வலைப்பதிவில் தேட...

Friday, November 18, 2011

சுகிர்த ராணியின் கவிதையும் நானும்

த மு எ க ச மா நில மா நாடு   விருது நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில்  நடை பெற்றது. தலித்தியக் கவிதைகள்  வாசலில் சில   தோரணங்களாகக் கட்டப்பட்டு இருந்தன.   ஆதவன் தீட்சண்யா, சுகிர்தராணி, இராசை கண்மணி ராசா ,யாழி, மகுடேஸ்வரன் என    கவிதைகள் தொகுப்பு பார்ப்பவர்களை ஈர்த்துக்கொண்டது.  அவற்றுள்  எனக்கு பட்டுத்தெரித்த ஒரு  பிடித்த கவிதையொன்று:



"செத்துப்போன மாட்டை
தோலுரிக்கும் போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம்  நின்று வாங்கிய
ஊர் சோற்றைத்தின்று விட்டு
சுடு சோறென பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில்  எதிர்ப்படும்போது
முகம் முறைத்து கடந்து விடுவேன்
அப்பாவின் தொழிலில்ஆண்டு வருமானம்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்
தோழிகளற்ற
பின்  வரிசயிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்றுசொல்லி விடுகிறேன்
பறச்சி என்று"

-சுகிர்தராணி.

அவரது  வாழ்வின் ரணங்களை  இப்படி அவர் வரித்திருக்கிறார்.

எனதும் அப்படியான ஒரு வாழ்க்கைதான்.



மாடுகள் செத்துப்போனால் அன்றைக்குப் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு மாடு தூக்க, மாடு  உரிக்க பெரியவர்களுக்கு  உதவியாக காலைப்பிடிக்க (மட்ட மல்லாக்கக்கிடக்கும் மாட்டின்  காலைத்தான்) அலுமினியச் சட்டியில் ரத்தம் பிடிக்க, புராதன     பொதுவுடமை சமூகம் சொல்லிக்கொடுத்த இருப்பதைப்பொதுவாக்கி சாப்பிடுகின்ற முறைமையில் அனைத்து  சொந்தங்களுக்கும் மாட்டின் கறியைப் பங்கு போட்டுக் கொடுக்க. கொஞ்சம் கறியை அந்த இடத்திலேயே வேகவைக்க சுள்ளி பொறுக்க அடுப்புக்கூட்ட  ஓலை  பெறக்கி வர, சாராயம் ( அப்போதெல்லாம் வேலி கருவேலை புதருக்குள்  ஒரு கேனில் இருந்து ஒரு சாயா கிளாஸ் சரக்கு  ரெண்டு ரூபாய்க்கு கிடைக்கும்; சிலபேர்  பார்மசி என்ற பெயரில் விற்கும் மதுகஷாயம் கூட குடிப்பாரகள் ஆனால் மருந்துக்குகூட ஐ எம் எஃப் எல் சரக்கு இல்லை) குடித்த பெருசுகளுக்கு அரை குறையாக வெந்த கறி கலந்த ரத்தப்பொறியலைப் பறிமாற      ( சில நேரங்களில் மாட்டின் ரததம் தோய்ந்த தோலிலேயே ஆவி பறக்க போட்டு சாப்பிட்டு) என  கவிதையின் முதல் வரிகள் அப்படியானநாட்களை மனதில் கொண்டு வந்தது.

சம்சாரி மார் வீட்டிலிருந்து நல்ல நாள் பொல்ல நளைக்கு வாங்கி வரும் அந்த சோளத்தோசையும் பாடாவதி பொங்கலும் பல வீட்டு ருசி என்பதால் வாய்க்கு வாகாக இல்லாவிட்டாலும் (விளங்காவிட்டாலும்கூட) ருசித்துத்தின்றநாட்கள்; கல்யாண வீடுகளில் மிச்சமான 'கொத்து' (சோறு ,சாம்பார், அப்பளம், ரசம், பாயாசம், காய் கறி, கூட்டு, ஜாம் உள்ளிட்ட அனைத்தும் கலந்த ஒரு கலவை) அலுமினியத்தட்டுகளின் ஏந்தித்தெருவில் தின்று திரிந்த நாடகள், மற்றும் பள்ளி நாட்களில் வீட்டிலிருந்து கொண்டு செல்லும்  மதிய  உணவை (பழைய  சோறுதான்) யாரும் பார்த்து விடக்கூடாதே என்று தள்ளித்தள்ளிப்போய் யாரும் இல்லாத இடத்தில் உட்கார்ந்து அஞ்சு பைசா ஊறுகாயுடன் கடத்திய நாட்களும்கூடவே அலைமோதியது இரண்டாவது வரிகளில்.

