராஜர் இறந்து விட்டார். எனக்கு மொட்டை போடு என்று அந்த சலூன் கடைக்காரரிடம் சொல்லுகிறார்.  நான் உடன் சென்று அவரோடு உட்கார்ந்திருக்கிறேன்.

தேசத்தந்தை என்று அழைக்கப்படும் ஒரு மனிதனின் பிறந்த  நாள் அது அக்டோபர் 2 1869. அவரது பெயர் மோகன் தாஸ். கரம்சந்த் அவரது தந்தையார் பெயர். அவரது (சர் நேம்) சாதிப்பெயர் காந்தி. இந்த காந்தி என்ற பெயர் இன்றைக்கு எப்படி  எல்லாம் பயன் படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அவரது பெயர் பெரோஸ்கான் அவர் ஒரு பார்சி( டாடா போல).ஆனால் அவர் பணக்காரர் இல்லை.  அவர்களுக்கு ஒரு இடுகாடு மும்பை மலபார் மலையில் இருக்கிறது. யாரேனும் இறந்து பட்டால் அவரது பிணத்தை அங்கே கொண்டு சென்று இடுகாட்டில் வைத்து விட்டு வந்து விடுவார்கள். ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் போது எப்படி இருந்தான் என்பதல்ல.. இறந்த பிறகேனும் அவனது உடல் பயனாகட்டும் என்பது அவர்களது வழக்கு... வழமை... கழுகுகள் பிணத்தைத்தின்ன காத்திருக்கும் அங்கே..

காஷ்மீர் பண்டிட் ( பிராமணர்தான்) ஜவஹர்லால்  நேருவின் மகள் இந்திரா பிரியதர்ஷினி என்பவரைக் காதலிக்கிறார். மணம் முடிக்கிறார். அவருக்கு காந்தியின் மேல் அபாரப்பிரியம். தனது பெயரை பெரோஷ் காந்தி என்று மாற்றிக்கொள்ளுகிறார்.

அதற்குப்பிறகு தான்  இந்திரா பிரியதர்ஷினி இந்திரா காந்தி என்று அறியப்படுகிறார். அப்புறம் என்ன... சஞ்சை காந்தி, ராஜீவ் காந்தி, மேனகா காந்தி, வருண் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என பட்டியல் நீளுகிறது. ராகுல் மணம் முடித்தால் அவரது வாரீசு கூட இந்தப்பெயரை கைக்கொள்ளுவார்கள்... நிற்க...

ஒரு மனிதன் இறந்து பட்டால் அவருக்கு அவரது நேரடி ரத்த வாரீசுகள் மொட்டை அடிப்பதும் சடலத்துக்குத்தீவைப்பதும் ( கொள்ளி) பொதுவாக இந்து தர்மத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

கோயமுத்தூரில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்ற நிறுவனம் பிராமணர்களுக்கென்று ஒரு சுடு காடு அமைத்து அங்கே நடக்கும் இறந்தவரின் இறுதிச்சடங்கை ஒருவர் அமெரிக்காவில் இருந்து நெட்டில் பார்த்து அங்கேயே அவரது முறைமையை முடித்துக்கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு இருக்கிறது...

ராஜாஜி காலத்தில் 6000 பள்ளிகளை பள்ளிகளை மூடியிருக்கிறார்கள். குலக்கல்வி முறையைப்புகுத்த எத்தனித்திருக்கிறார்கள்.

டாக்டர் முத்து லட்சுமி ரெட்டிதேவதாசி முறையை எதிர்த்து ராஜாஜியிடம்/சத்தியமூர்த்தியிடம் இது வரை எங்களது பெண்கள் பொட்டுக்கட்டியது போதும் இனிமேல் உங்கள் இனத்துப்பெண்களை பொட்டுகட்ட ஆணையிடுங்கள் என்று சட்டசபையிலேயே கேள்வி கேட்டு ராஜாஜியை மடக்கியிருக்கிறார்கள்...

காமராஜர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் மூடப்பட்ட பள்ளிகளைத்திறந்த கையோடு கூடுதலாக 14000 பள்ளிகளைத்திறக்க உத்தரவிட்டு மதிய உணவுக்கும் வகை செய்திருக்கிறார்.



அப்படிப்பள்ளிகள் திறக்கப்பட வில்லையென்றால் என்னைப்போன்று முதல் தலைமுறைப்பட்டதாரிகள்  வந்திருக்க முடியாது...


அவர் மணம் முடிக்க வில்லை

ஆகவே குழந்தைகள் (வாரீசு) எவரும் இல்லை...

