வலைப்பதிவில் தேட...

Tuesday, August 16, 2011

குற்றால அருவிகளில் குளியல்



வெகு நேரமாகப்பிரதான அருவியில் தண்ணீர் விழுந்து கீழே ஓடிக்கொண்டிருப்பதைப்பார்த்துக்கொண்டே இருந்தாராம் ஒருவர்.
இதைப்பார்த்த மற்றொருவரிடம் அவர் சொன்னாராம்
எவ்வளவு தண்ணி இப்படி வீணாகப்போகுதே என்று
மற்றவர் கேட்டாராம் இவ்வளவு அக்கறையாகக்கேட்கிறீர்களே நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று
அவர் பதில் சொன்னாராம் நான் பால் வியாபாரம்ல பார்க்கிறேன்...


1982 இல் முதன் முறையாக காரைக்குடியிலிருந்து குற்றாலம் சென்றேன். குளிப்பதற்கென்று. மேலே செண்பகா தேவி அருவி வரை அப்போது சென்றோம் சாப்பாட்டு பொட்டலங்களுடன். அன்று முதல் இன்று வரை ஒரு பத்துப்பதினைந்து முறை சென்றிருப்பேன். குழந்தைகள் இருவரை அழைத்துக்கொண்டு இரு முறை ஒரு பத்தாண்டுக்கு முன்பு சென்றதுண்டு அதன் பிறகு நண்பர்களோடு மட்டும்தான்.  நண்பர்களோடு ஒரு தடவை செண்பகாதேவி வரை சென்றிருக்கிறேன். இப்போதெல்லாம் வனத்துறை அங்கீகாரம் பெற்ற பிறகே செல்ல வேண்டுமாம். ஒரு ஐந்தாறு வருடங்களாக அந்த நினைவையே அகற்றி ஆகி விட்டது.


அதன் பிறகுஒரு சீசனுக்கு ஒரு இரண்டு மூன்று தடவை கூட போனதுண்டு. இந்த முறை மனைவி மற்றும் தம்பி, பாப்பாவுடன் (வயது 22,19) . இரண்டாம் சனி ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரதான அருவிக்கு ஒருமுறை மே மாதத்தில் சென்றிருந்தோம். ஒருவர் கூட இல்லை கடைகளும் கூடவேதான். மொட்டையாக அந்தப்பாறை கம்பீரமாக இருந்தது. ஒரு சொட்டு தண்ணீர் விழவில்லை. பிறகு பாப நாசம் அகஸ்தியர் அருவிக்கு சென்றோம்.




ஐந்தருவிக்கு ஒரு முறை செல்லும்போது தண்ணீர் வரத்து இல்லை ஆனால் கூட்டமோ ஏராளம். குளிக்காமலேயே வந்து ரூமில் குளித்தோம். இந்தத்தடவை அப்படியில்லை கூட்டமும் கூடுதல். தண்ணீரும் ஏராளமாய். நல்ல குளியல். படகுக்குழாமில் பெடலிங்க் போட்டிங்க் போகலாம என்றேன் குழந்தைகள் வேண்டாம் என்றார்கள்.

 ஐந்தருவிக்கு செல்லும் வழியில் உள்ள விவேகாநந்தர் சிலை






பழைய குற்றாலத்திற்கு ஆட்டோவில் சென்று பாண்டியன் ஹோட்டல் மதிய சாப்பாடு அன்றைக்கு ஒரு காலம் இப்போது பஸ்ஸில் சென்று குளித்து பஸ்ஸிலேயே திரும்ப முடிந்ததும் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சிரமபட்டனர். வரிசையில் நிற்க வைத்து ஜட்டி போட்டவர்களை அடித்து ஏதோ விசில் அடித்து கடமையாற்றினர்.


பெரிய பெரிய வயிறுகளுடன் ஆண்கள் பெர்முடாஸ் அணிந்து அலுங்காமல் நடந்து திரிந்தனர் குளித்து, எண்ணெய் தேய்த்து, குளித்து முடித்து என எங்கு பார்த்தாலும் மனிதத்தலைகள். கருப்பு அங்கிகளுடன் பெண்கள் அவர்களது குடும்பத்தாருடன் மார்பினில் முப்புரி நூலுடன் குடும்பத்தாருடன் சிலர்,  நமக்கு புரியாத பாஷை சகிதம் (சௌராஷ்ட்ர மொழி ?)குடும்பம் குடும்பமாக உரையாடிக்கொண்டு பேசிக்கொண்டு பழங்கதை பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு, மலையாள சம்பாஷணையுடன் சிலர் என பல்வேறு மனிதர்கள் பெண்கள் குழந்தைகள்.

எத்தனை விதங்களில் மனிதர்கள் இருப்பினும் அதை நெல்லை பாஷை பேசி சாமர்த்தியமாக கையாளும் சைக்கிள் வியாபாரிகள் பரோட்டா கடைக்காரர்கள் டாஸ்மாக் கடைக்காரர்கள் நுங்கு பதினி பலாச்சுளை விற்போர், கை ரேகை பார்க்கும் பெண்கள், பொம்மைகள் முதற்கொண்டு மணக்கும் நேந்திரம் பழ சிப்ஸ் விற்கும் கடைக்காரர்கள் மங்குஸ்தான், ரம்டன், பலாப்பழம்,  நாட்டுக்கொய்யா,மனோரஞ்சிதம் சில்லுக்கருப்பட்டி உட்பட விற்போர்களின் களமாக குற்றாலம் நிறைந்திருந்தது.






சிற்றருவியில் ஐந்து ரூபாய் கொடுத்து பெரிய ஷவரில் குளிப்பது ஒரு அனுபவம்தான். அங்கே குரங்குகள் சுற்றித்திரிகின்றன.
திருக்குற்றாலக்குறவஞ்சியில் வருமே ஒரு வரி

மந்தி சிந்தும் கனிகளுக்கு 
வான் கவிகள் கெஞ்சும்


அதெல்லாம் அந்தக்காலம் போல
இப்போதெல்லாம் அந்தக்குரங்குகள் மனிதர்களிடம் பலாப்பழத்துண்டுக்காகவும் பிய்த்துத்தருகிற எண்ணெய் மிதக்கும் மிளகாய் பஜ்ஜிக்கும் கையேந்திக்கொண்டு அலைகின்றன.


கலாச்சார வாழ்க்கையின் ஒரு பகுதியாக இப்படி குடும்பம் குடும்பமாக அல்லது நண்பர்கள் வட்டத்துடன் இயக்கிக்கொண்டிருக்கிறது இயற்கை நம்மையெல்லாம் என தோன்றியது.



புலியருவிக்கு இரவு பத்து மணிக்கு மேல் சென்றால் கூட்டமில்லாமல் இருக்கும். மத்தியான வேளை சென்றோம் குளிக்கும்படியாக இல்லை. சரி என்று சொல்லி உடனே கிளம்பி செங்கோட்டை பார்டர் கடைக்கு (ரகமத்) ஆட்டோவில் பறந்தோம் பிரியாணிக்காக. அப்படியே ரயில்வே ஸ்டஷனுக்கு 4 மணி செங்கோட்டை- மதுரை ரயிலைப்பிடிக்க...

Friday, August 12, 2011

எனக்குரிய இடம் எங்கே?

பேரா. ச மாடசாமி தொடராக"புதிய ஆசிரியன் " மாத இதழில் விவாதித்த, பகிர்ந்த அனுபவங்களைத் தொடராக எழுதியதன் மொத்தத்தொகுப்பு "எனக்குரிய இடம் எங்கே"? என்ற புத்தகம். மிகச்சிறந்த கல்வியாளர் ஒருவரின் தொகுப்பாக வெளி வந்திருக்கிறது. அதில் அவர் விவாதிக்க முன் வைத்த விஷயங்களை வைத்து வெகுவாக கடிதங்கள் வந்திருந்தன புதிய ஆசிரியனுக்கு. அப்போது நான் குஜராத் மா நிலம் கோத்ராவில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

பேரா ராஜு அவர்கள்தான் புதிய ஆசிரியனின் ஆசிரியர்.  அவர் இயற்பியல் பேராசிரியராக விருது நகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த போது வேலை நீக்கம் செய்யப்பட்டார். அதுவரை வருடா வருடம் ஐயப்பன் கோவிலுக்கு மாலைபோட்டு இரு முடி கட்டி சென்று கொண்டிருந்தவர் அவர். நான் புகுமுக வகுப்பு (1976-77) படிக்கும் போது கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்து விட்டது. நாங்கள் கல்லூரிக்குள் செல்லும் போதெல்லாம் வாசலில்" மூட்டா" அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

பேரா ராஜுவை திரும்பவும் பணியிலமர்த்தக்கோரி சாத்வீக வழியிலான போராட்டங்கள் அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. மாணவர்களும் கூட வேலை நிறுத்தம் என்ற நேரடி நடவடிக்கை போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அப்போதெல்லாம் நான் இது போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டது இல்லை. அப்புராணி கடைக்கோடி மாணவன்.

பேரா ச மாடசாமி அவ்ர்களுக்கு நானும் ஒரு கடிதம் எழுதியிருந்தேன் (2002) வலைப்பூவில் பின்னூட்டம் போல புதிய ஆசிரியன் இதழில் பிரசுரம் ஆனது.
புத்தகமாக அவரது பிரசுரமான பகுதிகளைப்பதிப்பிக்கும்போது மிகவும் அசைவை ஏற்பத்தியதாக அந்தக்கடிதத்தை தனது புத்தகத்தில் ஒரு பக்கத்தில் வெளியிட்டார்.

அந்தப்புத்தகத்தை விமரிசனமாக bank workers unity என்ற வங்கி ஊழியர் சங்கப்பத்திரிகையில் எழுதும் போது ( ஜூன் 2008 ) எனது கடிதத்தை அப்படியே பிரசுரம் செய்திருந்தார்கள்.

தோழர் தமிழ்செல்வன் அவர்களின் மகனின் திருமணத்திற்கு கோவில்பட்டி சென்ற சமயம் தோழர் எஸ். வி. வேணுகோபால் அவர்களை சந்திக்க நேர்ந்தது. பாப்பம்பாடி ஜமாவின் ஆட்டத்தோடு கூட அந்தக்கல்யாண விழாவில் ( நாதஸ்வரம், தவில் இல்லாத) அவர் அவர்களது வங்கி இதழில் வெளியிட்டதைக்குறிப்பிட்டார். சென்னை சென்று பிரசுரமான அந்தப்பக்கத்தை எனக்கு ஒளி அச்சில் அனுப்பி வைத்தார். அதன் நகல் கீழே:

உழைக்கும் பகுதி மாணவர்கள் என்றொரு பகுதி இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அமைப்பு ரீதியாகத்திரட்டப்பட்ட தொழிற்சங்கங்கள் இது போன்ற உழைக்கும் மாணவர்கள் விஷயத்தில் தலையீடு செய்தல் நலம்.

தவிரவும் தங்களது வேலையைப்பாதுகாத்துக்கொள்ள, பதவி உயர்வு, சம்பள நிலைப்பு(தொடர்ந்து ஏறி வரும் விலைவாசிக்கொப்ப), பஞ்சப்படி, போனஸ், இருக்கும் இலாகா சார்ந்த சலுகைகள் என தங்களைத்தக்கவைப்பதே அமைப்பு சார்ந்த தொழிலாளர் சங்கங்களின் பிரதான வேலை என்றாகிப்போனது.

1990 இல் பேரா மாடசாமியும் நானும் எழுத்த்றிவு இயக்கம் , அறிவொளி இயக்கம் என்று வேலை செய்யத்துவங்கிய காலங்களில் அவர் குறிப்பிடுவார். தொழிற்சங்க வேலை செய்தால் சம்பள உயர்வு, போனஸ், என்று பொருளாதாரக்கோரிக்கைகள் மட்டும்தான் தெரியும் வாருங்கள் கிராமத்துக்கு அந்த வஞ்சகமில்லாத உழைப்பாளிகளைப்பாருங்கள். உங்கள் உள்ளம் உவக்கும்.

ஆம். வெள்ளையுள்ளம் கொண்ட வெள்ளந்தி மனிதர்கள், மனுஷிகள், குழந்தைகள் அனைவரும் எங்களை அரவணைத்துக்கொண்டாடினார்கள். எந்த நேரம் அவர்கள் இருக்கும் இடம் தேடிப்போனாலும் சரி அன்புதான் நெஞ்சு நிறை அன்புதான் மேல்சட்டை இராது ஆனால் அவர்கள் பேச்சில் மேற்பூச்சு நிச்சயமிராது.

அவர்களோடு நாங்களும் எங்களோடு அவர்களும் மனதளவில் ஒட்டி உறவாடி கற்று, எங்களையும் கற்க வைத்து ( தங்களின் அனுபவங்களோடு) என அது ஒரு பொற்காலம்.

நாங்கள் நடந்து திரிந்தோம் பாட்டோடும், புத்தகங்களோடும், சொலவடைகளோடும், விடுகதைகளோடும் அறிவியல் பரப்பும் ஆர்வத்தோடும் புழுதி படிந்த கால்களோடும் ...

Wednesday, August 10, 2011

தலை முறை இடைவெளி

நரசிம்ம ராவ் அப்போது பிரதமர். மன்மோகன் சிங் நாட்டின் நிதியமைச்சர் உலக மயமாதல் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த நேரம். இப்போது இருபது வருடங்கள் ஓடி விட்டது அது பற்றி ஆங்காங்கே கருத்தரங்குகள் இரண்டரை லட்சம் விவசாயிகள் மரணத்திற்குப்பிறகு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்...
அதே காலகட்டத்தில்  (1991-1996 காலம் )  முதல்வராக இருந்தவரும் இப்போதைய முதல்வருமான ஜெயலலிதா  நரசிம்ம ராவை நோக்கி ஒரு வார்த்தை சொன்னார்.

