வலைப்பதிவில் தேட...

Friday, September 24, 2010

வரும் நாட்கள் அழகானதாக இருக்குமா?

எனது வலைத்தளத்திற்கு அழகிய நாட்கள் என்று பெயரிட்டு இத்துடன் 50 ஆவது பதிவாகிறது. உண்மையில் சொல்லப்போனால் இள வயது பதின்வயது நினைவுகளில் அலை ஓட்டத்தைப்பதிவு செய்யவே அழகிய நாட்கள் என்று பெயரிட்டேன்.

"பட்டிக்காடா பட்டணமா" படத்தில் ஒரு காட்சி வரும்.  நகர்ப்புற மனைவி ஒரு கள்ளிச்செடியை வீட்டுக்குள் கொண்டு வந்து ஏற்கனவே வைத்திருந்த கலப்பையை அகற்றி விட்டு அந்த  இடத்தில் கள்ளிச்செடியை வைத்து விடுவார்.    நாட்டுப்புற கணவன் மூக்கையா வீட்டுக்கு வந்து அதிர்ச்சியாகி கேட்பார். கலப்பையை ஏன் எடுத்தாய் என்று அதற்கு அந்தப்பெண் பதில் சொல்லுவாரே " அழகும் ஆபாசமும் பார்ப்பவர் கண்களில் இருக்கிறது" எனவே நான் செய்ததில் ஒன்றும் தவறில்லை என்பார்.

கிட்டத்தட்ட இந்த நிலைமையில் தான் இன்றைக்கு நாடு இருக்கிறது.
செப் 24 அலகாபாத் நீதி மன்றம் பாபரா ராமரா என முடிவு செய்ய இருக்கிறது அதை ஒட்டி நாடு முழுதும் ரணகளமாகாமல் இருக்க முழுப்பக்க விளம்பரங்கள் வேண்டுகோள்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த தீர்ப்பும் வருகிற செப் 28 க்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  அமைதி நிலவினால் அழகிய நாட்கள் இருக்கும்

அக் 3 முதல் 14 வரை நடக்க இருக்கும் காமன் வெல்த் விளையாட்டுகளில் சரியான மைதானம், தங்குமிடம் அமைக்கப்படவில்லை என்பது ஒரு செய்தியாகி இருக்கிறது. 36000 கோடி ரூபாய் செலவழித்தும் நிறைவடையவில்லை பணிகள். ஊழல் அதிகாரிகள் சிலர் சுரேஷ் கல்மாதிக்கு மிக  நெருக்கமான அதிகாரிகள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ  நான் ஒரு ஆயிரம் கோடி ரூபாய்க்குதான் பொறுப்பேற்பேன் என்று சொல்லுகிறார்.
டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தோ ரூபாய் 780 கோடியை SC/ST  நிதியிலிருந்து இந்த காமன் வெல்த் விளையாட்டுக்காக ஒதுக்கி விட்டு 
ஒரு கல்யாண வீடு போலத்தான் இந்த விளையாட்டு. சின்னச்சின்ன குறைகள் எல்லாம் சரியாகப்போய்விடும் என்கிறார்.

பிரதமரோ அவசர அவசரமாக கூட்டம் போட்டு எல்லாம் சரியாக நடக்கட்டும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் என்கிறார் சிறந்த நிர்வாகி என்ற பட்டத்தை அமெரிக்கா அறிவித்த கையோடு.

கங்கையும் யமுனையும் பிரம்மபுத்திராவும் வெள்ளத்தில் ஜனங்களை மூழ்கடித்து சில நூறு பேர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கிறது.

மூன்று லட்சம் ஊழியர்களில் ஒரு லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்ப அரசு நிறுவனமான பி எஸ் என் எல்லில் திட்டம் தயாராக இருக்கிறது

பத்து லட்சத்துக்குமேற்பட்ட இளைஞர்கள் வேலையின்றி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போக்கு கூடிக்கொண்டு இருக்கிறது

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாமல் நீங்க வேண்டும்
என்ற பட்டுக்கோட்டையின் கனவு
மட்டும் அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது மனதை.

2 comments:

விமலன் said...

மனதை அலைக் கழிக்கும் நினைவிற்கும் ,யதார்த்ததிற்க்கும் எப்பொழுதுமே ஆகமாட்டேங்கிறதுதான்.தோழர்
k.r.k எப்படிய்ருக்கிறார்.

அழகிய நாட்கள் said...

தோழர் விமலன்!
தங்களது வருகைக்கும் கே ஆர் கே பற்றிய விசாரணைக்கும் எனது நன்றி!
தங்களது பிப்ரவரி 14 என்ற பதிவு எனது நினைவுகளைக்கிளறியது. எதார்த்தமாகவே உங்களின் நிலையில்தான் நானும் இருந்தேன். ஒரு இனிய நாளில் நானும் கூட பிரியப்பட்டுப்பின் தொடரும் ஆ(ணா)ளாகதெரிந்திருக்கிறேன் ஒரு பெண்ணுக்கு. அதை அங்கீகரிக்கும் நிலைக்கு நான் வந்தேன் ஆனால் சமூகச்சூழல் அவள் பார்த்த மாப்பிள்ளையோடு சேர்த்துவிட்டது இது நடந்தது காரைக்குடியில் கால் நூற்றாண்டுக்கு முன்பாக...