வலைப்பதிவில் தேட...

Tuesday, February 23, 2010

நாடு


'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டு
முடிந்ததும் இந்நாடே '
என்று பாரதி சொல்லுவார்
நமது முன்னோர்கள் வாழ்ந்து மறைந்தமைக்காக நாம் நாட்டை கொண்டாடமுடியுமா என்ன?
மனிதனை சமமாகப்பார்க்க முடியாத தேசத்தில்
சகமனிதனை மனிதனாகப்பவித்து பழக முடியாத தேசத்தில்
நாம் பாரத தேசம் என்று நிச்சயம் தோல் நிமிர்த்த முடியாதுதான்
ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற வளாகத்தில் "மனு" வின்
சிலை வைக்கப்பட்டிருக்கிறது
அவன் போதனை இந்திய மக்களின் மனங்களில் ஏற்றப்பட்டிருக்கிறது
ஆகவேதான்
'அவன் மட்டும் என் கைகளில் கிடைத்திருந்தால் அவனைக்கடித்துக்குதறியிருப்பேன் '
என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர்
பிரமிட் அமைப்பில் சாதீய வடிவத்தை நிறுவியவன் அவன்
இந்தியாவில் அவனது தடம் பதியாத மனித மனம் கிடையாது
சீக்கிய மதத்தில் குரு ரவி தாஸ் என்பவருடைய பாடல்கள்
ஏற்றுக்கொண்ட அளவுக்கு மக்கள் அவரது சாதியை ஏற்றுகொள்ள வில்லை
அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதால்
அண்மையில் ஆஸ்திரிய நாட்டு தலைநகர் வியன்னாவில்
அவரைப்பின் பற்றும் சீக்கியர்கல் தாக்கப்பட்டது மனுவினால்தான்
என்பது தெரிய வரும்.
அன்னளைப்பின் பற்றி புத்த மதத்தில் இணைந்தவர்கள் 'நியோ புத்திஷ்டு '
என்றே அறியப்படுகிறார்கள்
வால்மீகி என்பவர் ராமாயணம் எழுதியதாக சொல்லப்படும் இந்த நாட்டில்தான் அவரது பெயரை 'சர் நேம் ' ஆகக்கொண்டவர்கள் மலம் அள்ளிக்கொண்டு  இருக்கிறார்கள்.
கிறித்துவத்தில் பாதியாராக ஆவதற்குண்டான படிப்பை படித்த
ஒரு தலித் (அருள் ராஜ்) தமிழ் நாட்டில் அந்த வேலை செய்ய இடமில்லாமல் ஒரிசா சென்று மதவெறிக்கு இறையாகிப்போனார்
இவ்வளவு ஏன்
நமது நாட்டில் வாழும் இஸ்லாம் சகோதரர்கள் கூட
சாக்கடை அள்ளும் நமது சகோதரனை
ஒரு நாளும் 'மாமா' என்று அழைப்பது கிடையாது
இதுவும் கூட மனுவின் வேலைதான்



Friday, February 19, 2010

சீலக்காரி

'நொண்டி கருப்பசாமிதுணை'
'சீலக்காரி துணை'
'ரிசர்வ் லயன் மாரியம்மன் துணை'
'இருக்கங்குடி மாரியம்மன் துணை'
'மதுரை வீரன் துணை'
என்று நான்கு சக்கர வாகனங்களில் பலவற்றில் அவரவருக்கு உரித்தான குலதெய்வங்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதைப்பார்த்திருக்கிறேன் பலமுறை.

