வலைப்பதிவில் தேட...
Wednesday, June 2, 2010
தீண்டாமை ஒழிப்பு மாநாடு
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"
என்று எல்லா தமிழ் நாடு அரசுப்பாட நிறுவன புத்தகங்கள் அனைத்திலும் அச்சிடப்பட்டு இருக்கிறது.
முதலில் பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கு
தீண்டாமை என்பது என்னவென்று தெரிந்திருக்க வேண்டும்.
"இவர்கள் செய்வது இன்னவென்று தெரியாமல் செய்கிறார்கள்.
இவர்களை மன்னித்தருளும் பிதாவே"
என்பது போல தீண்டாமையைக்கடைப்பிடிப்பவர்கள் தாங்களாகவே பள்ளிப்பருவம் முதல் ஆட்பட்டு தன்னையும் அறியாமல் நம்மில் நான்கில் ஒருவரை தன்னிலும் கீழாக தள்ளி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
கடந்த 28/05/2010 மற்றும் 29/05/2010 இரண்டு நாட்களாக புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முதல் மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் தமிழகத்தில் 7000 கிராமங்களில் தீண்டாமை கொடுமை நிலவி வருவதாக கள ஆய்வு சிது அதை வரிசைப்படுத்தி சமன் செய்யச்சொல்லி இருக்கிறார்கள் இந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்.
"திருக்குவளை இருந்தென்ன
இரு குவளை இருக்கிறதே"
என்ற ஒரு கவிதை வரிக்கிணங்க,
தமிழ் நாடு முழுதும் இரட்டைக்குவளை முறை இன்று முதல் ஒழிக்கப்படுகிறது என்ற நிர்வாக ரீதியான ஒரு உத்தரவை ஒரு தலித்தை தனது சம்பந்தியாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தில் இருக்கிற ஒரு முதல்வரால் முடியாமல் வேறு யாராலும் முடியாது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமிருக்க முடியாது. (இவரால் ஒரு 400 கோடி ரூபாயை செலவழித்து ஒரு சட்டசபைகட்டிடத்தை ஒரு ஆண்டுக்குள் கட்ட முடிந்திருக்கிறது: ஒரு 400 கோடி ரூபாயில் உலகத் (செம்மொழி)தமிழ் மா நாட்டை நடக்க வைக்க முடிகிறது)
இந்துக்கள் மட்டுமல்லாது இங்கே( இந்தியாவில்தான்) உள்ள கிறித்தவர்களும், முஸ்லிம்களும் கூட தங்களால் ஆன தீண்டாமையைக்கடைப்பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தங்களுக்கு சமமாகக்கருதும் சாதியினரை "மாமா" என்று விளிக்கும் முஸ்லிம்கள் கூட தலித்துகளை "மாமா" என்று அழைப்பதில்லை என்பதை எனது பதிவு http://sugadevnarayanan.blogspot.com/2010/02/blog-post_23.html இல் குறிப்பிட்டு இருந்தேன்.
"ஏழையென்றும்
அடிமையென்றும்
எவனுமில்லை சாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பார்
இந்தியாவில் இல்லையே"
என்பார் பாரதி.
"வேதங்கள் ஓதும் பார்ப்பானின்
செயலைவிடவும்
மேன்மையானது
ஒரு செருப்புதைப்பவனின்
படைப்பு "
என்பார் விவேகானந்தர்.
Monday, May 31, 2010
முதல் பட்டதாரி
தாவணிக்கனவுகள் படத்தில் பாக்கியராஜ் கூட அது போல பதக்கம் வாங்கிய பட்டதாரியாக நடித்திருப்பார். அவர் தங்க மெடல் வாங்கும்போது இது போன்ற இளைஞர்களின் கையில் எதிர் காலம் இருக்கிறது என்று பதக்கம் வழங்குபவர் குறிப்பிடுவார். கொஞ்ச நாட்கள் கழித்து குடும்பசூழல், வேலையின்மை காரணமாக குடிப்பதற்கு ஆரம்பித்து விடுவார். அப்போது அவரது கையில் சாராய கிளாஸ் இருக்கும். வேதாந்தச்சிரிப்பினால் சூன்யத்தை ப்பார்ப்பார் அவர் . நிற்க...
நான் பட்டம் வாங்கும் வ்ரை அந்தப்பதக்கம் வாங்குவதற்கான தகுதி பற்றி எனக்குத்தெரியாது . நான் வாங்கிய மதிப்பெண்கள் 1250/1800 (69.4% முதல்வகுப்பில் தேர்ச்சி; அந்த ஆண்டு தாவரவியல் பட்டப்படிப்பில் முதலாமவன்). தங்கப்பதக்கம் எனக்குக்கிடைக்கவில்லை. மாறாக எனக்கு அடுத்தபடியாக மதிப்பெண் பெற்ற வி. பிரபாகரனுக்கு அது கிடைத்தது. விசாரித்ததில் சொன்னார்கள் எந்த ஒரு பாடத்திலும் ஆறு செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திலும் கூட பெயில் ஆகியிருக்கக்கூடாது என்று. நான் தான் INORGONIC CHEMISTRY என்கிற பேப்பரில் இரண்டு அட்டெம்ப்ட்டு ஆச்சே!
சரி எல்லோரும் பட்டமளிப்பு விழாவின் போது கருப்பு அங்கி அணிந்து தலையில் தட்டையாக ஒரு குஞ்சம் வைத்து கையில் பட்டத்தை சுருட்டி வைத்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்வார்களே அது போல ஒரு பட்டமளிப்பு விழா வரும் ஆசையாக ஒரு படம் பிடித்து வைத்துக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பில் மண் விழுந்தது போல் அந்த வருடம் பார்த்து பட்டமளிப்பு விழா என்று எதுவும் கிடையாது எல்லோரும் கல்லூரி அலுவலகத்தில் வந்து கையெழுத்து போட்டு விட்டு பட்டத்தை வாங்கி செல்லுங்கள் என்று அழைப்பு வந்தது. போட்டோ கண்ணிலேயே நின்று விட்டது.
அப்போதெல்லாம் மூன்று கல்லூரிகளில்தான் M Sc., தாவரவியல் இருந்தது
பழனியாண்டவர் கல்லூரி பழனி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி மதுரை, தியாகராசர் கல்லூரி, மதுரை. எனக்கு சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் எம் எஸ் ஸி படிக்க அழைப்புக்கடிதம் வந்தது ருபாய் 411/- கட்டச்சொல்லி ப்ரின்சிபால் கையொப்பமிட்ட கடிதம் வந்தது. வீட்டில் அங்கே இங்கே என்று
ஒரு 250/- ரூபாய் வரை திரட்டி விட்டார்கள் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து. அதற்கு மேல் முடியவில்லை... கனவாகிப்போனது PG.
30/05/2010 அன்று கோவை CIT கல்லூரியில் பட்டமளிப்பு விழா: திலிப் சுகதேவுக்கு(எனது பையன்தான்) AICTE அமைப்பின் பொறுப்பாளர் எஸ் எஸ் மந்தா என்பவரின் கையால் திலிப் பட்டம் வாங்கினான். கருப்பு அங்கி கழுத்தில் ஒரு சிகப்பு பார்டருடன் கூடிய கருப்பு வளையம் அணிந்து பட்டம் பெற்றான்
கையில் வைத்திருந்த டிஜிட்டல் காமிராவினால் ஏழெட்டு போட்டோக்கள் எடுத்துத்தள்ளினேன். அப்படியே பக்கத்தில் இருந்த எனது மனைவியிடம் சொன்னேன். எனக்கு கையெழுத்து போட்டு பட்டம் வாங்கிக்கொண்டுவந்தேன் இது போன்ற விழாவிற்காக ஏமாந்து போனேன் இன்றைக்கு ஒரு காரியம் செய்யப்போகிறேன் தம்பியிடமிருந்து அந்த அங்கியை வாங்கி நான் அணிந்து கொண்டு அவனை ஒரு ஸ்னாப் எடுக்க சொல்லப்போகிறேன். ஓரே சிரிப்பு எனது மனைவிக்கு.
பட்டமளிப்பு விழா முடிந்தது. திலிப் எங்களிடம் வந்தான் அங்கியை தற்செயலாகக்கழற்றிக்கொண்டே. கூடவே அவனது நண்பன் நான்கு வருடமாக அவனுடன் தங்கிப்படித்த சரவணன். நான் திலிப்பின் அங்கியை அவசரமாக அணிந்து கொண்டேன் அந்த வட்டக்கழுத்துப்ப்ட்டையையும் சேர்த்தேதான். சிலர் வேடிக்கையாகப்பார்த்தார்கள். மனைவி வாய் விட்டு சிரிக்க தம்பி திலிப்போ வேண்டாம்பா என்று அங்கே இங்கே பார்த்துக்கொண்டிருக்க என்னை இரண்டு மூன்று ஸ்னாப்கள் எடுத்துதள்ளினான் சரவணன்.
முப்பது வருடங்களில் இரண்டு பட்டதாரிகள் ஒரு குடும்பத்தில்..
Tuesday, May 18, 2010
சர்வ தேச கீதம்
அப்படியே ஒரு நாள் சாத்தூருக்கு தெற்கே பாலத்தைத்தாண்டி இயங்கி வந்த முருகன் தியேட்டரில் ஒரு கூட்டம் நடக்கிறது வாருங்கள் போகலாம் என்று அழைத்து சென்றார். அது தோழர் பி. சீனிவாசன் தாலுகா செயலாளராக இயங்கி வந்த சி பி எம் கட்சியின் தாலுகா மா நாடு. விருது நகர் தாலுகா அப்போது பிரிக்கப்படவில்லை. மாவட்ட செயலாளராக இருந்தவர் தோழர் எஸ். ஏ. பெருமாள். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். தோழர்கள் விவாதம் மேற்கொண்டார்கள். மக்கள் நலனுக்காக சில தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். மதியம் எளிமையான ஒரு மதிய உணவு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதிய கூட்டம் தொடங்குமுன் வக்கீல் பாலதண்டாயுதம் "சோசலிசம் வந்துவிட்டால் சுகம் எல்லாமே வந்து விடும் அந்த கம்யூனிசம் மலர்ந்து விட்டால் மனக்கவலைகள் மறந்து விடும்" என்ற நாகூர் ஹனிபாவின் அல்லாவை நாம் தொழுதால் துயர் எல்லாமே ஒடி விடும் என்ற மெட்டில் பாடினார். மாலையில் கூட்டம் நிறைவடைந்தது. அப்போது சர்வதேச கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் கம்பீரமாக எழுந்து நின்று கூட்டாகப்பாடினர். அந்தப்பாடலை இந்தப்பதிவில் பார்ப்போம்.
பட்டினிக்கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள் வீறு கொண்டு தோழர்காள்
கொட்டு முரசு கண்டன முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட
பண்டையப்பழக்கம் என்னும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேட்சை கீதம் விடுதலை பிறந்தது
இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திட
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்
முற்றிலும் தெளிந்த முடிவான போரிதாகுமே
முகமலர்ச்சியோடு உயிர்த்தியாகம் செய்ய நில்லுமே
பற்றுக்கொண்ட மனித ஜாதி யாரும் ஒன்றதாகுமே
படிமிசைப் பிரிந்த தேச பாஷையும் ஓர் ஐக்கியமே
பார் அதோ மமதையின் சிகரத்திருமாந்துமே
பார்க்கிறான் சுரங்க மில் நிலத்தின் முதலாளியே
கூறிடில் அன்னார் சரித்திரத்தில் ஒன்று கண்டதே
கொடுமை செய்து உழைப்பின் பயனைக்கொள்ளை கொண்டு நின்றதே
மக்களின் உழைப்பெல்லாம் ஒளித்து வைத்து ஒரு சிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்றதறிகுவீர்
இக்கணம் அதைத்திரும்ப கேட்பதென்ன குற்றமோ
இல்லை நாம் நமக்குரிய பங்கைக்காட்டி கேட்கிறோம்.
தொன்று தொட்டு உழைத்த விவசாய தொழிலாளி நாம்
தோழராகினோம் உழைப்போர் யாவரேனும் ஓர் குலம்
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச்சொல்லுவோம்
உழைப்பவர் யாவருக்கும் சொந்தம் இந்த நிலமெல்லாம்
வேலை செய்யக்கூலி உண்டு வீணர்கட்கிங்கிடமில்லை
வீண் வார்த்தை பேசி உடல் வளர்க்கும் காதர்கர்க்கிங்கிடமில்லை
நாளை எண்ணி வட்டி சேர்க்கும் ஞமலிகட்கிங்கிடமில்லை
நாமுணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங்கிடமில்லை
பாடுபட்டு உழைத்தவர் நிணத்தைத்தின்ற கழுகுகள்
பரந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளிலே
காடு வெட்டி மலை உடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்
கவலையற்ற போக வாழ்வு சகலருக்குண்டாக்குவோம்
Monday, May 17, 2010
ரா(நா)மதாரி
Saturday, May 15, 2010
முத்து ராமன் பட்டி
அதாவது விருது நகரில் டி இ எல் சி என்ற கிறித்துவ அமைப்பின் நடு நிலைப்பள்ளி ஒன்று நகரின் மையப்பகுதியில் உள்ள பெரிய காளியம்மன் கோவில் தெருவில் இருக்கிறது. இந்தப்பள்ளியைச்சுற்றிய பகுதியிலும் வன்னியன் தெருவிலும் அருந்ததிய இன மக்கள் குடியிருந்து வந்திருக்கிறார்கள்.