"உங்களுக்கும் எனக்கும் தலைமுறை இடை வெளி இருக்கிறது".

நரசிம்மராவ் எப்போதும் போல் பதில்எதுவும் பேசாத ஒரு பிரதமராக
(இன்றை நாட்களில் மன்மோகன் சிங் இருக்கிறாரே அதே போல) இருந்தார்.

கவிஞர் வைரமுத்து கூட இதே போல ஒரு கவிதையில் சொன்னார்:

"என் அப்பாவுக்கு
நான் முற்போக்கு வாதி 
எனது மகனுக்கு
நான் பிற்போக்கு வாதி"


கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தினின்றும் முதல் தலைமுறை கல்வி கற்று அரசு மற்றும் அரசு சார்ந்த வேலைக்கு வரும் நபர்கள் கூட இத்போன்ற தலை முறை இடை வெளிக்கு ஆளாகிறார்கள். ஒருவர் வந்து விட்டாலே போதும் அந்தக்குடும்பத்தின்/சந்ததியினரின் வாழ்வில் நிரந்தரமாக ஒளி வீசிவிடும் என்பதெல்லாம் இல்லை ( படிக்காத அரசியல் பின்னணியிலிருந்து வந்திருக்கிற சில அரசியல் குடும்பங்களின் நிலைமை என்பது வேறு)

நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவனாகப்பிறந்து முதல் தலைமுறைப்பட்டம் பெற்று 450 ரூபாய் அரசு சம்பளத்துக்கு வேலைக்குப்போய் , இருக்கிற கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றப்பட்டதே பெருங்காரியம்.

கரண்டு கூட இல்லாத நிலைமையில் கல்யாணம் செய்து வந்த மகராசியின் தயவால் (கரண்டு இல்லாத வீட்டுக்கு கலயாணம் ஒரு கேடா என்ற தொனியில்) கரண்டு இழுத்தது அடுத்த பெரிய காரியம்.


பழைய எஸ் எஸ் எல் சி முடித்து புகுமுக வகுப்பு முடித்து எம் பி பி எஸ் படிக்க விண்ணப்பித்து இன்டர்வியூகிடைக்காமல் போனது (1977இல்) பிறகு பி எஸ் சி பட்டம் (தாவரவியல்1980) முடித்து விட்டு பழைய படியும் பி எஸ் சி எம் பி பி எஸ் ஆவதாகக்கனவு கண்டு அதற்கு எழுதிப்போட்டு பேருக்கு மற்றொரு இன்டர்வியூ சென்று கரைந்து போன கனவுகளோடு தான் அரசு வேலை வாய்த்தது.

ஹிந்து பத்திரிகையில் 50 வருடத்திற்கு முந்தைய செய்தி சிலவற்றை கட்டம் கட்டி ஒரு பதிவாக எழுதி வருவார்கள்.
நானும் எனது தலைமுறைக்கோபத்தை 30 ஆண்டுக்கு முன்பாக கட்டம் கட்டி வந்த ஒரு பதிவை ஒட்டி ஒரு கடிதமாக எழுதினேன். ஆனால் அது வெளி வரவில்லை (பிரசுரமாகவில்லை) ஆயினும் அதன் நகல் இந்தப்பத்வில்  //கடிதத்தின் இறுதியில் கணித மேதை ராமானுஜத்தின் வரிகள் உயிரின் துவக்கம், பிறப்பு, இறப்பு, பூஜ்யம், எல்லையற்ற நிலை//


ஹிந்துவில் வந்த செய்தி இது (10/09/1976)


7 தலைமுறைகள் என்றொரு நாவல் நீலபத்மநாபன் எழுதியிருப்பார். அதை த் தமிழில் "மகிழ்ச்சி" என்ற பெயரில் திரைப்படமாக திரு வ.கவுதமன் இயக்கியிருப்பார்.  நமது வாழ்விலும் மகிழ்ச்சி என்பதைப்பார்க்க 7 தலைமுறைகள் காக்க வேண்டியிருக்குமோ... தெரியவில்லை...

இன்பம் என்று சொல்லக்கேட்டதுண்டு
அது எங்கள் வீட்டுப்பக்கம் வந்தே இல்லை
என்னும் பட்டுக்கோட்டை வரிகள் நிழலாடுகிறது.


Monday, August 8, 2011

"வெயில்" திரைப்படத்திற்கு ஒரு பாராட்டு

விருது நகரில் தேசபந்து மைதானம் என்றொரு  நகரின் மையமான  இடம் இருக்கிறது.வரலாற்றில் இந்த தேசமே எனது நண்பன் என்று பறை சாற்றி ஒரு சரித்திர  நடவடிக்கையாக தனது  பெயரை வடிவமைத்துக்கொண்ட திரு சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் பெயரால் வெகு மரியாதையோடு அழைக்கப்பெறும் ஒரு நகராட்சிக்குச்சொந்தமான  பொது இடம்.

அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலத்தின் முடிவில் நடைபெறும் கூட்டங்களும் உண்ணாவிரதங்களும் புத்தக விழாக்களும் என எப்போது பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். பக்கத்தி ஒரு சுதந்திர தின நினைவுத்தூண் நகர தபால் அலுவலகம் யானைகட்டிக்கிடக்கக்கூடிய ஒரு அம்மன் கோவில், வருஷம் பூராவும் தகரக்கொட்டகையில் முடங்கிக்கிடக்கும் தேர் முட்டி( ஒரு நாள் மட்டும்  சனங்கள் இழுக்க அந்தத்தேர் ஓடும்)

திருவிழாக்காலங்களில் தினசரி நடக்கும் நாடகங்கள். எப்படியும் ஊருக்குள் வசிப்பவர்கள் ஒரு தடவையாவது  அந்த வழியாக  வெள்ளரிக்காய் வெங்காயம் பூண்டு பிளாஸ்டிக் சாமான் கள் என வாங்குவத்ற்கென்றே வந்தாக வேண்டும். காமராஜர்,அண்ணா, கருனா நிதி, ஆசைத்தம்பி, பெ. சீனிவாசன்,  எம் ஜி ஆர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித்தலைவருமே ஏறிப்பேசிய ஒரு மேடை அது. இன்றைய தலைவர்களும் கூடத்தான்.  கலை இலக்கிய இரவுகள் முழு இரவும் 90 களின் துவக்கத்திலிருந்து இன்று வரை அவ்வப்போது என பல அதிர்வுகளைத்தாங்கி நிற்கும் மைதானம் தேசபந்து மைதானம். பொட்டல் என்றும் குறிப்பிடுவார்கள்.காங்கிரஸ் காரர்களின் பெயர் தேசபந்து என்பதால் திராவிடக்கட்சிகள் அம்மன் கோவில் திடல் என்றும் சொல்லுவார்கள்.

பேரா மாடசாமி சொல்லுவார்: ஒரு மக்குத்தலை இன்று மகுடம் சூட்டிக்கொண்டது. அது போன்ற ஒரு நிகழ்வுக்கு விருது நகர் த மு எ ச அமைப்பின் சார்பில் நான் தலைமை ஏற்கும்படியாக ஆனது. ஆமாம் எனது மக்குத்தலையில்  மகுடம் சூட்டி விருது நகரைச்சார்ந்த திரு வசந்த பாலன் என்ற இயக்கு நருக்கு ஒரு பாராட்டு விழாவிற்கான தலைமை அது. டிசம்பர் 2006 இல் அந்தப்படம் வெளியானது. விருது நகர் அப்சரா திரையரங்கில்.
 

27/01/2007 அன்று விழா ஏற்பாடு ஆகியிருந்தது.  ஐம்பது நாளைக்கண்டிருக்க வேண்டிய வெயில் திரைப்படம் அப்போது அப்ஸரா தியேட்டரை விட்டு அகன்றிருந்தது. அந்த விழாவில் நான் தலைமை ஏற்றேன். முதல் படத்துக்கு இசை அமைத்த ரகுமான் அவர்களின் அக்காள் மகன் திரு ஜி வி பிரகாஷ் குமார் வந்திருந்தார்( அப்போது அவருக்கு 18 வயதுதான்). விருது நகரில் வாழும் சிலர் வெயில் படத்தில் நடித்திருந்தார்கள்.பசுபதிக்கு இளவயதுப்பையனாக நடித்தவர், சிரித்துக்கொண்டே தீப்பெட்டி அடுக்கும் சிறுமி( அவர் பெரிய மனுசியாகிவிட்டபடியால் கலந்து கொள்ள முடியவில்லை) நண்பர் போட்டோ பாண்டி, செந்தில் (இவர்கள் ரவி மரியாவுக்கு அடியாளாக வருவார்கள்) ரவி மரியாவும் விருது  நகர்க்காரர்தான். 90 களில் அறிவொளியில் பங்கேற்று இருக்கிறார். திரு வசந்த பாலன் அவரது தம்பி சீத்தாராமன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தார்கள். விளம்பர ஏஜென்சி முத்லாளியாக நடித்த திரு கந்தசாமி, மோகன் போன்றவர்களும் வந்திருந்தார்கள்.


தமுஎ ச மா நிலக்குழு உறுப்பினர் ம.மணிமாறன் திரைப்படத்தைப்பற்றிப்பேசினார். த மு எ ச மாவட்டத்தலைவர் தேனி வசந்தன் மற்றும் த மு எ ச மா நிலப்பொதுச்செயலாளர் ச. தமிழ்செல்வன் படத்தின் நிறை குறைகளை அலசி வாழ்த்திப்பேசினார்கள். இடையிடையே எனது  தலைமைக்குறுக்கீடல்கள்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்ட திரு வசந்த பாலன் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இருவருக்கும் மறைந்த மண்ணின் எழுத்தாளர் மறைந்த  திரு தனுஷ்கோடி ராமசாமி எழுதி மறு பதிப்பாக தோழர் மாதவராஜ் முய்ற்சியால் வெளியிடப்பட்ட "தோழர்" நாவலை ஆளுக்கொன்றாக தலைவர்  என்ற முறையில் பரிசளித்து ,

வெற்றியை தலைக்கும் தோல்வியை நெஞ்சுக்கும் கொண்டு செல்லாதிருக்கும் மன நிலையை இருவரும் தகவமைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு முடித்தேன். நாவலைப்படித்த பிறகு இ மெயில் மூலம் பதிலளிக்கவும் புத்தகத்தின் முதற்பக்கத்தில் எழுதிக்கொடுத்தேன்.

இ மெயில்  இன்று வரை  வருமென்று காத்திருக்கிறேன் இருவரிடமிருந்தும்.

Saturday, August 6, 2011

எழுத்தறிவு எனும் பேராயுதம்

ரமேஷ் பாபு மானுட விடுதலை பிளாக்கில் கல்வியாளர் திரு புதுவை ஜே .கிருஷ்ண மூர்த்தியின்  நேர்காணலைப்பதிவு செய்திருந்தார் "புதிய புத்தகம் பேசுது" மாத இதழுக்காக. அதன் பின்னூட்டமாக நான் இப்படி பதிவு செய்திருந்தேன்:


//1989 இல் திரு ஜே கே, பிரளயன், முகில், வெங்கடேஷ் ஆத்ரேயா என்ற பெரிய வீதி நாடகக்கலைஞர் பட்டாளம் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் B G V S கலைப்பயணத்தை நடத்தியதும் அதன் வேர்கள் என்னை விழுதாகப்பிடித்துக்கொண்டது. அப்புறம் 1990 ஜூலையில் புதுவை அறிவொளியில் சென்று என்னை ஒரு வீதி நாடகக்கலைஞனாக மாற்றிக்கொண்டேன். விருது நகர் வந்து பேரா. ச. மாடசாடி, தனிஸ்லாஸ், குழந்தைவேல் பாண்டியன் ஆகியோர் வழிகாட்டுதலில் நானே ஒரு குழுவை அமைத்து 1990இல் அக் 2 துவங்கி நவ 14 வரை ஒரு 44 நாடகள் காமராஜர் மாவட்டம் முழுதும் சுமார் 165 இடங்களில் வீதி நாடகங்களின் மூலம் அறிவொளி பரவ வேலை செய்தோம். மன நிறைவான பாண்டி அறிவொளி இயக்கத்தின் முன்னோடியின் பேட்டி பாராட்டுதலுக்குரியது//.

அதற்கு அவர் இந்தபதிலை அளித்தார்.

திலீப் நாராயணன், வணக்கம். வாழ்த்துக்கள். பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களை போன்ற தோழர்கள் உங்களின் அனுபவங்களை எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 165 இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்திய அதற்காக உழைத்த, உங்களுடன் பழகிய தோழர்களின் அனுபவங்களை எழுதுங்கள்.

அந்த 44 நாட்கள் புழுதி படிந்த கால்களுடன் மாவட்டத்தையே வலம் வந்தோம்
02/10/1990 அன்று கலைப்பயணம் தொடங்கியது அருப்புக்கோட்டையில் அன்றய மாவட்ட ஆட்சியர் திரு டி எஸ்  சிரிதர் அவர்களின் துவக்கவுரையுடன். அந்த ப்பத்திரிகைச்செய்தி:

ஒவ்வொரு தாலுகாவாகப்பயணம் செய்தோம். பகலில் பள்ளிகளில் இரண்டு நிகழ்ச்சிகள்  இரவில் கிராமங்களில் குறைந்தது இரண்டு  சில நேரங்களில் மூன்று கூட நடத்துவோம். எழுத்தறிவுத்தூதராக ப்பேராசிரியர் ச. மாடசாமி மிகுந்த அக்கரை கொண்டு வழி காட்டுதல் செய்வார். 44 நாட்களில் கிட்டத்தட்ட 165 நிகழ்ச்சிகள் நடத்தினோம்.