பொதுவாகவே, நமது குலதெய்வங்கள்,நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினரின் மூதாதையர்களோடும் அவர்களது குலத்தொழிலோடும் சம்மந்தப்பட்டு இருப்பதைப்பார்க்க முடியும். இன்றைக்கும் அதனை வழிபடுபவர்கள், அதன் தோற்றம் இருப்பு மற்றும் அதன் பெருமை பேசுவதைக்காணலாம். இப்படிப்பட்ட கிராம தெய்வங்களின் இன்று வரையான நீட்சி நமது வேர்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

பொள்ளாச்சி ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் கதைகூட இது போன்றதுதான்... ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள் நிறைமாத கர்ப்பிணியைப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்க, தன்னந்தனியான அந்த தலித் பெண்ணின் போராட்டம் அடர்ந்த அந்த சாணியில் குழந்தை பெற்றுகொண்டு மரணத்தைத்தழுவியதில் முடிகிறது. மாசாணியம்மன் சிலையே உங்களுக்கு அந்தசெய்தியை சொல்லும்.

எங்கள் குலதெய்வம் பற்றிய ஒரு பதிவை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

எனது பூட்டன் சுடுகாட்டுக்கு பிணம் எரிக்க செல்லுகிறான் அது ஒரு இரவு நேரம். எரியூட்டிய பிறகு பிணத்துக்கு வேண்டியவர்கள் கலைந்து விட்டார்கள். பிணமும் பாட்டனும் தனியே... இதற்குள் பாட்டனின் பிரிய மகள் அழுது கொண்டே சுடுகாட்டுக்கு வந்துவிடுகிறாள் அவரறியாமல். (பொதுவாக எந்த பெண்களையும் ஆண்கள் சுடுகாட்டுக்குள் அனுமதிப்பதில்லை குறைந்தபட்சம் அன்றைக்கு மட்டும் மறு நாள் பால் ஊற்ற அனுமதிப்பது வேறு..) நரம்புகள் புடைக்க கொழுப்பு உருக தனது இருப்பிடம் மாறி பிணம் கீழே விழ, அந்தப்பக்கம் இருந்த பூட்டனின் மகள் மேல் தீ பற்றிக்கொள்கிறது.. அவளின் அலறல் சத்தமே பூட்டனுக்கு மகளை அடையாளம் காட்டுகிறது. காப்பாற்ற முடியாமல் போன அவளது உயிர் அவலக்குரலுடன் காற்றில் கரைந்து போகிறது. இப்படி பலியானவள்தான் எனது குலதெய்வமான "சீலக்காரி".

Wednesday, February 17, 2010

நடவு


அரிசி எங்கிருந்து கிடைக்கிறது
பால் எப்படி உற்பத்தி ஆகிறது
இது போன்ற கேள்விகளை இன்றைய
குழந்தைகளிடம் கேட்க வேண்டிய
பொது அறிவுக்கேள்விகளாய் மாறிப்போய் இருக்கிறது. இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வநதவர்களின் வாரிசுகள் 'இப்படி' மாறி இருக்கிறார்கள். அம்மா நாற்று நடுவதற்கு அந்த நடவு காலங்களில் சென்று வருவார்கள். 'அத்தைக்கூலி' வேலைக்கும் போவார்கள். ஒட்டுமொத்தமாக வயற்காடு சொந்தக்காரனிடம் 'காண்ட்ராக்ட்' பேசியும் போவார்கள். அம்மா நிறை பிடித்தால் அந்த வேகமே தனிதான். தெருவில் உள்ள பெண்கள் நிறை பிடிக்கும் தோரனைக்கும் அம்மாவின் நேர்த்திக்கும் இணை ஒருக்காலும் ஆகாது. காலையில் எட்டுமணிக்கு சேற்றில் (வயலில்தான்) இறங்கினால் சாயங்காலம் ஆறு மணிவரைக்கும் கூட வேலை இருக்கும் இடையில் மதிய சாப்பாடு இடைவேளை என்ற பெயரில் கொண்டு போன கம்மஞ்சோறு பட்டவத்தல் அல்லது பச்சைமிளகாய் உப்பில் தொட்டுக்கொண்டு என்று பசியை விரட்டி விட நினைப்பார்கள். ஒவ்வொரு நடவுக்காலங்களிலும் அம்மாவுக்கு காலில் சேற்றுப்புண் வந்து விடும். பெரிய தொல்லைப்படுத்தும். முனகிக்கொண்டு படுத்திருப்பார்கள். ஒரு நூறு மிலி மண்ணெணெய் வாங்கி வந்து கால்களில் பூசி விடுவோம். அம்மாவின் கால்களுக்கு அது இதமாக இருந்திருக்குமா தெரியாது. வேறு வைத்தியத்துக்கான வழியும் இல்லை அந்த நேரங்களில். நாளைக்காலையில் நடவுக்கு போகாதீர்கள் என்று படிக்கிற நாங்கள் சொல்லுவதுண்டு. அப்படி நடவுக்கு போகவிட்டால் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்பது அம்மாவின் கேள்வியாக இருந்திருக்கும் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை .
தூங்கி விழித்து காலையில் பார்த்தால் அம்மா அலுமினிய தூக்குசட்டியோடு மீண்டும் நடவுக்கு பொய் இருப்பார்கள்