காலப்போக்கில் இந்த இன மக்களில் ஒரு சிலர் டி இ எல் சி பள்ளியில் படிக்கவும் செய்திருக்கிறார்கள். அவர்கள் மேற்படி பள்ளியில் படித்த காரணத்தால் அது "சக்கிலியன் பள்ளிக்கூடம்" என்று அறியப்பட்டிருக்கிறது. எனது தந்தையார் திரு அர்ஜுனன் அவர்களும் கூட அந்தப்பள்ளியில்தான் ஆறாவது வரை படித்திருக்கிறார். அதனால் அவருக்கு எழுதப்படிக்கத்தெரியும்.
சில காலம் கழித்து அவர்கள் பவுண்டு தெருவுக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள்.
(பவுண்டு என்பது அரசுக்கு சொந்தமான ஒரு கட்டிடம் நான்கு பக்கம் மதில் சுவரும் ஒரு கேட்டும் இருக்கும். அத்து மீறி யாருடைய வெள்ளாமையிலும் மேய்ந்த ஆடு மாடு கழுதை இவற்றை கொண்டு வந்து அடைக்கப்பயன் படும் இடம்) அந்தத்தெருவில் ஒரு காளியம்மன் கோவில் அருந்ததிய இன மக்களுக்கு சொந்தமானது இன்றைக்கும் இருக்கிறது.
இதே காலகட்டத்தில் அருப்புக்கோட்டை சாலையில் டி. இ.எல்.சி சர்ச் வளாகத்தில் குடியிருந்த வெள்ளைக்கார துரைகளுக்கும் குதிரை பராமரிப்பு பணியில் முத்தன் ராமன் என்ற இரண்டு அருந்ததிய சகோதரர்கள் ஈடுபட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். (அருந்ததியர் என்பது அவரது புத்தகத்தில் இல்லை)
முத்தன் ராமன் சகோதரர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் முத்து ராமன் பட்டி என்று அன்று முதல் அழைக்கப்படுவதாக அவரது குறிப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அது சரி. அப்படி குடியிருந்தவர்களின் வாரீசுகள் இப்பொழுது எங்கே..
பவுண்டுத்தெருவிலிருந்து இடமாற்றம் கண்டு மாத்த நாயக்கன் பட்டி பாதை என்ற பகுதிக்கு குடியேறி இருந்திருக்கிறார்கள். (நான் இந்த மாத்த நாயக்கன் பட்டி பாதை என்ற முகவரியில் பிறந்ததாக எனது தகப்பனார் கூறியிருக்கிறார்.)
Friday, May 14, 2010
இருப்பதும் இல்லாததும்
மனித இனமே வெட்கித்தலைகுனியும் அளவுக்கும் அதிகமாகவே வகுப்புவாதத்தீ குஜராத்தில் எரிந்து கொண்டிருக்கிறது.
72 மணி நேரத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி விட்டேன் என்று சுய சான்றிதழ் வழங்கிக்கொண்டிருக்கிறார் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி.
முதல்வராகத்தொடர்வதற்கு அவரை விட்டால் யாருமில்லை; அவர்தான் முதல்வர்; அவரேதான்... என்று வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி;
அதை அப்படியே வழி மொழியும் பாரதப்பிரதமர் வாஜபாய் அவர்கள்.
பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ராவில் பற்றிய மே 9 அன்று 72 நாட்களைத்தொட்டும் தொடருகிறது அவலம்.
பற்றி எரிகிறது தலை நகர் அகமதாபாத்.
அரசுப்புள்ளி விபரங்களின் படி,
*இது வரை 1420 பேர் வன்முறைக்கு பலியாகியிருக்கிறார்கள்
*முகாம்களில் தஞ்சமடைந்துள்ள உடைமையிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் மேல்
* சொத்துக்களுக்கும் ஏற்பட்ட சேதாரம் ரூபாய் 5000 கோடியை த்தாண்டும்
* 22560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
* 43000 பேர் கைது செய்ய்யப்பட்டு இருக்கிறார்கள்
* 4000க்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும்
* 20000 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தீயிலிடப்பட்டன.
*போலீசார் சுட்டதில் மட்டும் 200 பேர் மடிந்திருக்கிறார்கள்.
*தொழிற்துறையில் மற்ற மாநிலங்களை விட இருபதாண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது குஜராத் மாநிலம்.
2001 ஜனவரி 26ல் நிகழ்ந்த பூகம்ப அதிர்வுகளின் போது ஏற்பட்ட இழப்புக்கு சற்றும் குறைந்ததாகப்படவில்லை இப்போது நடைபெற்றுக்ககொண்டிருக்கும் மத பூகம்பம்.
இவ்வளவு அழிவுக்கும் பின்னர் செயலற்ற ஒருமுதல்வரை மாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
உலக அளவில் இந்தியாவுக்கு அழியாத அவப்பெயரை கோத்ரா நிகழ்வும் அதனைத்தொடர்கின்ற படுகொலை வன்முறைகளும் ஏற்படுத்தியிருக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
பாராளுமன்றத்தில் 296 பேர் அரசை ஆதரிக்க, 182 பேர் எதிர்க்க மத்திய அரசு வென்றிருக்கிறது.
போதுமான பலம் ஆளும் தேசிய ஜன நாயக கூட்டணிக்கு இல்லாததால்
ராஜ்ய சபாவில் அவர்களே எதிர்கட்சிகளை ஆதரித்து ஒருபக்க "கோல்" போட்ட கதையும் நாடு கண்டது.
"நேற்று இருந்தவர் இன்றில்லை
இன்றிருப்போர் நாளை
இல்லாமற் போவர்
இருப்பதும் இல்லாததும்
இதே ரீதியில் நடந்து கொண்டிருக்கும்
........................................................
உண்மை என்ன?
இருப்பதும் இல்லாததும் இரண்டுமே
உண்மையா....?"
பிரதமர் வாஜ்பாயி அவர்களின் கவிதை வரிகள்தான் மேலே உள்ளவை.
குஜராத்தில் செயல்படாத முதல்வர் ஒருவர்
இருப்பது ம் இல்லாததும் உண்மையா என
கேட்கத்தோன்றுகிறது நமக்கு.
(மே 2002 கோத்ராவில் இருந்த நேரம் எழுதிய கட்டுரை இது)
Thursday, May 13, 2010
இரட்டைக்குவளை ஒழிந்தது..
"பொது கிளாசில் டீ கேட்க
தனி கிளாசில் டீ கொடுக்க
ஒரு டீயின் விலை
ஒன்பது உயிர்களாக
மலிந்து கிடக்கிறது.."
-கவிஞர் கந்தர்வன்.
தீண்டாமை ஒழிப்பு ஆண்டு என்று அரசால்
நான் கைந்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது
அதை ஒட்டி எழுதிய கவிதை இது..
சேரியிலிருந்து ஒரு குரல்:
எத்தனை நாளைக்குதான்
எங்களுக்குத் தனி கிளாஸ்ல
டீ தருவீக
ஒங்களைப்போல
அவங்களைப்போல
நாங்களும் எட்டுச்சாணு
ஓசரமுள்ள மனுஷங்கதானே?
ஊருக்குள் இருந்த டீக்கடை
மனிதன் ஒருவன்:
ஆயிரத்துக்கும் அதிகப்படியான
ஊருகள்ல தனிக்கிளாஸ் இருக்க
பொதுக்கிளாசில் டீ குடுக்க
நாங்க மட்டும்
பைத்தியக்காரப்பயலுகளா?
மந்திரி முழங்கினார்:
"தீண்டாமை எந்த வடிவத்தில்
நடைமுறைப்படுத்தப்பட்டாலும்
ஒழித்துக்கட்டி விட்டுதான்
மறு வேலை எங்கள் அரசுக்கு
இது மத்ச்சார்பற்ற சமூக
நல்லிணக்க
தீண்டாமை ஒழிய வேண்டிய ஆண்டு"
ஊர்க்காரர்களும் முக்கியஸ்தர்களும்
முடிவெடுத்து அறிவித்தனர்
கொண்டுவாங்கப்பா அந்த
டிஸ்போசிபிள் கிளாசை
நம்ம ஊருல எல்லாம் தாயா
பிள்ளையா இருப்போம்
கிளாசுக்கு எட்டணா கூட
குடுத்திருங்கப்பா...
இந்தா பிடி
டீயைக்குடி
கலெக்டர் கடிதம் எழுதினார்:
"மாண்பு மிகு முதல்வர்
அவர்கள்
மா நிலத்திலேயே
முதலாவதாக
இரட்டைக்குவளை
முறையை ஒழித்த
............. கிராம சபைக்கூட்டத்தில்
தாங்கள் அவசியம்
பங்கேற்க வேண்டும்....."
Monday, May 10, 2010
சாதிப்பெயரை நீக்குக
சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆனபிறகும், சாதியின் பெயரால் அமைந்திருக்கும் கிராமத்தின் பெயரை மாற்றவேண்டும் என்று கோரி NHRC
(தேசிய மனித உரிமைகள் கமிஷன்) அமைப்புக்கு கடந்த இருபது வருடங்களாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். (The Hindu 10/05/2010) ராஜஸ்தான் மா நிலம் 'தாசா' மாவட்டத்தில் இருக்கிற ஒரு கிராமம் 'குவன் கா வாஸ் ' .அந்த கிராமத்தின் பெயரை வருவாய்த்துறை ஊழியர்கள்' 1987 இல் 'சமரோன் கா வாஸ்' என்று மாற்றியிருக்கிறார்கள்.(பெயர் சொன்னாலே தெரியும் அளவுக்கு) சமரோன் என்றால் தோல் பொருட்கள் மற்றும் செருப்பு தைக்கும் தொழில் செய்யும் ஒரு பகுதி மக்களைச்சுட்டும் சொல் என்று சொல்லத்தேவையில்லை. ஒரு 31 பேர் NHRC அமைப்புக்கு 2006 முதல் மனுச்செய்து கொண்டு இருக்கிறார்கள். மனித உரிமைகள் கமிஷனின் தலைவரின் விசாரணையின் போது பிப்ரவரி 2002 இல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அந்த கிராமம் "கோவிந்தபுரா" என்று பெயரிடப்படுவதாக கிராம மக்களின் சம்மதத்துடன் தெரிவித்து இருக்கிறார். சாதியக்கட்டுமானமும் அதிகாரவர்க்க தோரணைகளும் சேர்ந்து இந்த பெயரை செயல் பட விடாமல் தடுத்து இருக்கிறார்கள். NHRC அனுப்பிய நோட்டிசுக்கு அரசு 'குஷால்புரா" என்று பெயர் வைக்க விரும்புவதாக தலைமைச்செயலர் பதில் அனுப்பி இருக்கிறார்.
மத்திய உள்துறையில் ஒரு புதிய செய்தி தந்திருக்கிறார்கள்.ரயில்வே ஸ்டேஷன் பட்டியலில் "குஷால் புரா" என்ற பெயர் வைப்பதில் சிரமம் இருக்கிறது ஏனென்றால் "குஷால்புரா ஹால்ட் ' என்ற பெயரில் பக்கத்தில் ஒரு ரயில் நிலயம் இருப்பதாகச்சொல்லி இருக்கிறார்கள். செப்டம்பெர் 2009 இல் மாவட்ட ஆட்சியரால் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு பெயர் மத்திய உள்துறைக்கு அனுப்பி அதுவும் கடந்த ஜனவரி 2010 வரை எந்த வித நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் இருக்கிறதாக தகவல்கள் சொல்லுகின்றன.
இறுதியாக NHRC ஆறு வார காலத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று மத்திய உள்துறை செயலரைக்கேட்டு இருக்கிறார்கள்.
'யாதும் ஊரே யாவருங்கேளிர்'
என்ற வைர வரிகள் ஐக்கிய நாடுகள் சபையை அலங்கரித்துக்கொண்டிருப்பதாக சொல்லுகிறார்கள்.
அப்படிப்பட்ட நமது தமிழ் மண்ணில்தான்
'வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து க்கழகம்' என்று விருது நகரை தலைமையிடமாகக்கொண்டு செயல் பட இருந்த வேளையில்
சாதியின் பெயரால் உருவாக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களின் பெயர்களும் வாபஸ் பெறப்பட்டது தமிழகஅரசால்..
சமத்துவம் வாழ்க..
ஆனால் 60 ஆண்டுகளாகியும் சாதியின் பெயரால்
என்று தணியும் இந்த
சாதீய ப் பிரசசனை ..
