படிக்கிற காலங்களில் என்னை" நொண்டி நாராயணன்" என்று என்னுடைய பதின் வயது நண்பர்கள்( மனங்கொத்திகள்....?.....!) என்றுதான் அநேக நேரம் அழைப்பார்கள். அவர்களில் யாரும் இரண்டாம் வகுப்பையோ மூன்றாம் வகுப்பையோ கடந்திருக்க வில்லை. என்றாலும் அவர்கள்தானே என்னுடன் கரட்டாண்டி பிடிப்பது முதல் கள்ளன் போலீஸ், குண்டு விளையாட்டு, பம்பரம் விட்டது, கிட்டி (கில்லி) விளையாடியது வரை என முதலும் முடிவும் வரையில் வரை உடன் இருந்தவர்கள் இன்றளவும் நினைவில் வாழுபவர்கள்.

எட்டாம் வகுப்பு முடிந்து நகரிலுள்ள ஹாஜியார் பள்ளியில் சேர்ந்து எஸ் எஸ் எல் சி (பதினோராம் வகுப்பு) முடித்தபிறகு நான் செந்திக்குமார நாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பு போய்ச்சேரும்போது அநேகமாக எனது சேக்காளிகள் முத்துராமன்பட்டி ரயில்வே கேட் ஸ்டாண்டில் ரிக்ஷாக்காரர்களாக மாறியிருந்தார்கள். அவ்வப்போது அவர்களோடுவந்து நிற்பது, அரட்டை அடிப்பது என்ற கோலத்தில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டவும் கூட இயல்பாகவே அமைந்து விட்டது. அப்போதெல்லாம் அவர்கள் காலேஜ் படிக்கிறியா மாப்பிள்ளே என்று கேட்டுக்கொள்வார்கள்.
பட்டப்படிப்பு முடித்து வேலை இல்லாமல் அவர்களுடனேயே உட்கார்ந்து அப்படியே ஒரு" சவாரி" போய் வர கற்றுக்கொண்ட நேரம் அவர்கள் சொன்னார்கள்.டேய்! நாராயணன் காலேஜ் வரைக்கும் படிச்சிருக்காண்டா. ஆனா பாரு நம்மளப்போலவே ரிக்ஷா ஒட்ட வந்துட்டான் என்பார்கள். பழைய நொண்டி என்பது மாறி "காலேஜ் நாராயணன்" ஆகிப்போனேன்.

விருது நகர் கல்லூரி.
அப்புறம் இந்திய தபால் தந்தித்துறையில் தொலைத்தொடர்புப்பிரிவில் எழுத்தராக பணியில் சேர்ந்தபோது தொழிற்சங்கம் என்னைப்பிடித்துக்கொண்டது .ஒத்த கருத்துடையவர்கள் பல அரங்கங்களினின்றும் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தார்கள் எல் ஐ சி, வங்கி போக்குவரத்து, ரயில்வே , தபால் துறை,ஆர் எம் எஸ், தந்தித்துறை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கைவண்டித்தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், மின்சார ஊழியர்கள் என வாழ்வின் அனைத்துப்பகுதி மக்களையும்(உழைப்பாளிகளையும்) ஒரு சேர சந்தித்து உரையாட நேர்ந்த அற்புதமான வேளைகளில் நான் "டெலிபோன் நாராயணனா"க வலம் வந்தேன்.
காரைக்குடியில் தொலைத்தொடர்புத்துறையில் பணியாற்றி பிறகு மாற்றலாகி விருதுநகர் வந்த போது தான் எழுத்தறிவு இயக்கம் துளிர் விட்டுக்கொண்டிருந்தது. அது தொன்னூறுகளின் துவக்கம். 91இல் அறிவொளி இயக்கம் மலர்ந்தது. அதில் ஒரு படை வீரனாக இணைத்துக்கொண்டு அந்தப்பணியில் அயராது வீதி நாடக வடிவிலும் சொல்லித்தரும் ஆசிரியருக்கு சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாளராகவும் மிகுந்த சந்தோஷத்தில் திளைத்திருந்த நாட்களில் "அறிவொளி நாராயணன்"
ஆகிப்போனேன்.

