வலைப்பதிவில் தேட...

Thursday, May 3, 2012

அவர்ணக்கவிதைகள் சில...

படித்ததில் பிடித்த சில அவர்ணக்கவிதைகள்
கவிஞர்களின் பெயர்களுடன்:


I




சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்

காலில் செருப்பணிந்ததால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு?
என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்

"உங்களுக்கென்னப்பா?
சர்க்காரு வேலையெல்லாம்
 உங்க சாதிக்குத்தானே" என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ

ஒன்று செய்!
உன்னைறியாத ஊரில் போய்
உன்னைப்பறையனென்று சொல்
அப்போது புரியும் என் வலி

                                                             - இராசை கண்மணி ராசா



II






என்னைக்கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித்தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்கள் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப்பக்கதில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலேயே
சூரிய சந்திரச்சுழற்சிகள் இன்னும் எது வரை?

எங்களுக்கான பங்கை ஒதுக்கச்சொல்லியல்ல
எடுத்துக்கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்
கொண்டிருக்கிறோம்

அதுவரை அனுபவியுங்கள்
ஆசீர்வதிக்கிறோம்

                                                                     -ஆதவன் தீட்சண்யா




III





விளம்பரப்படுத்துகின்றன
சாதிகளால் ஆன தேசம்
இதுவென்று
சமத்துவபுரம்
பொதுமயானம் என்று
பெயர்களைத்
தாங்கி நிற்கும்
பலகைகள்

                                                                  -யாழி




IV


சம பலத்துடன்
இருந்தபோதும்
இரண்டாம் நகர்த்தலுக்கே
தள்ளி வைக்கப்படுகிறது
சதுரங்கத்திலும்
கருப்புக்காய்கள்

                                                                                                   -யாழி



V





ஆசை ஆசையாய்
காதைத்தொட்டுக்காட்டி
பள்ளிக்கூடம் சேர்ந்த அன்று
அகர முதல் எழுத்துக்குப்பின்
அறிந்து கொ\ண்டேன்
என் சாதியை

                                        - பெரியசாமி



VI






எங்கும் இல்லை
என் மூதாதியின் பெயர்
நீ எழுதிய வரலாறு

                                             - மகுடேஸ்வரன்

3 comments:

nagoreismail said...

அருமையான வரிகள்... வலிகளின் வார்த்தைகள்...

அழகிய நாட்கள் said...

திரு நாகூர் இஸ்மாயில் அவர்களே! தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.

மகிழ்நிறை said...

http://makizhnirai.blogspot.com/2014/12/racism.html எனது இந்த கவிதையும் படித்துப்பாருங்கள் சகா. இதே மையக்கருவில் அமைந்த கவிதை. இங்கே நீங்கள் பகிர்ந்திருக்கும் எல்லா கவிதையும் அருமை சகா!