அப்பா செருப்புத்தைக்கும் இடம் வந்தபோது மறக்காமல் என்னுடன் வரும் நண்பர்கள் டேய்  ஒங்கப்பாடா எனச்சொல்லி; டீச்சருக்கு செருப்பு அறுந்து விட்டால்  இவன் அப்பாவிடம் கொடுத்தால் தைத்துக்கொடுப்பார் என என்னை ஏளனத்தால் பரிகசித்து  கூனிக்குறுகச் செய்த எனது பள்ளி காலத்து  சாதீய நண்பர்கள்  நிழலாடினார்கள் மூன்றாம் வரிகளில்.

அப்பாவிடம் ஆண்டு    வருமானம் ரூ 1080 போடவாடா எனக்கேட்கும் முன்சீப்  கோபால் நாயக்கர்   கையெழுத்துப்போட்ட கையோடு  ரூ 5 வாங்கிக்கொள்ளும் லாவகமும்

எல்லாரும் அவரவர் அப்பாவின் பெயரை சாதிப்பெயரோடு சேர்த்துச்சொல்லுங்க என்று சறறும் முகம் சுளிக்காமல் உத்தரவிட்ட அந்த  முகமதிய  ஆசிரியரின் முகம் இன்றைக்கும் எனக்கு மறக்கவில்லை. எல்லோரும் "ர்" விகுதியுடன் கூடிய சாதிப்பெயரை அவர்களது அப்பாவின் பெயரோடு ஒட்டாக நிமிர்ந்து நின்று சொல்ல என் பங்கு வரும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு     நெஞ்சம் பதைத்தது  எனக்கும் மட்டுமன்றோ தெரியும்.
இந்த நினவுகளைக் கிளறியது கவிதையின்  நான்காம் வரிகள்.

நாம் மட்டும்தான் இப்படி இழிவாகப்பிறந்து விட்டோமா என்று நண்பர்கள் இல்லாத நேரத்தில் சூனியத்தை வெறித்த நாட்கள், மனிதனாக நாமெல்லாம் பிறருக்குச்சமமாக வாழத்தான் வேண்டுமா என பிரமை பிடித்து அலைந்த நாட்கள் அவரது ஐந்தாவது வரிகளில்தெளிவாத்தெரிந்தது.

இப்போதும் கூட யாரும் என்னை சந்திக்க நேரும் நேரங்களில்  நீங்க எந்த ஊர் எனற கேள்விக்குப்பிறகு என்ன சாதி என்று அறிய முற்படும் எந்தத்தெரு என்ற அடுத்த கேள்வி எழும் முன்  நான் படாரென சொல்லி விடுவதுண்டு "முத்துரமன்பட்டி சக்கிலியன்" என்று.

சக்கிலியப்பயல், மாதாரி, பகடைப்புள்ள, தோட்டி, வெட்டியான் என எத்தனை எத்தனை  பேர்கள் ( நல்லவேளை பேறுகள் இல்லை) என்று சம்சாரிகளும்(?!) படிக்காதவர்களும் சாதீயப்படி  நிலையில்  சற்றே மேலே இருப்பதாக எண்ணிக்  கவுரவம் கொண்டிருக்கும் அனைவரும்  அழைத்ததெல்லாம் ஒரு காலம் .
ஒரு சிறிய மாற்றம். படித்த பிறகு  என்னை நானே சக்கிலியனென்று பிரகடனப்படுததிக்கொள்ள   முடிகிறது இன்றைக்கு.