அவர் இறந்த அந்த நாளில் எத்தனை பேர் அவரது வாரீசாக எண்ணி மொட்டை போட்டுக்கொண்டார்களோ தெரியவில்லை...

எனினும் எனது சித்தப்பா அம்மாசியும் அதில் ஒருவர்.

1969 இல் அண்ணா இறந்த சமயம் கின்னஸ் சாதனையாக அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. ரயில் மேற்கூரையில் பயணம் செய்து மடிந்தவர்கள் உட்பட...

பதின் வயதில் எனக்கு ஏற்பட்ட ஒரு முக்கிய நிகழ்வு இது...

நாங்கள் வாழ்ந்த முத்துராமன் பட்டியில் இருந்து காமராஜர் அவரது அம்மா சிவகாமி அம்மையாரின் இறப்புக்கு  வருகிறார் என்பதறிந்து நெல் வயல்களினூடே வரப்பில் விழுந்து எழுந்து இரும்புப்பாலம் (ரயில் பாலம் )தாண்டி, மண்பாலம்( சாத்தூர் செல்லும் சாலையில் உள்ள வெள்ளைக்காரன் கட்டிய சிறிய பாலம்... இரண்டுமே கௌசிகா  மகா நதியினூடே கட்டப்பட்டது  ) சென்று காமராசரைக்ண ஓடோடி சென்றதும் ஒரு நீங்காத நினைவுதான்... அவர் காருக்குள் உட்கார்ந்திருந்தார் அமைதியாக இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துக்கொண்டே சென்றார். இரண்டு போலீஸ் மெதுவாக ஊர்ந்து சென்ற அவரது காரின் இருபக்கத்திலும் இருந்தார்கள்..

மோகன் தாஸ் அவர்களின் பிறந்த நாளும் கர்ம வீரர் காமராஜரின் இறந்த நாளும் ஓரே தேதியில் பதிவு செய்யப்பட்டு விட்டது வரலாற்றில்...

7 comments:

hariharan said...

அருமையான பகிர்வு..

hariharan said...

தோழர்.உங்கள் வலைப்பூ புதுப்பொலிவுடன் நன்றாக இருக்கிறது.

அழகிய நாட்கள் said...

திரு ஹரிஹரன்... விருது நகர் நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களின் உதவியால் என்னுடைய வலைப்பக்கம் புத்ப்பொலிவு பெற்றது... தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி...

vimalanperali said...

காமராஜர் ஆட்சியில் இருந்த பொது செய்த நலத்திட்டங்கள் இப்போது எதுவும் இல்லை என்பதே கண்கூடு.காமராஜருக்காக மட்டுமல்ல,எம்ஜியா ருக்காவும் மொட்டை போட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். அப்படி ஒரு அபிமானமும் பிடிப்பும் இருந்த காலங் கள் அது.அன்று மீடியா இந்த அளவுக்கு வெளிச்சம் பாய்ச்சாததும் ஒர் மிகபெரிய காரணமாக/

அழகிய நாட்கள் said...

நன்றி விமலன்...
இன்றைக்கு எம்பிக்கள் கேள்வி கேட்க காசு கேட்கிறார்கள். பத்திரிகைகள் ஊடகங்கள் ஒருதலைபட்சமாக வேண்டுமென்றால் ஒரு புறமும் காசு புடுங்க மற்றொரு புறமும் என எல்லாமே காசு.... பணம்.... துட்டு.... மணி....மணி.... என்றாகிப்போனது.

Unknown said...

காமராஜர் நினைவுகள் இன்றைய சூழலில் முக்கியமானதென்று நினைக்கிறேன்..காமராஜ் பெயரை சொல்லி நடக்கும் கூத்துக்கள் கொஞ்சநஞ்சமில்லை.இவர்களுக்கும்
காமராஜூக்கும் எந்த சம்மந்தமும் உன்மையான காமராசரை இவர்களிடம் இருந்து காப்பாற்ற இந்த பதிவு உதவி செய்யும் என நம்புகிறேன்.நன்றி தோழர் நாராயணன்

அழகிய நாட்கள் said...

நன்றி முத்துக்குமார்.
1975 ஜூன் 25 ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு இந்தியாவெங்கும் எமர்ஜென்சி அமல் படுத்தப்பட்டதும் அந்த நடவடிக்கை காமராஜர் அவர்களை மிகவும் பாதித்திருந்தது. இந்த இண்டிகேட் நடவடிக்கை கூட அவரது உடல் நலக்குறைவுக்கு ஒரு காரணம்...