Friday, May 7, 2010
கற்பாறைகளும் தப்பவில்லை
காடுகளை அழித்தீர்கள்
காற்றைக் கணக்கின்றி
களங்கப்படுத்தினீர்கள்
நிலத்தடி நீரை
அபகரித்தீர்கள்
விண் வெளி கூட
விண்கலங்களின்
குப்பைக்கூடை
ஆகிப்போனது
இன்று
கற்பாறைகள் கூட
கற்பழிக்கப்படுகின்றன
உங்களால்
உலகமயம்
இவ்வளவுதானா
இன்னும் இருக்கிறதா
மிச்சம்.
இக்கவிதை எழுதியது செப்டம்பர் 2002
(குலு மணாலியில் கோக், பெப்சி நிறுவனங்கள் பாறைகளில் விளம்பரம் செய்தன;
அதை ஒட்டி நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் பன்னாட்டு நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டது.)
Thursday, May 6, 2010
இவர்கள் மக்களில் சேர்த்தி இல்லையா
2002 பிப்ரவரி 27: குஜராத் மாநிலம் கோத்ராவில் எஸ் 8 என்ற பெட்டி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில்எரிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த வன்முறைகளில்முகமதியர்கள் இரண்டாயிரம் பேர்கொல்லப்பட்டனர் .ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆனார்கள். அப்போது கூட ஒரிரு இடங்களில் முகாமகள் அமைக்கப்பட்டது.அகமதாபாத் பகுதியில் இந்துக்களுக்கென்று அமைக்கப்பட்ட முகாமகளில்மறுபடியும் இதே பிரச்சனை வெடித்ததைடைம்ஸ் ஆஃப் இந்தியாவெளிப்படுத்தியது.
2004 டிசம்பர் 24: நாடு ,தேசம் ,மொழி, இனம் என்று எதுவும் பாராமல் மனிதர்களைக்கொள்ளை கொண்டது "சுனாமி" என்னும் இயற்கைப்பேரழிவு இரண்டரை லட்சத்துக்கும் மேல் உலக மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் தற்காலிக முகாம் கள் அமைக்கப்பட்டது. தலித்துக்ளின் துணையோடு சவக்குழியில் விழத்தயாராக இருக்கும் சாதி, உயிரோடு இருக்கும் தலித்துகளோடு தங்குவதற்கு இடம் கொடுக்க வில்லை. இன்னும் கொடுமை என்னவென்றால் அழுகிக்கிடக்கும் சவங்களைக் கூட தூக்குவதற்கு சாதிமனம் ஒத்துக்கொள்ள வில்லை. கடைசியில் சாதாரண மரணங்களின் போது சேவை செய்யும் அருந்ததி இன மக்கள்தான் கும்பல் கும்பலாக அனைத்து சாதிப்பிணங்களையும் பெரிய குழிகளில் சவ அடக்கம் செய்தார்கள்.
மக்களுக்காக 'இறுதி' வரை உழைக்கும் பகுதியினரை 'ஆட்டைக்கு சேர்க்காமல்' எத்தனைக்காலம்தான் இழுத்தடிப்பது ....?
Friday, April 30, 2010
உழைப்பவர் தினம்
எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர கலாசார வாழ்க்கை
எட்டு மணி நேர உறக்கம்
அன்று
சிகாகோ வீதிகளில் சிந்திய இரத்தம்
இன்று ஏ சி அறைகளுக்குள்
அடைபட்டுக்கிடக்கும்
ஐ டி இளைஞர்களுக்கும
சேர்த்துதான்
மீண்டும்
அதே கோரிக்கையை
அவர்களின் தியாகங்கள்
பேரால் உறுதி ஏற்க
வேண்டிய தருணம்
எனப்படுகிறது
Thursday, April 29, 2010
மீனாட்சி கல்யாணம்
மதுரையில் ஆண்டு தோறும் சித்திரை மாத பவுர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிக்கொண்டே இருக்கிறார்.. அதற்கு முதல் நாள் அழகருக்கு பக்தர்களின் சார்பில் எதிர்சேவை. அதற்கு முந்திய நாள் தேரோட்டம் அதற்கு ஒரு நாள் முன்பாக மீனாக்ஷி கல்யாணம். வருடா வருடம் தவறாமல் திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்க்கிறார்கள். ஆனால் கள்ளழகர் மட்டும் திருமணத்தை தவறவிட்டு வைகை வடகரை வழியாக துலுக்க நாச்சியாரை சந்திக்கவும் மண்டூக முனிவருக்கு சாபம் கொடுக்கவும் இரவில் தசாவதாரம் என்று போக்கொண்டு இருக்கிறார். நிஜத்தில் பல அழகிய பெண்கள் வயதாகியும் கூட திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். ஒரு பாடல் பாரதி கிருஷ்ணகுமார் கரகரத்த குரலில் பாடக்கேட்டு இருக்கிறேன்.
'மதுரை மீனாட்சிக்கும் காஞ்சி காமாட்சிக்கும்
மாசமொரு கல்யாணமாம்
தேர் மேல மாப்பிள்ளை ஊர் கோலமாம்
எங்க எதித்த வீடு பொண்ணு வயசாகி நாளாச்சி
எப்பதான் கல்யாமம் -அவ
கண்ணில் எப்பவும் நீர்க் கோலமாம்'
அழகரை சேவித்துவிட்டு பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லி விட்டு சூடம் கலந்த வாசத்துடன் சக்கரை தருவார்களே அதை வாங்கித்தின்ற நாட்கள்; வெயில் என்றும் பாராமல் ராமராயர் மண்டகப்படி பக்கம் நெற்றியில் கரைந்த குங்குமத்தோடு நாமத்துடன் அலைந்த நாட்கள் அலைமோதுகின்றன.
அப்பா எனக்கு முதல் மொட்டை அழகர் ஆற்றில் இறங்கிய அன்று போட்டதாகசொல்லுவார்.
பச்சை பட்டு அணிந்து ஆற்றில் இறங்கினால் அனைத்து வெள்ளாமையும் சிறக்கும் என்பார்கள்
சிகப்பு பட்டு என்றால் மிளகாய் வத்தல் விளைச்சல் பொங்கி வருமாம்
வெள்ளை பட்டு உடுத்தி வந்தால் பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்குமென்றும் சொல்லுவார்கள்.
கடந்த பத்தாண்டுகளில்
பி டி பருத்தி விவசாயம் செய்த விவசாயிகள் சுமார் இரண்டு லக்ஷம் பேர் தற்கொலை செய்து மடிந்து இருக்கிறார்கள...
ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூலியில் காலத்தை வென்று கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நமது ஜனத்தொகையில் 70 சதமானம் என்று ஒரு கணக்கு நம் முன் காட்டப்படுகிறது..
ரூபாய் 50 ,000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் 54 பேர என்று சொல்லப்படுகிறது...
வருடா வருடம் மீனாக்ஷி திருக்கல்யாணம் நடந்து கொண்டேதான் இருக்கிறது
வருடாவருடம் அழகர் வந்து கொண்டிருக்கிறார்...
Monday, April 26, 2010
அருந்ததியர்
அன்று ...
தாய் மண்ணின் சுதந்திரம்
வேண்டி
வெள்ளையனை அவனது
கூடாரத்தில் "ஒண்டி"யாகவே
சந்தித்து
மடிந்து போனான்
மா "வீரன்" ஒருவன்
அவனுக்கான இடம்
சுதந்திர வரலாற்றில்
தேடிக்கொண்டிருக்கிறோம்
தட்டுப்படவில்லை;
பிறகு...
மா "மதுரை "யில்
கள்ளர்களிடமிருந்து
உங்கள் வாழ்வைக்
காத்திருக்கிறான்
மற்றொரு மகத்தானவன்
அவன் ..." வீரன்"
மாறுகால் மாறுகை வாங்கி
"மீனாட்சி" க்கு காவலாய்
"கீழ் " வாசலில் காவல் தெய்வமென
பெயரிட்டு
வெளியே நிற்க வைத்தீர்கள்;
அடுத்து...
ஊமைத்துரையின்
வலதும் இடதுமாக செயல்பட்ட
கந்தன் பகடை பொட்டிபகடை
அந்தோ பரிதாபம்
அவர்களும் கூட
உங்கள் வரலாற்றின்
பக்கங்களில் இருந்து
விரட்டப்பட்டிருக்கிறார்கள்
என்பதை அறிந்தோம்;
நெல்லை சீமையில்
சனாதனி யாகப்பிறந்த
"முத்துப்பட்டன்"
"பொம்மக்கா" " திம்மக்கா" வை
மணம்முடித்தான்...
பிராமணன் ஒருவன்
"அருந்ததி "யாவதோ
என்று அவனையும்
படு கொலை செய்தீர்கள்;
'சிக்கி முக்கி' கற்களில்
அக்னியைகட்டுபடுத்தும்
சூட்சுமம் அறிந்தவனே |
சமுதாயக்கோட்படுகளால்
சாதியின் சூழ்ச்சியால்
'சக்கிலியன்' ஆனதென்ன;
குதிரைப்படைக்கு
தோல் பட்டைகள்
செய்து தேர்ந்தவனே|
படை வீரனாய்
வலம் வந்தவனே|
இன்று சனாதனக் குதிரை
தள்ளி விட்ட
இழிசனராய்
சவக்குழி தோண்டுவதென்ன|
மா அதியனாய்
நீ பாராண்ட திறத்திற்கு
சாட்சியாய்
அவ்வையே நட்பு பாராட்டி
நெல்லிக்கனி கொடுத்ததென்ன|
இன்று
மாதியனாய்
மலக்குழியில்
வீழ்ந்து கிடப்பதுவும் என்ன|
இழப்பதற்கு எதுவுமில்லை;
அடிமைத்தனத்தைத் தவிர
ஒழிப்பதற்கு சாதி
இருக்கிறது;
எழுந்து வா
கரம் கோர்த்து |
மாடறுத்து, செருப்புதைக்க,
பறையடித்து, எழவு சொல்ல ,
பிணந்தூக்கி, மலமள்ள...
என ஒரு
ஏவல் சாதி இல்லை என்பதை
ஊருக்கு உரைப்போம்
விரைந்து வா |
உங்களின்
கொலைகள்
மதுரை வீரனில் தொடங்கி
நக்கலமுத்தையன்பட்டி
ஜக்கையன் வரை
நீட்சி பெற்றுக்கொண்டு
இருக்கிறது...
நிறுத்துங்கள் நீசத்தனத்தை|
மனுவின் பெயரால்
நீங்கள்
ஆண்டது போதும்|
நாங்கள் மாண்டது
போதும்|
இனி பொறுப்பதில்லை
என
போர்ப்பரணி பாடி வா|
அக்னிக்குஞ்சாக வா
அமைப்பாக உருவெடுத்து ...
அப்போது
சாதிச்சிமிழ்கள் உடையும்
சம நீதிப்பயிர்கள்
துளிர் விடும்...
Saturday, April 24, 2010
கோத்ரா கலவரம்
நில மகளின் களேபரம்
அடுக்குமாடிகளின்
குடிசை வீடுகளின்
இடிபாட்டில் எம் மக்கள்
தீப்பெட்டிக்குள் மூச்சிழந்த
பொன் வண்டுகளென ...
தப்பியவர்களின் கூடாரங்களில்
அணைக்கமுடியாத
தீண்டாமைத்தீ ...
தனது நாக்கைத்துழாவியது
இயற்கையின் கலவரத்தில்
செயற்கையாய் சாதியின்
தாண்டவம் ....
இன்று ...
மீண்டவர்கள்
கையூன்றி எழும் நேரம்
கலவர்த்தீயில் காந்தி தேசம்
ஆண் பெண் குழந்தைகள்
அனைவரும்
மத வெறியால் மாய்க்கப்பட்டனர்...
வாதத்துக்கு மருந்து உண்டு
மத வாதத்துக்கு என்ன உண்டு?
ஒரு உறைக்குள் ஒரு கத்திதான்
இருக்க முடியும் ...
உனக்குள்ளும் அப்படித்தான்
மதவாளை உடைத்தெறி ...
மனிதக்கேடயம்
கையிலேந்து ...
கோத்ரா வில் பணியாற்றிய போது (மார்ச் ௨00௨ இல் எழுதிய கவிதை இது)
Thursday, April 22, 2010
மகத்தான வேலை நிறுத்தம்


உலகின் தொலைதொடர்புநிறுவனங்களில் ஏழாவது இடத்திலும்
இந்திய நாட்டின் முதன்மையான நிறுவனமாகவும் இருப்பது
பி எஸ் என் எல்.
அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு ஆகப்பெரிய நிறுவனம்பி எஸ் என் எல் .