Tuesday, February 16, 2010

தீண்டாமை

தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
என்று பள்ளிப்புத்தகங்களில்
கடைசிப்பக்கங்களில்
பெருமையாக எழுதப்பட்டிருக்கிறது
ஒவ்வொரு பதினெட்டு நிமிடத்திற்கும்
எங்களை தீண்டாமலா இருக்கிறீர்கள்?
உங்களின் வல்லுறவுக்கு இரையாக
எங்கள் சகோதரிகளின் யோனியை;
சிக்கி முக்கி கற்களால் நாங்கள் கண்ட
நெருப்பால் எங்கள் குடிசைகளை;
நீர் நிலைகளில் வாழத்துவங்கிய
எங்களை அதே நீரில் மூழ்கடித்து;
அரிவாளால் ஆயுதங்களால் எங்கள்
உடல் உறுப்புகளை;
கழிகளால் எங்கள் புட்டங்களை;
நாங்கள் செய்த செருப்புகளால்
எங்கள் மார்புகளில்;
இனிஒரு திருத்தம் செய்திடுவோம்
இளம் தளிர்களுக்கு உண்மையை
போதிக்கும் பொருட்டு
பள்ளிப்புத்தகங்களின்
கடைசிப்பக்கத்தை
அழித்துவிடுவோம்

Wednesday, February 10, 2010

தலித்துகளுக்கு இடமே இல்லையா


1'திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சமத்துவபுரத்தில் தலித்துகளுக்கு கொடுக்கப்பட்ட மனைகள் அவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் கைக்கு மாறியிருக்கிறது'. தி ஹிந்து நாள் பிப்ரவரி ௧0, ௨0௧0

௨. சந்திரபூர் குல்லூர் கிராமம் அமராவதி தாலுகா மகாராஷ்டிரா மாநிலம், கிஷோர் பன்சொது என்பவரின் இரண்டரை ஏக்கர் நிலம் இந்த நாட்டின் முதல் குடிமகள் பிரதிபா பாட்டில் என்பவரின் கணவர் தேவி சிங் ஷெகாவத் என்பவரால் அபகரிக்கப்பட்டது. அவரது இருநூறு ஏக்கர் நிலத்திற்குள் நுழைய தடையாக இருந்த கிஷோர் என்ற தலித்தின் நிலமும் பிரதிபா பாட்டில் அவர்களின் கணவர் திரு ஷெகாவத்துக்கு வேண்டியிருந்திருக்கிறது.
என்று தணியும் இந்த கோர நிலப்பசி ?

கிஷொரிடம் அந்த நிலத்தை ஒப்படைக்க டர்யாபூர் உத்தரவிட்டபிறகும் கூட அவர் நீட்டி முழக்குகின்றார் நீதிமன்றம் திரும்ப அந்த இடத்தை அளக்கத்தான் சொல்லியிருக்கிறது. அவர் (கிஷொர்) விளம்பரத்திற்காக சொல்லுகிறார் என்று.

