வலைப்பதிவில் தேட...
Saturday, July 31, 2010
'தேரை' மனிதர்கள்
'இவன் தேற மாட்டான்' என்று எப்போதாவது யார் மூலமாவது நமது வாழ்வில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கேள்விப்பட்டிருப்போம். தேரை விழுந்த குழந்தைகளைப்பற்றி ஒரு உண்மை நிகழ்வைப்பார்ப்போம். தேரை விழுந்த தேங்காயைப்பற்றிக்கேள்விப்பட்டு இருப்பீர்கள். பாம்பு மேலே ஊர்ந்து சென்றபடியாகயால் கசக்கும் வெள்ளரிக்காயைப்ப்ற்றியும் கூட நமக்கு சிலர் சொல்லியிருப்பார்கள். தேரை விழுந்த குழந்தை சரியான நோஞ்சானாக இருக்கும். வாகான வளர்ச்சி இருக்காது. கிட்டத்தட்ட வறுமையில் தத்தளித்துக்கொண்டிருந்த சோமாலியாக்குழந்தைகளைப்போல் பார்ப்பதற்கு இருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டாதுகள். பால் குடித்தால் திரள் திரளாக வாந்தி யெடுப்பார்கள். கண்கள் சொருகினாற்போல் இருக்கும். வரிவரியாக விலாத்தட்டு எலும்புகள் தெரிய சுறு சுறுப்பில்லாமல், சிரிக்கக்கூட வழியில்லாமல் இருப்பார்கள். நான்கு மாதத்திலிருந்து ஒருவருடத்துக்குள் இந்தக்குழந்தைகளை தேரைக்குழந்தைகள் என பெற்றோர்கள் அனுமானித்து விடுவார்கள்.
இப்படிப்பட்ட குழந்தைகளுக்கென்று ஒரு எளிய வைத்தியமுறை இருந்தது நான் சிறுவனாக இருந்தகா லங்களில். இப்போதுநடைமுறையில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. தேரை விழுந்த குழந்தையை பிரதான வீதியில் அல்லது மேற்குப்பக்கம் குடியிருக்கும் சம்சாரிகள் தூக்கிக்கொண்டு ஊருக்குக்கிழக்குப்பக்கத்தில் குடியிருக்கும் அருந்ததியர் சமூக மக்களிடம் கொண்டு செல்வார்கள். அவர்களிடம் உலர வைத்த மாட்டு நரம்பு (பாடம் செய்தது) கிடைக்கும். தோல் தொழிலும் செய்வார்கள். மாட்டை உரித்து அதன் தோலை பதப்படுத்தி தோல் பொருட்கள் செய்வதில் பரம்பரையாக வந்தவர்கள். வழக்கமாக சம்சாரிமார்களின் வீட்டுக்குதேவையான கமலை,வார், மாட்டுக்கு மணிவார், கழுத்துப்பட்டை,சாட்டைக்குச்சிக்கான தோல் போன்ற வேலைகள் செய்வது இம்மக்களது வழக்கம். எனது தந்தையாரும் இந்தவே லைகள் செய்வார்.
தேரை விழுந்தகுழந்தைக்கானமருந்துவேறொன்றுமில்லை. அதிகாலையில் எழுந்து ஏதாவது வாழைத்தோப்புக்குப்போய் வாழைமரத்துக்குள் பாதுகாப்பாக குடியிருக்கும் மிருதுவான பளபளப்பான தேரை ஒன்றை அப்பா பிடித்து வருவார். அதற்குமு்ன்பாக தோலினால் ஆன ஒரு சிறு பை (2"X2" சைஸ்) தயாரித்து வைத்திருப்பார். நரம்பும் கூடவேதான். அந்தநாட்களில் குழந்தையை க்காலையில் தூக்கிகொண்டு தாய்மார்கள் ஒன்னேகால் ரூபா காணிககை மற்றும் தேங்காய், பழம், சூடம், சாம்பிராணி, வெற்றிலை, தெக்கம்பாக்கு சகிதம் வீட்டு வாசலில் வந்து காத்திருப்பார்கள். வீட்டுக்குள் வருவது மரபான ஒன்றல்ல அவர்களைப்பொருத்த வரையில் ஏனென்றால் இது சேரி ஜனங்களின் (பஞ்சமர்கள்)குடியிருப்பு அவர்கள் விவசாயம் செய்யும் சூத்திரர்கள்.
வாழைத்தோப்பிலிருந்து அப்பா வந்ததும், அவர் மேற்கு பார்த்து உட்கார்ந்துகொ ண்டு குழந்தையக் கிழக்குப்பார்த்து காட்டசொல்லுவார். வெற்றிலை மேல் கொஞ்சம் அடுப்புசாம்பலை வைத்து அதன் மேல் சூடத்தைப்பற்றவைத்து தேங்காயை சூடு காண்பித்து தட்டக்கல்லில் ஒரு தட்டு தட்டுவார். தேங்காய்த்தண்ணியை மூன்று முறை சுறறி தெளித்து விட்டு ஏற்கனவே செய்துவைத்திருந்த தோல் பைக்குள் தேரையை வைத்துத்தைத்து, நரம்பு வழியாகக்கோர்த்து( நரம்பு இல்லையென்றால் மாட்டுத்தோலில் சாட்டைக்குச்சிக்கு செய்வதைப்போல் ஒரு மெல்லிய கயிறு போல அறுத்து ஆஸ் செய்து ) ஒரு மாரடியைப்போல் (பிராமணர்களின் முப்புரி நூல் மார்பில் கிடப்பதைப்போல) குழந்தையின் நெஞ்சில் வைத்து கட்டி விடுவார்.