சுமார் மூன்று லகஷம் கிலோமீட்டர் கண்ணாடிஇழை கேபிள்களை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பதித்து சேவை புரிந்து வருகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக் அளவில் தொலைதொடர்பு இருப்பது இந்தியாவில்தான்.(மொத்த இணைப்புகள் வயருடன்உள்ள டெலிபோன் மற்றும் மூன்று வயர் ஐம்பத்தாறு கோடியே இருபத்தியிரண்டு லக்ஷத்து பத்தாயிரம் - டெலி டென்சிட்டி இந்தியா: நாற்பத்திஎட்டு சதம் .இந்திய நாட்டின் ரயில்வே தண்டவாளத்தின் மொத்த நீளமே அறுபதினாயிரம் கிலோமீட்டர்தான்)
சாம் பிட்ரோடா என்ற தொலைதொடர்பு நிபுணரின்(?) தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை இப்படிசொல்லிச்செல்லுகிறது :
இருக்கின்ற மூன்று லக்ஷம் ஊழியர்களில் ஒரு லக்ஷம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது;
பி எஸ் என் எல் பங்குகளில் முப்பது சதமான பங்குகளை விற்று விடுவது; (அரசின் பெயரிலேயே அனைத்து பங்குகளும் இருப்பதால் பி எஸ் என் எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்று ஒரு பைசாகூட வராது)
காப்பர் கேபிள்களை தானியாருக்கு தாரை வார்ப்பது ;
ஏழு பெரிய நகரங்களில் நிறுவனத்தின் வசம் இருக்ககூடிய இருபத்திமூன்று லக்ஷம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலங்களை விற்பது ;(இருக்கின்ற சொத்துக்கள் ஒன்று கூட அரசின் பெயரிலிருந்து இன்று வரை மாற்றப்படவில்லை) விற்கிற காசெல்லாம் அரசுக்குத்தான் செல்லும்.
நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பிரதமரின் ஆணைப்படி அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை எப்படி இருக்கிறது?
இத்தோடு
தொண்ணூற்றி மூன்று மில்லியன் ஜி எஸ் எம் கருவிகளுக்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்வது;
உயர்மட்டத்தில் இருக்ககூடிய ஆயிரத்து ஐந்நூறு ஐ டி எஸ் அதிகாரிகளை பத்தாண்டு காலமாக நிறுவனத்திற்குள் கொண்டு வராமல் இருக்கும் அரசின் மெத்தன போக்கு;
நிறுவனத்தின் பணிகளை அவுட் சோர்சிங் மூலம் செய்வது;
எல்லா பிரச்னைகளும் ஊழியர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
விளைவாக,
ஜே எ சி என்கிற ஒரு அமைப்பு அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்களை உள்ளடக்கி உருவானது.
அந்த அமைப்பின் கூட்டு முடிவு மற்றும் வழி காட்டுதலின் அடிப்படையில் ஐ டி எஸ் அதிகாரிகள் தவிர்த்து அனைத்து அதிகாரிகள் அமைப்புகளும் அனைத்து ஊழியர் சாங்கங்களும் காலவரையற்ற ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடப்பட்டது
வரலாற்றில் முதல் முறையாக வங்கி ஊழியர்களைப்போல் எல் ஐ சி ஊழியர்களைப்போல் அதிகாரி தொழிலாளி பேதம் இன்றி மாபெரும் வேலை நிறுத்தப்போர் நடைபெற்றது. ஏப்ரல் எருபதம்தேதி காலை ஆறு மணிக்கு துவங்கியது வேலை நிறுத்தம். நாடு முழுவதும் பல அலுவலகங்கள் பூட்டப்பட்டன. கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பதினோரு மணிக்கு மத்திய மந்திரி ராஜா அவர்களின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு. ஜே எ சி தலைவர்களுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. மாலை மூன்றரை மணிக்கெல்லாம் போராட்டம் முடித்துகொள்ளப்பட்டது.
இது ஒரு துவக்கம் தான்
இனிமேல் ஊழியர்களைப்பாதிக்ககூடிய எந்த ஒரு பிரச்னைஎன்றாலும்
ஒன்று பட்ட போராட்டங்கள் தொடரும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
Saturday, April 17, 2010
சாம் பிட்ரோடா குழுவின் அறிக்கை
சாம் பிட்ரோடா என்ற ஒருவரின் தலைமையில் இந்த வருட ஆரம்பத்தில் அரசு நிறுவனமான' பி எஸ் என் எல்' லின் நிதி ஆதாரம் மற்றும் அதனை லாபத்தில் இயங்க வைப்பதற்கான வழி முறைகளை ஆராய பிரதம மந்திரியின் ஆலோசனையின் பேரில் ஒரு குழு (கமிஷன் அல்லது கமிட்டி என்றும் கொள்ளலாம்) ஜனவரி ஆறாம் தேதி அமைக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் செயல்பட்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதி அதனுடைய பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பித்தது.
நேரு காலத்தில் இருந்து சுதந்திர இந்தியாவில் ஏகப்பட்ட கமிட்டிகள், கமிஷன்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. எந்தக்குழுவும் இவ்வளவு விரைவாக அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
அயோத்தியில் பாபர் மசூதி தொண்ணூற்றி இரண்டாம் வருடம் டிசம்பர் ஆறாம் தேதி இடிக்கக்ப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அதனை விசாரிப்பதற்காக லிபரான் கமிஷன் பத்து நாட்கள் கழித்து டிசம்பர் பதினாறாம் தேதி அமைக்கப்பட்டது. மூன்று மாத காலத்திற்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால் நாற்பத்தெட்டு முறை மட்டுமே நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.
அறிக்கை சமர்ப்பிக்க பதினேழு ஆண்டுகள் மட்டும் எடுத்துக்கொண்டது.
குழுவிற்கு ஆன செலவு வெறும் எட்டு கோடிதான்.
அறிக்கையின் முடிவின் அடிப்படையில் பரிந்துரைகள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு மூன்று அரசியல் தலைவர்களுக்கு ( அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யான் சிங், உமா பாரதி உள்ளிட்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சிலருக்கு..) பொது அமைதியைக்கெடுத்த வகையில் அதிகபட்சமாக 'ஜெயில் தண்டனை' (எவ்வளவு நாட்களுக்கு என்று தெரியாது...) விதிக்கப்படலாம். அல்லது அதை வழங்கும் முன்னதாவே அவர்கள் இயற்கை மரணம் காரணமாக மரணமடைந்தும் போகலாம் 'ஹர்ஷத் மேத்தாவைப்போல'. அது இருக்கட்டும்...
பிட்ரோடா கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்று பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று லட்சம் ஊழியர்களில் ஒரு லட்சம் பேரை (அதாவது மூன்றில் ஒரு பகுதியினரை)வி ஆர் எஸ் திட்டத்தில் வீட்டுக்கு அனுப்புவது என்பது.
மூன்று நான்கு அரசியல்வாதிகளுக்கு ஜெயில் தண்டனை கொடுப்பதற்காக போடப்பட்ட லிபரான் குழு எடுத்துக்கொண்டதைப்போல் பதினேழரை ஆண்டு கால நீண்ட நெடிய அவகாசம் வேண்டாம். அதில் பாதி அதாவது ஒரு எட்டரை ஆண்டுகள் பிட்ரோடா எடுத்துக்கொண்டிருந்தாலே போதும். பிட்ரோடா அறிக்கையில் சொன்னதற்கும் மேலாக அதாவது ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ஊழியர்கள் பணி நிறைவில் தானாகவே சென்று விடுவார்கள். லிபரான் கமிஷன் எடுத்துகொண்டதைப்போல் பதினேழு ஆண்டுகள் கிட்டத்தட்ட மூன்று லக்ஷம் பேரில் இரண்டு லஷத்து பத்தாயிரம் பேர் பணி நிறைவில் வீட்டுக்கு சென்று விட்டிருப்பார்கள் |
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கடந்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு மேல் புதியதாக வேலைக்கு ஆள் எடுக்காமல் இருக்கும் ஆளெடுப்பு தடைச்சட்டம்.
ஒருகேள்விதான் எனக்கு தோன்றுகிறது.
லிபரான் கமிஷனில்
குற்றம் சாட்டப்பட்டவர்களின்
ஐந்தாறு பேரின் உயிர் என்ன வெல்லமா?
பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணி புரியும்
ஒருலஷம் ஊழியர்களின் உயிர் என்ன மயிரா?
என்னதான் கமிட்டியோ கமிஷனோ
குழுவோ விளக்கமாரோ?
பெரியாரின் பாணியில் சொன்னால்
என்ன வெங்காயமோ..........|
Wednesday, April 14, 2010
மதமே மனிதனைப்பிடிக்காதிரு
காந்தியின் தேசம்
பூராவும்
கருகல் வாசம்
ஆண்கள் பெண்கள் குழந்தைகள்
என உயிர் உள்ளவர்களும்
வீடுகள் கடைகள் வாகனங்கள்
என உயிரற்றவைகளும்
'ஒரு பிரிவினருக்கு' உடமை என்பதால்
கொளுத்தப்பட்டன
'சிக்கி முக்கி' யில் தீயின்
கொழுந்தினைக்கண்டவன்
பார்க்கவில்லை
இந்தக்கொடுமைகளை ;
ஒருவேளை பார்த்திருந்தால்
தீயை ஏன்டா கண்டுபிடித்தோம்
என்று தற்கொலை செய்து
கொண்டிருப்பான் போலும்;
பிணக்குவியலின் ஊடாக
அழும் குழந்தையின்
குரலில் கேட்கிறதா?
'மதம்' என்றால் என்ன?
'நீங்கள் இட்ட பெயர் கூட
தெரியாதே எனக்கு '
மதம் பிடித்தவர்களே
மனிதர்ளை
கொல்லாதீர்கள்|
அவர்களுக்காகத்தானே
மதங்கள் ;
உங்கள் மதங்கள் வாழ
முதலில்
மனிதர்களை
நிம்மதியாக
வாழ விடுங்கள்...
Tuesday, April 13, 2010
ஆசீர்வாதம்
பிரேமச்சந்திரன் நாயர் என்பது அவரது பெயர்.
பிப்ரவரி இருபத்தியேழு, 2002 அன்று முதல் உலகப்பிரசித்தியடைந்த போன கோத்ராவில் நாங்கள் ஒன்றாக வேலை பார்த்தோம். 2001 மே மாதம் முதல் நாங்கள் அங்கே தங்கி இருந்தோம் ....
திருவல்லா அவரது ஊர் (நாடு) . "ப்ரேஞ்சந்திரன்" என்று தான் அவரை மலையாள அன்பர்கள் அழைப்பார்கள் . பணி மாற்றம் நிமித்தம் நான் கோத்ரா சென்ற போது அன்பாக 'வாங்க வாங்க' என்று தமிழ் பேசி வரவேற்றவர். ஒவ்வொரு முறையும் அவரது சீட்டுக்கு போகும்போதும அதே போல் வாங்க வாங்க என்பார். அடுத்ததாக 'உக்காரு' என்பார். ரசிக்கும்படியாக இருக்கும். மனசுக்கு இதமாக இருக்கும். அது கோத்ராவில் ரயில் எரித்த நேரம் . அவருக்கு எனக்கும் கலெக்டர் அலுவலகத்தில் ஸ்பெஷல் பாஸ் கொடுத்திருந்தார்கள். எனது பெயர் 'நாராயண்' (நாராயணன் என்பது தெற்கே மட்டும்தான் என்பது அப்போது தான் புரிபட்டது) என்றும் அவரது பெயர் பி சி நாயர் என்றும் கொடுத்திருந்தார்கள் அதை வைத்துக்கொண்டு காய்கறி மார்க்கெட் திறந்திருக்கும் நேரம் ரேடியோவில் கலெக்டர் ஜெயந்தி ரவி (சென்னைக்காரர்) அவர்கள் குஜராத்தியில் சொன்னதைக்கேட்டு அதன் பிறகு மார்கெட்டுக்கு நானும் அவரும் செல்வோம்....
நாய் குறுக்கே சென்றால் பாத்து பாத்து 'நாய் வரார்' என்பார். மழலைததமிழ் போல அவருடையது மலையாளத்தமிழ். வசீகரமுடையது நெருக்கமானது. சுதந்திரம் வாங்கிய அந்த மாதத்தில் (ஆகஸ்ட் 1947) பிறந்தவர். சரியாக அறுபது வயதில் அவர் பணி நிறைவு செய்தார் அப்போதெல்லாம் நானும் எனது குடும்பத்தினருடன் திருவல்லா செல்ல திட்டமிட்டிருந்தோம். முடியவில்லை...
அவரது பையன் எம் பி பி எஸ் முடித்துவிட்ட ஒரு டாக்டர் . ஏப்ரல் 9 கல்யாணம் கண்டிப்பாக வரவேண்டும் என்று போனில் பேசிவிட்டு கையேடு பத்திரிகையும் அனுப்பிவிட்டார். ஒரே ஒரு திருத்தம் மட்டும். திருமணம் திருவல்லாவில் இல்லை மாறாக திருவனந்தபுரத்தில். மணமகளும் ஒரு டாக்டர் . அவரது ஓய்வுக்கான விழாவில் கலந்து கொள்ள திருவல்லா செல்ல முடியவில்லை எனவே கண்டிப்பாக இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டி நானும் எனது மனைவியும் சென்றோம். காலை பத்து மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு . நாங்கள் ஒன்பது மணிக்கெல்லாம் மண்டபத்தில் ஆஜராகினோம். ஒருவர் கூட இல்லை.3
இடபழஞ்சி ஆர் டி ஆர் மண்டபம அது. சரியாக பத்து மணி. மாப்பிள்ளை ஒரு காரில் வந்து இறங்கினார். பெண் வீட்டார் வழக்கம் போல் ஆர்த்தி விளக்கு வைத்து வரவேற்றனர். நாயர் சாரை மட்டும காணவில்லை. விசாரித்ததில் அவர் பஸ்ஸில் வந்து கொண்டிருக்கிறார் முகூர்த்தம் பனிரெண்டு இருபதுக்குமேல் பனிரெண்டும் நாற்பது வரைக்கும் தான் ....