"பிச்சை புகினும் கற்கை நன்றே"

என்று தமிழ் மூதுரை கூறினாலும் கூட

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"

என்ற சமண முனியின் வரி சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களினின்றும் அழித்து விட்டாலும் தமிழன் மனதை உலுக்கிக் கொண்டே இருந்தால் நலம் என எண்ணத் தோன்றுகிறது.

14 comments:

Azeez Luthfullah said...

எல்லாரும் அவரவர் அப்பாவின் பெயரை சாதிப்பெயரோடு சேர்த்துச்சொல்லுங்க என்று சறறும் முகம் சுளிக்காமல் உத்தரவிட்ட அந்த முகமதிய ஆசிரியரின் முகம் இன்றைக்கும் எனக்கு மறக்கவில்லை.
சகோதரரே
இஸ்லாத்தில் சாதி பாகுபாடு இல்லை. மனிதர்களை மலமாகப் பார்க்கின்ற கொடுமை இல்லை. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்க்கின்ற அவலம் இல்லை. பசித்தவர்களுக்கு உணவளிப்பது தான் இஸ்லாம் என்றார் அண்ணல் நபிகளார். மனிதர்களில் சிறந்தவர் இறையச்சம் மிக்கவர்களே என்று அறிவித்து ஏற்றத்தாழ்வுகளை முற்றாக ஒழித்தது குரான். அந்த முகமதிய ஆசிரியர் ஏன் அப்படி நடந்து கொண்டார்?

அழகிய நாட்கள் said...

மனுவின் ஆட்சிதானே இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் பாதிப்பாகக்கூட இருக்கலாம். இன்றைக்கும் கூட தலித் கிறித்தவர்கள் தலித் இசுலாமியர் என்ற இனக்குழுக்கள் அறியப்படுகிறதே அந்த நிலையின் முன்னோடியாக அவர் நடந்து கொண்டிருந்திருக்கலாம். அது நடந்தது நான் பெரிய பத்து படிக்கும்போது அவர் தமிழாசிரியர். சாதியைக்கேட்டு அறிவதில் என்ன ஆர்வமோ அல்லது என்ன பயனோ தெரியவில்லை. எனது அப்பாவின் பெயர் அர்ஜுனன். நான் சாதியொட்டு இல்லாமல் குறிப்பிட்டேன். அவர் ம்... என்று அடுத்தவனைக்கேட்கத்துவங்கி விட்டார். மலைபோல் வந்தது பனி போல் நீங்கிய உணர்வு எனக்கு.

vimalanperali said...

மனம்பிசைய வைத்த பதிவு.எழுத்துக்களை எளிதில் கடக்க முடியவில்லை.பலரிடம் தனது பழைய நினைவுகளை விதைக்கும் பதிவு.

ஜமாலன் said...

நண்பரே கவிதை பலமுறை வாசித்ததுதான். உங்கள் வாழ்வுப் பின்னணியுடன் அதை விவரித்திருப்பது மனதில் ஒரு வலியை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் சாதியமும், வர்ணமும் செய்த தீண்டாமைக்கொடுமைகளுக்குப் பிறகும் தங்களை மனிதர்கள் என்று சொல்லிக்கொள்வது வெட்கக்கேடானது. சாதிகளற்ற மிருகங்களைவிட கேடானவர்கள் இவர்கள். உங்கள் மற்ற பதிவுகளையும் வாசிக்கத் தூண்டியது இப்பதிவு. பதிவ ஏற்படுத்திய மன உளைச்சலில் எழுது முடியவில்லை அதிகம். “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்கிற இன்குலாப் பாடல்வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.

D.Martin said...

அருமை அண்ணா, இது போன்ற பதிவுகளை தனி புத்தகமாக நீங்கள் வெளியிட்டால், அது சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மனது வையுங்கள் அண்ணா.

























gmail, limewire























emule, limewire























adsense, limewire























windows messenger, limewire























youtube converter, limewire























youtube to mp3, limewire

அழகிய நாட்கள் said...
This comment has been removed by the author.
அழகிய நாட்கள் said...