அப்புறம் குழந்தையின் தாயிடம் குழந்தையைத்தூக்கிக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் அவர்களது வீட்டுக்கு கொண்டு போகசொல்லுவார்.
அந்தக்குழந்தைகளின் உடம்பின் மேல் கிடக்கும் இத்தகைய தேரை மருத்துவ மாரடிகள் சில நாடகளில் கீழே விழுந்துவிடும்.
நடப்பிலேயே அவர்கள் பால் குடிக்க, சிரிக்க,கொஞ்சம் விளையாட , நடக்க என்று இயல்பான குழந்தையாக நாளடைவில் (ஒருவருடத்துக்குள்) மாறி விடுவார்கள்.
இன்னும் சில ஆண் குழந்தைகள் அடிக்கடி தங்கள் பிறப்புறப்பை பிடித்துக்கொண்டிருப்பார்கள். அதைப்"பிணி" என்று அம்மாகூட சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன் . தோலை ஒரு இரண்டு இன்ச் அளவுக்கு வெட்டி அதை அறைஞாண் கயிற்றில் கோர்த்து விட்டுவிடுவார் அப்பா.
பிறகு அந்தக்குழந்தைகள் இந்தவாரைப்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இன்னும் நிறைய எழுதுங்கள்
திரு ஆண்டாள் மகன் அவர்களுக்கு
தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.செவி வழியாக நாம் கேட்டுக்கொண்டே இருக்கும் வாய் மொழி வரலாறு/மற்றும் நமது நினைவினின்றும் அழிக்க முடியாத ஒரு கோடி விஷயங்களைப் பதிவில் கொண்டு வருவதுதான் நமது நோக்கமாக இருக்கிறது.
தோழர் திலீப், எனது நண்பரின் மகன் பொறியியல் (bio-tech) முடித்துவிட்டு stem cell ஆராய்ச்சிக்காக,கானடா செல்கிறான்.நமது வீடுகளில் பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடியில் ஒரு சிறு துண்டை அறுத்து இடுப்பில் கட்டிவிடுவார்கள்.இதனை அந்த இளைஞனிடம் சொன்னேன்.
ஸ்டெம் செல் தொப்புள் கொடியில் இருக்கிறது என்றும்,இந்த முக்கியமான தகவலை என் ஆராய்ச்சிக்குப் பயன் படுத்துவேன்.என்று கூறினான்.நல்ல முறையில் ஆராய்ச்சி முடியவேண்டும். கானடா நாடு பதிப்புரிமையை பதிவு செய்யாமலிருக்க வேண்டும்....காஸ்யபன்
தோழர் காஸ்யபன் அவர்களுக்கு
வணக்கம்.கழுதை சுதந்திரமாக நடக்க விடாமல் முன்னத்தி இரண்டு கால்களையும் முறுக்கிய பழைய துணியால் கட்டிப்போட்டு விடுவார்கள் சலவைத்தொழிலாளர்கலள். பிறந்த குழந்தை சதா உடல் நலமின்மையால் அவதியுறுவதை சகிக்க முடியாத பெற்றோர்கள் சிலர் கழுதைக்காலில் கட்டப்பட்ட துணியிலிருந்து ஒருபகுதியை கிழித்து வாங்கி வந்து இடுப்புக்கயிற்றில் கட்டும் ஒரு பழக்கம் கூட இருக்கிறது. நோயினால் அடிக்கடி பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கழுதைப்பாலையும் மருந்தாகப்புகட்டும்(அநேகமாக ஒருமுறை)வழக்கமும் நான் பார்த்திருக்கிறேன். எனக்கே கூட புகட்டி விட்டதாக என் அப்பா அம்மா கூறியிருக்கிறார்கள்.
புதிதாக வீடுகட்டி அந்த வீட்டுக்குள் கழுதையை ஒரு இரவு முழுதும் அடைத்து வைக்கவும் செய்வார்கள். காத்து கறுப்பு அண்டாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.
தோழா படித்தேன் ஒரு பழைய மரபை கிளறிச்சொல்லியிருக்கிறீர்கள்.இதனினும் மருத்துவ ரீதியான பழம் மரபுகள் இருப்பதாகவே படுகிறது.அவற்றையும் சேர்த்து எழுதுங்கள்.அதோடு சம காலப் புரிதல்களோடு உங்கள் கருத்தையும் சேர்த்து தரலாம். வாழ்த்துக்கள் ஆபீஸர்.
தோழர் காமராஜ்
வருகைக்கும் வரவேற்பும்
பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களும்.
என்னுடய தாத்தா நாமதாரி (அழகரப்பன்) அவர் இனக்குழுவினரோடு குடியிருந்து வந்த பகுதியான முத்துராமன்பட்டி, சனஞ்சனமாக பிற இடை நிலை சாதியினர் வந்து இடம் வாங்கிக்குடியேற்றம் கண்டமையால், மாத்த நாயக்கன் பட்டி சாலையில் புதிதாக இடம் வாங்கி மண் வீடு கட்டி அதில் ஒரு நாள் இரவு முழுமைக்கும் கழுதை ஒன்றைக்கட்டிப்போட்டிருக்கிறார். அந்த வீட்டில்தான் நான் பிறந்தேன் என்று அப்பா குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார் என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.
Post a Comment