மணமேடைக்கு மாப்பிள்ளை ஒருபுறமும் பெண் ஒரு புறமும் சென்றனர். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பரிசுப்பொருட்கள் அவரவர் அறைக்கு சென்று கொடுத்த வண்ணம் இருந்தார்கள் நமது ஊரில் கல்யாணம் முடிந்த பிறகுதான் கொடுக்கிறார்கள். பதினோரு மனி சுமாருக்கு நாயர் சார் வந்தார் நல்லவேளையாக ...
மலையாள பெண்மனிகளோடு பாரியாளை உட்காரவைத்து விட்டு வாசல் பக்கம் அப்படியே நின்று கொண்டிருந்தேன். அப்போட்துதான் எதிர்ப்பட்டார் பிரேமச்சந்திரன் நாயர். மண்டபத்தின் உள்ளே நுழையும் போதே என்னைப்பார்த்து விட்டார். "என்ன எப்போ வந்தாச்சி;வீட்டிலே எங்கே விட்டிருக்கே" என்று விசாரித்தார்.
அவர்கள பாணியில் நாமும் மணமகன் அறைக்கு சென்று பரிசுப்போருளைக்கொடுத்துவிடலாம் என்று நானும் எனது மனைவியும் நினைத்திருந்தோம். அதன் படி நாயர் சாரை உடன் அழைத்துக்கொண்டு மணமகன் அறைக்கு உள்ளே நுழைந்தோம் வீடியோ காமிரா சகிதம் மணமகன் அறையே ஒளிவீசியது. ' பிரசன்னம் கொடு' என்று மகனிடம் சொல்லிவிட்டு என்னருகே நின்று கொண்டார் கூடவே எனது மனைவியும்...
ஒரு வெற்றிலை பச்சையான ஒரு கொட்டைபாக்கு இரண்டு ரூபாய் காணிக்கை வைத்து எனது கையில் அந்த டாக்டர் மாப்பிள்ளை கொடுத்ததோடல்லாமல் எனது மற்றும் எனது மனைவியின் கால்களில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வேண்டி நின்றார். நான் சற்றும் இதை எதிர் பார்க்கவில்லை. விழித்தேன்..
கண்களில் கண்ணீர் வராத குறை எனக்கு அந்த விளக்குகள் அதையும் செய்திருக்கும் சிறிது நேரம் ஆகியிருந்தால் . உடனே சுதாரித்துக்கொண்டு கையில் கொண்டு போன சிறிய பரிசை அந்த மாப்பிள்ளை கையில் கொடுத்தேன். வீடியோ போட்டோ முடிந்து வெளியே வந்தேன் மனைவியோடு . ஒரு டாக்டருக்கு படிச்ச பையன் என் காலில் விழுந்தது என் மனதுக்கு நெருடலாக இருந்தது. மனைவியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து கொண்டே மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்....
நானும் 1977 மற்றும் 1980 இரண்டு தரம் எம் பி பி எஸ் படிப்புக்காக வேண்டி மனு கொடுத்து அலைந்து திரிந்த எனது வலி என் மனைவிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போல தெரிந்தது..
Wednesday, April 7, 2010
சீட்டு
எல் கே ஜி வகுப்பு சீட்டுக்கு
பணத்தோடு அலைந்தார் அப்பா
பஸ்ஸில் சீட்டின்றி
நின்று கொண்டே பயணித்தார் பிறகு
அரசாங்க ஒதுக்கீடு இன்ஜினியரிங்
சீட்டுக்கு இவ்வளவு
மேனஜ்மென்ட் சீட்டுக்கு இவ்வளவு
நிர்ணயித்தார் கல்வியாளர்
எம் எல் எ சீட்டுக்கு பணம் கட்டி
காத்திருந்தார் கட்சிக்காரர்
வாக்காலசீட்டோடு
ஓட்டுக்கு எவ்வளவு தருவார்கள்
என்று காத்திருந்தார் வாக்காளர்
ஒன்றரை லட்சத்துக்கு மேல்
இரயில்வே
வேலை இடத்தை நிரப்பசொல்லி
ஊர்வலம் போனார்கள் இளைஞர்கள்
'சீட்டுபிடித்து' பெரியாளானவன்
புதுக்காரில் வலம் வந்தான்
ஒழுங்காக வேலை செய்யவில்லைஎன்றால்
சீட்டைக்கிழித்து விடுவேன் என்றார் முதலாளி
Tuesday, March 30, 2010
மயான 'அமைதி'
'மயான அமைதி' என்று
சொல்லாடல்களில்
கதைகளில் சிலர்
கதைத்திருக்கிறார்கள்மயானத்திற்கு போகாமல் தான்
எழுதி இருப்பார்கள் அவர்கள்
மயானத்திற்குப்போய் வந்தால்
அப்படி எழுதி இருக்கமாட்டார்கள்
என்று நான் யோசித்ததுண்டு
'வாய்க்கரிசி போடுங்கள்'
'காணிக்கை போடுங்கள்'
'மன்னைத்தள்ளுங்கள்'
'கடைசியா முகத்தை பார்துக்கிங்க '
'என்னடா குழி வெட்டியிருக்கீங்க'
'எங்க ஊருலேல்லாம்
இவனுங்களை வைக்க வேண்டிய இடத்தில
வச்சிருவோம்'
'ஒங்களுக்கெல்லாம் திமிரு ......'
'மொட்டை எடுக்கிறவங்க வாங்க சாமி'
'கொல்லி ஓடைக்கிரவங்க வாங்க'
'சின்னப்பயளுகல்லாம் தள்ளிக்கொங்கடா'
'ஏல போட்டபுள்ளைஹல்லாம் ஏன்டா
சுடுகாட்டுக்கு கூட்டியாரிங்க'
'கடைசி வரைக்கும் ஒன்னையப்பாக்கனுன்னு
கட்டை கெடந்து துடிச்சி போச்சப்பா '
'சொதந்திரம் கொடுக்கணும் வேட்டிய விரிங்கப்பா'
'தேர் வாடகை குழி வெட்டினது தேர் சிங்காரிச்சது
எழவு சொல்ல கூலி ....
'ஒங்களுக்கு ரொம்ப ரேட் எறிபோச்சப்ப '
'ஆனது ஆகிபோச்சி அந்த எடத்தை
கடைசிப்பயளுக்கு எல்லாம் சேர்ந்து
எழுதி குடுத்திருங்கப்பா'
கொல்லி ஓடைச்சவன் திரும்பிப்பார்க்காமல்
போய்க்கிட்டே இருப்பா
ஒரு பிணத்துக்கு மட்டும் இவ்வளவு பேச்சு
அப்புறம் எங்கே மயான அமைதி.
Wednesday, March 3, 2010
பிணம் தூக்கிகள்
"நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைஎல்லாம் தூக்கி செல்லும்
அந்த நாலு பேருக்கு நன்றி"
என்று எம்ஜியார் வாயசைபபில்
(சங்கே முழங்கு என்ற படத்தில் )
வாழும் பொது சாதி
சனத்தோடு வாழுகிறார்கள்
போகும்போது தனியே போகிறார்கள்
அவரவர் வாழ்ந்த அடையாளத்தொடு
இடுகாடு போகிறார்கள்
பொன்னுசாமி செட்டியார் இறந்து போய்விட்டார்.
அவர் வாழ்ந்த காலங்களில் அவரது சாதியில் யாரும்
இறந்து போய்விட்டால் இவர் போய்க்கலந்து கொள்வது இல்லை
எனவே இவரைதூக்கிப்போக அவரது சாதியில் ஒரு நாலுபேர்
இல்லாமல் போனார்கள்
இறந்தவரை 'அடக்கம்' செய்யும் சாதியிலிருந்து ஒரு நாலு பேருக்கு
கூலி கொடுத்து அவரைதூக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆளுக்கு பதினைந்து ரூபாய் என்று பேசி முடிக்கப்பட்டது.
தூக்குவதில் உள்ள சிரமம் என்னவென்றால்
நாலு பேரும் ஓரே மட்டமான ஆளாக இருக்க வேண்டும்
நான் கொஞ்சம உயரமானவன்.
தோல் பாரம் இயல்பாகவே அழுத்தியது
துண்டைபோட்டுக்கொண்டேன்.
குழியை மூன்று முறை சுற்றி தேரை இறக்கி வைத்தோம்
Tuesday, March 2, 2010
கதர் சட்டை
கதர் சட்டையில் ஒரு கம்யுனிஸ்ட்
காணமுடியாது சாதாரணமாக
அவர்
காணாமல் போனது வும் அப்படித்தான்
கம்யுனிஸ்டுகள்
கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்
தற்கொலை செய்து கொண்டது இல்லை
Tuesday, February 23, 2010
நாடு
'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டு
முடிந்ததும் இந்நாடே '
என்று பாரதி சொல்லுவார்
நமது முன்னோர்கள் வாழ்ந்து மறைந்தமைக்காக நாம் நாட்டை கொண்டாடமுடியுமா என்ன?
மனிதனை சமமாகப்பார்க்க முடியாத தேசத்தில்
சகமனிதனை மனிதனாகப்பவித்து பழக முடியாத தேசத்தில்
நாம் பாரத தேசம் என்று நிச்சயம் தோல் நிமிர்த்த முடியாதுதான்
ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற வளாகத்தில் "மனு" வின்
சிலை வைக்கப்பட்டிருக்கிறது
அவன் போதனை இந்திய மக்களின் மனங்களில் ஏற்றப்பட்டிருக்கிறது
ஆகவேதான்
'அவன் மட்டும் என் கைகளில் கிடைத்திருந்தால் அவனைக்கடித்துக்குதறியிருப்பேன் '
என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர்
பிரமிட் அமைப்பில் சாதீய வடிவத்தை நிறுவியவன் அவன்
இந்தியாவில் அவனது தடம் பதியாத மனித மனம் கிடையாது
சீக்கிய மதத்தில் குரு ரவி தாஸ் என்பவருடைய பாடல்கள்
ஏற்றுக்கொண்ட அளவுக்கு மக்கள் அவரது சாதியை ஏற்றுகொள்ள வில்லை
அவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதால்
அண்மையில் ஆஸ்திரிய நாட்டு தலைநகர் வியன்னாவில்
அவரைப்பின் பற்றும் சீக்கியர்கல் தாக்கப்பட்டது மனுவினால்தான்
என்பது தெரிய வரும்.
அன்னளைப்பின் பற்றி புத்த மதத்தில் இணைந்தவர்கள் 'நியோ புத்திஷ்டு '
என்றே அறியப்படுகிறார்கள்
வால்மீகி என்பவர் ராமாயணம் எழுதியதாக சொல்லப்படும் இந்த நாட்டில்தான் அவரது பெயரை 'சர் நேம் ' ஆகக்கொண்டவர்கள் மலம் அள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்.
கிறித்துவத்தில் பாதியாராக ஆவதற்குண்டான படிப்பை படித்த
ஒரு தலித் (அருள் ராஜ்) தமிழ் நாட்டில் அந்த வேலை செய்ய இடமில்லாமல் ஒரிசா சென்று மதவெறிக்கு இறையாகிப்போனார்
இவ்வளவு ஏன்
நமது நாட்டில் வாழும் இஸ்லாம் சகோதரர்கள் கூட
சாக்கடை அள்ளும் நமது சகோதரனை
ஒரு நாளும் 'மாமா' என்று அழைப்பது கிடையாது
இதுவும் கூட மனுவின் வேலைதான்
Friday, February 19, 2010
சீலக்காரி
'சீலக்காரி துணை'
'ரிசர்வ் லயன் மாரியம்மன் துணை'
'இருக்கங்குடி மாரியம்மன் துணை'
'மதுரை வீரன் துணை'
என்று நான்கு சக்கர வாகனங்களில் பலவற்றில் அவரவருக்கு உரித்தான குலதெய்வங்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதைப்பார்த்திருக்கிறேன் பலமுறை.
பொதுவாகவே, நமது குலதெய்வங்கள்,நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினரின் மூதாதையர்களோடும் அவர்களது குலத்தொழிலோடும் சம்மந்தப்பட்டு இருப்பதைப்பார்க்க முடியும். இன்றைக்கும் அதனை வழிபடுபவர்கள், அதன் தோற்றம் இருப்பு மற்றும் அதன் பெருமை பேசுவதைக்காணலாம். இப்படிப்பட்ட கிராம தெய்வங்களின் இன்று வரையான நீட்சி நமது வேர்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
பொள்ளாச்சி ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் கதைகூட இது போன்றதுதான்... ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள் நிறைமாத கர்ப்பிணியைப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்க, தன்னந்தனியான அந்த தலித் பெண்ணின் போராட்டம் அடர்ந்த அந்த சாணியில் குழந்தை பெற்றுகொண்டு மரணத்தைத்தழுவியதில் முடிகிறது. மாசாணியம்மன் சிலையே உங்களுக்கு அந்தசெய்தியை சொல்லும்.
