வலைப்பதிவில் தேட...

Saturday, July 28, 2012

என் டி வானமாமலையும் வானுமாமலையும்

என்ன ஒரு காலக்கிரகம்...




ஒரு எஸ் ஐ ஒரு மனிதனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லுகிறார். அதுவும் உடை அணியாமல் ( அம்மணமாக அல்ல)

"மப்டி" என்று சொல்லுகிறார்கள்....

போகட்டும் என்ன எழவோ அது...

அவர் ஒன்றும் பெரிய மணல் அள்ளும் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி ஆள் அல்ல சாதாரணமாக ட்ராக்டர் ஓட்டி பிழைப்பை நடத்தும் சாமானிய மனிதன்.

அல்லது தினமும் கூலி வேலை செய்யும் ஒரு சக மனிதன். வான(னு) மாமலை. குடும்பத்தலைவனைக்காலி செய்து விட்டு அவரது மனைவிக்கு வேலைவாய்ப்பாம்... அத்தோடு மூன்று  லட்சமாம் ( நாய்க்கு அதன் வாலை வெட்டி சூப் வைத்துக்கொடுத்த கதை ஒன்று நடப்பில் இருக்கிறது)

இந்த பெயரைக்கேட்டவுடன் எம் ஆர் ராதாவுக்காக அன்றைய சூப்பர் ஸ்டார் திரு எம் ஜி ராமச்சந்திரனைத்  துருவித்துருவிக்கேள்விகள்  கேட்ட அந்தப் பொதுவுடைமை வாதியின் பெயர்  நினைவில் மிளிர்கிறது.  நாற்பது கூட நிறைவடையாத அந்த மனித உடலைத்தனது மடியில் கிடத்தி அந்த அம்மாவின் அலறல் இருக்கிறதே இந்த உலகமே அழும்.

ம்ம்ம்...

மூன்று லட்சம் ரூபாயைக்கொடுத்து அவருக்கு ஒரு அரசு வேலைக்கும் பரிந்துரைத்திருக்கிறார் நமது புரட்சித்தலைவி(!)

புரட்சித்தலைவர் என்றால் அதுஒருவர்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  ராமானுஜர்தான். அவர் வைணவர் (சைவர் அல்ல) சாப்பாட்டிலே கூட சைவம் அசைவம் என்கிறார்கள்; வைணவம் என்ற ஒரு சாப்பாட்டு முறை  நமக்கு பரிச்சயப்படவேயில்லை...

"நான் படித்த வேதம் இந்தத்தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சொல்லிக்கொடுப்பதால் எனக்கு நரகத்தைக்கொடுக்குமென்றால் சந்தோஷமடைவேன். ஏனென்றால்  நான் இந்த மந்திரத்தை என்  இனிய  தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு திருக்கோஷ்டியூர் மதில் மேல் நின்று உரக்கக்கூறி அனைவரும் கற்றுக்கொள்ளச் செய்தமைக்காகவும் அவர்கள் இந்த மந்திரத்தை கேட்டுப்பயனுறுவார்கள் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் எனக்கு மட்டும் நரகம் கிடைக்கட்டும் அதைப்பயின்றதற்காக அவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் அன்றோ (?!)

சொர்க்கம்  நரகம் அது கிடக்கிறது...
ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு  கிடைக்கும் என்று போராடியவன் பெரும் புரட்சிக்காரனன்றோ?


அவருக்குப் பிறகு சனாதனத்தின் நெற்றியிலடித்த மகாகவி பாரதியார்...






அப்புறம் அந்தக்கொள்கையை வடிவமைத்த காரல் மார்க்ஸ், உறுதுணையாக நின்ற ஜென்னி, ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸ்,தோழர் லெனின், தோழர் ஸ்டாலின், தோழர் சே குவேரா, தோழர் ஃபிடல் காஸ் ட்ரோ, தோழர் ரால் காஸ்ட்ரோ , தோழர் சாவேஸ்  போன்றவர்களைத்தவிர வேறு பெயர்கள் நினைவுக்கு வருவதில்லை

அதை விடுங்கள். ..

போலீஸ் துறையென்ற ஒன்று 1963 முதல் தேர்தல் தொடங்கி  1967 வரை ஒரு  நான்கு ஆண்டு காலம்மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் திரு கக்கன் ( அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்) அவர்களால் கையாளப்பட்டது.


அதற்கு முன்னால் கூட தமிழகத்தின் முதல்வராக இருந்த பச்சைத்தமிழன் காமராசர் முதல்வராக (1954-1963) மந்திரி சபையில் இந்தத்துறையை யார் வைத்திருந்தார்கள் என்பது தெரியவில்லை.
அவருக்குப்பிறகு முதல்வரான அனைவருமே அது பக்தவச்சலம் ஆனாலும் சரி; அண்ணாதுரையானாலும் சரி; கருணாநிதியானாலும் சரி;  எம் ஜி ராமச்சந்திரன் ஆனாலும் சரி; ஜெயலலிதாவானாலும் சரி...

( முன்னொட்டுக்களான அறிஞர், கலைஞர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி என்பதை த்தவிர்த்திருக்கிறேன்).

போலீஸ் துறையை முதல்வர்கள் வசமே வைத்திருக்கிறார்கள் (தாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற குறைந்த பட்ச அறிவே இல்லாமல்)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு இவர்கள் ஒதுக்கிய துறைகள் சமூக நலம் அல்லது ஆதி திராவிடர் நலம் மட்டுமே. நாடாளப்பிறந்தவர்கள் ஆதித்தமிழர்கள் இல்லை போலும்

போலீஸ் என்பவன் சீருடையில் இருக்கும் விவசாயி மகன் என்ற மிகப்பெரிய அடை மொழியை விடுங்கள்.

அவன் என்ன செய்கிறானோ அது தான் சட்டம்.

*பத்மினி வழக்கில் கற்பழித்தார்கள் கூட்டாக

*தாமிரபரணியில் 17 பேரைக்கூட்டாக அடித்துக்கொன்றார்கள்  நதியின் நீரில்

*வாச்சாத்தியில் வனக்குடிப்பெண்களைக்கூட்டாகக்கற்பழித்தார்கள் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை நண்பர்களுடன் (!) கூட்டாகக்கற்பழித்தார்கள்

*பரமக்குடியில் அமைதியாக அஞ்சலி செலுத்தச்சென்ற அப்பாவிகள் ஆறு பேரை அடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள்.
வானுமாமலைக்குக்கூட நியாயம் கிடைத்திருக்கிறது எனலாம் அவரது உயிர்த்தியாகத்திற்குப்பிறகு.

ஆனாலும் போலீஸ் செய்த படுகொலைக்கு ஒரு தேர்ந்தேடுக்கப்பட்ட அரசுமூன்று லட்சங்களையும் ஒரு வேலை வாய்ப்பையும்  மட்டுமே விலையாகக்கொடுப்பதென்றால் இந்த தேசம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? 

வேலைக்குத்தகுதியானவர்கள் என்றால் அது ஒரு சாவுக்குப்பிறகுதான் என்று ஆகி விடாதா?

கைம்பெண்கள் கதி இதுதானா

திரு விக சொன்ன கைம்பெண்கள் மறு வாழ்வு இதுதானா?

"நேர்படப்பேசு

நையப்புடை"

- மகாகவி பாரதி




Friday, May 11, 2012

அழியாத நினைவலைகள்

ஒரு மனிதன் தனது இருபதுகளில் ஒரு இடது சாரியாகவும் தனது அறுபதுகளில் ஆன்மீகவாதியாகவும் இல்லாமல் இருக்க முடியாது என்பார்கள். அதை உடைத்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

 இந்திய மண்ணில் ஒரு மூன்று சதம் பேர் சனாதனவாதிகளாக (மனு(அ)தர்மவாதிகள்)இருந்து கொண்டு எப்படி இந்த தேசத்தையே தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அது போல உலகம் முழுமைக்கும் நாத்தீகம் கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் அடக்கியாள முயற்சிக்காதவர்கள். மனித நேயம் உள்ளவர்கள்.


அந்த வகையில் பொதிகை டி வியில் உ வாசுகியும் ஞானியும் தொகுத்த பெரியார் தொடரில் வருவாரே மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் அவர் மிகவும் என்னைக்கவர்ந்தவர். அவர் கடவுள் மறுப்பாளராக தனது இளம் வயதில் பரிணமிக்கிறார். வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு இறுதிப்படுக்கையில் கிடக்க நேரிடுகிறது, அடுத்து மரணம்தான்..

