வலைப்பதிவில் தேட...

Thursday, June 30, 2011

சாதனையாளருடன் ஒரு நாள்

அது 2000 ஆம் வருடம்  பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வெளி வருகிறது. இரவெல்லாம் புரோட்டா கடையில் வேலை பார்த்து தனது தாயார் தகப்பனாருக்கு உதவியாக இருந்து கொண்டே மாநில அளவில் புவியியல் தேர்வில் 200 க்கு 197 மதிப்பெண்கள் பெற்று  இரண்டாம் இடத்தைப்பிடிக்கிறார் அவர். தினமணியில் புகைப்படத்துடன் செய்தி. அதற்குமுன் பத்திரிகையாளர்கள் அவரைத்தொடர்பு கொள்கின்றனர்.இவ்வளவு மதிப்பெண் பெற்ற்றிருக்கிறீர்களே அடுத்து என்னவாக ஆக விரும்புகிறீர்கள். அவர் அசராமல் ஆனால் உறுதியுடன் பதிலளிக்கிறார். IAS...

ஆம். இன்று அவர் ஒரு இ ஆ ப அதிகாரி. ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்(பயிற்சி) ஆக இருக்கிறார். அவர் திரு வீரபாண்டியன் இ ஆ ப . தந்தையார் எவர் சில்வர் பாத்திரங்களை தலைச்சுமையாக விற்று வரும் ஒரு சிறு வியாபாரி. அவரது தாயார் மதுரை அண்ணா நகர் அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவுத்தொழிலாளி.
அவர் இ ஆ ப ஆவார் அவரை சந்திப்போம் என்று நான் நினைத்திருக்கவில்லை.


விருது நகர் மாவட்டம் தோழர் ஜக்கையன் (நிறுவனர் அருந்தமிழர் விடுதலை இயக்கம்) அவர்கள் மூலமாக திரு வீரபாண்டியன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.அவர் விடுமுறையில் மதுரை வந்தால் சிவகாசியில் சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தார். அந்த வகையில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி அவருடன் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. விருது நகரிலிருந்து அவருடன் காரில் சென்றோம். சிவகாசியில் "செடொ" என்ற பெயரில் என் ஜி ஒ நடத்திவரும் திரு சக்தி வேல் அவர்களுடைய அலுவலகம் சென்றோம்.

அவரது பயணத்திட்டப்படி அருகில் இருக்கும் பூவ நாதபுரம் அருந்ததியர் குடியிருப்பு சென்றோம். அந்த கிராமத்தில்  பாலமுனியாண்டி என்ற ஒரு மாணவன் பத்தாம் வகுப்புத்தேர்வில் 500க்கு 460 மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருந்தார். அவருக்கு சின்னதாக ஒரு பாராட்டு அது.

1990 நவம்பரில் பாரத் கியான் விக்யான் சமிதி என்ற அமைப்பின் சார்பில் அந்த ஊரில் அருந்ததியர் அல்லாத மக்கள் வசிக்கும் குடியிருப்புப்பகுதியில் கல்வி கற்றலை வலியுறுத்தி கலை  நிகழ்ச்சி நடத்தியது நினைவுக்கு வந்தது அந்த ஊரைச்சேர்ந்த திரு ராஜேந்திரன் எல் ஐ சி  நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.  மத்திய அரசின் உதவியுடன் நடைபெற்ற கலை நிகழ்ச்சி அது 1990 அக் 2 தொடங்கி 1990 நவ14 வரை 44 நாட்கள் 165 நிகழ்ச்சிகள் நடத்தினோம்.

நாங்கள் சென்ற பொழுது பூவ நாதபுரத்து 
ஊர்ப்பெரியவர்கள் இளைஞர்கள், சிறியவர்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொண்ட கூட்டமாக அது இருந்தது

திரு வீரபாண்டியன் ஆற்றிய உரையிலிருந்து இனி:
படிப்பது எளிதானதுதான். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் பொருத்துக, ஒருவரி வினா விடை, பாராவடிவ வினா விடை ,பெரிய வினா விடை என்று இருக்கும் பாடத்தை படித்து விட்டால் அதற்கான விடையை எளிதில் கண்டு கொள்ளலாம். தேர்வில் அதை எழுதினால் பாஸ் ஆகி விடலாம்.

ஆனால் நமக்கு இருக்கும் சுமைஎல்லாம் தேர்வுக்கு பணம் ஏதும் செலுத்தச்சொன்னால், அல்லது வேறு எந்த வகையைலாவது பள்ளியிலிருந்து சிறிதாகவேனும் பணம் கட்டச்சொன்னால் நமது பெற்றோர்கள்  நீ படித்தது போதும் தீப்பெட்டி ஆபீஸ் அல்லது பயர் ஆபீஸ் போ என்று நமது பிள்ளைகளை இடை நிறுத்தம் செய்யும்படி தூண்டுவதுதான். இந்தச்செயலை எந்தப்பெற்றோரும் செய்யாமல் இருக்க வேண்டும். பிள்ளைகளும் நான் படித்தே தீருவேன் என்று முடிவு கட்டிக்கொள்ள வேண்டும். நானும் கூட சிறு வயதில் என்னுடைய அம்மாவுக்குத்துணையாக துப்புரவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறேன்; அப்பாவுக்கு உதவியாக பாத்திரம் விற்க சென்றிருக்கிறேன்;பிராய்லர் கோழிக்கடையில் வேலை செய்திருக்கிறேன்; புரோட்டா கடையில் வேலை செய்திருக்கிறேன். ஆனாலும் கல்வியைக்கைவிடக்கூடாது என்று எண்ணியிருந்தேன்.