பேராசிரியர் தனிஸ் லாஸ் எங்களது குழுவில் ஒருவர். விவசாயத்தொழிலாளி பால் ராஜ் மற்றொருவர். சமூகத்தின் அனைத்துப்பிரிவினரையும் பிரதி பலிக்கும் 22 பேர்களைக்கொண்ட ஒரு குழு குழுவில்  நான்கு பெண்கள். அப்போது +2 முடித்த சகோதரி பூங்கோதை ஒருவர் மற்றொருவர் காந்தீயன்  படிப்பில் முனைவருக்கு தயாராகிகொண்டிருந்த பிரேமா. ஓவிய ஆசிரியர் அழகு, கிராம வங்கி ஊழியர் மூர்த்தி, பட்டங்களைச்சுமந்திருந்த ஆறுமுகப்பெருமாள், உமா சங்கர், ஸ்டீபன் பொன்னையா,முத்துச்சாமி,வெங்கடேஸ்வரி, ஆசிரியர் புலியூரான் சேது கணபதி, எல் ஐ சி ஏஜண்ட் மோகன் குமார், தொலைபேசி ஆய்வாளர் செல்வம் என அது மிகச்சிறந்த பட்டியல்.  நான் தான் குழுவின் தலைவர். நிறைவு விழா ராஜபாளையம் அரசு மேனிலைப்பள்ளியில். துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியரே அங்கு வந்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

அன்பே சிவம் படத்தில் கமலக்குப்பக்கத்தில் வந்து  "தலீவா" என்று சொல்லுவாரே அவர் அப்போது எம் ஏ வரலாறு ராஜுக்கள் கல்லூரியில் படித்துக்கொண்டு எங்களுக்கு ஆனந்தா தங்குமிடத்தில் உதவியாக பேரா ரவிச்சந்திரனோடு. அந்த நிறைவு நால் விழா படத்தை பேரா ச மாடசாமி அப்போது நடத்திய 'வாசல்" இதழில் பிரசுரம் செய்திருந்தார். அந்தப்புகைப்படம் இது:

படத்தில் எனது ஒன்றரை வயதுக்குழந்தை திலிப் சுகதேவை தோளில்
சும ந்தபடி நான்(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)

ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தோம். எனது ஒரே ஆசை அப்போதெல்லாம் கல்வி மறுக்கப்பட்ட   நாலில் ஒரு பகுதி மக்களுக்கான விடுதலை வேள்வியான எழுத்தறிவு இயக்கத்தில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விட்டால் என்னவாக இருக்கும் என்பதாக இருந்தது. ஆனால்  நாங்கள் சென்ற கிராமங்களின் எண்ணிக்கையில் அவர்களுக்காக கலை நிகழ்த்தியது  நாலில் ஒரு பகுதி மட்டுமே அதாவது சுமார் 40 இடங்களாக இருக்கக்கூடும்.

Thursday, July 28, 2011

கோத்ராவிலிருந்து ஒரு குமுறல்

இரண்டரை வருட கோத்ரா வாழ்க்கை நிறைய நினைவுகளைக்கொண்டிருக்கிறது. 2002 ஆம் வருடம் அஜய் தேவ்கான் நடிப்பில் தெ லெஜெண்ட் ஆஃப் பகத்சிங்  என்ற ஒரு திரைக்காவியம் வெளியானது. நானும் எனது தம்பி போன்ற அருமை நண்பன் தீபக்கும் சென்று படம் பார்த்தோம். ராஜ் குமார் சந்தோஷின்  இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் அது ஒரு அற்புதமான படம். வரலாற்று நாயகர் வரிசைப்படம்.

அந்தப்படத்தைப்பார்த்து விட்டு ஒரு விமர்சனம் எழுதி தீக்கதிர் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். தோழர் எஸ் ஏ பி அவர்கள் மேற்கண்ட தலைப்பில் ஒரு கால் பக்கத்திற்கு வெளியிட்டு இருந்தார்( வெளியிடப்பட்ட நாள் 24/06/2002). அதனை இந்தப்பதிவில் இங்கே:

தெ லெஜெண்ட் ஆஃப் பகத்சிங் சமீபத்தில் வெளியான ஹிந்தித்திக்ரைப்படத்தின் பெயர் இது, அஜய் தேவ்கன் பகத்சிங்காகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கும் அற்புதமான நடிப்பு. இசைப்புயல் ஏ ஆர்  ரகுமானின் இசை. சந்தோஷின் இயக்கம். வரலாற்றுப்படம் என்பதால் அளந்து அளந்து ப்ரேம் செய்திருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் ஐந்து படங்கலள் பகத்சிங்கை மையமாக வைத்து இந்தித்திரை உலகம் படம்  எடுத்துக்கொண்டிருக்கிறது.
 மற்ற நான்கு படங்கள்
1931 மார்ச் 31- சாகித்- பாபி தியோல்- சன்னி தியோல் ( வெளி வந்து விட்டது)
பகத்சிங்- ப்ரேம் சாகர் தயாரிப்பில்
ஷாகீத் பகத் சின்க்- தருன் கண்ணா தயாரிப்பில்
ஷாகீத் இ ஆஜம்- சோனு சூட் தயாரிப்பில்
இந்த 5 படங்களும் 2002 இல் அதாவது பகத்சிங்கின்  பிறந்த நூற்றாண்டு
விழாவியைக்கொண்டாட இன்னும் 4 வருடங்கல் பக்கியிருக்கும் பொழுது வெளியாகி யிருக்கின்றன.

ஒரு புரட்சிக்காரனை மையமாக வைத்து இது வரை 8 திரைப்படங்கள் ல்தயாரிக்கப்பட்டு இருப்பது பகத்சிங் ஒருவருக்கு மட்டும்தன். "புரட்சிக்காரர்கள் புதைக்கப்படுவதில்லை; மாறாக விதைக்கப்படுகிறார்கள்" என பொன் மொழி பகத்சின்க் என்ற   மாவீரனின் வரலாற்றைத் திரைப்படமாக எடுத்துஹிந்தித்திரையுலகம் நமது சந்ததியினருக்கு படமாக(பாடமாக) ஆக்கியிருக்ககிறது.
சினிமா உலகில் ஹாலிவுட், அடுத்து பாலிவுட் . விட்டால் கோலிவுட். நமது தமிழ் சினிமாதான் பாலிவுட் தயாரிக்கும் படங்களின் எண்ணிக்கைக்கு ஏடாக சில நேரங்களின் கூடுதலாகவும் திரைப்படங்களை தயாரிக்கும்.  நமது கோலிவுட்டில் இது போன்ற வரலாற்று நாயகர்களுக்கென்று ஏதேனும் படம் எடுக்கக்ப்பட்டிருக்கிறதா என்று தேட வேண்டியிருக்கிறது. ஆம். பி. ஆர். பந்துலு வின் தயாரிப்பில் வெளியான "கப்பலோட்டிய தமிழன்" ,"வீரபாண்டிய கட்டபொம்மன்" மற்றும் கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான "சிவகங்கைச்சீமை". இவை தவிர "பாரதி"யைக்குறிப்பிடலாம்.


பகத்சிங்கைப்பற்றிய  முதல் திரைப்படம் இந்தியில் 1954 இல் அதாவது அவர் தூக்கிலிடப்பட்ட 23 வருடங்கள் கழித்து வெளியானது.
தமிழில் பாரதி படம் 2000 ஆம் ஆண்டு பாரதியின்  நூற்றாண்டு (1982) கழிந்து 18 வருடங்களுக்குப்பிறகு வெளி வந்தது.அந்த வகையில்  ஞான ராஜசேகரன்
( பாரதி பட இயக்குநர்) தமிழ்திரை உலகிற்கு முன்னத்தி ஏர் பிடித்திருக்கிறார். ஆனால் அதை அடியொற்ற எந்தத்தயாரிப்பாளரும் இயக்குநர்களும் தயாரில்லை. நாம் இன்று வரலாறு படிக்கிறோம்.
 சரி ஏற்கனவே வர்லாற்றைப்படைத்து விட்டுச்சென்றவர்களைப்பற்றீய பதிவு புத்தகங்களில் மட்டுமல்ல. திரையுலகிலும் பிரதிபலிக்க வேண்டும்.  மோகமுள் நாவலை படமாக்கிய் திரு ஞான ராஜ சேகரன் "பாரதியை இயக்கியது கூட ஒரு சவால் மூலம்தான். மலையாள ரசிகர் ஒருவரின் வேண்டுகோலை ஏற்று மராத்தி நாடகக்கலைஞனை (சாயாஜி ஷிண்டே) வைத்து எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம். வரலாற்றுக் கதா நாயகர்கள் என்று எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் இன்னும் மக்கள் மனதில் வாழ்பவர்கள் எத்தனை எத்தனை பேர்? வ உ சி, சுப்பிரமணிய சிவா வ வே சு ஐயர்,வைத்திய நாதைய்யர், வாஞ்சி நாதன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன் அயோத்திதாசப்பண்டிதர், வேலு நாச்சியார், மருது இருவர், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களைத்தமிழ்த்திரையுலகம் பதிவு செயய தயாரவது எப்போது? சினிமா ஒரு சக்தி மிக்க சாதனம் என்றார் ரஷ்ய புரட்சித்தலைவர் லெனின்.




ஆனால் நம்மவர்கள் இன்னும் தாலி, அம்மா, தங்கை திவீரன், காதல் இப்படிப்பட்ட சென்டிமெண்டுகலிலும் இன்னும் ஆங்கிலப்பயர்களைத்தமிழ்த்திரைப்படங்கலளுக்கு சூட்டுவதிலுமே குறியாக இருக்கிறார்கள்.
இலக்கை மாற்றினால் இளைஞர்கள் திரைப்படத்தினின்றும் கூட பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை தமிழ்ப்பட நாயகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் புரிந்து கொள்ளும் காலம்தான் எப்போது?
திலிப் நாராயணன்
கோத்ரா
குஜராத்.

Wednesday, July 27, 2011

எனது நிழற்படங்கள்

1976ஆம் ஆண்டு எஸ் எஸ் எல் சி தேர்வில் 459 மதிப்பெண்கள் 600க்கு எடுத்து விருது நகர் ஹாஜி பி செய்யது முகமது உயர் நிலைப்பள்ளியில் பள்ளியிலேயே இரண்டாவதாகத்தேறினேன். விருப்பப்பாடம் வேதியியல் (அன்றைக்கு ரசாயனம்)95 மதிப்பெண் பெற்று பள்ளி முதலாமிடம். 76.5% மார்க்குகள்.

எனது சாதனையாளருடன் ஒரு நாள் பதிவில் குறிப்பிட்ட  திரு வீரபாண்டியன் ஐ ஏ எஸ் அவர்களது பேட்டி 2000 ஆம் வருடம்  வெளி வந்தது அவர் சொன்னார் நான் ஐ ஏ எஸ் ஆக விரும்புகிறேன் என்று. அவர் மேனிலை முடித்த கையோடு வந்த அந்த பத்திரிகைசெய்தியைப்போல நான்  எஸ் எஸ் எல் சி படித்து முடித்தபோது ஒரு செய்தி ஹிந்து நாளிதழில் 10/09/1976 அன்று வெளி வந்தது. அப்போது என் அப்பாவின் ஆசையாக ஒன்றைக்குறிப்பிட்டார். எனது பையன் மருத்துவராக ஆகி ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

1977 இல் விருது நகர் இந்து நாடார்களுக்குப்பாத்தியமான செந்திக்குமார நாடார் கல்லூரியில் புகு முக வகுப்பில் சேர்ந்து 1000க்கு 582மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் வகுப்பில் தேர்வாகி மதுரை மருத்துவக்கல்லூரியில் இண்டர்வியு வரை சென்று வந்ததோடு சரி. அப்போது சிவசாமி என்றொரு கல்லூரி முதல்வர் இருந்தார். அப்போது மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த திரு எஸ் வி சிட்டி பாபு அவர்களுக்கு உறவினர். என்னைப்பார்த்து சில புத்தகங்கள் பேனா பரிசளித்து ரூபாய் 15 விலையில் ஒரு அழகான சேம்பர்ஸ் ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியும் கொடுத்தார். அவரது ஆலோசனையின் படி இளமறிவியல் தாவரவியலில் சேர்ந்தேன். எனது புகுமுக வகுப்பு அடையாள அட்டையின் புகைப்படம்:
தாவரவியலில் என்னை சேரச்சொன்னதன் காரணம் இதுதான். என்னால் புத்தகங்கள் விலைக்கு வாங்க முடியாது அதற்கான வசதி இல்லை. தாவரவியில் என்றால் வேண்டுமென்கிற புத்தகங்களை கல்லூரி நூலகத்திலிருந்து  பெற்று படித்துக்கொள்ளலாம் என்பதுதான். அப்படியே ஆகக்கடந்தன நாட்கள்.  1800க்கு 1250 மதிப்பெண்கள் பெற்று (76.5%) முதலாம் வகுப்பில் இளமறிவியல் பட்டம் பெற்றேன்.  தொலைத்தொடர்பு இலாகாவில் எழுத்தர் வேலை கிடைத்தது.  எனது 90 ஆண்டின் புகைப்படம்
பாரத் கியான் விக்ஞன் சமிதியின் சார்பில் நடை பெற்ற எழுத்தறிவுக்கலைப்பயணம் (1990 அக் 2 ஆரம்பித்து 1990 நவ் 14ல் முடித்தோம்) 1991 ஜனவரியில் படிக்க ஆரம்பித்து 1994 ஆம் ஆண்டு கணக்கியல் அதிகாரியாகத்தேர்வாகி (அக்கவுண்டன்சி பாடம் படித்து இலாகா விதி முறைகள் தேர்வு 11 தாள்கள் எழுதி பிறகு) மும்பையில் ஒராண்டு சென்னையில் ஓராண்டு என்று பணிமுடித்து பிறகு விருது நகரில் சேவை செய்த நேரம். தாய்த்தமிழ் பள்ளிகளுக்கான ஒரு அறைகூவல் விடுத்தது தினமணி நாளிதழ். அப்போது எனது தம்பி மாதவனுக்குக்கல்யாணம் (05/02/1999) அந்த நேரத்தில் கல்யாண  நிகழ்வின் நினைவாக ஒரு 501/- ரூபாய் அனுப்பி வைத்தேன். அதன் அசல் .