 என் வி குறிப்பிட்டது போல வயது ஆகிவிடுகிறது நமக்கு. உடம்பின் ஒவ்வொரு பகுதியும் தனது செயல்பாட்டைக்குறைத்துக்கொள்கிறது. அனைத்து உறுப்புகளும் தனது செயல்பாட்டை முற்றிலுமாகக்குறைத்துக்கொண்டு விட்டால் அல்லது செயல்பாட்டை  நிறுத்திக்கொண்டால்  மரணம்  நம்மைத்தழுவிக்கொள்ளும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் தனது மரணப்படுக்கையில் இருப்பார். அப்போது அவரது சிந்தனை இதுவாக இருந்தது. அதை இப்படி வெளிப்படுத்துவார். வழக்கமான  நடை முறையில் அறுபதுகளில் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு எனது நாத்தீகக்கொள்கையைக்கை விட்டதாக யாரும் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறுதி மூச்சு வரை நான் நாத்தீகவாதியாகவே இருக்கிறேன் நாத்தீக வாதியாகவே மரணம் அடைவேன் என்பதை பத்திரிகையாளர்களை அழைத்து குறிப்பிடுவார்

இருபதுகளில் மார்க்சீய சிந்தாந்தங்ககளின் பால் ஈர்க்கப்பட்டிருந்தேன். தன்னையும் அப்படியான ஆளாக திரையில் திரு வைரமுத்து எரிமலை எப்படிப்பொறுக்கும் (ஏ வி எம்மின் சிவப்பு மல்லி 1980) போன்ற பாடல்களால் கவர்ந்திருந்தார். வருடாவருடம் நடக்கும் காரைக்குடி கம்பன் விழா ( 1983)வில் சிறப்பு விருந்தினராக திரு வைரமுத்து வந்திருந்தார். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


அதன்பிறகு காரைக்குடி செட்டி நாடு மகளிர் கல்லூரியில் 89 ஆம் ஆண்டு கல்லூரி துவங்கிய சமயம் கல்லூரி நிர்வாகத்திற்கும் பேராசிரியப்பெருமக்களுக்கும் பிரச்சனை.  நிர்வாகத்தை எதிர்த்து பேராசிரியர்கள் வீரச்சமர் சமர் புரிந்து கொண்டிருந்த நேரம் சகோதர தொழிற்சங்கங்கள் ஆதரவுடன். நாங்கள் தொலை பேசி ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்தோம்.

 பேரா. மாடசாமி, பேரா. ராஜு, பேரா பார்த்தசாரதி, பேரா. விஜயகுமார்  பேரா மனோகரன் காரைக்குடி பேரா தேனப்பன், பேரா ஆவுடையம்மாள்,  நாகலிங்கம் குமரவேல் (தேவகோட்டை)போன்ற மூட்டா சங்கத்தலைவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு சாலையோர வகுப்புகள் நடத்தி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்துமாணவிகளுக்கு கல்வி கெடாவண்ணம் போதித்துக்கொண்டிருந்தனர். பட்டிமன்றப்பேச்சாளர் சரஸ்வதி ராம நாதன் நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

அந்த சாலையோர வகுப்பறைகள் போராட்டம் முடியும் தருவாயில் அன்றைய திருவெரும்பூர் எம் எல் ஏ திருமதி பாப்பா உமா நாத், மற்றும் திரு வைரமுத்து ( பேரா மாடசாமியின் வகுப்பறைத்தோழன்) இருவரையும் அழைத்து ஒரு சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மாணவர்கள், மாணவிகளின் கலை நிகழ்ச்சியுடன். அப்போதைய காரைக்குடி எம் எல் ஏ அவர்களின் புதிய ஹோட்டல் மலரில் வைரமுத்து தங்கியிருந்தார். எனது குழந்தை  திலிப் சுகதேவுக்கு அப்போது ஒரு வயது .நான் எனது இணை மற்றும் இரு நண்பர்களுடன் அந்தப்புகைப்படம்.





தோழர் பாப்பா உமா நாத்கையில் திலீப் சுகதேவ்.
நிற்பவரில் வலது கோடி எனது துணைவியார்

மற்றோர் புகைப்படத்தில் தோழர் ஆசிரியர்
என் ராமச்சந்திரன் கையில் திலிப் சுகதேவ்.




இன்னும் சில   நிழற்பட நினைவுகள் அடுத்தாக....

Thursday, May 3, 2012

அவர்ணக்கவிதைகள் சில...

படித்ததில் பிடித்த சில அவர்ணக்கவிதைகள்
கவிஞர்களின் பெயர்களுடன்:


I




சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்

காலில் செருப்பணிந்ததால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு?
என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்

"உங்களுக்கென்னப்பா?
சர்க்காரு வேலையெல்லாம்
 உங்க சாதிக்குத்தானே" என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ

ஒன்று செய்!
உன்னைறியாத ஊரில் போய்
உன்னைப்பறையனென்று சொல்
அப்போது புரியும் என் வலி

                                                             - இராசை கண்மணி ராசா



II






என்னைக்கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித்தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்கள் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப்பக்கதில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலேயே
சூரிய சந்திரச்சுழற்சிகள் இன்னும் எது வரை?

எங்களுக்கான பங்கை ஒதுக்கச்சொல்லியல்ல
எடுத்துக்கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்
கொண்டிருக்கிறோம்

அதுவரை அனுபவியுங்கள்
ஆசீர்வதிக்கிறோம்

                                                                     -ஆதவன் தீட்சண்யா




III





விளம்பரப்படுத்துகின்றன
சாதிகளால் ஆன தேசம்
இதுவென்று
சமத்துவபுரம்
பொதுமயானம் என்று
பெயர்களைத்
தாங்கி நிற்கும்
பலகைகள்

                                                                  -யாழி




IV


சம பலத்துடன்
இருந்தபோதும்
இரண்டாம் நகர்த்தலுக்கே
தள்ளி வைக்கப்படுகிறது
சதுரங்கத்திலும்
கருப்புக்காய்கள்

                                                                                                   -யாழி



V





ஆசை ஆசையாய்
காதைத்தொட்டுக்காட்டி
பள்ளிக்கூடம் சேர்ந்த அன்று
அகர முதல் எழுத்துக்குப்பின்
அறிந்து கொ\ண்டேன்
என் சாதியை

                                        - பெரியசாமி



VI






எங்கும் இல்லை
என் மூதாதியின் பெயர்
நீ எழுதிய வரலாறு

                                             - மகுடேஸ்வரன்

Monday, January 16, 2012

மாட்டுக்கறியும் மனிதர்களும்

நாடெங்கும்
விலைவாசி உயர்வு
ஒரு டீயின் விலை
அறுபது பைசா என்பது
விலைவாசி உயர்வல்ல

பொது கிளாசில்
டீ கேட்க
தனி கிளாசில்
டீ கொடுக்க

ஒரு டீயின் விலை
ஒன்பது உயிர்கள் என்று
உயர்ந்து கிடக்கிறது
-கவிஞர் கந்தர்வன்
எண்பதுகளின் இறுதியில் எழுதிய கவிதை இது. இன்றைக்கு ஒரு டீயின் விலை ஆறு ரூபாயைத்தாண்டி நிற்கிறது. நிற்க...
ஹிமாச்சலப்பிரதேசத்தில்  ஜஜ்ஜார் நகரில் விஜய தசமியை ஒட்டிய ஒரு தினத்தில் செத்த மாட்டை உரித்த குற்றத்திற்காக ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
ஒருவர் மாட்டுக்கறி சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம் சார்ந்தது. கைபர் போலன் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்று வரலாறு சொல்லுகிறது அவர்கள் ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்து வந்தவர்கள் அதையே உணவாகவும் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் வருகைக்கு முன்பே மூடப்பட்ட சாக்கடை கொண்ட ஹரப்பா மனிதர்கள் நாகரீகத்தில் மேம்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு பொதுப்புத்தியில் உறைத்திடுப்பதைப்போன்று ஆடுகள் மட்டுமே மேன்மை நிறைந்த புலால் உணவு உட்கொண்டு வாழ்ந்திருந்தார்களா என்பது தெரியவில்லை.
கோமேதகயாகம் என்ற பெயரில் மாட்டை சுட்டு சாப்பிட்டு யாகம் (?) செய்து வாழ்ந்திருக்கிறார்கள்
இவர்கள் அளவில்லாமல் மாடுகளைக்கொல்லுவதைப்பார்த்துதான் கொல்லாமை என்னும் ஒப்பரிய தத்துவத்தையே கௌதமபுத்தர் அருளியிருக்கிறார்.
ஆதவன் தீட்சண்யா லண்டன் சென்று திரும்பிய பிறகு ஒரு பதிவில் இருக்கிற கறிகளிலேயே விலை மிகவும் உயர்ந்ததாக இருந்தது மாட்டுக்கறிதான் என்று சொல்லியிருந்தார். எனக்கு மட்டும் சிறு வயதில் நாய்க்கறி சாப்பிடும் பழக்கத்தை (வட கிழக்கு மாகாணங்களில் நாய்க்கறிதான் அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம்) ஏற்படுத்தியிருந்தால் அதைத்தான் கடைசி வரை கைக்கொண்டிருப்பேன். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுதானே நடைமுறை.
நக்கீரன் கோபால் மாட்டுக்கறி சாப்பிட்டாரா  இல்லையா என்பதல்ல இன்றைய முக்கியம். மாமி ஒருவர்மாட்டுக்கறி சாப்பிட்டாரா இல்லை சாப்பிட வில்லையா என்பதுதான் கேள்வி.  அவர் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் அதை எழுதுவது எப்படி சரியாகும் என்று மரக்கறி  உணவு உண்பவர்கள் போராடுகிறார்கள்(!)
உலகம் முழுமைக்கும் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள்தான் அதிகம் இந்த உண்மை இன்று நக்கீரன் அலுவலகத்தை உடைப்பவர்களுக்கு தெரியுமோ இல்லையா என்பது நமது கேள்வி. 
மரக்கறி உணவு உண்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று யார் சொன்னது. அப்படியென்றால் திகாரில் ராசாவுடன் ஷர்மா ஏன் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கிறார். கேதன் தேசாய் 3500 கோடி ரூபாயும் 3500 கிலோ தங்கமும் ஏன் சட்டத்தை மீறி சேர்க்கிறார்(அல்லது  ஏன் கொள்ளையடிக்கிறார்?).
மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் எந்த விதத்திலும் யாருக்கு குறைந்தவர்கள் அல்லர். அவர்களும் சக  மனிதர்கள் என்பதை நினைவு கொள்ளுதல் அவசியம் என்று தோன்றுகிறது.