பெரியமனிதன் சொன்னால் பேப்பரில் போடுகிறான் சின்ன மனுஷன் சொன்னல் சிறையில் போடுகிறான் என்று கலைவாணர் என். எஸ்.கே சொன்னது எவ்வளவு சரியாகப்படுகிறது இந்த காலங்களில்.

வட்டிக்காரன் முதலாக நாட்டின் முதல் பெண்மணியின் கணவர் வரைக்கும் உண்டான ஆசைக்கு இலக்கு ஆகத்தகுதி பெற்றவன் இந்த நாட்டில் ஐந்தில் ஒரு பகுதியாக வாழும் தலித்துகளின் சொத்துக்கள் மட்டும்தானா என்ற கேள்வியை நாம் உரத்து எழுப்பியாக வேண்டிய காலம் என்றைக்கு கனியும் இந்த திருநாட்டில்?

பெரியார் பிறந்த இந்த மண்ணில் தான்
அண்ணாவின் பெயரால் எழுப்பப்படும் மறுமலர்ச்சி சுடுகாடுகள் கூட ஆதி திராவிடருக்கென்று ஒன்றும் (தலித்துகள் தான்)
மற்றவர்க்கென்று ஒன்றும் என்றும் கட்டப்படுகிறது.
இது போன்ற சமூக நீதிக்காவலர்கள் பிறக்காத பாக்கி தேசத்தில் எப்படி சமூக நீதி எதிர்பார்க்கமுடியும்?
"ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பார் இந்தியாவில் இல்லையே"
என்ற பாரதியை நினைவு கொள்வோம் இந்த நாட்களில்
வாழ்க பாரத மணித்திரு நாடு.

Friday, February 5, 2010

பாவத்தின் சம்பளம்



'பாவத்தின் சம்பளம் மரணம் ' என்று விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மரணமடைந்த ஒருவனை சுடுகாட்டில் வைத்து ஈமக்கிரியை செய்யும் ஒருவரைப்பார்த்து என்ன சொல்லுவது ?
பாவத்தில் அல்லது சாதரணமாக (!) மரித்த
ஒருவனுக்கு அவனது உடல் இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பவர்களுடைய பாதுகாப்பு கருதி பத்திரமாக பூலோகத்திலிருந்து அனுப்பி வைக்கும் ஒருவரை 'வெட்டியான்' என்று இந்த சமூகம் அழைக்கிறது .

உண்மையில் பார்த்தால் அவர்தான் 'உருப்படியான' வேலை செய்கிறவர் என்று யாருக்கும் புரிவதில்லை. அவர் அந்த வேலையை செய்யவில்லை என்றால் 'எபிடேமிக்' வியாதியால் அநேகர் பாதிக்கப்படுவார்கள் என்கிற விஞ்ஞான பூர்வமான உண்மையை மறுக்கிறார்கள் சாதி என்கிற போர்வையால். எனது முதல் கூலி ஒரு சோவியத் காலண்டர் பையைத்தூக்கியதால் கிடைத்தது என்று' முதல் கூலி ' என்ற எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

 இரண்டாவது என்பது பிறந்தவுடன் இறந்து போன அல்லது இறந்தே பிறந்த ஒரு குழந்தையை சுடுகாட்டில் புதைத்ததற்காக கிடைத்தது.
அன்று ஒரு நாள் கன்று போட்ட பசுமாட்டை ஒட்டிக்கொண்டு கால் நடையாக அப்பா மெட்டுகுண்டு வரை சென்று விட்டார். பிறந்த குழந்தை ஒன்று இறந்து விட்டபடியால் அதைப்புதைக்க குழி வெட்ட சொல்லி உத்தரவு பிறபிக்கப்பட்டது. அப்பாவின் வெளியூர்ப்பயணத்தால் அந்த இடத்தில் நான் குலத்தொழில் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். கடப்பாரையும் மண்வெட்டியுமாக சுடுகாடு போய், ஒன்றரை அடிக்கு முக்கால் அடி என்கிற வீதத்தில் ஒரு குழி தோண்டினேன். ஒரு இரண்டு அடி ஆழம்வரை தோண்டவேண்டி இருந்தது. 