 அடுத்த பதவி உயர்வில் குஜராத் மாநிலம் கோத்ராவில் ஒரு இரண்டரை ஆண்டுப்பணி கோத்ராவில் எனது படம்

இன்றைய தினத்தின் இப்படியாக நான்

காதோரம் நரைச்ச முடி கதை முடிவைக்காட்டுது என்பார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

காதோரம்  நரைக்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் வாழ வேண்டும் எழுத வேண்டும் பகிர வேண்டும் என்ற ஆசை இன்னும் நிறைய்ய்ய்ய  இருக்கிறது.

Monday, July 25, 2011

கோத்ரா நினைவுகள்



குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிந்த நேரம் அது( பிப்ரவரி 27,2002 காலை சுமார் 8 மணிக்கு) அதை ஒட்டிய நிகழ்வுகளால்  வெளியே எங்கேயும் செல்ல முடியாது. எங்கேயும்ஊரடங்கு. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் வாரியாக ஊரடங்கு (CURFEW) உத்தரவு.  நம்ம ஊரைப்போல ஒரு போலீஸ் 30(2) சட்டம் அல்லது 144 தடைச்சட்டம்( நான்கு பேருக்கு மேல் கூட்டமாக ஒரு இடத்தில் இருக்கக்கூடாது) என்பதையெல்லாம் தாண்டியது ஊரடங்கு. நடமாட்டமே இருக்கக்கூடாது. அல்லது அவர்கள் சொல்லும் நேரத்தில் மட்டுமே ஊருக்குள் நடமாட முடியும்.

ஒரு 12 நாட்கள் நான் தங்கியிருந்த தொலைபேசி நிலைய வளாகத்திற்குள் இருக்கிற குடியிருப்புதான். அவ்வப்போது   தொலைபேசி நிலையத்திற்கு எதிரில் இருக்கும் கலெக்டர் அலுவலகத்தினின்றும் திருமதி  ஜெயந்தி ரவி (DISTRICT MAGISTRATE AND COLLECTOR) குஜராத்தியில் ரேடியோவில் பேசுவார் .


எட்டாம் எண் போலீஸ் ஸ்டேஷன் ஏரியாவுக்கு இரண்டு மணி நேரம் ஊரடங்கு ரத்து என்று செய்தி வரும்  அதைஒட்டி நாங்கள் காய்கறி வாங்க வெளியே செல்ல முடியும். எங்கள் தொலை பேசி நிலையத்தின் பின்னால் தான் மாவட்ட எஸ் பி அவர்களின் அலுவலகம். RAF  என்று பொறிக்கப்பட்ட ஊதாக்கலரில் சீருடை அணிந்த ஆண் பெண் காவலர்கள் வஜ்ரா என்ற வாகனத்துடன் எங்கு பார்த்தாலும் திரிந்தார்கள். குறிப்பாக எஸ் பி அலுவலகத்தில் பல மணி  நேரங்கள் வண்டியிலும் வெளியிலும் இருந்தார்கள்.


நான் தங்கியிருக்கும் கோத்ரா தொலைபேசியகத்திலிருந்து கோத்ரா மாவட்ட தொலைபேசி அலுவலத்திற்கு சென்று வர ஒரு ஜீப் கூட இருந்தது. ஆனாலும் அதில் செல்ல முடியாத நிலைமை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று முறைப்படி நாங்கள் வேலை செய்ய இருப்பதால் எங்களுக்கு ஒரு "பாஸ்" வேண்டு மென்று  அதற்கான மனு கொடுத்து  கலவரம் நடந்து நான் கைந்து நாட்கள் கழித்து 04/03/2002 அன்று ஒரு கடிதம் (பாஸ்) சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் அவர்களின் கையொப்பத்துடன் தரப்பட்டது.


அந்தப்பாஸை வைத்துக்கொண்டு ஊரடங்கு அமலில் இருந்தாலும்கூட நாங்கல் சுதந்திரமாக ஜீப்பில் வெளியில் சென்று வர முடிந்தது. அது மேலும் ஒரு ஒருவாரகாலத்திற்கு. எனது பெயர்" நாராயண்" என்றுதான் இருக்கும். நாராயணன் என்பதெல்லாம் தெற்கேதான் வடக்கே செல்லாது. அந்த உரிமச்சீட்டின் அசல் இதோ:



 







Thursday, June 30, 2011

சாதனையாளருடன் ஒரு நாள்

அது 2000 ஆம் வருடம்  பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வெளி வருகிறது. இரவெல்லாம் புரோட்டா கடையில் வேலை பார்த்து தனது தாயார் தகப்பனாருக்கு உதவியாக இருந்து கொண்டே மாநில அளவில் புவியியல் தேர்வில் 200 க்கு 197 மதிப்பெண்கள் பெற்று  இரண்டாம் இடத்தைப்பிடிக்கிறார் அவர். தினமணியில் புகைப்படத்துடன் செய்தி. அதற்குமுன் பத்திரிகையாளர்கள் அவரைத்தொடர்பு கொள்கின்றனர்.இவ்வளவு மதிப்பெண் பெற்ற்றிருக்கிறீர்களே அடுத்து என்னவாக ஆக விரும்புகிறீர்கள். அவர் அசராமல் ஆனால் உறுதியுடன் பதிலளிக்கிறார். IAS...

ஆம். இன்று அவர் ஒரு இ ஆ ப அதிகாரி. ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்(பயிற்சி) ஆக இருக்கிறார். அவர் திரு வீரபாண்டியன் இ ஆ ப . தந்தையார் எவர் சில்வர் பாத்திரங்களை தலைச்சுமையாக விற்று வரும் ஒரு சிறு வியாபாரி. அவரது தாயார் மதுரை அண்ணா நகர் அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவுத்தொழிலாளி.
அவர் இ ஆ ப ஆவார் அவரை சந்திப்போம் என்று நான் நினைத்திருக்கவில்லை.


விருது நகர் மாவட்டம் தோழர் ஜக்கையன் (நிறுவனர் அருந்தமிழர் விடுதலை இயக்கம்) அவர்கள் மூலமாக திரு வீரபாண்டியன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.அவர் விடுமுறையில் மதுரை வந்தால் சிவகாசியில் சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தார். அந்த வகையில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி அவருடன் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. விருது நகரிலிருந்து அவருடன் காரில் சென்றோம். சிவகாசியில் "செடொ" என்ற பெயரில் என் ஜி ஒ நடத்திவரும் திரு சக்தி வேல் அவர்களுடைய அலுவலகம் சென்றோம்.

அவரது பயணத்திட்டப்படி அருகில் இருக்கும் பூவ நாதபுரம் அருந்ததியர் குடியிருப்பு சென்றோம். அந்த கிராமத்தில்  பாலமுனியாண்டி என்ற ஒரு மாணவன் பத்தாம் வகுப்புத்தேர்வில் 500க்கு 460 மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருந்தார். அவருக்கு சின்னதாக ஒரு பாராட்டு அது.

1990 நவம்பரில் பாரத் கியான் விக்யான் சமிதி என்ற அமைப்பின் சார்பில் அந்த ஊரில் அருந்ததியர் அல்லாத மக்கள் வசிக்கும் குடியிருப்புப்பகுதியில் கல்வி கற்றலை வலியுறுத்தி கலை  நிகழ்ச்சி நடத்தியது நினைவுக்கு வந்தது அந்த ஊரைச்சேர்ந்த திரு ராஜேந்திரன் எல் ஐ சி  நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.  மத்திய அரசின் உதவியுடன் நடைபெற்ற கலை நிகழ்ச்சி அது 1990 அக் 2 தொடங்கி 1990 நவ14 வரை 44 நாட்கள் 165 நிகழ்ச்சிகள் நடத்தினோம்.

நாங்கள் சென்ற பொழுது பூவ நாதபுரத்து 
ஊர்ப்பெரியவர்கள் இளைஞர்கள், சிறியவர்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொண்ட கூட்டமாக அது இருந்தது

திரு வீரபாண்டியன் ஆற்றிய உரையிலிருந்து இனி:
படிப்பது எளிதானதுதான். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் பொருத்துக, ஒருவரி வினா விடை, பாராவடிவ வினா விடை ,பெரிய வினா விடை என்று இருக்கும் பாடத்தை படித்து விட்டால் அதற்கான விடையை எளிதில் கண்டு கொள்ளலாம். தேர்வில் அதை எழுதினால் பாஸ் ஆகி விடலாம்.

ஆனால் நமக்கு இருக்கும் சுமைஎல்லாம் தேர்வுக்கு பணம் ஏதும் செலுத்தச்சொன்னால், அல்லது வேறு எந்த வகையைலாவது பள்ளியிலிருந்து சிறிதாகவேனும் பணம் கட்டச்சொன்னால் நமது பெற்றோர்கள்  நீ படித்தது போதும் தீப்பெட்டி ஆபீஸ் அல்லது பயர் ஆபீஸ் போ என்று நமது பிள்ளைகளை இடை நிறுத்தம் செய்யும்படி தூண்டுவதுதான். இந்தச்செயலை எந்தப்பெற்றோரும் செய்யாமல் இருக்க வேண்டும். பிள்ளைகளும் நான் படித்தே தீருவேன் என்று முடிவு கட்டிக்கொள்ள வேண்டும். நானும் கூட சிறு வயதில் என்னுடைய அம்மாவுக்குத்துணையாக துப்புரவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறேன்; அப்பாவுக்கு உதவியாக பாத்திரம் விற்க சென்றிருக்கிறேன்;பிராய்லர் கோழிக்கடையில் வேலை செய்திருக்கிறேன்; புரோட்டா கடையில் வேலை செய்திருக்கிறேன். ஆனாலும் கல்வியைக்கைவிடக்கூடாது என்று எண்ணியிருந்தேன்.

அதன் வெளிப்பாடுதான் +2வில் சாதனை மாணவனாக வெளிவந்தது. எனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இப்படி படிக்கிற பையனை நாம்  நமது வேலைக்கு உதவியாக இருக்கச்சொல்லிவிட்டோமே என்று வருந்தியிருக்கிறார்கள். கலைஞர் குடும்பத்தோடு சென்னைக்கு அழைத்து எனக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியபோது எனது பெற்றோர்கள் கண் கலங்கினார்கள்.  அதன் பிறகு லயொலா கல்லூரியில் பட்டம், முதுகலைப்பட்டம், மனித நேய அறக்கட்டளையில் ஐ ஏ எஸ் படிப்பு விளைவாக கை கூடிய இ ஆ ப தேர்வு.

முசௌரியில் பயிற்சி பிறகு நல்கொண்டாவில் போஸ்டிங்.
பெற்றோர்களே நமது கஷ்டம் நம்மோடு போகட்டும். குழந்தைகளை எந்தப்பாடு பட்டும் படிக்க வையுங்கள். தயாரா என்று கேட்டார்.ஒன்றிரண்டு பேர் கைதூக்கி கண்கலங்கி ஆதரவு தெரிவித்தார்கள்.அதுதான் அந்தகூட்டத்தின் வெற்றியாக இருந்தது.

Saturday, June 4, 2011

சங்கப்பாடல் ஒன்று

தமிழில்
முதற் சங்க காலம்
இடைச்சங்க காலம்
கடைச்சங்க காலம்
இன்றோ
தொழிற்சங்ககாலம்
எங்கு  நோக்கினும்
ஆர்ப்பாட்டங்களும்
ஊர்வலங்களும்
போராட்டங்களுமாக

என்று கவிஞ்ர் கந்தர்வன் குறிப்பிடுவார்.

எனக்கும் ஒரு முப்பதாண்டு தொழிற்சங்க அனுபவங்கள் உண்டு
அப்படியான தொழிற்சங்கக்கவிதை ஒன்று
அது 1904 ஆம் ஆண்டில் "மெட்டல் ஒர்க்கர்"என்ற தொழிற்சங்கக்ப்பத்திரிகையில் வெளி வந்தது
இருபதாண்டுக்கு முன்பு வெளி வந்த எம். கே. பாந்தே அவர்கள் எழுதிய"இந்திய நாடு விற்பனைக்கல்ல" என்ற இரண்டு ரூபாய் சி ஐ டி யு வின் கடைசிப்பக்கத்துக்கவிதை அது
இன்றைக்கும் அது பொருத்தமாக இருக்கிறது:



வீழ்வோமாயினும் வெல்வோம்

நூறாயிரம் தடவைகல் தடுமாறி இருக்கிறது
தலைகுப்புற விழுந்திருக்கிறது சிராய்த்துக்கொண்டிருக்கிறது
மீண்டும் எழுந்திருக்கிறது தொழிலாளர் இயக்கம்

கழுத்து நெரிக்கப்பட்டிருக்கிறது
மூச்சுத்திணறி உணர்விழந்திருக்கிறது
நீதி மன்றங்களால் தண்டிக்கப்பட்டு

தாக்கப்பட்டிருக்கிறது அடியாட்களால்
தடியடி பட்டிருக்கிறது காவல் துறையால்
சுடப்பட்டிருக்கிறது ராணுவத்தால்

அவதூறு பொழியப்பட்டிருக்கிறது பொதுமக்களால்
மிரட்டப்பட்டிருக்கிறது மதகுருக்களால்
திசை திருப்பப்பட்டிருக்கிறது அரசியல்வாதிகளால்


நிராகரிக்கப்பட்டிருக்கிறது ஓடுகாலிகளால்
உதிரம் உறிஞ்சப்பட்டிருக்கிறது புல்லுருவிகளால்
ஊடுருவப்பட்டிருக்கிறது உளவாளிகளால்

காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது துரோகிகளால்
பாரம்பரியம் இழந்திருக்கிறது பச்சோந்திகளால்
விலை பேசப்பட்டிருக்கிறது தலைவர்களால்
கை விடப்பட்டிருக்கிறது கோழைகளால்

இத்தனையும் மீறி இவ்வளவும் தாண்டி
இந்தப்புவிக்கோளம் இது நாள் வரை அறிந்தவற்றுள் எல்லாம்
ஜீவனும் திறனுமுள்ள சக்தியாய் காலங்களின் அடிமைத்தளையிலிருந்து
பாட்டாளி வர்க்கத்தை விடுவிடுவிப்பதுதான- தனது
சரித்திர கடமையை நிறைவேற்றும்

அடைந்தே தீரும் இறுதி லட்சியத்தை!
சூரியன் அஸ்தமிக்கும் என்பது போல்
நிச்சயமாய்.