Sunday, December 11, 2011

மண நாள் 25ஆவது ஆண்டு




1986 ஆம் ஆண்டு டிசம்பர்த்திங்கள் 10 ஆம் நாள் எனது திருமணம் நடைபெற்றது. விருது நகரில் அருப்புக்கோட்டை சாலையில் இருக்கும் சிமினி நந்தவனத்தில் நடைபெற்றது அதையொட்டி நான் அடித்த அழைப்பிதழ் இது. முகூர்த்த நேரம் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை ஆகவே. திருமண நேரம் காலை 10 மணி அளவில் என்று குறிப்பிட்டு இருந்தேன். காரைக்குடியில் அப்போது வேலை பார்த்து வந்தேன். நான் பிறந்த சாதியில் முதன் முதலாகப்பட்டப்படிப்பு படித்து வந்தவனும் முதன் முதலாக கல்யாண மண்டபம் பிடித்து  மணம் முடித்தவனும் நானே.




ஒரு கூட்டம் போல அமைத்திருந்தேன் அழைப்பிதழை. காரைக்குடியில் அப்போது சீனா தானா என்ற ஒரு எம் எல் ஏ இருந்தார். அவருக்கு சொந்தமான "அரசு அச்சகம்"  வ உ சி சாலையில் இருந்தது. எம் எல் ஏ எல்லாம் எனக்கு அப்போதைக்கு  அறிமுகம் கூட கிடையாது. அங்கிருக்கும் அச்சுக்கோர்க்கும் மற்றும்  பைண்டிங் செய்யும் தொழிலாளர்கள் எல்லாமே பழகி விட்டிருந்தார்கள்.  நான் எழுதிக்கொடுத்தபடி அழைப்பிதழ் அச்சடித்துக்கொடுத்தார்கள். ஆங்கிலத்தில் அச்சேற்றுவது பிடிக்காது என்பதால் தமிழில் அழைப்பிதழ் வடிவமைத்தேன். கூட்டத்திற்கு நிர்ணயம் செய்தவர்கள் எல்லாமே தொழிற்சங்கத்தலைவர்கள் அனுபவஸ்தர்கள். திரு எஸ் ஏ பெருமாள் இன்றைய செம்மலர் ஆசிரியர் அன்றைக்கு த மு எ ச வின் முன்னோடி. அவர்தான் காலம் தோறும் திருமணங்கள் மற்றும் இ ந் நாட்களில் நடைபெறும் திருமணத்தைப்பற்றிய ஒரு அறிமுகத்துடன் திருமணத்தை நடத்தி வைத்தார். நமது சாதி சனமெல்லாம் மூன்று வேளை சாப்பாடு அதாவது முதல் நாள் இரவு சாப்பாடு விருதுநகர் மாடலில்  மிளகாய்ச்சட்டினி, பால்சாதத்துடன்., மறு நாள் முகூர்த்தமன்று காலை கேசரி, வெண்பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் என. அப்புறம் திருப்பூட்டு முடிந்தபிறகு ஜாம், பாயாசத்துடன் பிரமாதமான மரக்கறி உணவு.




தொழிற்சங்கத்தலைவர் திரு  ஏ கேசவன் தலைமை ஏற்க,
அப்போது வரை கல்யாணமே ஆகாமல் (ஆனால் காதலித்துக்கொண்டிருந்த)  திரு வி சுப்பிரமணியன் வரவேற்பு வழங்க 
வாழ்த்துரையாக
திரு மோகன்தாஸ் கோவில்பட்டி, 
திரு கருப்புராஜ் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம்
திரு எஸ் ஏ பெருமாள் த மு எ ச என்று வடிவமைக்கப்பட்டிருந்தது. 15/12/1986 அன்று காரைக்குடி ஹோட்டல் சுகம் இன்டர் நேஷனலில் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தேன். அதில் ஈரோடு ராஜு தலைமை தாங்கினார். மற்ற தொழிற்சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டார்கள். சி ஐ டி யு, மூட்டா, தீயணைக்கும்படை  நண்பர்கள், அரசு ஊழியர்கள், தொலைபேசி நிறுவனத்தின் அத்துனை சங்கங்கள் என பங்கேற்பு இருந்தது. சுவையான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அது ஒரு கார்காலம் அல்லது கனாக்களின் காலம்.

10/12/2011 எனது கல்யாணத்தின் வெள்ளி விழா நாளில் விருது நகர் மாவட்ட கோ ஆபரேடிவ் வங்கியில் 5 பவுன் சங்கிலியுடன் அடமானத்திற்காக நிற்கிறேன்.  மனைவி மதுரை வடமலையான் ஆசுபத்திரியில் அவரது அம்மாவிற்கு முடியவில்லை என்று ஐ சி யு வில் இருக்கிறார். தியாகராசர் பொறியியற்கல்லூரியில் பயிலும் பாப்பாவும் அவரது அம்மாவோடு. லோன் கிடைக்க 12 மணிக்கும் மேலாக ஆகி விட்டது. கிடைத்த லோன் தொகை  அறுபதினாயிரம். ஏற்கனவே நண்பன் கிருஷ்ண குமாரிடம் வாங்கிய ரூபாய் 23,000/- த்தை க் கொடுத்து விட்டு பாக்கியை மதுரைக்குக் கொண்டு சென்று  கொடுக்க நான் போகவேண்டும். ஒரு காரில் போகலாமென்று யோசனை. பஸ்ஸில் ரயிலில் செல்லும்போது பணம் பறி போய் விட்டால் என்ன செய்வது என்ற காரணம்தான். ஒரு காரும் ஏற்பாடாகிவிட்டது நானும் நண்பர்கள் அழகு, சீனி, மருது மூவரும் மதுரைக்குப் பயணமானோம். 


வடமலையான் ஆசுபத்திரி சென்று ஐ சி யுவுக்கு முன்னால் வரமிருக்கும் எனது மனைவியிடம் மிச்சப்பணத்தைக் கொடுக்கிறேன் . காய்ச்சலில் படுத்திருந்த எனது மகள் விழித்துக்கொண்டு என்னப்பா காரிலா வந்தீர்கள் என்று கேட்கிறார். ஆம் என்றேன். இதோ வந்து விடுகிறேன் என்று போய் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பரிசுப்பொருளுடன் பெரிய வெட்டிங் அனிவெர்சரி கேக் கொண்டு வந்து என்னை வெட்டச்சொல்லுகிறார்.  ஆனந்தத்தாண்டவம் என்பது இதுதான் என நான் நினைத்துக்கொண்டேன்.


நண்பர்கள் முகத்தில் பலத்த மகிழ்ச்சி. எனது மனைவியைப்பார்த்தேன் இருபத்தைந்தாவது கல்யாண நாளுக்காக அவர் வாங்கியிருந்த பத்தாயிரம் ரூபாய்  ஆலுக்காஸின்  வைர மூக்குத்தியை விடவும் பூரிப்பு அவரத முகத்தில்.

Wednesday, November 30, 2011

மூன்று குட்டுகளும் மூன்று மறுத்தல்களும்

உச்ச நீதிமன்றத்தின் மூன்று குட்டுகளை தமிழக முதல்வர் வாங்கியபோதும் அசராமல் மூன்று கட்டண விகிதங்களை (பஸ், பால்  மற்றும் பவர்) உயர்த்தியிருக்கிறார்.

முதலாவதாக ஆட்சிப்பொறுப்பேற்ற கையோடு சமச்சீர் கல்வியை முடமாக்கத்துணிந்து செயல்பட்டார்  மூன்று மாதங்களாகக்குழந்தைகளைப்பாடப்புத்தகங்களினின்றும் தள்ளி வைத்தார் (ஆனாலும் 6 முதல் 14 வயது வரையிலான் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கல்வி அளிக்கப்பட சட்டமொன்று இயற்றப்பட்ட் நடைமுறையிலிருக்கிறது.) உயர் நீதி மன்றம் சமச்சீர் கல்வியை அமல் படுத்தச்சொல்லியும் உச்ச நீதிமன்றம் வரை சென்றார். அங்கு அவருக்கு ஆதரவான தீர்ப்பு வரவில்லை; சமச்சீர் கல்வி குழந்தை களுக்கு அரை மனதுடன் பாடப்புத்தகங்களில் வெட்டி ஒட்டி கொடுக்கப்பட்டது. முழுமையாகச்சென்றடைந்ததா பள்ளிகளுக்கும் குழந்தைகளுக்கும் என்பது ஆய்வுக்கு உட்பட்டது.

இரண்டாவதாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த( ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய 1991-1996 காலத்தில்) வழக்கில் 14 ஆண்டுகள் ஆனபிறகும் ஒரு முறை கூட ஆஜராகாமல் இருந்த வந்த நிலைமையைக்கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை பெங்களூரு நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது அக். 2011 இரு  நாட்கள் விமானத்தில் சென்று  1337 கேள்விகளில் பாதி வரை பதில் சொல்லிவிட்டு வந்தார்.

பாக்கி கேள்விகளுக்கு பதில் சொல்ல உரிமை கேட்டு உச்ச நீதிமன்றம் சென்றது வழக்கு. இம்முறையும் பெங்களூரு சென்று பதில் சொல்ல வேண்டும். வழக்காடு மன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனச்சொல்லி உச்ச நீதி மன்றம் ஆணையிட்டது. மீண்டும் இரண்டு நாட்கள் நவ 2011 இல் சென்று அனைத்துக்கேள்விகளுக்கும் பதில் சொன்னார். சென்னை வந்தார்.