தூளியில் வைத்து 'அம்மன் காப்போடு' (வேறென்ன வேப்பிலைதான்) கொண்டுவரப்பட்டது பச்சிளம் தளிர் போன்ற குழந்தை. குழிக்குள் கிடத்தினார்கள். மண்ணைக்கொத்தி குழியை மூடித்துவங்கினேன். முக்கால்வாசி குழி மூடப்பட்டதும் பக்கத்து வேலிக்கருவேலை மரத்தின் இரண்டு கொப்புகளை மண்வெட்டியால் வெட்டி குழிக்குள் திணித்தேன். ( நாய், நரி ஏதும் குழியைப்பரித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு)
மிச்ச மண்ணையும் இழுத்துப்போட்டு மணல் வீடு கட்டுவதைப்போல் கூம்பு வடிவத்தில் குழி என்ற அடையாளம் தெரிய அமைத்தேன்.


பாவமே செய்யாத அந்தக்குழந்தையின் மரணம் எனக்கு சம்பளமாக ரூபாய் பத்து வழங்கியது.

Wednesday, February 3, 2010

முதல் கூலி



கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள்
கவலை இல்லை இனி உனக்கு
ஒத்துக்கொள் - பாரதி தாசன்.
பொதுவாக அவரவர் அப்பாவின் வேலையை கற்றுகொள்வதற்கான அறிவுரை என்றுதான் இது புரிந்துகொள்ளப்படவேண்டியிருக்கிறது. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் வேறென்ன கற்றுக்கொள்ள முடியும். அப்படித்தப்பித்தவறி படித்துவிட்டாலும் கூட வேலை வாய்ப்பு என்பதிலும் கூட சாதி வந்து கும்மாளமிட்டு விடுகிறது. இல்லையென்றால் திண்டுக்கல் பக்கம் ஒரு எம்.ஏ பட்டதாரி ஒரு சில தனியார் பள்ளிகளில் வேலை பார்த்துவிட்டு ஒன்றும் தோதுப்பட்டு வராமல் தனது குலத்தொழிலான செருப்பு தைக்கும் வேலையை செய்ய மனமுவப்பாரா என்ன?
இந்த செய்திகளின் பின்னணியில் எனது நினைவோட்டத்தைப்பகிர நினைக்கிறேன்.
தீவிர எம்ஜியார் ரசிகனான எனது அப்பாவைப்போல் நானும் எம்ஜியார் ரசிகன் ஆனதில் வியப்பேதுமில்லை. மதுரை வீரன் படத்தின் ரிலீஸ் சமயம் அந்தப்படத்தை ௩௬ முறை பார்த்திருக்கிறார் எனது அப்பா. மதுரை வீரன் திரைப்படத்தில் என் எஸ் கே செருப்புதைக்கும் தொழிலாளியாகவும் அவரது வீர மகனாக எம்ஜியாரும் நடித்திருப்பார்கள்.
குலத்தொழில் முறை வேண்டும் என்று ராஜாஜி சொன்னதை எதிர்த்து குரல் கொடுத்த பச்சைத்தமிழன் வாழ்ந்த நாட்டில் சாதி சார்ந்த தொழில் செய்யவேண்டிய நிலையில்தான் இன்னும் சூத்திர பஞ்சம சாதியினர் இருக்கிறார்கள்.