Friday, May 27, 2011

ஒரு சாலை விபத்து




சர்தார்ஜி ஜோக்கில் ஒன்று:
ரயில்வே  வேலைக்கான நேர்காணலில் ஒரு சர்தார்ஜி கலந்து கொள்வார். அவரிடம் கேட்கப்பட்ட
கேள்வி: இரண்டு ரயில்கள் எதிர் எதிர் திசையில் ஒரே தண்டவாளத்தில் செல்லும்படியான நிலைமை நேரிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் .
பதில்: உடனே எனது தம்பிக்கு போன் செய்வேன்.
கேள்வி: எதற்காக
பதில்: அவன் இதுவரை நேரடியாக எந்த ரயில் விபத்தையும் பார்த்ததே இல்லை.
நேர்காணல் கண்டவர்கள் மிரண்டு போவார்கள்.
எனது பதின் வயதுகளில் ஒரு கோர விபத்தை நேரடியாகப்பார்த்ததன் வெளிப்பாடாகவே இந்தப்பதிவு.

அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். கோட்டூர் குருசாமி கோவில் சின்னையாபுரம் அம்மாவின் ஊர். விடுமுறை நாளில் அங்கே சென்று விட்டு   நம்பர் டவுன் பஸ்ஸில்   மாமா பாண்டியுடன் விருது நகர் வந்து கொண்டிருந்தோம். பஸ்ஸில் நல்ல கூட்டம் . இப்போது கலெக்டெர் அலுவலகம் உள்ள இடத்திற்கருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டரில் வந்தவர் பஸ்ஸில் மோதி விட்டார். பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடப்புறம் உள்ள வேலிக்கருவேலை அடர்ந்த பள்ளத்தில் போய் தட்டுத்தடுமாறி நின்றது.

பஸ்ஸின் படிக்கட்டில் கூட ஒருவர்  உட்கார்ந்திருந்தார். அவருக்கு நல்ல அடி ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. ஊரிலிருந்து கொண்டு வந்த நிலக்கடலைப்பை டிரைவரின் சீட்டுக்குப்போய் முட்டியிருந்தது.  கோவென்ற கூச்சல் கதறல் ஆண் பெண் குழந்தைகள் என.
வண்டி நின்றதும் ஒரு வழியாக  நிலக்கடலைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கினோம். வெள்ளை வேட்டி கிழிந்திருந்தது மட்ட மல்லாக்க விழுந்து கிடந்தார்  ஸ்கூட்டர் அப்பளம் போல் நொறுங்கி விட்டிருந்தது. காலை லேசாக அசைத்தார். அவ்வளவுதான். ஏறக்குறைய முடிந்து விட்டது. சனங்கள்  விருது நகர் வருவதற்கு பஸ்களைத்தேட ஆரம்பித்தனர். கடலைப்பொட்டணத்தை தோளில் வைத்துக்கொண்டு அப்படியே ரயில் தண்டவாளம் வழியாக முத்துராமன் பட்டி போய்ச்சேர்ந்தோம் வீட்டுக்கு.


இரவெல்லாம் பளீர் பளீர் என்று முழிப்பு தட்டியது. அழுது கொண்டேன். அம்மாவிடம் இறந்து போனவரின் நினைவு என்னைக்கொல்லுகிறது என்னால் தூங்க முடியவில்லை என்றேன். ஒரு விளக்கமாறு ஒரு மொட்டை அரிவாள் எடுத்து தலைமாட்டில் வைத்து தூங்கு என்றார்கள்.  தூங்க முயற்சித்து மீண்டும்  நினைவு வந்து எழுந்தேன். அம்மாவிடம் அழுதேன். அவருக்குதான் நேரம் வந்து போய் விட்டார் உனக்கு ஒன்னும் ஆகாது என்று ஆற்றினார்கள்.


மறு நாள் பள்ளிக்குப்போன பிறகுதான் சில விபரங்கள் தெரிய வந்தது விபத்தில் இறந்து போன அவர் விருது நகர் சென்ட்ரல் சினிமாத்தியேட்டரை எம் எஸ் பி யிடம் லீசுக்கு எடுத்து நடத்திக்கொண்டிருந்தவராம் .அப்போது சிவகாமியின் செல்வன் ஓடிக்கொண்டிருந்தது. அவரது சகோதரர் வெளி நாட்டில் மருத்துவம் படிப்பதாகவும் கேள்வியுற்றேன். ஒரு விபத்தைப்பார்த்த ஒரு பதின் வயதுப்பாதிப்பே இவ்வளவுதூரம் இருக்கும்போது  அவரது 
குடும்ப உறுப்பினர்கள் அவரைச்சார்ந்த சொந்த பந்தங்கள், நண்பர்கள் என எவ்வளவு வருந்தியிருப்பார்கள்.

இப்போதெல்லாம் நாளிதழ்களில் சாலை விபத்துக்களைப்பற்றிய செய்திகள் இல்லாமல் இருப்பதில்லை விபத்துக்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 22 மே 2011ஆங்கில  இதழில் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அவை இதோ:

சராசரியாக ஒரு நிமிடத் திற்கு ஒரு விபத்து. நான்குநிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றார். சாலை விபத்து களால் பலியாகிறவர்களின் எண்ணிக் கை அபாயகரமான அளவுக்கு அதிகரித் துள்ளது. விபத்துக்களில், குறைந்த வரு வாய் உடையவர்கள் மரணமடைவதும் அதிகரித்து வருகின்றது.

கடந்த ஆண்டு சாலைவிபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 1.6 லட்சமாகும். 2009ம் ஆண்டு 1.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஓராண் டில் 28 சதவீதம் அதிகரிப்பு என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

ஒரு மணி நேரத்தில் ஒருகிலோமீட்டர் (கேஎம்பிஹெச்) வேகத்தை அதிகப் படுத்துவதனால் மரணமடைவதற்கான வாய்ப்புகள் 3 சதவீதம் அதிகரிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக் கை செய்கிறது. உதாரணமாக, 10 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் சிக்குவதற் கும் 70 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் சிக்கும்போது மரணத்திற்கான வாய்ப்பு கள் பல மடங்கு அதிகரிக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.


Wednesday, May 18, 2011

மரண வாயில்




பெரியப்பா ஒருவர் இருந்தார். பெயர் மகாலிங்கம். முத்துராமன்பட்டி பவுண்டுத்தெரு காளியம்மன் கோவில் பூசாரி. சாமி வருகிறதோ இல்லையோ கர்ண கடூரமாக முழித்துக்கொண்டு புரண்டு கோவில் வளாகத்தயே ஒரு சுத்து சுத்தி வருவார்.

அவர் சுடுகாட்டு வேலையில் கெட்டிக்காரர்.பிணம் விழுந்தால் போதும் எரிக்க அல்லது புதைக்க போர்க்கால அடிப்படையில் வேலைகள் கன ஜரூராக நடத்தி முடித்து விடுவார். செத்துப்போன சாதிக்காரர்கள் தேர் தூக்க வரவில்லையென்றாலும் கூட தன் இன  பந்துக்களில் . ஒரு நாலு பேரை அமர்த்தி அவர்களை தேர் தூக்க வைத்து சுடுகாடு வந்தவுடன் அவர்களுக்கான கூலியை ப்பேசியபடி வாங்கிக்கொடுப்பதில் கில்லாடி.


மற்ற நாட்களில் செருப்பு தைப்பதற்காக முத்துராமன்பட்டி முழுதும் சுற்றி வருவார். செருப்பு தைக்கக்கொடுப்பவரின் முகம் கோணாமல் சரி சாமி இந்தா சாமி நீங்க போய்ட்டு வாங்க சாமி சரி செய்துவிடுகிறேன் சாமி என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனை மனதுக்குள் திட்டுவார். நாயக்கமார் தெரு அல்லம்பட்டி செட்டிமார் தெரு என்று சுற்றி வரும்போதே யாரேனும் வயதானவர்கள் முடியாமல் கடைசிகாலத்திற்காக ஏங்கிப்படுத்திருந்தால் பெரியப்பாவுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

காரணம் இதுதான். ஒரு பிணம் விழுந்தால் செருப்பு தைத்து கிடைக்கும் பணத்தை விடவும் கொஞ்சம் கை நிறையக்காசு கிடைக்கும். தேர் வாடகை, குழி வெட்ட, எரிப்பதென்றால் விறகுவாங்க வைக்க என்று எல்லாம் போக கையில் கொஞ்சம் மிச்சப்படும். அளவான குழி வெட்டி அதிலும் சைஸ் பத்தாமல் போனால் தலைமாட்டுக்கு பரித்து விட்டு சரியாகப்பிணத்தை வைத்து புறங்கையால் மண்ணைத்தள்ள்ச்சொல்லும் சித்திரம் சொல்ல முடியாதது. செத்துப்போனவன் இவரை உயிரோடு இருக்கும் போது ஏதேனும் பேசியிருந்தால் அவன் எரியும்போது இருக்கிறது கட்டைக்கம்பு அடி.

தெரு வழியாக நடந்து போகும் போது அப்படி யாரேனும்  நோயுற்றவர் தட்டுப்பட்டால் அவரது வீட்டுக்கு அருகில் போகும் போது புலி ஒன்று பதுங்கிப்போவது போல நடப்பார். பாதங்களின் சத்தம் கூட திண்ணையிலிருக்கும் வீட்டாருக்குக்கேட்காது. லேசாக சாமி! சாமியவுக எப்படி இருக்காக என்பார். வீட்டுக்காரர் பரவயில்லப்பா மகாலிங்கம் கொஞ்சம் பால் குடிக்கிறார் என்றால் போதும். கடுமையான கோபம் வந்துவிடும் அந்தக் கோபத்தை வெளிக்காட்டமாட்டார். இருக்கட்டும் சாமி நல்லா இருக்கட்டும் என்று பொய்யாக வாழ்த்தி விட்டு வந்து விடுவார்.

வந்து தெரு முனையில் உட்கார்ந்து கிடைத்த ஒன்றிரண்டு செருப்பைத்தைக்க உட்காரும்போது யாரேனும் சொந்த சாதிக்காரர்கள் வந்து என்னப்பா என்று சரசம் விசாரிக்கும் போது அப்படியே சுடுகாட்டு வேலைக்கு பிணம் ஏதும் வரவில்லை என்ற மேட்டரும் வரும். அப்போது  அந்த்த்தெருவில் ஒரு பெருசு இழுத்துக்கிட்டு கெடந்துச்சே எப்படிப்பா இருக்கு என்று கேட்டால் போதும்
அவருக்கு வரும் ஆவேசம் இருக்கிறதே யப்பா சொல்ல முடியாது

கட்சியைக்காப்பதும் கனிமொழியைக்காப்பதும் ஒன்றுதான் என்று கருணாநிதி  சொன்ன அதே ஆவேசம் அவரது வார்த்தையில் வெளிப்படும்.
பாலு குடிக்கிறானாம்டா வெளங்குமா வெள்ளனே! என்று பற்களை நற நற வெனக்கடித்து விட்டு ரெண்டு கெட்ட வார்த்தையால் விளாசிவிட்டு பீடியை ஒரு சுண்டு சுண்டிக்கொள்வார்.

அவரது சர்வீசில் எரித்த பிணங்கள் தான் எத்தனை எத்தனை    தாயின் கருவறையில் இறந்தது, பிறந்தவுடன் செத்தது, அம்மை கண்டு குளிர்ந்து போனது,நாண்டுக்கிட்டு செத்தது, கிணற்றில் விழுந்து ஊறிப்போய்க்கிடந்தது வயது முதிர்ச்சியால் இறந்தது போஸ்ட்மார்டம் ஆகி சுடுகாட்டுக்கு வந்தது என

பிணம்   நாறிப்போய் புழுத்துக்கிடந்தால் உயிரோடு இருக்கிற சனங்களுக்குதான் எத்தனை சீக்கு சிக்கலு.  ஒட்டு மொத்த சமூகமும் சந்தோஷமாக நோயின்றி இருக்க இப்படியான பிணங்களை எரிக்கும்/புதைக்கும் ஒருவனை எப்படித்தான் "வெட்டியான்" என்று இந்த சமூகம் சொல்லுகிறதோ தெரியவில்லை. உண்மையில் அவர்கள் "உருப்படியான்"கள்.