ஒரு அறிவொளி ஆசிரியரும் கரும்பலைகையும்.
அப்போதைய ஆட்சியர் திரு ஞானதேசிகன் அவர்கள் என்னை கூட்டங்களில் பார்த்தால் என்ன டெலிபோன் நாராயணன் கூரைக்குண்டு கிராமத்துக்கு நான் வகுப்பெடுப்பது தெரியுமா? என்பார் ஒரு முறை அடுத்த முறை. புத்தகங்களை அந்த பகுதிக்கு உடனடியாக வழங்குங்கள் என்று தொலைபேசியிலேயே அன்புக்கட்டளை இடுவார். மனிதம் என்ற வார்த்தையை அறிவொளி விருது நகர் நண்பர்களிடம் கற்றதாகக்குறிப்பிடுவார் அடிக்கடி.
பிறகு தொலைத்தொடர்புத்துறை நண்பர்களுடன் சேர்ந்து இலாகா பதவி உயர்வுத் தேர்வெழுதி அகில இந்திய கேடரில் பாஸ் ஆனேன்.ஜபல்பூரில் மூன்றுமாதப் பயிற்சி பெற்ற பிறகு பம்பாய் சென்று ஓராண்டு பணியாற்றி, அடுத்து சென்னையில் பிறிதொரு ஆண்டு எனப் பணியாற்றி மீண்டும் விருது நகர் வந்தேன். என்னுடன் பணியாற்றியவர்கள் எல்லாம் "நாராயணன் சார்" ஆக்கிவிட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கெல்லாம் நான் அதிகாரியாம். எல்லோரும் சாமானியர்கள்தான் என்பது அவர்களுக்கு தெரியாமல் போயிருக்கக்கூடும்.

பம்பாய் உயர்ந்த மாடங்களும் சேரியும்.

சென்னை அண்ணாசாலை.
அப்புறம் பதவி உயர்வில் குஜராத் மா நிலம் கோத்ராவிற்கு சென்றேன். வேலை நிமித்தமாக அஹமதாபாத் செல்ல நேரிடும் போது "கோத்ராவாலா" என்பார்கள். ஆடிட்டர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பேன். அகில இந்திய மா நாடுகளுக்குப்போகும் சமயங்களில் "கோத்ரா நாராயண்" என கல்கத்தாக்காரர்களும் மகாராஷ்ட்ராக்காரர்களும் செல்லமாக அழைப்பார்கள்.
ஒரு எட்டு ஆண்டு மீண்டும் விருதுநகர்... "சார்வாசம்"தான். சர்வநாசமென்று சொல்ல முடியாது.
பணி மாற்றல் என்பது பிஎஸ் என் எல் அமைப்பில் எப்படியும் வந்தே தீரும். அது வந்தது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாற்றல்.
அப்பா அடிக்கடி சொல்லுவார் நமது மூதாதையர் ஊர் கர்நாடகமா நிலம் மைசூர் அதனால்தான் நாம் கன்னடம் பேசுகிறோம். கிருஷ் ணதேவராயர் காலத்தில் குதிரைகளைக்கையாண்டு அதற்கான வார்கள்தைத்துக்கொடுத்து குதிரை லாயத்தில் வேலைசெய்து அப்படியே சவாரியும் போரும் செய்திருப்பார்கள் போல இருக்கிறது. அப்படியே பெயர்ந்து வந்து ஆங்காங்கே குடியிருந்தவர்களின் எச்சம் நான். பிறந்த மண்ணுக்கே ஒரு ஐந்தாறு தலைமுறை கழித்து வந்தவன் நான் என நினைக்கிறேன். கன்னடத்தில் பேசிப்பார்க்கிறேன். வருகிறது. ஆனாலும் சொந்தங்களுக்கிடையே பேசிய அந்த லாவகம் வர மறுக்கிறது.

பெல்லாரி ரயில் நிலையம்.

பெல்லாரி கோட்டை
இப்போது தமிழ் நாட்டிலிருந்து தொலைபேசியில்/அலைபேசியில் என்னிடம் பேசும் என் நண்பர்கள் எல்லோரிடமும் என்னை "பெல்லாரி நாராயணன்" என்றே சொல்லிக்கொள்ளுகிறேன்.