அந்த வகையில் நானும் குலத்தொழில் செய்முறைக்காக எனது எட்டாவது அரையாண்டு விடுமுறையில் அப்பாவுடன் சேர்ந்து செருப்பு தைக்கப்போனேன். பஜாரில் உள்ள ஒரு கடை அது. சொல்லவேண்டியதில்லை ; வானமே கூரை. வாகனங்களின் இரைச்சல், சிந்திக்கிடக்கும் ஒன்றிரண்டு வத்தல்கள்,மூட்டை தூக்குபவர்கள், ஒயாத சனங்களின் நடமாட்டம், தும்மலை வரவழைக்கும் தூசி ,வெயில் இன்னும் இன்னும்...
ஒருரூபாய் கூலி கேட்டால் பேரம் பேசுவார்கள் கிழிந்த செருப்போடு வந்தவர்கள்.
கனத்த காக்கி கலர் பையும், இன்னொரு கையில் துணிகளடங்கிய ரெக்ஸின்பேக்குமாக கிழிந்த செருப்பை இழுத்து இழுத்து நடந்து வந்தார் அப்பாவை நோக்கி ஒருவர்.
சரி செய்ய கூலியாக ஒரு ரூபாய் கேட்டார் அப்பா .முக்கால் ரூபாய்க்கு வந்தவர் சம்மதிக்க வேலையை முடித்துக்கொடுத்தார் அப்பா.
செருப்பை காலில் மாட்டிக்கொண்டே என்னைப்பார்த்து சிரித்தார் வந்தவர்.
அந்த கனத்த காக்கி கலர் பையோடு தனது பேக்கையும் சேர்த்து செல்ல இயலாது என்று யோசித்தாரோ என்னவோ தெரியவில்லை.
'தம்பீ இந்த பையை பஸ் ஸ்டாண்டு வரைக்கும் தூக்கிக்கிட்டுவர்றியா'
நான் அப்பாவைப்பார்த்தேன்.
போய்ட்டு வா என்றார்.
சுமை எனது தலைக்கு ஏறியது வந்தவரின் உதவியால்.
சுருட்டி சுருட்டி இறுக்கமாக திணித்து வைக்கப்பட்டிருந்த காலண்டர்கள் போல் தெரிந்தது. அதன் பளபளப்பும், புதிய தாளுக்கேயுரிய வாசனையுமாக.
அது சோவியத் யூனியன் காலண்டர்கள் என்று அப்போது தெரியவில்லை.
பின்னாட்களில் லைப்ரரி செல்லும் போது யுனெஸ்கோ கொரியர் என்ற பத்திரிகையைப்பார்த்த பிறகுதான் அந்த காலண்டரின் பளபளப்பு புரிபட்டது.
வந்தவர் முன்னால் நடக்க நான் சுமையோடு அவரின் அடியொற்றி மாரியம்மன் புக் ஸ்டோர்சிலிருந்து கிளம்பி, ரத்தினம் பட்டணம் பொடி கடைதாண்டி, மாரியம்மன் கோவிலில் இருந்து திரும்பி, தேர் முட்டி,பொட்டல் வழியாக வந்து மூளிப்பட்டி அரண்மணை கடந்து, உடுப்பி ஹோட்டல், சென்ட்ரல் சினிமா வழியாக வந்து எம்.எஸ்.பி பஸ் ஸ்டாண்டின் தெற்கு நுழைவாயில் வழியாக உள்ளே சென்றோம்.
காலண்டர் சுமையை வந்தவரின் உதவியால் இறக்கி வைத்தேன்.
படிக்கிறியா என்றார்.
எட்டாவது என்றேன்
நல்லாப்படி என்று சொல்லிக்கொண்டே தனது பர்சிலிருந்து ஒரு பித்தளை இருபது பைசா நாணயத்தை எனக்கு கொடுத்தார்.
நாணயத்தில் ஒருபுறம் நமது நாட்டின் தேசியப்பூவான தாமரை
மறுபக்கம் என்னைப்பார்த்து சிரித்த வண்ணம் எம்.கே காந்தி.