ஒன்றிரண்டு முறை அவரோடு சுடுகாட்டு வேலைக்கு  கூலிக்கு தேர் தூக்க என்று சுடுகாட்டு வேலைக்குப்போன அனுபவம் உண்டு. ஏற்கனவே வெட்டப்பட்ட குழியைத்தேர்ந்தெடுத்து அதை வெட்டி அடியில் அரை குறையாகக்கிடக்கும் கை எலும்புகள் கால் எலும்புகள், மண்டையோடு, தலைமுடிகள் அனைத்தையும் அதன் வாசத்தோடு அள்ளி புதிதாக வரப்போகும் பிணத்தின் சொந்தக்காரகளுக்குத்தெரியாமல் போட்டு விட்டு. அவர் சொல்லும் காரணம் அற்புதமானது. புதியதாகக்குழி தோண்டினால் காலதாமதம் ஆகும். அதற்குள் பிணம் சுடுகாட்டுக்கு வந்தவிடும் பிறகு நம்மை சாதியைச்சொல்லிகேவலமாகப்பேசுவார்கள் என்பதுதான் அது


அப்போது கோத்ராவில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். கோத்ரா ரயிலெரிப்பு நடந்து ஒரு 12 நாட்கள் அலுவலகமே செல்ல முடியாமல் இருந்து மீண்டும் வசந்தம் வந்து அலுவலகம் சென்று இரண்டு மூன்று நாட்கள் ஆகி யிருக்கும். 58 ராம் சேவக்குகள் தீயிடப்பட்டு  இறந்ததை அடுத்து குஜராத் மண்ணே இந்துத்துவா பரிசோதனைக்கூடம் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்த நேரம்.  குஜராத் சமாச்சார், சந்தேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பூராவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட  மனிதர்களின் கருகல் வாசம் வீசிக்கொண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கொருமுறை வீட்டுக்கு தொலைபேசியில்  மனைவியுடனும் குழந்தைகளுடனும் பேசிக்கொள்வது வழக்கம். சமயங்களில் தினமும் அல்லது ஒரே நாளில் இரண்டு முறை பேசிக்கொள்வோம். அப்படி ஒரு முறை நான் பேசும்போது எனது மனைவி அந்த பூசாரி மகாலிங்க மாமா செத்துப்போய்ட்டருங்க என்று சொன்னார்கள். என்னையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது. கட்டுப்படுத்த முடியவில்லை.

வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடத்திற்கு அவர் சென்று விட்டார்.

நமக்கு எப்போது என்பது தெரியவில்லை



Monday, May 16, 2011

எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி?

1991இல் முதன் முதலாக ஜெயலலிதா ஜானகி அணியை ஒன்றிணைத்து இரட்டை இலையைத்தக்க வைத்து தமிழகத்தின் முதல்வரானார். 1996 இல் அவரது அராஜக பகட்டான கட்அவுட் கலாச்சாரத்தினாலும், சக மனிதனை மதிக்காத போக்கினாலும், சனாதன தர்மத்தைக்காக்கும் விதமாக முரளி மனோகர் ஜோஷியின் வழியில்  சமஸ்கிருதம் மற்றும் வேத பாடசாலைகள் அமைப்போம் என திராவிட கட்சித்தலைமை கொண்ட ஜெ சனாதன தர்மத்தை மேற்கொள்ள எத்தனித்தார். விளைவாக  தமிழக மக்கள் அவருக்கு ஓய்வு கொடுத்தனர்.


1996இல் மீண்டும் மூன்றாவது முறையாக முதல்வரானார். காரணம் என்னவென்றால் அந்த அம்மையார் இல்லைஎன்றால் கருணா நிதி என்ற புரிதல் தான். இவரும் ஒரு ஐந்து ஆண்டு காலம் ஆண்டார் இவர் உழவர் சந்தையில் காய் கறிகள் விற்க ஆணையிட .மருமகன் மாறன் உலகவங்கியில் இந்தியாவை அடமானம் வைக்க தொழிலாளர் துறை மந்திரியாக இருந்து சாதித்தார். ஊடுதட்டில் மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சன் தொலைக்காட்சிக்கு அவரால் ஆன டெல்லி முயற்சிகள் நிறைவேற கருணா நிதியால் மா நில அளவிலான உதவிகள் தொடர கலா நிதி மிகப்பெரும் புள்ளியாக வழி வகுத்தார் ஆனாலும் மக்கள் பிரச்சனைகளில் எந்த மாற்றமும் இல்லை காங்கிரசின் அடி வருடியாக பாரதீய ஜனதாவுக்கு எப்படி இருந்தாரோ அதே அளவு கோலை காங்கிரசுக்கும் கடைப்பபிடித்தார்கள். ஒரு ஐந்து ஆண்டுகள்தாம்.


2001இல் அவரது கோட்பாடுகள் சரியில்லை என்று சனங்கள் முடிவு செய்து மீண்டும் ஜெயாவை ஆட்சியில் உட்கார வைத்தார்கள்.
அரசாங்க ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் 95% என்று தவறான புள்ளி விபரங்களை அள்ளி வீசினார். ஒரே உத்தரவில் 1,76,000 ஊழியர்களை பதவி நீக்கம் செய்தார் ( ராசாவின் ரூபாய் 1,76,000 கோடி 2 ஜி ஊழல் போலத்தான் இதுவும். அவர்கள் மனிதர்கள் இவைகள் ரூபாய்கள்). அட்டவணை சாதியினர், பழங்குடி மக்கள் மதம் மாறக்கூடாது என்று இரும்புச்சட்டம் இயற்றி இந்துத்துவா மோதியையே மிரட்டினார். பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் காலகாலமாக தங்கள் விளைச்சலைக்கொண்டாடும் விதமாக இருந்த குலதெய்வங்களுக்கு ஆடு கோழி பலியிடுவது என்ற பரம்பரைப்பழக்கத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக சட்டங்கள் இயற்றினார்.


2006: நமது மக்களுக்கு வேறு யாரையுமே தெரியாது மீண்டும் கருணா நிதியை
மீண்டும் முதல்வராக்கினார்கள். இலவச டிவிதான், ஒரு ரூபாய் அரிசிதான் ( அதை வாங்க அரசு செலவிடுவது என்னவோ 5 ரூபாய்தான்) அரசு கேபிள் அறிவிப்புதான் திருமங்கலம் ஜெயிப்புதான் , மானாட மயிலாடதான், மூன்று பகாசுர படக்கம்பெனிகள்தான் குடும்பத்தினர் ஐவர் உயர்மட்டக்குழுவில் உறுப்பினர்தான் அவர்கள் அனைவரும் முக்கியப்பதவிகள் தான் ( என் வி கே சம்பத், கே ஏ மதியழகன், அண்ணா, நெடுஞ்செழியன், என் வி  நடராசன் என்ற ஐவர் எல்லாம் அந்தக்காலம்....) கழகமே குடும்பம் குடும்பமே கழகம்தான். மணற்கொள்ளைதான், கற்கொள்ளைதான், மின் வெட்டுதான், விலைவாசி உயர்வுதான், ஆட்சியிலிருந்தும் தட்டிக்கேட்க முடியாத பெட்ரோல் உயர்வுதான், உலகத்தமிழ் மா நாடென்ன செம்மொழி மாநாடுதான் என்று கலக்கி விட்டார் அனைத்து மனிதனிடத்திலும் ஏதேனும் ஒரு விதத்தில் உள்ளிருக்கிற கலைஞன் என்ற அனைத்துத்திறமைகளையும் ஒரு முகக்ப்படுத்தி தனது பெயருக்கு அதை உரித்தாக்கிக்கொண்ட "கலைஞர்" கருணாநிதி.


இப்போது மிகவும் நல்லவராகிப்போனார் ஜெயலலிதா. என்ன செய்ய இனி ஒரு ஐந்து ஆண்டுகாலத்தை சுவைக்க தமிழக மக்கள் ஒருமித்து வாக்களித்து இருக்கிறார்கள். மூன்றாவது முறையாக மோடி வந்திருக்கிறார். திராவிட இயக்கத்தில் கலப்படமற்ற இந்துத்துவா, ரூபாய்  2 கோடி உள்ளிட்ட செட்டிங்ஸ் உட்பட சுமார் 1000 கோடி செலவில்  மக்கள் பணத்தில் அவர் கட்டியதால்  அது வேண்டாமென்று மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையாம்.


பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி தரப்பட்ட மின்சாரம், இடம், நீர், தொழிற்சங்க உரிமை பறிப்பு  இவற்றில் எந்த முன்னேற்ற நடவடிக்கையாவது இருக்குமா? தெரியவில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் நான் எனது என்ற திருவிளையாடல் முருகனின் வசங்கள் மீண்டும் ஒலிக்கும்.

எப்படி இருந்தாலும் கடந்த ஐந்து வருடங்களில்  ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் எம் எல் ஏக்கள் என்று எந்தப்பாகுபாடும் இல்லாமல்  அநேகமாக ஏதேனும் ஒன்று அல்லது ஐந்தாறு வரையிலும் கூட எங்ஜினீரிங் கல்லூரிகள், குறைந்த பட்ச எண்ணிக்கை அளவிலான  மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு உழைக்க வேண்டிய நிலையங்கள் நிறைய கைவசம் இருக்கிறது.  அம்மாவின் ஆட்சி முடியும் வரை பொறுமை காத்தால் போதும்  மீண்டும் அவர்கள் கைகளுக்கே அனைத்து அதிகாரங்களையும் திரும்பவும் ஒப்படைக்க தமிழக மக்கள் தயாராக இருப்பார்கள். 1991 தொடங்கி ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இதுதானே நடை முறையாகி இருக்கிறது.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்பார் பாரதியார்.
நாமும் அப்படியே இருப்போமா?

Tuesday, April 26, 2011

ஆண்டிப்பகடை

இப்படித்தான்  என் நினைவு சொல்லுகிறது  அப்போது சௌடாம்பிகை நடு நிலைப்பள்ளியில் ஏழாவது படித்துக்கொண்டிருக்கும் நேரம். முத்துராமன் பட்டியிலிருந்து சாதி சனங்களோடு குடியிருந்த  வீட்டை வித்து விட்டு  மாத்த நாயக்கன்பட்டி  பாதையில் ஒரு இடத்தை வாங்கி  என் தாத்தா கட்டி  இருந்த எங்கள் வீட்டில் குடியிருந்தோம் (கூரை வேயப்பட்ட  மண் குடிசைதான் வேறென்ன?)

கிட்டத்தட்ட இரு நூறு வீடுகள் (தலக்கட்டுகள்). ஒரே இனக்குழுவைச்சேர்ந்தவர்கள் அந்தப்பகுது முழுதும்  எனது சொந்தங்கள்தான்.
என் தாத்தாவின் வயதொத்தவர் ஆண்டிப்பகடை. தாத்தா நான் மூன்றாவது படிக்கும்போதே இறந்து போனார். ஆனால் ஆண்டிப்பகடை அதற்கப்புறம் நாலைந்து ஆண்டுகள் இருந்தார்.  நல்ல கறுத்த நிறம் . வேட்டியை எப்போதும் தார்ப்பாய்ச்சி கட்டிதான் இருப்பார். அவரது மனைவி பூச்சிக்கிழவி.

அவர் ஒரு குதிரை வைத்திருந்தார். அது மிகவும் ஆரோக்கியமான அரபுக்குதிரையன்று. அவரது குடுமியைப்போலவே மெல்லிதான வால் அந்தக்குதிரைக்கு. எங்களுக்கு அந்தக்குதிரையை வேடிக்கை பார்ப்பதுதான் வேலை. அவர் விரட்டி விரட்டி விடுவார் எங்களை.



அவர் அந்தக் குதிரையை அப்படியே கடிவாளம் சார்ந்து இயங்கும் தோலாலான ஒரு நீண்ட வாரைப்பிடித்து லாவகமாக அழைத்துக்கொண்டு தெற்குப்பக்கமாக கல்பொறுக்கி சாமி யைத்தாண்டினால்   சுடுகாடு. மாத்த நாயக்கன்பட்டி சனங்கள் எல்லம் அந்த வழியாக வரும்போது அந்த மஞ்சனத்தி மரத்தடியில் கிடக்கும் கற்குவியலில் ஒரு கல்லை எடுத்துப்போட்டுவிட்டுப்போவார்கள். அதுதான் எங்களுக்கு கல்பொறுக்கி சாமி.

அந்தக்கோவிலைத்தாண்டி சீமைப்புல் பக்கம் போய் குதிரையை  புல் மேய விட்டு கொண்டு வருவார். கையில் ஒரு சாட்டைக்குச்சி வைத்திருப்பார். நாங்கள் பின்னாடியே ஓடி வந்து கொண்டிருப்போம். விரட்டுவதும் சிதறி ஒடுவதும் பின்னால் தொடருவதும் வாடிக்கையானது  அந்தப்பதின் வயதுகளில். அந்தக்குதிரைக்கு கால் குளம்பில் ஏதோ புண் மாதிரி வந்து அந்த இயல்பு நடை மறந்து போய் அவரும் வேறு வழியின்றி அதை யாருக்கோ கொடுத்து விட்டார். விலைக்கா என்னவென்று தெரியவில்லை.

இதற்குப்பிறகு ஆண்டிப்பகடை இறந்து போனார் ஒரு நாளில். சுடுகாடு மண்பாலத்துக்கு இடது பக்கத்தில் வண்டிப்பாதைக்கு வடக்கில். அதாவது  கருமாதி மடத்தை அடுத்த சாத்தூர் செல்லும் சாலயில் கௌசிகா மகா நதியின் குறுக்கே கட்டப்பட்ட வெள்ளைக்காரன் காலத்துப்பாலம்.  அதற்குப்பக்கத்தில் இரயில் செல்லும் பாலம் இரும்புப்பாலம்.

சொந்தங்கள் சுருத்துகள் ஊரார், உற்றார்  என அனைவரும் வந்த பிறகு விளக்கு வைத்தபிறகு இறுதிப்பயணத்துக்குத்தயாரானார் ஆண்டிப்பகடை. நாங்கள் எல்லாம் ஒரே குதியாட்டம்தான். கொட்டுக்காரர்களுடன் ஊடே புகுந்து. சில  நேரங்களில் அவர்களின் கொட்டுக்குச்சியில் அடியும் விழும்.