எங்கள் குலதெய்வம் பற்றிய ஒரு பதிவை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
எனது பூட்டன் சுடுகாட்டுக்கு பிணம் எரிக்க செல்லுகிறான் அது ஒரு இரவு நேரம். எரியூட்டிய பிறகு பிணத்துக்கு வேண்டியவர்கள் கலைந்து விட்டார்கள். பிணமும் பாட்டனும் தனியே... இதற்குள் பாட்டனின் பிரிய மகள் அழுது கொண்டே சுடுகாட்டுக்கு வந்துவிடுகிறாள் அவரறியாமல். (பொதுவாக எந்த பெண்களையும் ஆண்கள் சுடுகாட்டுக்குள் அனுமதிப்பதில்லை குறைந்தபட்சம் அன்றைக்கு மட்டும் மறு நாள் பால் ஊற்ற அனுமதிப்பது வேறு..) நரம்புகள் புடைக்க கொழுப்பு உருக தனது இருப்பிடம் மாறி பிணம் கீழே விழ, அந்தப்பக்கம் இருந்த பூட்டனின் மகள் மேல் தீ பற்றிக்கொள்கிறது.. அவளின் அலறல் சத்தமே பூட்டனுக்கு மகளை அடையாளம் காட்டுகிறது. காப்பாற்ற முடியாமல் போன அவளது உயிர் அவலக்குரலுடன் காற்றில் கரைந்து போகிறது. இப்படி பலியானவள்தான் எனது குலதெய்வமான "சீலக்காரி".
Wednesday, February 17, 2010
நடவு

Tuesday, February 16, 2010
தீண்டாமை
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
என்று பள்ளிப்புத்தகங்களில்
கடைசிப்பக்கங்களில்
பெருமையாக எழுதப்பட்டிருக்கிறது
ஒவ்வொரு பதினெட்டு நிமிடத்திற்கும்
எங்களை தீண்டாமலா இருக்கிறீர்கள்?
உங்களின் வல்லுறவுக்கு இரையாக
எங்கள் சகோதரிகளின் யோனியை;
சிக்கி முக்கி கற்களால் நாங்கள் கண்ட
நெருப்பால் எங்கள் குடிசைகளை;
நீர் நிலைகளில் வாழத்துவங்கிய
எங்களை அதே நீரில் மூழ்கடித்து;
அரிவாளால் ஆயுதங்களால் எங்கள்
உடல் உறுப்புகளை;
கழிகளால் எங்கள் புட்டங்களை;
நாங்கள் செய்த செருப்புகளால்
எங்கள் மார்புகளில்;
இனிஒரு திருத்தம் செய்திடுவோம்
இளம் தளிர்களுக்கு உண்மையை
போதிக்கும் பொருட்டு
பள்ளிப்புத்தகங்களின்
கடைசிப்பக்கத்தை
அழித்துவிடுவோம்
Wednesday, February 10, 2010
தலித்துகளுக்கு இடமே இல்லையா

௨. சந்திரபூர் குல்லூர் கிராமம் அமராவதி தாலுகா மகாராஷ்டிரா மாநிலம், கிஷோர் பன்சொது என்பவரின் இரண்டரை ஏக்கர் நிலம் இந்த நாட்டின் முதல் குடிமகள் பிரதிபா பாட்டில் என்பவரின் கணவர் தேவி சிங் ஷெகாவத் என்பவரால் அபகரிக்கப்பட்டது. அவரது இருநூறு ஏக்கர் நிலத்திற்குள் நுழைய தடையாக இருந்த கிஷோர் என்ற தலித்தின் நிலமும் பிரதிபா பாட்டில் அவர்களின் கணவர் திரு ஷெகாவத்துக்கு வேண்டியிருந்திருக்கிறது.
என்று தணியும் இந்த கோர நிலப்பசி ?
கிஷொரிடம் அந்த நிலத்தை ஒப்படைக்க டர்யாபூர் உத்தரவிட்டபிறகும் கூட அவர் நீட்டி முழக்குகின்றார் நீதிமன்றம் திரும்ப அந்த இடத்தை அளக்கத்தான் சொல்லியிருக்கிறது. அவர் (கிஷொர்) விளம்பரத்திற்காக சொல்லுகிறார் என்று.
பெரியமனிதன் சொன்னால் பேப்பரில் போடுகிறான் சின்ன மனுஷன் சொன்னல் சிறையில் போடுகிறான் என்று கலைவாணர் என். எஸ்.கே சொன்னது எவ்வளவு சரியாகப்படுகிறது இந்த காலங்களில்.
வட்டிக்காரன் முதலாக நாட்டின் முதல் பெண்மணியின் கணவர் வரைக்கும் உண்டான ஆசைக்கு இலக்கு ஆகத்தகுதி பெற்றவன் இந்த நாட்டில் ஐந்தில் ஒரு பகுதியாக வாழும் தலித்துகளின் சொத்துக்கள் மட்டும்தானா என்ற கேள்வியை நாம் உரத்து எழுப்பியாக வேண்டிய காலம் என்றைக்கு கனியும் இந்த திருநாட்டில்?
பெரியார் பிறந்த இந்த மண்ணில் தான்
அண்ணாவின் பெயரால் எழுப்பப்படும் மறுமலர்ச்சி சுடுகாடுகள் கூட ஆதி திராவிடருக்கென்று ஒன்றும் (தலித்துகள் தான்)
மற்றவர்க்கென்று ஒன்றும் என்றும் கட்டப்படுகிறது.
இது போன்ற சமூக நீதிக்காவலர்கள் பிறக்காத பாக்கி தேசத்தில் எப்படி சமூக நீதி எதிர்பார்க்கமுடியும்?
"ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பார் இந்தியாவில் இல்லையே"
என்ற பாரதியை நினைவு கொள்வோம் இந்த நாட்களில்
வாழ்க பாரத மணித்திரு நாடு.
Friday, February 5, 2010
பாவத்தின் சம்பளம்

பாவத்தில் அல்லது சாதரணமாக (!) மரித்த
ஒருவனுக்கு அவனது உடல் இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பவர்களுடைய பாதுகாப்பு கருதி பத்திரமாக பூலோகத்திலிருந்து அனுப்பி வைக்கும் ஒருவரை 'வெட்டியான்' என்று இந்த சமூகம் அழைக்கிறது .
உண்மையில் பார்த்தால் அவர்தான் 'உருப்படியான' வேலை செய்கிறவர் என்று யாருக்கும் புரிவதில்லை. அவர் அந்த வேலையை செய்யவில்லை என்றால் 'எபிடேமிக்' வியாதியால் அநேகர் பாதிக்கப்படுவார்கள் என்கிற விஞ்ஞான பூர்வமான உண்மையை மறுக்கிறார்கள் சாதி என்கிற போர்வையால். எனது முதல் கூலி ஒரு சோவியத் காலண்டர் பையைத்தூக்கியதால் கிடைத்தது என்று' முதல் கூலி ' என்ற எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
இரண்டாவது என்பது பிறந்தவுடன் இறந்து போன அல்லது இறந்தே பிறந்த ஒரு குழந்தையை சுடுகாட்டில் புதைத்ததற்காக கிடைத்தது.
அன்று ஒரு நாள் கன்று போட்ட பசுமாட்டை ஒட்டிக்கொண்டு கால் நடையாக அப்பா மெட்டுகுண்டு வரை சென்று விட்டார். பிறந்த குழந்தை ஒன்று இறந்து விட்டபடியால் அதைப்புதைக்க குழி வெட்ட சொல்லி உத்தரவு பிறபிக்கப்பட்டது. அப்பாவின் வெளியூர்ப்பயணத்தால் அந்த இடத்தில் நான் குலத்தொழில் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். கடப்பாரையும் மண்வெட்டியுமாக சுடுகாடு போய், ஒன்றரை அடிக்கு முக்கால் அடி என்கிற வீதத்தில் ஒரு குழி தோண்டினேன். ஒரு இரண்டு அடி ஆழம்வரை தோண்டவேண்டி இருந்தது.
தூளியில் வைத்து 'அம்மன் காப்போடு' (வேறென்ன வேப்பிலைதான்) கொண்டுவரப்பட்டது பச்சிளம் தளிர் போன்ற குழந்தை. குழிக்குள் கிடத்தினார்கள். மண்ணைக்கொத்தி குழியை மூடித்துவங்கினேன். முக்கால்வாசி குழி மூடப்பட்டதும் பக்கத்து வேலிக்கருவேலை மரத்தின் இரண்டு கொப்புகளை மண்வெட்டியால் வெட்டி குழிக்குள் திணித்தேன். ( நாய், நரி ஏதும் குழியைப்பரித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு)
மிச்ச மண்ணையும் இழுத்துப்போட்டு மணல் வீடு கட்டுவதைப்போல் கூம்பு வடிவத்தில் குழி என்ற அடையாளம் தெரிய அமைத்தேன்.
பாவமே செய்யாத அந்தக்குழந்தையின் மரணம் எனக்கு சம்பளமாக ரூபாய் பத்து வழங்கியது.
Wednesday, February 3, 2010
முதல் கூலி

கவலை இல்லை இனி உனக்கு
ஒத்துக்கொள் - பாரதி தாசன்.
பொதுவாக அவரவர் அப்பாவின் வேலையை கற்றுகொள்வதற்கான அறிவுரை என்றுதான் இது புரிந்துகொள்ளப்படவேண்டியிருக்கிறது. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் வேறென்ன கற்றுக்கொள்ள முடியும். அப்படித்தப்பித்தவறி படித்துவிட்டாலும் கூட வேலை வாய்ப்பு என்பதிலும் கூட சாதி வந்து கும்மாளமிட்டு விடுகிறது. இல்லையென்றால் திண்டுக்கல் பக்கம் ஒரு எம்.ஏ பட்டதாரி ஒரு சில தனியார் பள்ளிகளில் வேலை பார்த்துவிட்டு ஒன்றும் தோதுப்பட்டு வராமல் தனது குலத்தொழிலான செருப்பு தைக்கும் வேலையை செய்ய மனமுவப்பாரா என்ன?
இந்த செய்திகளின் பின்னணியில் எனது நினைவோட்டத்தைப்பகிர நினைக்கிறேன்.
தீவிர எம்ஜியார் ரசிகனான எனது அப்பாவைப்போல் நானும் எம்ஜியார் ரசிகன் ஆனதில் வியப்பேதுமில்லை. மதுரை வீரன் படத்தின் ரிலீஸ் சமயம் அந்தப்படத்தை ௩௬ முறை பார்த்திருக்கிறார் எனது அப்பா. மதுரை வீரன் திரைப்படத்தில் என் எஸ் கே செருப்புதைக்கும் தொழிலாளியாகவும் அவரது வீர மகனாக எம்ஜியாரும் நடித்திருப்பார்கள்.
குலத்தொழில் முறை வேண்டும் என்று ராஜாஜி சொன்னதை எதிர்த்து குரல் கொடுத்த பச்சைத்தமிழன் வாழ்ந்த நாட்டில் சாதி சார்ந்த தொழில் செய்யவேண்டிய நிலையில்தான் இன்னும் சூத்திர பஞ்சம சாதியினர் இருக்கிறார்கள்.
அந்த வகையில் நானும் குலத்தொழில் செய்முறைக்காக எனது எட்டாவது அரையாண்டு விடுமுறையில் அப்பாவுடன் சேர்ந்து செருப்பு தைக்கப்போனேன். பஜாரில் உள்ள ஒரு கடை அது. சொல்லவேண்டியதில்லை ; வானமே கூரை. வாகனங்களின் இரைச்சல், சிந்திக்கிடக்கும் ஒன்றிரண்டு வத்தல்கள்,மூட்டை தூக்குபவர்கள், ஒயாத சனங்களின் நடமாட்டம், தும்மலை வரவழைக்கும் தூசி ,வெயில் இன்னும் இன்னும்...
ஒருரூபாய் கூலி கேட்டால் பேரம் பேசுவார்கள் கிழிந்த செருப்போடு வந்தவர்கள்.
கனத்த காக்கி கலர் பையும், இன்னொரு கையில் துணிகளடங்கிய ரெக்ஸின்பேக்குமாக கிழிந்த செருப்பை இழுத்து இழுத்து நடந்து வந்தார் அப்பாவை நோக்கி ஒருவர்.
சரி செய்ய கூலியாக ஒரு ரூபாய் கேட்டார் அப்பா .முக்கால் ரூபாய்க்கு வந்தவர் சம்மதிக்க வேலையை முடித்துக்கொடுத்தார் அப்பா.
செருப்பை காலில் மாட்டிக்கொண்டே என்னைப்பார்த்து சிரித்தார் வந்தவர்.
அந்த கனத்த காக்கி கலர் பையோடு தனது பேக்கையும் சேர்த்து செல்ல இயலாது என்று யோசித்தாரோ என்னவோ தெரியவில்லை.