மூன்றாவதாக 13000 சாலைப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப ஆணையிட்ட அம்மாவின் ஆணையை ரத்துசெய்து தமிழ் நாட்டில் என்னதான் நடக்கிறது? முந்தைய ஆட்சியில் எது செய்திருந்தாலும் மாற்றித்தான் ஆணையிட வேண்டுமா? பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை உடனே வேலைக்கு தமிழக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என மூன்றாவது முறையாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அம்மாவின் தலையில் மூன்றாவது முறையாகக்குட்டி உள்ளது.

(பின் குறிப்பு: பின் தொடரும் நிழலின் குரல் போல இவரது குரல் மனுதர்மத்தை அடிப்படையாகக்கொண்டது என்றால் வியப்பேதும் இல்லை.
1,70,000 அரசு ஊழியர்களை ஒரே உத்தரவில் வேலை நீக்கம் செய்தது; ஆடு கோழி கோவில்களில் வெட்டத்தடை விதித்தது; மதம் மாற்றத்தடைச்சட்டம் கொண்டுவந்து இந்துத்வா பரிசோதனைக்கூட குஜராத் மோடியையும் மிஞ்சியது; வேத பாடசாலைகள் கொண்டு வரவேண்டும் என்று முரளி மனோகர் ஜோஷியையும் மிரட்டியது எனத்தொடருகிறது அவரது கைங்கரியங்கள். இந்த ஆட்சியிலும் தொடருகிறது. ஒரு திராவிட இயக்கத்தலைமை மனுவாதியின் கையில் இருக்கிறதென்றே தோன்றுகிறது.)

அடுத்தவர் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்( இந்நாள் பிரதமர்) உறுதியான கருத்துக்களை மூன்று முறை உரக்கக்கூறி அவரது வர்க்க சார்பு நிலையை நிலை நிறுத்தியிருக்கிறார்.


உணவுக்கிடங்குகளில் எலிகள் சாப்பிட்டுக்கிடக்கும்
வீணாகும் உணவுப்பொருட்களை வறுமைக்கோட்டுக்கீழே இருக்கும் மக்களுக்கு(அர்ஜுன் சென் குப்தா அறிக்கையின் படி நாட்டில் ஒரு  நாளைக்கு இருபது கூட சம்பாதிக்க முடியாமல் 80 கோடிப்பேர் இருக்கிறார்கள்) இலவசமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டபோது அரசின் கொள்கை முடிவுகளில் நீதி மன்றம் தலையிடக்கூடாது என்றார்.

பெட்ரோல் விலை நிர்ணயிப்பது அரசின் வேலை யில்லை அது எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களின் வேலை என்று கையைக்காட்டி விட்ட நிலையில், பெட்ரோல் விலை கடந்த 30 மாதங்களில் 13 முறை உயர்த்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் இது பற்றி அறிக்கைகள் விட்ட நேரத்தில் சரியான நேரத்தில் கோபப்பட்டு இன்னும் எத்தனை நாளைக்குதான் அரசு மானியம் கொடுக்க முடியும் ? பணம் என்ன மரத்திலா காய்க்கிறது? என்று கேட்டு சீறினார்.

கடைசியாக அந்நிய நேரடி முதலீடு குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை மிகவும் முக்கியமானது. "சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவு, அவசர கதியில் எடுக்கப்பட்டதல்ல; ஆழ்ந்த பரிசீலனைக்குப் பிறகே எடுக்கப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"அன்னிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழைவதால், நம் நாட்டில் உள்ள சிறிய தொழில்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தவறான கருத்து. சிறிய தொழில்கள் நலிவடையாமல் இருப்பதற்குத் தேவையான பல கட்டுப்பாடுகள் அன்னிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன"

"அறுக்குறப்பவும் பட்டினி
பொறுக்குறப்பவும் பட்டினி
பொங்கல் அன்னைக்கும் பட்டினி
பொழுதன்னைக்கும் பட்டினி"

என்ற ஒரு சொலவடை படித்தேன்.

அநேகமாக நமது நாட்டு மக்களின் நிலைமை இதுதான்.
(ஆனால் வறுமைக்கோட்டின் அளவு நகரென்றால் ஒரு நாளைக்கு வருமானம் ரூ 32/- கிராமப்புறமென்றால் ஒரு நாளைக்கு ரூ 26/- என்று நீட்டி முழங்குகிறார் அலுவாலியா என்று ஒருவர் இவருக்குத்துணை போனவர்).

"பேச்சுப்படிச்ச நாய்
வேட்டைக்கு ஆகாது"

"அங்காடிக்காரிய
சங்கீதம் பாடச்சொன்னா
வெங்காயம் கருவேப்பிலைன்னுதான் பாடுவா"

இந்த சொலவடைகள் அர்த்தம் பெறுவதாக நான் நினைக்கிறேன். நீங்கள்...

Friday, November 18, 2011

சுகிர்த ராணியின் கவிதையும் நானும்

த மு எ க ச மா நில மா நாடு   விருது நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில்  நடை பெற்றது. தலித்தியக் கவிதைகள்  வாசலில் சில   தோரணங்களாகக் கட்டப்பட்டு இருந்தன.   ஆதவன் தீட்சண்யா, சுகிர்தராணி, இராசை கண்மணி ராசா ,யாழி, மகுடேஸ்வரன் என    கவிதைகள் தொகுப்பு பார்ப்பவர்களை ஈர்த்துக்கொண்டது.  அவற்றுள்  எனக்கு பட்டுத்தெரித்த ஒரு  பிடித்த கவிதையொன்று:



"செத்துப்போன மாட்டை
தோலுரிக்கும் போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம்  நின்று வாங்கிய
ஊர் சோற்றைத்தின்று விட்டு
சுடு சோறென பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில்  எதிர்ப்படும்போது
முகம் முறைத்து கடந்து விடுவேன்
அப்பாவின் தொழிலில்ஆண்டு வருமானம்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்
தோழிகளற்ற
பின்  வரிசயிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்றுசொல்லி விடுகிறேன்
பறச்சி என்று"

-சுகிர்தராணி.

அவரது  வாழ்வின் ரணங்களை  இப்படி அவர் வரித்திருக்கிறார்.

எனதும் அப்படியான ஒரு வாழ்க்கைதான்.



மாடுகள் செத்துப்போனால் அன்றைக்குப் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு மாடு தூக்க, மாடு  உரிக்க பெரியவர்களுக்கு  உதவியாக காலைப்பிடிக்க (மட்ட மல்லாக்கக்கிடக்கும் மாட்டின்  காலைத்தான்) அலுமினியச் சட்டியில் ரத்தம் பிடிக்க, புராதன     பொதுவுடமை சமூகம் சொல்லிக்கொடுத்த இருப்பதைப்பொதுவாக்கி சாப்பிடுகின்ற முறைமையில் அனைத்து  சொந்தங்களுக்கும் மாட்டின் கறியைப் பங்கு போட்டுக் கொடுக்க. கொஞ்சம் கறியை அந்த இடத்திலேயே வேகவைக்க சுள்ளி பொறுக்க அடுப்புக்கூட்ட  ஓலை  பெறக்கி வர, சாராயம் ( அப்போதெல்லாம் வேலி கருவேலை புதருக்குள்  ஒரு கேனில் இருந்து ஒரு சாயா கிளாஸ் சரக்கு  ரெண்டு ரூபாய்க்கு கிடைக்கும்; சிலபேர்  பார்மசி என்ற பெயரில் விற்கும் மதுகஷாயம் கூட குடிப்பாரகள் ஆனால் மருந்துக்குகூட ஐ எம் எஃப் எல் சரக்கு இல்லை) குடித்த பெருசுகளுக்கு அரை குறையாக வெந்த கறி கலந்த ரத்தப்பொறியலைப் பறிமாற      ( சில நேரங்களில் மாட்டின் ரததம் தோய்ந்த தோலிலேயே ஆவி பறக்க போட்டு சாப்பிட்டு) என  கவிதையின் முதல் வரிகள் அப்படியானநாட்களை மனதில் கொண்டு வந்தது.

சம்சாரி மார் வீட்டிலிருந்து நல்ல நாள் பொல்ல நளைக்கு வாங்கி வரும் அந்த சோளத்தோசையும் பாடாவதி பொங்கலும் பல வீட்டு ருசி என்பதால் வாய்க்கு வாகாக இல்லாவிட்டாலும் (விளங்காவிட்டாலும்கூட) ருசித்துத்தின்றநாட்கள்; கல்யாண வீடுகளில் மிச்சமான 'கொத்து' (சோறு ,சாம்பார், அப்பளம், ரசம், பாயாசம், காய் கறி, கூட்டு, ஜாம் உள்ளிட்ட அனைத்தும் கலந்த ஒரு கலவை) அலுமினியத்தட்டுகளின் ஏந்தித்தெருவில் தின்று திரிந்த நாடகள், மற்றும் பள்ளி நாட்களில் வீட்டிலிருந்து கொண்டு செல்லும்  மதிய  உணவை (பழைய  சோறுதான்) யாரும் பார்த்து விடக்கூடாதே என்று தள்ளித்தள்ளிப்போய் யாரும் இல்லாத இடத்தில் உட்கார்ந்து அஞ்சு பைசா ஊறுகாயுடன் கடத்திய நாட்களும்கூடவே அலைமோதியது இரண்டாவது வரிகளில்.