முத்துராமன் பட்டி ரயில்வே கேட் தாண்டி ராமசாமி மடத்துக்கு அருகே வரும்போது ஒருவனை விரட்டி ஓடினேன். அவ்வளவுதான். எதிரே வந்த லைட் இல்லாத சைக்கிள்காரன் மேல் மோதி விழுந்தே விட்டேன். வலது முழங்காலில் சரியான அடி. எழுந்திருக்கவே முடியவில்லை.அழுது கொண்டே இருந்தேன்.  கொட்டுக்காரர்களுடனும் சொந்தக்காரர்களுடனும்  பிணம்  என்னைத்தாண்டி கருமாதி மடத்தை  நோக்கி சென்று கொண்டிருந்தது.


Monday, April 25, 2011

சாதல் நன்று

பாரதியாரின் கவிதைகளில் வரும் ஒரு அற்புத வரி இது.
காற்று, நீர், நெருப்பு, மழை  எல்லாவற்றையும் அதன் குணம்
சார்ந்து பாராட்டுகளாகவே சொல்லிவிட்டு
மனித உயிர் பிரியும்
அந்த நிகழ்வை "சாதல் நன்று" என்பார்.

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது வயதானவர்கள் மரணமடைந்துவிட்டால் போதும் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் மட்டுமே அழுவார்கள்.

எழவு கேட்க வரும் சொந்தங்கள் ஒரு முக்காட்டை ப்போட்டுக்கொண்டு அவரவர் அம்மா அப்பா அணணன், தம்பி இறந்த நிகழ்வுகளைக்கண்களில் தேக்கி ஒப்பாரியாக வரும். ஒரு மூச்சு அழுது விட்டு அப்புறம் பழங்கதை பேசிக்கொண்டிருப்பார்கள்.

'காலையில கூட பழைய கஞ்சி குடிச்சிச்' என்பதும் அந்தக்கடைசிப்பய கல்யாணத்தைப்பாக்ககூடகுடுத்துவைக்கல என்பதுமாய் அது விரிந்து கிடக்கும் ஒரு உலகம்.

கொட்டுக்காரர்கள் ஒரு பாட்டம் அடித்து விட்டு சாயா அடிக்க பிணம் விழுந்த வீட்டுக்காரனிடம் பைசா வாங்கிக்கொண்டு  கொட்டை பத்திரமாக வைத்து விட்டு எங்களைப்பார்த்து  " தொட்டுராதிங்க ஒடைஞ்சி போகும்' என்று சொல்லிச்செல்வார்கள்.

ஆனால் அவர்கள் சாயா குடித்து விட்டு அந்தத்தவிலையும் பம்பையையும் அடிக்கிற அடியில் உடையாததா நாங்கள் தொட்டால் உடைந்து விடும் என்று பின்னால் நினைப்பது உண்டு.

அந்த கொட்டுக்காரர்களுடன் சேர்ந்து வியர்க்க விருவிருக்க ஆடிக்கொண்டு தேருக்கு முன்பாக போகும் லாவகமே தனி.

அதில் பேரன் ஒருவனைத்தேரில் ஏற்றி விட்டு அவன் பயப்படுவதைப்பார்க்க வேண்டுமே! தேரைத்தூக்கி வரும் அந்த நாலுபேரும் ஒரே உயரத்தில் இருப்பதில்லை சாதாரணமாக. லம்பி லம்பி போகும் அப்பயடியான தேரில்  நானும் ஒரு நாளில் ஏழு வயதில்  எங்கள் தாத்தா செத்த நாளில் தேரில் ஏறியவன் தான்.

'கோவிந்தா! கோவிந்தா!!'என்று என்னையும் என்னைப்போல தாத்தாவின் தேரில் ஏறிய பேரன்மார்களும் முழக்கமிடசொல்லுவார்கள். தேரில் தொங்கிக்கொண்டிருக்கும் மலர்களையும் பிய்த்து கீழே சாலையெங்கும் போடவும் வேண்டும். பயந்து போய் பாதியில் அழுது இறக்கி விடசொல்லி அப்புறம் தேருக்கு முன்னால் சென்று ஒரே ஆட்டம்தான்.

இன்றைக்கு (25/04/2011)சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் ஒரு 85 வயது நிறைவடைந்த சாமியார் ஒருவரின் மரணத்தை அடுத்து அவரது 38 வது பிறந்த நாளைக்கூட கொண்டாமல்  டிவியில் அழுது கொண்டிருந்தார். சச்சினின் அழுகைக்கு முன்பாகவே நேற்றிலிருந்தே நிறையப்பேர் கண் கலங்கி அழுததை ஐ பி என் , என் டி டி வி ஒளிபரப்பிக்கொண்டே இருந்தன.

கொண்டாட வேண்டிய சாவை ஏன் இப்படி அழுது தீர்க்கிறார்கள் என்பது எனக்குப்புரியவில்லை.

தனது 14 வயதில் தேள் கொட்டியதாம் அப்போது ஒரு பொய் சொல்லியிருக்கிறார் நான்தான் ஷீரடியின்  உருவம் என்று  இன்றைக்கு 40ஆயிரம் கோடி ரூபாய் சொத்து புட்டபர்த்தி என்ற கிராமத்தில் மட்டும் இருப்பதாச்சொல்லுகிறார்கள். அவர்களது சீடர்கள்சேர்த்து வைத்த சொத்தையும் சேர்த்தால்  ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கோடி இருக்குமாம் உலகின் 160  நாடுகளில். 715 கிராமங்களுக்கு குடி நீர் வழங்கும் பணி, சென்னைக்கு தெலுங்கு கங்கை திட்டப்பணி என்று அவருடைய சேவாசமிதியினின்றும் செய்திருக்கிறாராம். இதை அரசுகள் செய்ய முடியாதா  என்ன? நமது பணம்தான் இந்த வழியில் போய்க்கொண்டிருக்கிறதே.

அதுதான்  2ஜி ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி 

மனிதன் இறப்பது என்பது இயற்கையானது.
பிறப்பைக்கொண்டாடுவதுபோன்று சாவையும் கொண்டாடும் மன நிலை வரவேண்டும்.

ரத்த சொந்தங்களுக்கு அழுகலாம்.
நெருங்கிய நண்பர்களுக்கு அழுகலாம்.
எப்போதாவது கடவுளுக்கு அழுதிருக்கிறோமா?
மனிதர்களுக்கு அழுகலாம்.
ஆனால் தன்னைக்கடவுளின்
அவதாரமாகக்காட்டிக்கொண்டவர்களிடம்
கண்ணீர் விடலாமா?

முக்தியடைந்தததாக தினமணி எழுதுகிறது.

சித்தி அடைந்து விட்டதாக தினமலர் எழுதுகிறது.

முக்தியும் சித்தியும்  செத்துப்போவதைக்குறிக்கும் வார்த்தைகளன்றி வேறென்ன?

இன்னும் சொல்லப்போனால் மரணத்தை விடவும் பெரியதா என்ன?

Saturday, March 26, 2011

மார்ச் பதிவுகள்

மார்ச் மாதம் என்றால் கணக்கு முடிப்பது என்ற ஒரு வெள்ளைக்காரன் சடங்கு அனேகமாக அனைத்து அரசுத்துறை மற்றும் பொதுத்துறைகளிலும் நடை முறையில் இருக்கிறது.

எந்த வித சம்பந்தமும் தனக்கு இல்லாதது போல ஒரு  ஆறேழு ஆண்டுகளாக எதுவும் தெரியாது என்று சொல்லிக்கொண்டே பாரத்திரு நாட்டின் பிரதமர் மிகச்சிறந்த பொருளாதார மேதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நிற்க..

மார்ச் மாதம் 16 ஆம் தேதி சென்னையில் ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டி இருந்தது. நானும் எனது மனைவியும் சென்றோம். அது வடபழனி ஆண்டவர் கோவில் ஆர்க்காட்டு சாலை. அன்றைக்கு மட்டும் ஒரு 34 திருமணங்கள். திருமணம் நடக்கவிருக்கும் ஒவ்வொரு இடத்திடற்கும் ஒரு எண். பத்துப்பதினைந்து ஜோடியைப்பார்த்தபிறகு எங்களது கல்யாண ஜோடியைப்பார்த்தோம். ஒரு தகரப்பெட்டியில் தீ எரிந்து கொண்டிருக்க, அதில் பாக்கெட் நெய்யை ஊற்றி,  மந்திரம் சொல்லி, பொட்டு வைக்கசொல்லி, போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்லி, இப்படியாக  விதம் விதமாக படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாகல்யாணங்களிலும் வீடியோ உட்பட பதிவுகள் நடந்து கொண்டிருந்தன.

டிசம்பர் 10, 1986 தோழர் எஸ் ஏ பெருமாள் அவர்களின் தலைமையில் எனது திருமணம் நினைவுக்கு வந்தது. அது விருது நகருக்கே உரித்தான சீர்திருத்தக்கல்யாணம். நிறைந்த சபையில் திருமணம் சம்பந்தமான உரையில் அந்தக்காலத்தில் ஒரு திருமணம் ஏழு நாட்களுக்கு நடைபெறும் என்றும், பிறகு அது மூன்று நாட்களாக சுருங்கிப்போய் விட்டதாகவும் இப்போதெல்லாம் ஒரே நாள் திருமணம நடைபெறுகிறது என்றும் தோழர் எஸ் ஏ பெருமாள் குறிப்பிட்டார். நான் மண மேடையில் இருந்தேன். அப்போது யோசனைக்கு வந்ததெல்லாம் இதுதான்.. இப்போதெல்லாம் உறவினர்கள்  சரியான முகூர்த்த நேரத்துக்கு வந்து விட்டு முடிந்தால் சாப்பிட்டு விட்டு போவதும் அதுவும் முடியாதவர்கள் கையை நனைக்காமலேயே மண்டபத்தை விட்டு வெளியேறுவதும் நடைமுறையாகிப்போனதே என்ன செய்ய..

மார்ச் 22 அன்று நண்பன் கிருஷ்ணகுமாரின் தாயார்  தனது எழுபதுகளில் காலமாகி விட்டார்கள்.  அன்று மாலை முதல் மறு நாள் இடுகாட்டில் இறுதிச்சடங்கு வரை கூடவே இருந்து எல்லா காரியங்களிலும் பகிர்வாக இருந்தேன்.
22 வருடங்களுக்கு முன் (1988 நவம்பர் 3) இறந்து போன அம்மாவின் ஞாபகங்கள் சூறாவளியென மனதைச்சுற்றி வந்தது.  அடக்கம் செய்த அந்த  நாள் இரவில்  தாயின் உடம்பு சிதையும் வலியை  நான் உணர்ந்தேன். அது இப்போதும்  மனதின் வலி,.நீட்சியாகவே   நீடித்துக்கொண்டிருக்கிறது.

Wednesday, March 2, 2011

நடுகல் அல்லது மாலைக்கோவில்




பொதுவாக போரில் மடிந்தவர்களுக்கு நடுகல் இருப்பதை அறிய முடிகிறது. செப்பேடுகள், கல்வெட்டுக்கள் மூலமாக இன்னார் இன்னாருக்கு என்ற கொள்வினை கொடுப்பினை, வரி உரிமை,  நிலம் போன்ற சொத்துக்களை ஆண்டனுபவிக்கும் உரிமை இவைகள் பதிவு செய்ய்யப்பட்டிருக்கின்றன.

போர் வீரர்கள் வழியில் வந்த ஒரு இனக்குழுவினர் இன்றைக்கும் நடுகல் ஊன்றுவதை ஒரு வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். அருந்ததிய மக்களின் ஒரு பிரிவினர் கன்னடத்தையும் பிரிதொரு பிரிவினர் தெலுங்கையும் பேசிக்கொள்ளுகிறார்கள்.

இன்னும் சிலர் தமிழ் மட்டுமே பேசி வருகிறார்கள்.
கன்னடம் பேசக்கூடிய அருந்ததிய இனத்தவரைப்பற்றி மட்டுமே இந்தப்பதிவு சொல்ல இருக்கிறது.

எனது அப்பாவின் தாத்தா மூக்கன் பகடை விருது நகர் மூளிப்பட்டி அரண்மனையில் குதிரை லாயத்தில் ராசாங்க வேலையில் இருந்தாராம்.எனது தாத்தா திரு அழகரப்பன் செருப்பு தைப்பவராக இருந்தார். அப்பாவும் கூட அதே தொழில் தான்.

1செத்த மாட்டை உரிப்பது

2அதன் தோலைப்பதப்படுத்துவது

3அந்தத்தோலினின்றும் தோல் பொருட்களை செய்து சந்தைப்படுத்துவது

என்று முப்பரிமாண வேலையில் இந்த இனம் இருந்திருக்கிறது.

(குஜராத்தில் இம்மூன்று வேலைகளையும் மூன்று இனக்குழுக்கள் செய்கிறார்கள். அதில் தோல் பொருட்கள் செய்பவர் சற்றே உயர்ந்த சாதி மற்ற இரு தொழில் செய்பவர்களை விடவும்  அதாவது மாடறுப்பதை விடவும்  தோல் பதனிடுவதை விடவும்)

மன்னர்கள் காலத்தில் குதிரைகள் அதிகமாகப்பயனில் இருந்திருக்கிறது.

அந்தக்குதிரைகளுக்குத்தேவையான வார்ப்பட்டைகள், மணி வார், கண்களை மூடும் சேணம் என்று செய்து கொடுக்கும் காலங்களில் குதிரைப்பராமரிப்பு வேலை செய்திருக்கலாம்.

மன்னர்கள் ஆட்சி ஒழிந்தபிறகு விவசாய காலத்தில் கிணற்றில் நீர் இரைக்க்த்தேவைப்படும் கமலைக்கான வால், மாட்டுக்கான மணிவார், சாட்டைக்குச்சிக்கான தார்க்குச்சி, சாட்டை தயாரித்தல் என்று காலப்போக்கில் வேலைகள் நிலைமைக்கேற்றபடி மாறி இருந்திருக்கிறது.