'தம்பீ இந்த பையை பஸ் ஸ்டாண்டு வரைக்கும் தூக்கிக்கிட்டுவர்றியா'
நான் அப்பாவைப்பார்த்தேன்.
போய்ட்டு வா என்றார்.
சுமை எனது தலைக்கு ஏறியது வந்தவரின் உதவியால்.
சுருட்டி சுருட்டி இறுக்கமாக திணித்து வைக்கப்பட்டிருந்த காலண்டர்கள் போல் தெரிந்தது. அதன் பளபளப்பும், புதிய தாளுக்கேயுரிய வாசனையுமாக.
அது சோவியத் யூனியன் காலண்டர்கள் என்று அப்போது தெரியவில்லை.
பின்னாட்களில் லைப்ரரி செல்லும் போது யுனெஸ்கோ கொரியர் என்ற பத்திரிகையைப்பார்த்த பிறகுதான் அந்த காலண்டரின் பளபளப்பு புரிபட்டது.
வந்தவர் முன்னால் நடக்க நான் சுமையோடு அவரின் அடியொற்றி மாரியம்மன் புக் ஸ்டோர்சிலிருந்து கிளம்பி, ரத்தினம் பட்டணம் பொடி கடைதாண்டி, மாரியம்மன் கோவிலில் இருந்து திரும்பி, தேர் முட்டி,பொட்டல் வழியாக வந்து மூளிப்பட்டி அரண்மணை கடந்து, உடுப்பி ஹோட்டல், சென்ட்ரல் சினிமா வழியாக வந்து எம்.எஸ்.பி பஸ் ஸ்டாண்டின் தெற்கு நுழைவாயில் வழியாக உள்ளே சென்றோம்.
காலண்டர் சுமையை வந்தவரின் உதவியால் இறக்கி வைத்தேன்.
படிக்கிறியா என்றார்.
எட்டாவது என்றேன்
நல்லாப்படி என்று சொல்லிக்கொண்டே தனது பர்சிலிருந்து ஒரு பித்தளை இருபது பைசா நாணயத்தை எனக்கு கொடுத்தார்.
நாணயத்தில் ஒருபுறம் நமது நாட்டின் தேசியப்பூவான தாமரை
மறுபக்கம் என்னைப்பார்த்து சிரித்த வண்ணம் எம்.கே காந்தி.
Tuesday, February 2, 2010
இருங்கு சோ ள ம்
தவிர விளைகின்ற காடு சார்ந்துதான் அந்தக்களங்கள் அமைந்திருக்கும். எந்த சம்சாரியின் காடு எங்கே என்று தேடிகண்டுபிடிக்குமுன் போதும் போதுமென்று ஆகி விடும். சில நாட்களில் எங்கள் பள்ளியின் அருகில் கூட களம் இருக்கும். அவித்த அமெரிக்க கோதுமைச்சோற்றை சாப்பிட்டுவிட்டு எதுக்களிக்க ஒடிச்சென்று அம்மாவைப்பார்க்கும்போதெல்லாம் வெயில்ல நிக்காத பள்ளிக்கொடத்துக்கு போ என்று வண்டு கட்டிய தலையோடு சொல்லுவார்கள். ஒரு நாள் தலைமை ஆசிரியர் 'கேர்' எடுக்க சென்றதால் பள்ளியில் மதியச்சோறு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். (மதிய உணவுக்கு வேண்டிய அந்த பனைமரத்து எண்ணெய், கோதுமை வாங்கி வருவதுதான் 'கேர்' எடுப்பது என்பது பிறகு தெரிந்து கொண்டேன்). பசியோடு வீட்டுக்குப்போனால் புளிச்ச தண்ணிப்பானையின் அடியில் கையைவிட்டுக்கோதினாலும் பருக்கை சிக்கவில்லை. ஒரு செம்பு நீச்ச தண்ணீயைக்குடித்துவிட்டு மதியம் பள்ளி சென்றேன். நாலரை மணிக்கு பள்ளி விட்டதும் ஒவ்வொரு களமாக அம்மாவைத்தேடினேன். இருட்டும் நேரம் ஆகியும் களம் முடியவில்லை. கொஞ்ச நேரம் அங்கேயே விளையாடிப்பார்த்தும் வேலை முடிவதாக இல்லை. ஒருவழியக ஏழரை மணி சுமாருக்கு களம் முடிந்தது. கூலியை அம்மா பெட்டியிலும் முந்தியிலும் வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்தார்கள். வாங்கி வந்த கூலி இருங்கு சோளம் . அவ்வளவு சாமானியத்தில் அதன் தோலை உரித்து எடுத்துவிட முடியாது. ஒரு உடந்த மண் பானையில் சோளத்தைப்போட்டு வறுத்து அந்த சூடு போகுமுன் உரலில் போட்டு இடித்தால் சுத்த வெள்ளையாக வராவிட்டாலும் செங்களிச்ச ஒரு நிறத்தில் சோளம் வெளிப்படும். அதை கஞ்சி காய்ச்சிக்குடிக்க ஆசையாக அம்மா தருவார்கள். கள்ளன் போலிஸ் எல்லாம் விளையாடி ஆகிவிட்டது. ஆனாலும் அம்மா அடுப்பு பத்தவைக்கவில்லை. வேலிக்கருவேலை முள் தான் எரி பொருள். அம்மாவுக்கும் பசிதான் இருந்திருக்கும். அத்தோடுதான் இந்த இருங்கு சோளத்தோடு போராடிக்கொண்டிருந்தார்கள். தங்கை தம்பிகளோடு அம்மா சோளச்சோறு ஆக்கி முடிக்குமுன் நான் தூங்கிப்போனேன்.
Monday, January 25, 2010
ஒரு கடி தம்
கல்கி வார இதழுக்கு ஜுன் 11 2002 எழுதிய ஒரு கடிதம் இது
பிரசுரிக்கப்பட்ட விபரம் தெரியவில்லை.
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
தங்களது கேள்வி பதில் ( கல்கி ஜுன் 09 2002) பகுதியில் அரசுடமையக்கக்ப்பட்ட வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பதற்கான காரணங்களாக தாங்கள் சிலவற்றைக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். 1969 ல் வங்கிகள் திவாலாகிப்போனபொது( அப்போது பெரும்பாலான வங்கிகள் த்னியாரிடம் மட்டும்தான் இருந்தது) அரசுடமை ஆக்கப்பட்டது. பல சிறு முதலீட்டாளர்கள் வங்கி மூடலால் (திவாலா) தற்கொலை செய்யும் சூழல் இருந்தது. சிவாஜியின் "முதல் தேதி" படத்தில் இது சம்பந்தமான காட்சி கூட வரும்.
அரசுடமை ஆன பின் அதுவல்ல நிலைமை. 1390 கோடி ரூபாய் நஷ்டத்தில் போன இந்தியன் வங்கி
கூட இந்த ஆண்டு முதல் லாபம் ஈட்டத்தொடங்கியுள்ளது.
மற்றபடி தனியார் வங்கிகளின் நோக்கம் சேவை என்றிராது.
மாறாக 'லாபம்' ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டிருக்கும். அரசுடமையாக்கக்ப்பட்ட வங்கிகளின் வாராக்கடன் ௫௮000 ரூபாய். காரணம் பணியாளர்கள் அல்ல; அரசின் சாரதிகள் மட்டுமே.
தவிர , உலகமயமாக்கல் என்பதன் விளைவு லாபம் தரும் தொலைதொடர்பு என்று கூடப்பாராது அனைத்தையும் தனியார் மயமாக்குவதுதான். வேறு வழியில்லை என்று 'டங்கலில்' கையொப்பமிட்டவர்களும் இன்றையவர்களும், கூறிக்கொள்கிறார்கள். விளைவாக ௧௯௫௬ ல் தேசியமயமாக்கப்பட்ட எல் ஐ சி நிறுவனத்துக்கும் கூட தனியாரை ஊக்குவிக்கும் கொள்கை அமல் படுத்தப்படுகிறது. பணியாளர்கள் பொறுப்புகள் கூடும் என்பதற்காக போராடலாம் என்பது சரியனதல்ல என்பதை அறியுங்கள்.
அன்புடன்
திலிப் நாராயணன்.
கோத்ரா 389 001
( குஜராத்)
Thursday, January 21, 2010
செருப்பு

'செருப்பு பிஞ்சி போய்விடும் 'என்றான் சண்டைகட்ட வந்தவன்
தொழிலாளர்களின்
'காலுக்கு செருப்புமில்லை கால்வயிற்றுக்கூழுக்குமில்லை '
என்று பதறினார் ஜீவா
'செருப்புதான் ஆண்டது ' பாரதத்தை ராமராஜ்யத்தில்
'சுகாதாரத்திற்கு அடிப்படை செருப்பு' என்கிறார்கள் மருத்துவர்கள்
'முண்டஜிர் ஜைடி'க்கு செருப்பு ஆயுதமானது
அதுவே 'புஷ்'ஷிற்கு அவமானமாகிப்போனது
'பாட்டா'வில் செருப்புக்கு சர்வீஸ் செய்கிறான்
பாதங்கள் பார்த்து கண்கள் பூத்து
பாதையில் பசியுடன் உட்கார்ந்திருக்கும்
என்னை மட்டும் ஏன் 'இழிசாதி' என்கிறான்
என்பது இன்னும் 'புரிபடவே' இல்லை
Wednesday, January 20, 2010
நெத்தியில் முளைத்தவர்கள்
பத்து பனிரெண்டு வயது சுமார் இருக்கும் . அம்மா எனது சேட்டைகள் தாங்காமல் அல்லது அவர்கள் சொன்ன வீட்டு வேலைகளை செய்யாமல் 'டிமிக்கி ' கொடுக்கும் சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையால் திட்டியிருக்கிறார்கள். அதன் அர்த்தம் அப்பொழுது புரிபடவில்லை. "இவன் நெத்தியில மொளைச்சவனாசசே சொன்ன படி கேட்க மாட்டேங்கிறானே" என்பதுதான் அந்த வசை மொழி. அம்மாவி்ன் சின்ன வயதில் எதிரே பிராமணர் வந்தாரென்றால் 'சூததிரவாள் ஒதுங்கு' என்று குரல் கேட்டு எதிரே போகாமல் ஒளிந்து கொள்வாராம் அம்மா. இதையும் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் அம்மா பள்ளிக்கூட வாசலை மிதியாதவர். எழுத்தறிவு மறுக்கப்பட்டவர். ஆனாலும் கூட இது போன்ற மனு எதிர்ப்பு வாசகத்தை எப்படி உள் வாங்கிக் கொண்டார் என்பது எனது கேள்வியாகி விட்டிருந்தது. இதற்கான பதில் தி க வின் வெளியீடான 'அசல் மனுதர்ம சாஸ்திரம்' வாங்கிப்படிக்கும் வரையும் தெரியாதென்று சொல்ல முடியாது. அதற்கு முன்பாக சில கூட்டங்களில் 'மனு' வைப்பற்றிக்கேட்டபோதுதான் அம்மாவின் வசவுக்கான காரணம் புரிந்தது. இந்து மத தர்மத்தின் அடிப்படையில் பார்த்தால் படைக்கும் கடவுள் ஒருவர் இருக்கிறார் (பிரம்மா) . காப்பதற்கு ஒருவர் (விஷ்ணு) அழிப்பதற்கு ஒருவர் (சிவன்) என்று இருக்கிறார்கள். படைக்கும் கடவுளின் நெற்றியிலிருந்து பிறந்தவன் பிராமணன்; தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன்; தொடையிலிருந்து பிறந்தவன் வைஸ்யன்; பாதத்திலிருந்து பிறந்தவன் சூத்திரன்; இதில் அடைபடாத ஒரு வகுப்பினரும் இருக்கிறார்கள். அவர்கள் தான் பஞ்சமர்கள். அவர்கள் மட்டும் ஐந்தில் ஒரு பகுதியினராக அறியப்படும் சண்டாளர்கள். இவர்கள் பிரம்மாவின் உடம்பின் எந்தப்பகுதியிலும் பிறந்ததாக மனு எழுதி வைக்கவில்லை. பெரியாரின் பாணியில் சொல்வதென்றால் இவர்கள் மட்டுமே அவரவர் அப்பா அம்மாவுக்குப் பிறந்திருப்பார்கள் போல இருக்கிறது. நெத்தியில் முளைத்தவர்கள் எனக்கருதப்படும் பிராமணர்கள் எழுதி வைத்த மனுவை சாத்திரங்களை யாரும் கேள்வி கேட்டிருக்கமுடியாது அந்த நாட்களில். அந்த அடிப்படையில் தான் 'இவன் நெத்தியல முளைச்சவன்ல' என்கிற வசை மொழி உருவாகியிருக்கும் என பின்னாட்களில் தெரிந்து கொண்டேன் .
Tuesday, January 19, 2010
விட்டு விடுதலையாகி...