அப்பா செருப்புத்தைக்கும் இடம் வந்தபோது மறக்காமல் என்னுடன் வரும் நண்பர்கள் டேய்  ஒங்கப்பாடா எனச்சொல்லி; டீச்சருக்கு செருப்பு அறுந்து விட்டால்  இவன் அப்பாவிடம் கொடுத்தால் தைத்துக்கொடுப்பார் என என்னை ஏளனத்தால் பரிகசித்து  கூனிக்குறுகச் செய்த எனது பள்ளி காலத்து  சாதீய நண்பர்கள்  நிழலாடினார்கள் மூன்றாம் வரிகளில்.

அப்பாவிடம் ஆண்டு    வருமானம் ரூ 1080 போடவாடா எனக்கேட்கும் முன்சீப்  கோபால் நாயக்கர்   கையெழுத்துப்போட்ட கையோடு  ரூ 5 வாங்கிக்கொள்ளும் லாவகமும்

எல்லாரும் அவரவர் அப்பாவின் பெயரை சாதிப்பெயரோடு சேர்த்துச்சொல்லுங்க என்று சறறும் முகம் சுளிக்காமல் உத்தரவிட்ட அந்த  முகமதிய  ஆசிரியரின் முகம் இன்றைக்கும் எனக்கு மறக்கவில்லை. எல்லோரும் "ர்" விகுதியுடன் கூடிய சாதிப்பெயரை அவர்களது அப்பாவின் பெயரோடு ஒட்டாக நிமிர்ந்து நின்று சொல்ல என் பங்கு வரும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு     நெஞ்சம் பதைத்தது  எனக்கும் மட்டுமன்றோ தெரியும்.
இந்த நினவுகளைக் கிளறியது கவிதையின்  நான்காம் வரிகள்.

நாம் மட்டும்தான் இப்படி இழிவாகப்பிறந்து விட்டோமா என்று நண்பர்கள் இல்லாத நேரத்தில் சூனியத்தை வெறித்த நாட்கள், மனிதனாக நாமெல்லாம் பிறருக்குச்சமமாக வாழத்தான் வேண்டுமா என பிரமை பிடித்து அலைந்த நாட்கள் அவரது ஐந்தாவது வரிகளில்தெளிவாத்தெரிந்தது.

இப்போதும் கூட யாரும் என்னை சந்திக்க நேரும் நேரங்களில்  நீங்க எந்த ஊர் எனற கேள்விக்குப்பிறகு என்ன சாதி என்று அறிய முற்படும் எந்தத்தெரு என்ற அடுத்த கேள்வி எழும் முன்  நான் படாரென சொல்லி விடுவதுண்டு "முத்துரமன்பட்டி சக்கிலியன்" என்று.

சக்கிலியப்பயல், மாதாரி, பகடைப்புள்ள, தோட்டி, வெட்டியான் என எத்தனை எத்தனை  பேர்கள் ( நல்லவேளை பேறுகள் இல்லை) என்று சம்சாரிகளும்(?!) படிக்காதவர்களும் சாதீயப்படி  நிலையில்  சற்றே மேலே இருப்பதாக எண்ணிக்  கவுரவம் கொண்டிருக்கும் அனைவரும்  அழைத்ததெல்லாம் ஒரு காலம் .
ஒரு சிறிய மாற்றம். படித்த பிறகு  என்னை நானே சக்கிலியனென்று பிரகடனப்படுததிக்கொள்ள   முடிகிறது இன்றைக்கு.

"பிச்சை புகினும் கற்கை நன்றே"

என்று தமிழ் மூதுரை கூறினாலும் கூட

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"

என்ற சமண முனியின் வரி சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களினின்றும் அழித்து விட்டாலும் தமிழன் மனதை உலுக்கிக் கொண்டே இருந்தால் நலம் என எண்ணத் தோன்றுகிறது.

Monday, October 31, 2011

அனாதைப்பிணமும் அண்ணா மறுமலர்ச்சித்திட்டமும்

அண்ணா மறு மலர்ச்சித்திட்டத்தில் சுடுகாடுகள் காண்ட்ராக்டர்கள் மூலம் கட்டப்பட்டு விட்டன.

அது என்ன மறுமலர்ச்சி என்று புரிபடவில்லை ஆமத்தூரில் நாடார் சுடுகாடு இருக்கிறது பக்கத்தில் BC சுடுகாடு இருக்கிறது ( எரிப்பதற்கான கான் கிரீட் கொட்டகைதான் ) .

ஆனால் SC (தலித்துகள்) க்கென்று தட்டுப்படவில்லை; கட்டப்படவே இல்லையோ என்னவோ ?

பல கிராமங்களில் ஒரே சாதியினர் இருந்தால் அவர்களுக்கென்று சுடுகாடு அமைந்து விடுகிறது எந்தச்சிரமமும் இல்லாமலேயே.

ஆனால் தலித்துகள் வசிக்கும் கிராமங்களில் ஒன்று உயர் சாதியினருக்கும் மற்றொன்று தலித்துகளுக்கும் என்று ஆகிப்போகிறது.

சாத்தூருக்குப்பக்கத்தில் தலித்துகளிலேயே ஒரு பிரிவினரான பள்ளர்களுக்கு ஒன்றும் அருந்ததியினருக்கு ஒன்றுமாக சுடுகாடு இருக்கிறது.

ஒரு சிக்கல் வருகிறது என்ன சாதியென்றே தெரியாத ஒரு அனாதைப்பிணத்தை எங்கே எரிப்பது  என்று.

ரொம்ப சிம்பிள் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமான சுடுகாட்டில் இறந்து போன அப்படிப்பட்டவரை அவர் தலித்தாக இருந்தாலும் கூட BC மயானத்தில் எரித்து விடலாம்.

எரிக்கும் நேரத்தில் BC மக்கள்  யாரும் சுடுகாட்டுக்கு வந்து செக்கிங் செய்யப்போகிறார்களா என்ன?

வாழும் நாட்களிலேயே சாதி ஒழியப்பாடுபட்டவர்கள் பெரியார், அம்பேத்கர் போன்றோர்கள்.

ஒரு பக்கம்  மனுவைக்கையில் வைத்துக்கொண்டே சாதியை ஒழித்து விட நினைத்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி  என்றுவாழ்ந்த பூமியில் இன்னுமின்னும் அதாவது

இறப்பிற்குப்பிறகும் சாதியைத்தூக்கிக்கொண்டாடி என்ன ஆகப்போகிறது.?

சமத்துவ சுடுகாடு வரட்டும்.

Wednesday, September 28, 2011

உண்ணாவிரதங்கள் ஒரு பார்வை

சமீப காலங்களில் உண்ணா விரதங்கள் இந்திய தேசத்தில் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இதன் தோற்றுவாய் என்ன என்று யோசித்த வேளையில் கிடைத்த தகவல்களின் தொகுப்புதான் இப்பதிவு.


உண்ணாவிரதத்தின் தொடக்கம் எழைகளில் துவங்குகிறது. அர்ஜுன் சென் குப்தா தலைமையிலான குழு இந்தியாவில் 83 கோடிப்பேர்  நாளொன்றுக்கு ரூபாய் 20 கூட சம்பாதிக்க முடியாத நிலையில் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பை இந்திய அரசுக்கு சமர்ப்பித்திருக்கிறது. ஒரு 4 டீ குடித்தாலே அந்த இருபது ரூபாய் என்பது இன்றைய தேதியில் பத்தாது.

நிலைமை இப்படி இருக்க, மத்திய அரசு வறுமைக்கோடு பற்றிய ஒரு அரிய அறிவிப்பைச்செய்திருக்கிறது. அது கிராமப்புறத்தில் ஒரு நாளில் ரூ 25 வருமானம் ஒருவர் பெற முடியுமென்றால் அவர் வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பதாக அர்த்தமாம். அதே போல நகர்ப்புறத்தில் இருப்பவர் ஒருவர் ஒரு நாளைக்கு ரூ 32 சம்பாதிக்கத்திராணியிருந்தால் அவரும் வறுமைக்கோட்டுக்கு கீழே என்ற வரையறையில் வரமாட்டார். இருக்கட்டும்.


இன்றைக்கு அன்னா ஹசாரே (இரண்டு இடங்களில், தில்லி),

பாபா ராம்தேவ் யாதவ் (ராம்லீலா மைதானம் தில்லி),

மேதா பட்கர் ( நர்மதா தொடங்கி கூடங்குளம் வரை)

அப்புறம் நரேந்திர மோடி( இரண்டாயிரம் பேரை பலி வாங்கிய பிறகு,  அகதிகள் முகாமிலிருந்து இன்றும் வீடு திரும்பமுடியாத முஸ்லீம் சகோதரர்கள் 30,000 பேர் அவல வாழ்வு வாழும் (!) குஜராத் சூழலில்) ,

நல்ல வேளையாக எடியூரப்பா ரெட்டி உடன்பிறப்பாளர்கள் இது போல் இன்னும் இறங்கவில்லை

இருப்பினும் இன்றைய தேதியில்  உண்ணா நோன்புப்பட்டியல் நீளுகிறது.

கூடங்குளம் பொதுமக்களும் ஆறேழு நாட்கள் உண்ணா  நோன்பு இருந்து முதல்வர் ஜெயலலிதாவின் தயவால் நிறுத்தியிருக்கிறார்கள்.

திருப்பூரில் கோவையில் விசைத்தறித்தொழிலாளர்களும் ஒருவாரத்திற்குப்பக்கமாக உண்ணா நோன்பில் இருக்கிறார்கள்.