Tuesday, February 2, 2010

இருங்கு சோ ள ம்

இருங்கு சோளம்
நாலாவது ஐந்தாவது படிக்கும் சமயங்களில் பள்ளி முடிந்ததும் அம்மா எந்த களத்தில் (கம்பு, உளுந்து, பாசிப்பயறு ,சோளம் ,இருங்கு சோளம், கேப்பை என்று விளை பொருள்களின் அடிப்படையிலான களங்கள்)
தவிர விளைகின்ற காடு சார்ந்துதான் அந்தக்களங்கள் அமைந்திருக்கும். எந்த சம்சாரியின் காடு எங்கே என்று தேடிகண்டுபிடிக்குமுன் போதும் போதுமென்று ஆகி விடும். சில நாட்களில் எங்கள் பள்ளியின் அருகில் கூட களம் இருக்கும். அவித்த அமெரிக்க கோதுமைச்சோற்றை சாப்பிட்டுவிட்டு எதுக்களிக்க ஒடிச்சென்று அம்மாவைப்பார்க்கும்போதெல்லாம் வெயில்ல நிக்காத பள்ளிக்கொடத்துக்கு போ என்று வண்டு கட்டிய தலையோடு சொல்லுவார்கள். ஒரு நாள் தலைமை ஆசிரியர் 'கேர்' எடுக்க சென்றதால் பள்ளியில் மதியச்சோறு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். (மதிய உணவுக்கு வேண்டிய அந்த பனைமரத்து எண்ணெய், கோதுமை வாங்கி வருவதுதான் 'கேர்' எடுப்பது என்பது பிறகு தெரிந்து கொண்டேன்). பசியோடு வீட்டுக்குப்போனால் புளிச்ச தண்ணிப்பானையின் அடியில் கையைவிட்டுக்கோதினாலும் பருக்கை சிக்கவில்லை. ஒரு செம்பு நீச்ச தண்ணீயைக்குடித்துவிட்டு மதியம் பள்ளி சென்றேன். நாலரை மணிக்கு பள்ளி விட்டதும் ஒவ்வொரு களமாக அம்மாவைத்தேடினேன். இருட்டும் நேரம் ஆகியும் களம் முடியவில்லை. கொஞ்ச நேரம் அங்கேயே விளையாடிப்பார்த்தும் வேலை முடிவதாக இல்லை. ஒருவழியக ஏழரை மணி சுமாருக்கு களம் முடிந்தது. கூலியை அம்மா பெட்டியிலும் முந்தியிலும் வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்தார்கள். வாங்கி வந்த கூலி இருங்கு சோளம் . அவ்வளவு சாமானியத்தில் அதன் தோலை உரித்து எடுத்துவிட முடியாது. ஒரு உடந்த மண் பானையில் சோளத்தைப்போட்டு வறுத்து அந்த சூடு போகுமுன் உரலில் போட்டு இடித்தால் சுத்த வெள்ளையாக வராவிட்டாலும் செங்களிச்ச ஒரு நிறத்தில் சோளம் வெளிப்படும். அதை கஞ்சி காய்ச்சிக்குடிக்க ஆசையாக அம்மா தருவார்கள். கள்ளன் போலிஸ் எல்லாம் விளையாடி ஆகிவிட்டது. ஆனாலும் அம்மா அடுப்பு பத்தவைக்கவில்லை. வேலிக்கருவேலை முள் தான் எரி பொருள். அம்மாவுக்கும் பசிதான் இருந்திருக்கும். அத்தோடுதான் இந்த இருங்கு சோளத்தோடு போராடிக்கொண்டிருந்தார்கள். தங்கை தம்பிகளோடு அம்மா சோளச்சோறு ஆக்கி முடிக்குமுன் நான் தூங்கிப்போனேன்.