பிறகு ஜன நாயகத்தின் நாட்டில் செருப்பு உருவாக்குவது அதை பிறருக்கு கொடுத்து பண்ட மாற்று முறையில் பிழைப்பு இருந்திருக்கிறது.  தானியங்களுக்காகவும் இந்த சேவைத்துறை சிறந்து இருந்திருக்கிறது.

குதிரை லாயத்தில் பணியாற்றியவர்கள் போர் வீரர்களாகவும் இருந்திருக்க வாய்ப்பு அதிகம் இருந்திருக்கிறது என்பதை சொல்லத்தேவையில்லை
அப்படிப்பட்ட வீரர்கள் (WARRIORS) மடிந்தபோதுதான் நடுகல் நடும் பழக்கம் தோன்றியிருக்க வேண்டும். அதன் நீட்சி தான் இது.

விருது நகர் மாவட்டம் ஆவுடையாபுரத்தை அடுத்த மன்னார் கோட்டை என்ற கிராமத்தில் ஊருக்குக்கிழக்கே ஒரு மாலைக்கோயில் இருக்கிறது. கோவில் என்றால் பிரகாரம் அப்படியெல்லாம் ஏதும் இல்லை.

வெறுமனே நடுகல்கள் மட்டுமே நெருக்கமாக ஊன்றி வைக்கப்பட்டிருக்கின்றன.  இறந்து போன ஒவ்வொருவருக்கும் ஒரு நடுகல் என்ற வீதத்தில் இது இருக்கிறது.

வருடத்தில் ஒரு முறை அங்கே சென்று   அவித்த கிழங்கு பயறு  தேங்காய் பழம் படைத்து  சூடம், பத்தி( கம்ப்யுட்டர்) சாம்பிராணி  கொளுத்தி வழி பட்டு வருவது ஒரு வழமையாக இன்றைக்கும் இருக்கிறது. அது ஒவ்வொரு சிவராத்திரி (சிவனுசு) அன்றைக்கும் தொடர்கிறது.

என்னுடைய அம்மாவின் அப்பா மூக்காண்டி, பாட்டி சுப்பம்மாள் இருவருக்கும் அங்கே நடுகல் இருக்கிறது.

என்னுடைய அம்மாவுக்கும் அங்கே நடுகல் இருக்கிறது.

அதை வழி படும் நிமித்தம் இன்று (02/03/2011 சிவராத்திரி) நானும் எனது மனைவியும் சென்று விட்டு வந்தோம். இறந்து போன சில நாட்களில் நடைபெறும் காரியம் அல்லது  கருமாந்திரம் (உத்தர கிரியை) என்ற நாளில்  நடுகல் நடுவது வழக்கம்.

1988 இல் மறைந்த  நவம்பர் 3 இல் மறைந்த என் அம்மாவின் நடுகல்லுக்கு வருடா வருடம் செல்ல முடியாவிட்டாலும் இம்முறை வாய்த்தது.மாலைக்கோவில் மன்னார்கோட்டையில் இன்றைக்கும் அப்படியே நான் சிறுவயதில் பார்த்ததைப்போலவே இரண்டு மஞ்சனத்தி மரங்களோடு இருக்கிறது.






ஆனால் விருது நகரில் அப்பாவுக்கு நட்ட  நடுகல் முத்துராமன்பட்டியில் இன்றைக்கு இல்லை.  இப்போது அந்த மாலைக்கோவில் என்ற  நடுகற்களின் தொகுப்பு என்பதும் இல்லை.  ஒரு வாட்டர் டாங்க் அங்கே இருக்கிறது

1998 நவம்பர் 2 இல் மறைந்த எனது தகப்பனாருக்கு நட்ட கல்லைப்பெயர்த்து எடுத்து படிக்கல்லாக சிலர் பயன் படுத்திக்கொண்டார்கள் எனக்கேள்விப்பட்டேன். அப்பாவுக்கு நடுகல் நடும்போதே சில கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு பட்டிக்கற்களாக பக்கத்தில் குடியிருப்போர் பயன் படுத்தத்துவங்கியதை அறிந்தேன்.

அதுதான்  அப்பாவின் கல்லுக்கும் என்று  நடந்தேறி விட்டது.

பாமியான் புத்தர் சிலையை அகற்றியவர்கள் நோக்கம் ஒன்று மட்டும்தான்
அது வரலாற்று ரீதியான உண்மைகளை அகற்றுவது.

இராக்கில் இருந்த மிகப்பெரிய மியுசியம் கூட இந்த அடிப்படையில் தான் அழிக்கப்பட்டது

கொழும்புவில் இருந்த தமிழ்ச்சுவடிகளும் இது போன்ற கலாச்சார எதிர்ப்பு சக்திகளால் அழிப்புக்கு உள்ளானது.

ஒரு இனக்குழுவினரின்  நடுகல் வரலாறும் கூட அந்தக்குழுவினரின் எச்சங்களை  மிச்சமில்லாமல்  சுட்டெரிக்க எத்தனிக்கும்  முயற்சிகள்  என தொடருகிறது இங்கேயும்.

தீண்டாமையைக்கடைப்பிடிப்போர் மன  நிலை மாற்றம் வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது நடைமுறைப்படுத்தப்பட்டால்தான் இது போன்ற வரலாற்று அழிப்பு நடவடிக்கைகள் மாறும்.

எத்தனை நாட்களுக்குள்  இது சாத்தியமாகும்  என்பது  இன்றைக்கு வரைக்கும் பிடிபடவில்லை.

Tuesday, February 8, 2011

பிள்ளைகளா வந்து பொறந்திருக்கு ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஆயிரம்.

முந்திராவில் ஜவகர் 




நகர்வாலாவில் இந்திரா




சர்க்காரியா கமிஷன் முன்  கருணாநிதி



உர ஊழலில் நரசிம்மா




போஃபோர்ஸ் ஊழலில் ராஜீவ் 




ஆதர்ஷ் ஊழலில் ஒரு விலாஸ்




நில ஒதுக்கீட்டில்/மினரல் கொள்ளைக்கு
ஆதரவாக ஒரு எடியூரப்பா 




காமன் வெல்த் விளையாட்டில் ஒரு சுரேஷ்




கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சசி 




2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ஒரு ராசா




மருத்துவ கல்லூரிகளுக்கான ஒதுகீட்டில் ஒரு கேதன் 




அனைத்தையும் மிஞ்சும் வகையில் இன்றைக்கு 




எஸ் பாண்ட் புகழை பரவச்செய்ய ஒரு எம் கே சந்திர சேகர்


இ ந்தப்பட்டியல் முழுமையானதல்ல...
தெரிந்த இந்தப்பெயர்களில் எல்லாம் "சர் நேம்" எனப்படுகிற சாதிப்பெயர் குறிப்பிடவில்லை. 

நேரு,காந்தி,ராவ், தேஷ்முக், கல்மாதி, தரூர், தேசாய் இவையெல்லாம் சாதிப்பெயர்தான்... 


சாதிப்பெயரைக்குறிப்பிடுவது  நமது ஆதி சொந்தங்களுக்கு இந்த மண்ணின் மைந்தர்களுக்கு செய்யும்  முழு துரோகம்









சிறு வயதுகளில் சேட்டை செய்யாத குழந்தைகள் இருக்க முடியாது; 

பொறுமை இழந்த நேரங்களில் அந்தக்குழந்தைகளைக்கண்டிக்கும்போது செல்லமாக அம்மா சில நேரங்களில் இப்படிக்குறிப்பிடுவார்.


"பிள்ளைகளா வந்து பொறந்திருக்கு;
ஒண்ணொண்ணும் ஒவ்வொரு ஆயிரம்".


அன்றைக்கு ஆயிரங்களே பார்க்காத ஏழைக்குடும்பங்கள் அப்படி அலமாந்து சொல்லி மாய்ந்திருந்தார்கள்.


இன்றைக்கும் அப்படிப்பட்ட ஏராளமான குடும்பங்கள் பட்டினி,
பசியில் வீடில்லாமல் வாசலில்லாமல் குடிக்க்த்தண்ணி இல்லாமல்
இந்த தேசமெங்கும்  பரிதவித்திருக்க

கோடி கோடியாய்க்குவித்து வைத்து 
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைத்தட்டிக்கேட்க அம்மாக்கள்தான் இல்லை;

சந்தர்ப்பவசமாக அம்மாமார்கள் உயிரோடு இருந்தாலும்
கேட்கும் நிலையில் இவர்கள் இல்லை போலிருக்கிறது.


காலுக்குச்செருப்புமில்லை
கால் வயிற்றுக்கூழுக்கும்  நாதியில்லை
பாழுக்குழைத்தோமடா என் தோழனே
பசையற்றுப்போனோமடா
                                                           - ஜீவா


வாழ்க  பாரத மணித்திரு நாடு.
                                                           - பாரதி









Thursday, February 3, 2011

ராஜா என்றொரு மந்திரி

'மண் பொய் சொல்லுவதில்லை
மிதிக்கிறோம்
மரங்கள் பொய் சொல்லுவதில்லை
வெட்டுகிறோம்'
மந்திரிகள் பொய் சொல்லுகிறார்கள்
மாலையிடுகிறோம்'
                                                -கவிஞர் கந்தர்வன்

 நமது  சம காலத்தில் வாழ்ந்த அவர் இப்போது  நம்மோடு இல்லை.

அவரது வைர வரிகளை வாழ வைத்துக்கொண்டு இன்றைய மந்திரிகளும் ராஜாக்களும் வலம் வருகிறார்கள்.


2 ஜி என்றைக்கு வந்ததோ அன்று முதல்
பொறுப்பில் இருந்த ராஜா முதற்கொண்டு மந்திரிகள் வரை
ஓரே  பொய்மயம்தான்

பிரதமருக்கு எல்லாமே தெரிந்துதான் நடந்தது - ராசா

அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏல முறையைப்பின்பற்றவும்-பிரதமர்

ஊழலே நடக்கவில்லை- கருணா நிதி

ராசா மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை- கருணா நிதி

ஜே பி சி வேண்டும்- எதிர்க்கட்சிகள்

முடியாது-பிரணாப்

பொதுக்கணக்குக்குழு முன் ஆஜராகி எனது தரப்பின் வாதங்களை சொல்லத்தயார்- பிரதமர்

அவர் சொன்னபடி ஆஜராகமாட்டார்- மீண்டும் பிரணாப்

பாராளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதற்காக ராசா ராஜினாமா செய்தார்

சி ஏ ஜி அறிக்கையில் கண்டபடி ஏதும் நடைபெற வில்லை - புதிய மந்திரி கபில் சிபல் (அப்படியானால் ராசாவையே மந்திரியாக நீடிக்கச்செய்திருக்கலாமே!)

அரசுக்கு வர வேண்டிய பைசாவில் ஒரு பகுதிகூட இழப்பில்லை- திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங்

முன்னாட்களில் ராஜாக்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் இன்னொரு ராஜாவால்.

அது நாடு பிடிக்கும் போட்டியால் நடந்திருக்கும்.

தோற்ற ராஜாவை ஜெயிலில் வைத்து ஜெயித்த ராஜா இம்சைப்படுத்துவது எல்லாம் சகஜமாக இருக்கும்.

வரலாற்றின் பக்கங்களில் இது போன்ற அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.  நமது ராஜா அப்படிப்பட்டவர் அல்ல;

மந்திரியாக இருந்தவர் (உண்மையில் மந்திரிகள் என்றால் அது சித்தார்த் பெருவாவும்  சந்தோலியாவும்தான்)இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் அவரது ஆலோசகர்களோடு

'நீரா' க்களைக்கைது செய்யாத 'நீரோ'க்களாக அரசும் நாமும்

காலவெளி காத்துக்கிடக்கிறது உண்மைகளைப்பதிவு செய்ய...


Wednesday, February 2, 2011

நாங்க மனுஷங்கடா

1984 ஏப்ரல் மே மாதங்களில் முனைவர் கே .ஏ குணசேகரனின் நாட்டுப்புற இசைக்குழு மக்களுக்கான பாடல்களை இசைத்து தமிழ் நாட்டையே சுற்றி வந்து கொண்டிருந்தது.

காரைக்குடியில் குதிரைவண்டி ஸ்டாண்டில் ஒரு நிகழ்ச்சிக்கு  நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். கோட்டைச்சாமி, காந்தி அன்னாவி,கங்கை பாலன் மாரியம்மாள் நாதஸ்வர செட் என்று நையாண்டி  மேளத்தில் ரொங்க வைத்து விடுவார்கள்.

நிகழ்ச்சி முடியும் போது கவிஞர் இங்குலாபின் "மனுஷங்கடா" என்ற பாடலைப்பாடி ஒரு எழுச்சியைப்பரவச்செய்து விட்டு அடுத்த ஊருக்கு பயணப்படுவார்கள்.



மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா
ஒன்னைப்போல அவனைப்போல
எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுஷங்கடா
                                                                       - டேய் மனுஷங்கடா

ஒங்கதலைவர் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
ஒங்க ஊர்வலத்துல தரும அடிய வாங்கிக்கட்டவும்
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும்
நாங்க இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
                                                                      - டேய் மனுஷங்கடா

எங்களோட மானம் என்ன தெருவுல கெடக்கா
ஒங்க இழுப்புக்கெல்லாம் பணியறதே எங்களின் கணக்கா
ஒங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க வீடு புகுந்தா ஒங்க மானம் கிழிஞ்சி போகாதா
                                                                    - டேய் மனுஷங்கடா

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது
ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும் போது எவன் மசுர புடுங்கப்போனீங்க
                                                                     - டேய் மனுஷங்கடா