நாகப்பட்டினத்தில் இரட்டை மடி வலை வைத்து மீன் பிடிக்க உரிமை கோரி மீனவ நண்பர்கள் உண்ணா நோன்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

காலை டிபன் சாப்பிட்டு மெரினாவில் ஈழத்தமிழர்களுக்காக மனைவியோடும் மகளோடும், துணைவியோடும் தமிழினத்தலைவன்(!) மதியசாப்பாட்டுக்கு முன்பே உண்ணாவிரதம் முடித்த நாகரிகம் நம்மை வியக்க வைக்கிறது.

93இல் காவிரிப்பிரச்சனைக்காக உடன்பிறவா சகோதரியோடு ஏர்கூலர் வசதியுடன் நடந்த ஒரு நாள் போராட்டம் நம்மை ஏளனம் செய்கிறது.

தவிரவும் நாடு முழுதும் ஆங்காங்கே உண்ணா விரதங்கள் எதிர்ப்பின் அடையாளமாக வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மோகன் தாஸ் (கரம்சந்த் என்பது அவரது அப்பாவின் பெயர், காந்தி என்பது அவரது சாதிப்பெயர் (சர் நேம் என்பார்கள் இந்தியில்) பனியா(வியாபாரம் செய்யும் சாதி அவருடையது)

மோகன்தாஸ்  முதன் முதலில் உண்ணா நோன்பு இருந்தது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையை எதிர்த்துதான் என்பது தெரிகிறது.
அத்றகு முன்பாக அவர் என்னவிதமான போராட்டங்களை நடத்தினார் என்று நோக்க வேண்டி இருக்கிறது.


1915 இல் அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியதும் (வயது நாற்பதைத்தாண்டிய நிலையில்)  காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்ற கையோடு ஒத்துழையாமை இயக்கம் என்ற ஒரு போராட்டத்தை பிரிட்டிஷாருக்கு எதிராக 1922 இல் ஆரம்பிக்கிறார். சௌரி சௌரா என்ற இடத்தில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் பிரச்சனை வெடித்தவுடன் அதை அப்பட்டமாகக வாபஸ் வாங்குகிறார்.

அப்புறமாக மார்ச் 1930இல் தண்டி யாத்திரை  நடத்துகிறார் ஒரு 200 கி மீட்டருக்கு மேலான நடை பயணம் அது.

முதன்முதலாக அவர் ஆரம்பித்த உண்ணா விரதம் என்பது மே 8,1933 துவங்கி ஒரு இருபத்தோரு நாள்

அது எதற்காகவென்றால் பிரிட்டிஷ் பிரதமர் ராம்செ மெக்டொனால்டு என்பவர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் கோரிக்கையை  நாட்டில் நாலில் ஒரு பகுதியாக இருக்கும் தலித் மக்களின் நிலைமையை கருத்தில் கொண்ட் இந்தியாவில் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை முறை அறிவித்தார். அது இந்து தர்மத்திற்கு எதிரானது என்ற வாதத்தைவைத்து மோகன் தாஸ் சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்தார்.

அப்படியென்றால் அதற்கு முன் உண்ணா விரதங்கள் என்ற பெயரில் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லையா?

சிறையில் சம உரிமை வேண்டும் எங்களுக்கும் (இந்தியர்களுக்கும்) என்று அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் போர்க்கொடி உயர்ததியவர் உன்னதமான புரட்சிகர கொள்கைளின் பங்காளன் பகத்சிங்கின் தோழன் ஜதீந்திர நாத் தாஸ் ஜுலை 19,1929 தொடங்கி 63 நாட்களில் அவரது உயிர் பிரிந்தது.


என்றால் அதைப்பின்பற்றிதான் மோகன் தாஸ் அவர்கள் இந்தப்போராட்ட வடிவத்தைக்கையில் எடுத்திருக்கிறார்.
மாவீரன் பகத்சிங்கும் அவரது தோழர்களான
சுகதேவ் தாபர் (பஞ்சாப் மா நிலம் லூதியானா 15/05/1907-23/03/1931)
ராஜகுரு (மத்தியப்பிரதேச மா நிலம் ரத்லாம் 24/08/1908- 23/03/1931)
மாவீரன் பகத் சிங் (இன்றைய பாகிஸ்தான் லாகூர் 28/09/1907-23/03/1931) மூவருமே இந்தியர்களுக்கும் பிரிட்டிஷாரைப்போல் சம உரிமை வேண்டும் என்று முழங்கி அதைப்பெற்றிருக்கிறார்கள்.

அதற்கப்புறம் காங்கிரஸ்காரரான விருது நகர் திரு சங்கரலிங்கம் தமிழ் நாடு  1957 இல் என பெயர் வைக்கக்கோரி விருது நகர் தேசபந்துமைதானத்தில் 64 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிரையே விட்டார் அப்போது காமராஜர் முதல்வர். சங்கரலிங்கம் அவர்களின் கோரிக்கை காமராஜருக்குப்பெரிதாகப்படவில்லை போலும். ஆனாலும் 1968 இல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சி அமைந்ததும் சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ் நாடு என்று பெயரிட்டார்.

சங்கரலிங்கத்தும் முன்னோடியாக தெலுங்கு பேசும் மக்களை உள்ளடக்கிய தனி ஆந்திர மா நிலத்துக்காக போராடியவர் திரு பொட்டி ஸ்ரீ ராமுலு .சென்னை மாகாணத்தில் உள்ள  தெலுங்கு பேசும் மக்களுக்காகப் போராடியவர் அவர். 82 நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பு இருந்து  16 டிசம்பர் 1952 இல் மடிந்தார்.

சங்கங்கள் சார்பிலும் உண்ணா நோன்புபோராட்டம் அவ்வப்போது நடத்தப்படுகிறது 1984 இல் ஒரு 36 மணி நேர உண்ணா நிலைப்போராட்டம் தேசீய தபால் தந்தி மற்றும் தொலைபேசி ஊழியர்களின்  போராட்டம் காரைக்குடி கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம் முன்பாக. நான் கலந்து கொண்டேன்.  இரண்டாம் நாள் தாங்க முடியாத  தலை வலி. சங்கத்திலிருந்து அம்ருதாஞ்சன் வழங்கப்பட்டது.

பி எஸ் என் எல் ஆன பிறகும்  நிறுவனத்தை தனியாருக்குக்கொடுக்காதே அரசு வசமே இருக்கட்டும் எனபது போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி அவ்வபோது  இது போல பல போராட்டங்கள் நடந்தது, நடக்கிறது  நடந்து கொண்டே இருக்கிறது இன்னும் நடக்கும். ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணா நிலைபோராட்டம், வேலை  நிறுத்தம் என மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் போல நாங்கள் எழுந்து கொண்டே இருக்கிறோம்

நேற்று கூட ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்( 27/09/2011) இருந்தோம். விருது நகர் பொதுமேலாளர் பி எஸ் என் எல் அலுவலகம் கச்சேரி சாலை மதுரை ரோடு  விரதம்( 27/09/2011) இருந்தோம். அது கிடக்கட்டும்.

ஆயிரக்கணக்கில் கூட்டத்தைக்கூட்டி கார்ப்பொரேட் லெவலில் ஹசாரே ராம்தேவ் போல தொழிலாளிகள் நடத்த முடியாது. அவசியமும் இல்லை

வசதி படைத்தவன் தரமாட்டான்
வயிறு பசித்தவன் விடமாட்டான்-பட்டுக்கோட்டை

விதர்பாவில் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்தபோது எதுவும் செய்யவில்லை இந்த ஹசாரே. ரிலையன்ஸ் நிறுவனம் 2500 கோடி ரூபாய்க்கு தொலைதூர அயல் நாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி ஏமாற்றியபோது என்ன செய்தார் இந்த ஹசாரே? இப்போதுதான் லஞ்சத்தை முதன் முறையாகப்பார்த்ததுபோல துள்ளிக்குதிக்கிறார். நல்ல முதல்வர் என முஸ்லிம்களை க்கொன்று குவித்த மோடிக்கு சான்றிதழ் வேறு வழங்குகிறார்.

பத்தாண்டுகாலமாக ராணுவத்தின் மக்கள் வெறியாட்டங்களுக்கு எதிராகப்போராடி வரும் ஒரு போராளிக்கு பலவந்தமாக உணவை செலுத்தி மணிப்பூர் ஐரோம் ஷர்மிளாவின் உண்ணா நிலைப்போராட்டத்தைக்குலைத்துவரும் அரசு பற்றிய செய்தி அரிதாக இருக்கிறது  ஆனாலும் அன்னாவுக்கும் ராம்தேவுக்கும் ஊடகங்கள் தரும் கவரேஜ் தொல்லை தாங்க முடியவில்லை.



பள்ளி நாட்களில் அதாவது சின்னப்பத்து (10) பெரியபத்து (11 SSLC) படிக்கிற காலத்தில் மதியம் சாப்பிட வீட்டுக்குசென்ற போது அம்மா களத்துக்கு அல்லது காட்டு வேலைக்கு நாத்து பறிக்க நடவு என்று சென்று விட  அப்பா கூலி வேலைக்குப்போய் விட, பானையில் கை விட்டால் ஒரு பருக்கை தேறாது.  நீச்சத்தண்ணிதான் உணவு.