அதன் வெளிப்பாடுதான் +2வில் சாதனை மாணவனாக வெளிவந்தது. எனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இப்படி படிக்கிற பையனை நாம்  நமது வேலைக்கு உதவியாக இருக்கச்சொல்லிவிட்டோமே என்று வருந்தியிருக்கிறார்கள். கலைஞர் குடும்பத்தோடு சென்னைக்கு அழைத்து எனக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியபோது எனது பெற்றோர்கள் கண் கலங்கினார்கள்.  அதன் பிறகு லயொலா கல்லூரியில் பட்டம், முதுகலைப்பட்டம், மனித நேய அறக்கட்டளையில் ஐ ஏ எஸ் படிப்பு விளைவாக கை கூடிய இ ஆ ப தேர்வு.

முசௌரியில் பயிற்சி பிறகு நல்கொண்டாவில் போஸ்டிங்.
பெற்றோர்களே நமது கஷ்டம் நம்மோடு போகட்டும். குழந்தைகளை எந்தப்பாடு பட்டும் படிக்க வையுங்கள். தயாரா என்று கேட்டார்.ஒன்றிரண்டு பேர் கைதூக்கி கண்கலங்கி ஆதரவு தெரிவித்தார்கள்.அதுதான் அந்தகூட்டத்தின் வெற்றியாக இருந்தது.

12 comments:

Rathnavel Natarajan said...

மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

அழகிய நாட்கள் said...

திரு ரத்னவேல் அவர்களே!
தங்களின் வருகையும் தாங்கள் எளிய மக்களின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அவா அனைத்தும் ஒரு வரியில் தெரிவித்திருக்கிறீர்கள். நன்றி.

kashyapan said...

திலீப் நாராயணன் அவர்களே! எல்.ஐ.சி சிவகாசி பணியார்ரிய ராஜெந்திரனையா குறிப்பிடுகிறீர்கள்! அவர் எனக்கு நெருக்கமன தோழராச்சே.---காஸ்யபன்

அழகிய நாட்கள் said...

ஆமாம் திரு காஸ்யபன். அவரும் நானும் பேரா ச மாடசாமியும் எழுத்தறிவு இயக்க காலத்தில் காமராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாறி மாறிப்பயணம் செய்தது. விளைவாகத்தான் 1991ஏப்ரல்14 அன்று NLM சார்பாக அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டது.

saarvaakan said...

அருமையான பதிவு
வாழ்த்துக்கள் திரு வீரபாண்டியன் இ.ஆ.ப.
நன்றி

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

அழகிய நாட்கள் said...

திரு சார்வாகன்!
தங்களது வருகை உவகை அளிக்கிறது.பின்னூட்டம் தெம்பு அளிக்கிறது

அழகிய நாட்கள் said...

திருமிகு அம்பாளடியாள்!
உறவு என்ற விளிப்பே என்னை மகிழ்ச்சியடையச்செய்கிறது. ஒரு ஆயிரம் நிகழ்வுகள் மனவலியை ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது. தமிழ் கூட சாதியாக அறியப்படும் காலத்தில்தான் நாம் இருக்கிறோம்.ஆனால் தமிழ்ச்சமூகம் அட்டவணை இனத்தவரை இழித்துக்கொடுமைப்படுத்துவதை இது வரை நிறுத்தவே இல்லை.

மாலதி said...

அருமையான பதிவு

சிவகுமாரன் said...

கண்கள் கலங்குகின்றன தோழரே. இன்னும் ஆயிரமாயிரம் வீரபாண்டியர்கள் தோன்ற வேண்டும். சமதர்ம சமுதாயம் அப்போது தான் பிறக்கும்.

அழகிய நாட்கள் said...

திருமிகு மாலதி!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நீண்ட பயணத்தின் ஒரு மைல் கல் போல என்னருகே வந்தவர் திரு வீரபாண்டியன். வரவேற்போம் வீரபாண்டியர்களை...
என்றென்றும்,
திலிப் நாராயணன்.

அழகிய நாட்கள் said...

திரு சிவகுமாரன் அவர்களே!
தங்களது 92 ஆம் ஆண்டின் த மு எ ச கவிதை இன்றைக்கும் செல்லுபடியாகிறது. ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஒரு ஜெகஜீவன் ராம் ஒரு கே ஆர் நாராயணன் ஒரு மாயாவதி ஒரு மீரா குமார் என்பதல்ல; நிலைமை படு மோசமாக இருக்கிறது சேலம் மகாத்மா காந்தி நகர் சுவர் போன்ற நிகழ்வுகளால்.ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற மாவோவின் கவிதைதான் இப்போதைய இந்த மக்களின் தேவை. அப்போது சமதர்மம் தழைக்கும். நன்றி
பேரன்புடன்,
திலிப் நாராயணன்.