தோழர் விமலன்!
பட்டவேதனைகளும் அனுபவங்களும்தான் என்னை த மு எ க ச போன்ற அமைப்புகளுக்கு வழி காட்டியது.
திலிப் நாராயணன்

அழகிய நாட்கள் said...

திரு ஜமாலன்! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். "எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் நாங்க இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்.." என்ற நிலைமை மாற நாம் பாடுபடுவோம்.

அழகிய நாட்கள் said...

திரு மார்டின் ! நான் எழுதும் பதிவுகளை ஒரு நூலாக வெளியிடும் ஆசை எனக்கு இருக்கிறது. செய்வேன் நிச்சயம்...

தமிழ்தாசன் said...

வணக்கம் தோழா

சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர


நம்மிடம் அன்பு அதிகம் இருக்கிறது.

அதில் நாம் அன்பு (மனித) சாதி.

எங்கும் உரைக்க சொல்வோம் நாம் மனித சாதி என்று.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

மதிப்பிற்குரிய சகோதரர்க்கு, வணக்கம்.
உங்கள் வலைப்பக்கத்தைத் தாமதமாகக் காணக் கிடைத்ததற்காக வருந்துகிறேன்.

உங்களின் அனுபவ எழுத்துகள் நெஞ்சில் அறைந்து நிஜத்தைச் சொல்லும்போது வரலாற்றின் பக்கங்களில் வழிந்துகிடக்கும் அவமானங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் துடைக்கப் படுவதாக உணர்கிறேன்.

எழுத்தும் ஓர் ஆயுதம் தான்,
விடாமல் எழுதுங்கள்.

தொடர்ந்து இணைந்து போராடுவோம்.

நாம் எல்லாம் ஒரே சாதிதான்.
உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு எனக்கும் அழைப்பு அனுப்ப அல்லது தெரிவிக்க வேண்டுகிறேன்.

உங்கள் மனைவி எப்படி இருக்கிறார்கள்?
மகள் படிப்பு எப்படி?

அன்புச் சகோதரன்,
நா.முத்து நிலவன் - 02-02-2012

அழகிய நாட்கள் said...

தோழர் முத்து நிலவன்! வணக்கம். அறிவொளி நாட்களில் புதுகையில் ஷீலா ராணி சுங்கத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் நான், முகில்,பிரளயன் நீங்கள் எல் ஐ சி ஜெயச்சந்திரன், கருப்பையா, நீலாவுடன் பங்கேற்றேன்." ஊர் கூடுதே" பாடல் அங்கே உதயமானதுதான். நிற்க... பையன் திலிப் சுகதேவ் பி இ முடித்து விட்டு அரசு ஐ ஏ ஏஸ் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பொன்னு மூன்றாமாண்டு பி எ இ சி இ அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் படித்துக்கொண்டிருக்கிறார். நானும் துணைவியாரும் அடிக்கடி லியோனி பட்டி மன்றத்தில் பார்த்துக்கொள்ளுகிறோம் தங்களை. விருது நகர் முனிசிபாலிடியில் நடந்த அறிவொளிக்கூட்டத்தில் தங்களை பார்த்தது கடைசியாக. சந்திப்போம்.

john peter said...

எனது முன்னோர் சார்பாகவும் ,நானும் ,உங்கள் முன்னோரிடமும் உங்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

அழகிய நாட்கள் said...

திரு ஜான் பீட்டர் அவர்களுக்கு வணக்கம். எனது வலைப்பக்கத்திற்கு வந்து வாசித்து கருத்துசொன்னமைக்கு. மனித குலத்தின் பிறப்பில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. ஆனாலும் சாதீய சமூகம் இது போன்ற ஒரு பிரிவினரை விளிம்பு நிலையில் வைத்திருக்கிறது. இழி நிலை மாற்றவேண்டும் என்பதுதான் என்னுடைய அவா.மற்ற படி யாரையும் புண்படுத்த நான் எழுதவில்லை. இருப்பினும் உங்கள் பெரிய மனதைப்பாராட்டுகிறேன்.