உண்ண உணவு இருக்கும் நிலையில் ஹசாரேக்கள் ராம்தேவ்களின் இன்றைய அதிரடி உண்ணாவிரத ப்போராட்டங்கள், அறிவிப்புகள்,  ஆர்ப்பரிப்புகள், ஊடகங்களின் ஒருபக்க சாயல்தன்மை ஒரு பக்கம் கிடக்கட்டும்.



குழந்தைகளுக்கே உண்ண உணவில்லாமல் இருக்கும் தேசத்தில் அவர்களுடைய மௌன மொழி யாருக்கேனும் கேட்கிறதா?
அப்படி  என்றால் அந்தக்குழந்தைகள் சாப்பிடாமல் இருந்த நாட்கள் இந்த உண்ணா விரதத்தில் சேருமா?


அப்படிப்பட்ட என் போன்ற குழந்தைகள் mal nutrition   என்ற  நோய்க்கு ஆட்பட்டு சீரழிந்தது சீரழிந்து வருவது  இந்த அரசுக்குத்தெரியுமா?

இதுதான் இன்றைய  மில்லியன் டாலர் கேள்வி.



Sunday, September 25, 2011

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடு

விருது நகரில் கடந்த 15/09/2011 மாலை தொடங்கி 19/09/2011 அதிகாலை வரை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 520 பிரதி நிதிகள் பங்கேற்ற மாபெரும் மா நாடு நடைபெற்றது. பார்வையாளர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 800க்கும் அதிகமானோர் பங்கேற்ற பிரமாண்டம் அது. நூற்றுக்கும் மேற்பட்ட மராத்தான் வரவேற்புக்குழுவின் நானும் ஒருவன்.

வசந்தம் வெளியீட்டகம், அருவி மாலை, வம்சி புக்ஸ், என் சி பி எச், பாரதி புத்தகாலயம், புத்துயிர் வெளியீட்டகம், வாசல் பதிப்பகம், அலைகள் வெளியீட்டகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்தகக்கண்காட்சி, மற்றும் புகைப்படக்கண்காட்சி, சிற்பக்கண்காட்சி 15/09/2011 அன்று மாலை பிரபல எடிட்டர், இயக்குநர் பி. லெனின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

பி. லெனினுடைய  "நாக் அவுட்" குறும்படம் துவங்கி இன்று வரை ஆறாத  நட்பு கொண்டு த மு எ க ச வைத்தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு திரைக்கலைஞர். அவரை அறிமுகம் செய்தவர் ஆய்வாளர் ஸ்ரீ ரசா. ஆட்டம் பாட்டத்துடன் அவர் பறையிசையினூடே கண்காட்சிகளைத்திறந்து வைத்துப்பேசினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களை மேற்கோள் காட்டினார்.

16/09/2011 அன்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சுதந்திரப்போராட்ட தியாகி என் சங்கரைய்யா, கலை இலக்கியப்பெருமன்றத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இரா காமராசு கேரள புரோகமன் கலாசாகித்ய சம்மேளன் அமைப்பின் பேரா. வி என் முரளி ஆகியோர் கலந்து கொண்ட பொது அமர்வு நடைபெற்றது. த மு எ க ச வின் மா நிலத்தலைவர் பேரா அருணன் தலைமையேற்க, புதிய கோணங்கி பிரகதீஸ்வரன் தொகுத்தளிக்க, விருது  நகர் மாவட்ட செயலாளர் அ. லட்சுமி காந்தன்  நன்றி நவில மதிய உணவுடன் கலைந்து சென்றேன்.

உணவு இடைவேளைக்குப்பிறகு பிரதி நிதிகள் மா நாடு என்பதால்  மாலைபொது நிகழ்வில் LITTLE TERRORIST என்ற குறும்படம் திரையிடப்பட்டது. எம் சிவக்குமார் அவர்கள் அது குறித்து பேசினார்கள்.

17/09/2011 பிரதி நிதிகள் முற்றிலும் பங்கேற்கும் நிகழ்வு என்பதால் கலந்து கொள்ள முடியவில்லை.

18/09/2011 காலை 10 மணிக்கு சீத்தாராம் எச்சூரி வராததால் வரலாற்றுப்பேராசிரியர் கேரளத்திலிருந்து கே. என் பணிக்கர் வந்திருந்து சிறப்புரையாற்றினார்.


மதிய உணவுக்குப்பிறகு புத்தகச்சந்தையை ஒரு ரவுண்டு கட்டியதில் பாமாவின் "கருக்கு", பேரா ச மாடசாமியின் "சொலவடைகளும் சொன்னவர்களும்" அருணனின் "கொலைக்களங்களின் வாக்குமூலம்", "அண்ணா ஆட்சியைப்பிடித்த வரலாறு", "எம்ஜியார் முதல்வரானது எப்படி", பூமணியின் "பிறகு" உள்ளிட்ட ஐந்து நாவல்கள் தொகுப்பு, சவுத் விஷன் பதிப்பகத்தின் காஸ்ட்ரோவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உரை (மக்கள் பதிப்பு) ஸ்பார்டகஸ் (மக்கள் பதிப்பு) என்று ஒரு இரண்டாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன்.

மாலை மாநிலம் முழுதும் இருந்தும் புதுச்சேரியிலிருந்தும் வந்திருந்த கலைக்குழுக்களின் பேரணி விருது நகர் வீதிகளை வலம் வந்தது. புதிய  நிர்வாகிகளாக தலைவர் ச தமிழ்செல்வன் செயலர் சு வெங்கடேசன் பொருளர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டனர்.


நிறைவாக "தோழர்களே தோழர்களே தூக்கம் நமக்கில்லை வாருங்கள் " பாடல் சேர்ந்திசையாக கரிசல் குயில் கருணா நிதி, கிருஷ்ணசாமி, பிரகதீஸ்வரன், வெண்புறா, சோழ நாகராஜன், நான் உள்ளிட்டவர் இசைத்தோம்.
மேடையில் எஸ் ஏ பெருமாள், ச தமிழ்செல்வன், சு வெங்கடேசன், பேரா அருணன், இரா தெ முத்து ஆகியோர்.

"சப்தர் ஹஷ்மி கலைக்குழு" நடத்தி வரும் புதுச்சேரி அன்பு மணியிடம் நலம் விசாரித்தேன் 21 ஆண்டுகளுக்குப்பிறகு.ஜூலை 1991 இல் புதுச்சேரியில் "பூஸ்டர் ஜாதா" வில் அன்பு மணியும்  நானும் வீதி நாடகக்கலைஞகளாக அரியாங்குப்பம் நெட்டப்பாக்கம் பகுதிகளில் காலரா போன்ற நாடகங்களில் நடித்து புதிய கற்போரை ஈர்த்து வந்ததை நினைவு படுத்திக்கொண்டோம். பயிற்சியளித்த பிரளயன், கருணா ஆகியோரும் மா நாட்டில் பங்கேற்றனர். நிலைவலைகளைப் பதிவு செய்தனர்.

தவிரவும் பிரபல தலித் எழுத்தாளர் புது விசை காலாண்டிதழ் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா, புதிய ஆசிரியன் மாத இதழாசிரியர் பேரா ராஜு எல் ஐ சியில் ஓய்வு பெற்ற சியாமளம் என்ற காஸ்யபன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிக்கொண்டேன்.

18/09/2011 மாலை 6 மணி தொடங்கி விடிய விடிய கலை இலக்கிய இரவு விருது நகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேடைக்கலைவாணர் நன்மாறன், பேராசிரியர் கு ஞானசம்பந்தன், பாரதி கிருஷ்ணகுமார் உரை வீச்சு ;விருது  நகர் மாவட்ட ஆட்சியர் மு. பாலாஜி அவர்களின் வாழ்த்துரை, திரைத்துறையிலிருந்து தன்னை ஒரு இடது சாரி என பகிரங்கமாக அறிவிக்கும் திராணி கொண்ட எஸ் பி ஜன நாதன், சுசீந்திரன், ஏகாதசி,சசி வசனகர்த்தா பாஸ்கர் சக்தி  ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். 

"ஊருக்குச்சென்று கொண்டிருக்கிறேன்" என்ற தலைப்பில் (ஊருக்குத்திரும்பிக்கொண்டிருக்கிறேன் அங்கு யாரும் இல்லை -அப்பணசாமியின் சிறுகதைத்தலைப்பை சற்றே மாற்றி) கரிசல் மண்ணின் படைப்பாளிகளின்  சிறு கதைத்தொகுப்பு வந்திருந்த மாநில மாநாட்டுப்பிரதி நிதிகள் அனைவருக்கும் மணிமாறனால் தொகுக்கப்பட்டு வரவேற்புக்குழுவின் சார்பில் வழங்கப்பட்டது. 13 சிறுகதைகள் அடங்கியது அந்தத்தொகுப்பு. அத்தனையும் விருது நகர் கரிசல் பூமியின் மண் மணக்கும்  படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கிய கையடக்கத்தொகுப்பு.

அந்தத்தொகுப்பில் எனது சிறுகதையான "விட்டு விடுதலையாகி..."யும்  வெளியாகி இருக்கிறது. எனது எழுத்தை முதன் முறையாக மிகப்பெரிய ஒரு பண்பாட்டு, இலக்கிய, கலாச்சார, கலைஞர்களின் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது என்பதில் பேரானந்தம் எனக்கு...

Tuesday, September 6, 2011

கலை கலைக்காகவேதானா?

"கலை கலைக்காகவே என்று
சில பேர் கரடி விடுவானுங்க;
அதை நீங்க நம்பாதிங்க; 
அப்படி யிருந்தா
அது எப்பவோ செத்துப்போயிருக்கும்.

கலை வாழ்க்கைக்காகத்தான்
வாழ்க்கையும் கலையும் சேரும்போது தான் 
அதுக்கு உயிரே வருது"

- நடிகவேள் எம் ஆர் ராதா.

கலை மக்களுக்காக என்ற மிகப்பெரிய கோஷத்துடன் ஒரு கலை இலக்கிய அமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது. அது தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.

அதன் 12 ஆவது மா நில மாநாடு கரிசல் பூமியாம் விருது நகரில் 2011, செப் 16,17,18 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது மாநிலம் முழுதும் இருந்து 32 மாவட்டங்களின் பிரதி நிதியாக  சுமார் 550 பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய வரவேற்புக்குழுவில் நானும் ஒருவன்.

கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகாலமாக இந்தச்சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறேன். 

சென்னையில் 1993 ஆம் ஆண்டு கமலஹாசன், என் எஸ் கே அவர்களின் சிலை முன்பு  பறையுடன் துவக்கி  வைத்த பேரணியைத்தொடர்ந்து மூன்று நாட்கள் கிருஷ்ணகான சபாவில்  நடைபெற்றது அதில் பிரதி நிதியாகக்கலந்து கொண்டிருக்கிறேன். திரைப்படக்கலைஞர்கள் நாசர், இயக்குநர் பாலு மகேந்திரா, கோமல் சுவாமி நாதன், தண்ணீர் தண்ணீர் திரைப்பட வாத்தியார் ராமன், ஏ கே வீராச்சாமி,ஆகியோர் கலந்து கொண்டனர். எம் பி சீனிவாசன்(சின்னச்சின்ன மூக்குத்தியாம்-பாதை தெரியுது பார் திரைப்பட இசை   அ மைப்பாளர்) அவர்களிடம் பயின்ற சேர்ந்திசை ராஜேஸ்வரி தலைமயில் நடந்தது.

மா நாடு முடியும் நாள் திடீரென அன்றைய முதல்வர் ஜெயலலிதா (சமீபத்தில் கருணா நிதி சென்னை கடற்கரையில் ஒரு மூன்று மணி நேரம் மனைவியுடனும் துணைவியுடனும் ஈழப்பிரச்சனைக்காக உண்ணாவிரதம் (!) இருந்ததைப்போன்று) காவேரி பிரச்சனையை மையமாக வைத்து தோழியுடன் மேடை போட்டு உண்ணாவிரதம் இருக்கத்துவங்கி விட்டார். பிறகென்ன? உடன்பிறப்புகளின் தயவால் தொலைதூரப்பேருந்துகள் ஓடவில்லை; அப்புறம் நானும் தோழர் சீனிவாசனும் 52, கூக்ஸ் சாலை, பெரம்பூர், சென்னையிலிருந்த சி ஐ டி யு அலுவலகத்துக்கு சென்று தங்கினோம். பாரதி தாசனின் கவிதைத்தொகுப்பு (கையடக்கப்பதிப்பு பிளாஸ்டிக் உறையுடன்) ஒன்றை வாங்கிகொண்டேன்.


அதன் பிறகு நான் பிரதி நிதியாகக்கலந்து  கொண்ட  கலை இலக்கிய மா நாடு கோவையில் 1999 இல். அப்போதுதான் 1998 இல் வாஜபாயி அவர்களை ஏதோ ஒரு அமைப்பு தாக்கத்தொடங்கி விளைவாக இரண்டு மிகப்பெரிய ஜவுளிக்கடைகள் எரிந்து கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்து மீண்ட நேரம் அது. மா நாடு முடிந்த பிறகு நடந்த கலை இரவில் ராஜேந்திரா ஜவுளிக்கடையின் முதலாளி மனித நேயம் குறித்தும் மதம் மக்களுக்குள் எந்தப்பிளவையும் ஏற்படுத்த விடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

அவரின் பேச்சுத்தாக்கத்தில் நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு அவர் ஒரு பதில் எழுதினார்:



அப்போதெல்லாம்  கைபேசி வந்து விடவில்லை; எனக்கு அலுவலகத்தொலைபேசிமட்டும்தான். ராஜேந்திரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அழைத்த நேரம் நான் வெளியில் சென்று விட்ட படியால் அவரது அழைப்பை எதிர் கொள்ள முடியவில்லை. ஆனாலும் எனன அவரது பதிவு காலகாலத்திற்கும் என் கணிணியிலும் பதிவிலும். மறக்க முடியுமா?


கோவை விஜயா பதிப்பகத்தின் சார்பில் அதன் உரிமையாளர், சீத்தாராம் எச்சூரி ( மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர்), சுதந்திரப்போராட்ட வீரர் என் சங்கரைய்யா, கோவை சிற்பி பாலசுப்ரமணியன், சிகரம் செந்தில் நாதன், அருணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

விருது நகர் மாநாட்டில் இயக்கு நர்கள் "பூ" சசி, "பேராண்மை" எஸ் பி ஜன நாதன்," இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்" சிம்புதேவன் ,விருது நகர் மண்ணின் படைப்பாளி "அங்காடித்தெரு" வசந்தபாலன் ,"அபியும் நானும்" ராதா மோகன், "அழகர்சாமியின் குதிரை" சுசீந்திரன், வசனகர்த்தா பாஸ்கர் சக்தி, திரைக்கலைஞர் நாசர், பேரா. ஞான சம்பந்தன், ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 

18/09/2011 அன்று கலை இலக்கிய இரவு விருது  நகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மா நாட்டு மண்டபத்தில் தொடங்கி கலை இரவு மேடை வரை சுமார் 5000 கலைஞர்கள் பட்டாளத்தின் பேரணி நடை பெடற இருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டகங்கள் பங்கு பெறும் மாபெறும் புத்தகக்கண்காட்சி 15/09/2011 மாலை முதல் ஆரம்பித்து மா நாடு முடியும் நாள் வரை நடைபெற இருக்கிறது. பிரபல திரைப்பட எடிட்டர் திரு பி. லெனின் புகைக்ப்பட,சிற்ப,கார்டூன், நிகழ்வு கண்காட்சிகளை த்துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.  

மாநிலப்பொதுச்செயலர் ச. தமிழ்செல்வன், சீத்தாராம் எச்சூரி, அரவான் பட வசனகர்த்தா சு.வெங்கடேசன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா,  
எழுத்தாளர் மணிமாறன், மாநிலத்தலைவர் மற்றும் ஆய்வாளருமாகிய  அருணன், திரை இயக்கத்தின் எஸ்.கருணா, ச.செந்தில் நாதன், எஸ். ஏ. பெருமாள், சாகித்ய அகாடமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுச்சாமி குறும்பட இயக்கு நர் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு  கருத்துரை வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்கள். மாவட்டச்செயலாளர் அ. லட்சுமி காந்தன், சாத்தூர் லட்சுமணப்பெருமாள் கலை இரவு  நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்கள்.

அழைப்பிதழ் இதோ:

 
மொத்தத்தில் இது கலை என்பது வாழ்க்கைக்காகவே என்ற முழக்கத்தை உரத்துச்சொல்லும்  மாநாடு.


Friday, August 26, 2011

DEATH OF MERIT




இந்தியாவில் இப்போதெல்லாம் சாதி ஒழிந்து விட்டது என்று ஒரு சாரார் கூறிக்கொண்டே தங்கள் சொந்த சாதியில் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நாங்கள் சாதியெல்லாம் பார்ப்பதில்லை என்றும் சொல்லிக்கொள்ளுவார்கள். படித்த இடங்களிலும் சாதிப்பாகுபாடு நீங்கி விடவில்லை. ஒரு  தாழ்த்தப்பட்ட மாணவனின் மருத்துவர் பட்டத்தை சிதறடித்து அவரது உயிரைப்பறித்த சாதி வெறியின் பதிவு இது. ஜஸ்பிரீத் சிங் சண்டீகர் மருத்துவக்கல்லூரியில் படித்தவர்.

கோயல் என்ற கொடியவன் உனக்கு இந்தக்கல்லூரியில் தலித் என்பதால்தானே இடம் கிடைத்தது உன்னை மருத்துவராக விட மாட்டேன் என்று சபதம் பூண்டு ஒரு மனிதாபிமான மருத்துவர் உருவாவதைத்தடுத்திருக்கிறான்(பேராசிரியர் என்ற பெயரில்)
ஜஸ்பிரித் சிங் பெயிலாக்கிய பாடம்  "சமூக மருத்துவம்" ( Community Medicne)
வேண்டுமென்றே அந்தப்பாடத்தில் பெயில் ஆக்கி யிருக்கிறார் அந்த பேராசிரியர் (!)இந்திய சமூகம் இனி என்ன சொல்லப்போகிறது?

இரண்டாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்றாகிப்போன இந்தியாவில்  ஒரு ஹஜாரேக்கு 36 மருத்துவர்கள் மணி தோறும்  உடற் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் தேசத்தில் இந்த சாதீயக்கொடுமை நடந்தேறி இருக்கிறது.

இந்தியன் என்பதிலோ தமிழன் என்பதிலோ எந்தப்பெருமையும் இருப்பதில்லை என்று ஆதவன் தீட்சண்யா குறிப்பிடுவார் ஏனெனில் நான்கில் ஒரு பகுதி மக்கள் சாதியின் பெயரால் அவமதிப்புக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

அவலத்தின் பதிவு குறும்பட வடிவில்....இந்த இணைப்பில்


https://www.youtube.com/watch?v=bTdFSJ4Qnn8



http://thedeathofmeritinindia.wordpress.com/