முக்கியப்புள்ளியாகக் கருதப்பட்ட ஒரு மனிதர் இறந்து விட்டார். பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது இயற்கைதானே. இதைப்புரிந்து கொள்வதில் எவ்வளவு வேறுபாடுகள் மனிதர்கள் மத்தியிலும் மதியிலும். சேவகம் செய்வதற்கென்றே சில சாதிகளும் அவர்களை அதட்டி வேலை வாங்குவதற்கென்றே மேலே பலவகையான சாதிகளும் என்ற அடுக்குமுறை நிலவும் சமுதாயம் நமதென்று நாமறிவொம். அந்த வகையில் ஆறுமுகம் ஒரு தலித் அல்லது அருந்ததிய சகோதரன். நாயக்கமார், தேவமார், செட்டிமார், ஆசாரிமார் போன்ற சமுதாய மக்கள் இடை நிலை சாதியென்றும் அவர்களுக்கு மேலாக பிள்ளைமார் மற்றும் பார்ப்பனர்கள் வருண தருமப்படி மேலே அமர்ந்திருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். மேல் சாதியாவும் கீழ் சாதியாகவும் மனிதர்களுக்குள் படி நிலையில் சாதிய அமைப்பை ஏற்றுக்கொண்ட நியதிதான் நமது. பொதுவாக நமக்கு மேலே இருக்கும் சாதியினரைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் கீழே ஏதாவது ஓரிரெண்டு சாதியேனும் இருக்கவேண்டும் என நினைக்கிற சமூக அமைப்பு நம்முடையது.
அந்த வகையில் பார்த்தால் நமது ஆறுமுகத்தின் அப்பா ஒரு காணிக்காரர். அதாவது இடை நிலை சாதியர் எவர் வீட்டிலும் எழவு விழுந்தால் அங்கே ஆஜர் ஆக வேண்டியது அவர் பொறுப்பு. அவனுடைய அப்பா ஒரு செருப்புத்தைக்கும் ஒரு சாதாரணப்பட்டவர். அவர் செய்த ஒரே தவறு நாம் தான் படிக்கவில்லையே நமது பிள்ளையாவது நாலெழுத்து படிக்கட்டுமே என்பதுதான். அதில் வந்ததுதான் வினை. ஆறுமுகம் நினைத்தால் சுடுகாட்டுக்குப்போய் அந்த இடைநிலை சாதியினருக்கு சேவை செய்திருக்கவேண்டியதில்லைதான். அப்பாவோ ஒரு காச நோயாளி. அவர் அடிக்கடி படுத்த படுக்கையாகி விடுவார். ஆகவேதான் ஆறுமுகத்தின் தலையில் விழுந்தது குலத்தொழில் என்கிற கோடாரி.
அம்மாவோ மூத்தவன் ஆறுமுகம் உள்ளிட்ட நாலு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி சம்சாரிமார்களின் காடு மேடு, கழனி களம் அறுவடை வயற்காடு வரப்பு என்று குழந்தைகளின் பராமரிப்பு வேண்டி தீராத உழைப்புக்கு ஆட்பட்டிருந்தாள். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை அவருக்கு ஊர் பார்க்கும் காணிக்காரன் என்ற அற்புத வாய்ப்பு கிடைக்கும். ஆறுமுகம் ஐந்தாவது படிக்கும் போது அவனது அப்பாவுக்கு ஊர் காணிக்காரன் வேலை வாய்த்தது. அப்போதெல்லாம் அப்பா தாட்டியமாக இருந்தார். அவரே மயானத்துக்கு சென்று குழி தோண்டுவார். ஆழக்குழி வெட்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொன்னூறு முட்டை என்பது ஒரு பழமொழியாக தமிழராகிய அனைவரும் அறிந்திக்கிறோம். ஆனால் செத்துப்போன ஒரு சக மனிதனுக்கு ஒரு குழி வெட்டினவன் இதை எழுதியிருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
பிணம் அந்தப்பகுதியில் விழுந்து விட்டது என்று தகவல் சொன்ன அடுத்த நிமிடத்தில் அவசரகதியில் அப்பா இறங்கி விடுவார். பங்காளிகளில் நெருக்கமானவர்களை அழைப்பதும் எழவு வீட்டில் இருந்து ஊர்வாரியாகப் பட்டியல் வாங்குவதும் (எழவு சொல்லத்தான்), சுடுகாட்டில் யாருக்கோ கட்டிய தேரை ரிக்ஷா வண்டியில் கொண்டு வருவதும் புதிய தேர் கட்டச்சொன்னால் பச்சை மூங்கிலில் கட்டித்தருவதும் பழைய சேலைகளையும் அவர்கள் வாங்கி வந்த கேந்திப்பூக்கள் உள்ளிட்ட கதம்ப மற்றும் ரோஜாமலர்களால் தேரை சிங்காரிப்பதும் இரண்டாள் உயரமுள்ள பாடைக்கம்புகளை தோ¢ல் கட்டுவதும் மண் சட்டியில் கங்கு போடுவதும் என்று அனைத்து வேலைகளும் அப்பாவுக்கு அத்துப்படி.
சட்டையில்லாத ஒடிசலான உடம்புடன் ஒரு கையில் கங்கு புகையும் கயிறு கட்டப்பட்ட மண்சட்டியும் தோளில் மண் வெட்டியும் தலையில் உருமாக்கட்டுமாக வேகமாக தேருக்கு முன்னால் செல்லும் வேகம் நேரமேலாண்மை சம்பந்தப்பட்டது. செத்தவன் நல்லவனாக இருந்தால் அவனது சாதியிலேயே நன்றி உள்ள நாலு பேர் தேறி சுடுகாடு வரை பிணத்தை தூக்க முன் வருவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அப்பாவே அவரது சாதியில் நான்கு பேரை கூலிக்கு எற்பாடு செய்து பிணத்தை வாடவிடாமல் நேரத்தில் தூக்க வழி வகை செய்து விடுவதிலும் கெட்டிக்காரர். நமது ஆறுமுகமோ அவ்வப்போது சுடுகாட்டுக்கு விடுமுறை நாட்களில் அப்பாவின் வேலைகளை வேடிக்கை பார்த்தும் பார்வையிடுவதுமாகதான் காலம் கழிந்தது. அம்மா அடிக்கடி சொல்லுவாள். எந்த வேலை ஆனால்தான் என்ன கண்ணு பாக்கணும் கையி செய்யணும் என்று. அதை எல்லாம் உள் வாங்கியவனாகத்தான் ஆறுமுகம் இருந்தான். ஆனாலும் அவன் படித்ததற்கான பாணியைக் கடைப்படித்ததால் தான் அந்த நிகழ்வு என்பது மட்டும் உறுதி.
அப்போது அவன் பெரிய பத்து படித்து முடித்து விட்டு விடுமுறையில் வீட்டில் சும்மா சுற்றிக்கொண்டிருந்தான். மூத்த பையனான ஆறுமுகத்தை அம்மாவும் அப்பாவும் ஏதாவது வேலைக்குப் போய் என்னமாவது கொண்டு வந்தால் தான் என்ன என்று கேட்டும் இவன் அசைந்து கொடுப்பதாக இல்லை. வினையாய் வந்தது அந்த சின்னப்ப நாயக்கரின் சாவு. சம்சாரிமார் தெருவிலிருந்து ஒரு சாவு செய்தி வந்தது. ஊர் பார்க்கும் காணிக்காரன் யாரப்பா என்ற கேள்வி ஆறுமுகத்தையும் தட்டு மண்வெட்டியைத் தூக்க வைத்தது; தட்ட முடியாமல் சுடுகாடு செல்லவேண்டியிருந்தது.
அந்த ஊரில் ஒரு பழக்கம் இருந்தது. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது தான் கணக்கு. ஒரு பங்காளியின் காணிக்காரப்பணி முடிந்து மற்றொரு பங்காளிக்கு மாறும் நேரம் அப்போதுதான் துவங்கும். இவன் (ஆறுமுகம்தான்) பெரிய பத்து முடித்து லீவில் இருப்பதற்கும் அப்படியாக இவனது அப்பாவுக்கு ஊர் காணிக்காரன் வேலை() வருவதற்கும் சரியாக இருந்தது. சுப்பிரமணியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு இவன் சுடுகாட்டுக்குச்சென்று குழி தோண்ட கடப்பாரையும் மண்வெட்டியும் எடுத்து சென்றான்.
அங்கே தான் வந்தது வினை. ஆறுமுகம் அவனுக்கு துணையாக சுப்பிரமணியனை அழைத்துக்கொண்டு மயானத்திற்கு சென்றானல்லவா. குழி வெட்டுவதென்றால் அவ்வளவு எளிதல்ல. புதியாதாகக் குழி வெட்டுவதை விடவும் தோண்டிய குழியை வெட்டுவதென்பது எளிதானது என்பது தொன்று தொட்டு வரும் மரபு. ஏற்கனவே ஆறுமுகம் அவனது சுடுகாட்டுக்குப்போய் வந்த பழக்கத்தில் பார்த்து பழகிய அனுபவம் இது. பாறையையும் மண்ணையும் வெட்டி புதிய குழி வெட்டினால் மூச்சுத்திணறித்தான் போகும். ஆறு மாதத்துக்கு முன்னால் மூடிய குழியை தோண்டும் போது ஒருவித நாற்றம் அடிக்குமே; அம்மாடி குடலைப் புரட்டிபோட்டு விடும் என்பார்களே உண்மையில் இந்த வேலை செய்யாதவர்கள் குத்துமதிப்பாக சொல்லித் திரிவதில் அர்த்தம் இருப்பதாகப்படவில்லை. உயிரின் வாதை அது. சில நேரங்களில் குழியில் கிடக்கும் கை எலும்பு கால் எலும்பு மண்டை ஒடு நைந்த துணி தலைமுடி என்று வெளியே அள்ளிப் போட வேண்டும். குறைந்தது கழுத்து மட்டத்துக்கு குழி இருக்கவேண்டும். அப்போதெல்லாம் பிளாஸ்டிக் பாட்டில்கள் புழக்கத்தில் இல்லை. தண்ணீர் கொண்டுபோக வழியுமில்லை. அது பற்றித் தெரியவும் செய்யாது. தாகமமெடுத்தால் பக்கத்தில் இருக்கும் கௌசிகா நதியின் உப்பு நீரைத்தான் அது எந்த நிலையில் இருந்தாலும் குடிக்கவேண்டும். குழிவெட்டுவதில் ஒரு நுணுக்கம் இருக்கிறது மற்ற எந்த தொழிலையும் போல. செத்துப்போன ஆளின் உயரத்துக்கு அதாவது செத்த பிறகு அவன் இருக்கும் நீளத்துக்கு சற்றும் குழியின் நீளம் இருக்கக்கூடாது.
எவன் கண்டு பிடித்தானோ? அப்படி கொஞ்சம் பெரிய சைஸாக வெட்டி விட்டால் இறந்த சாதியிலிருந்து பிரிதொரு பிணத்தை அந்த சுடுகாடு பலி கேட்குமாம். இது என்ன வகை அறிவியலென்று மனிதன் சந்திரனுக்கு சென்றுவந்த நான்கைந்து ஆண்டுகள் ஆன பிறகான காலத்திலும் கூட தெரியவில்லை. ஆறுமுகமும் அவன் நண்பன் சுப்பிரமணியனும் சேர்ந்து குழி வெட்டி விட்டார்கள். மற்ற வேலைகளை மேளம் உட்பட படுத்த படுக்கையிலிருந்தபடியே அவரது அப்பாவே ஏற்பாடு செய்துவிட்டார்.
சாதாரணமாக பிணம் வந்து சேரும் வரை சுடுகாட்டிலிருந்து வீட்டுக்கு குழி தோண்டும் எவரும் வீட்டுக்கு வருவதில்லை. நமது ஆறுமுகத்துக்கோ அனுபவமில்லை. பொழுது மயங்கும் வேளை ஆகிவிட்டது. செத்துப்போன சின்னப்ப நாயக்கரின் மகள் மதுரைக்குப்பக்கம் இருந்து வருவதற்கு நேரம் ஆனதால் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்குடன் பிணம் சுடுகாடு வந்து சேர்ந்தது. சங்கு ஊதிக்கொண்டே சோலை வந்தார். அவரே மொட்டை போட ஆட்களை அழைத்தார். வேட்டிகளை இடுப்பில் வைத்துக்கொண்டு வந்தார் ராக்கன். அவர்தான் வண்ண மயமாக துணிகளை அவர்களுக்கு வெளுத்துத்தருபவர். வாய்க்கரிசி போடத்சொல்லி ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்தான். அவரவர் கையில் இருந்த 10 பைசா கால்ரூபா என்று போட்டார்கள்.
சற்றும் எதிர்பாராத வகையில் சாராய போதையில் இருந்த இறந்துபோன சின்னப்ப நாயக்கரின் மருமகன் நடையநேரி நரிய நாயக்கர், 'எந்த சக்கிலியப்பயடா குழி வெட்டுனது' என்று கேட்டுவிட்டார். சாதாரணமாக குழியின் நீளமோ அகலமோ கூடவோ குறையாகவோ இருக்கக்கூடாது. பொதுவாக 51/2 அடி உயரமுள்ள ஒரு ஆளுக்கு 5 அடி குழி வெட்டிவிடுவதும், தலைப்பகுதியில் ஒரு 1/2 அடி பாந்தம் பரித்து விடுவதும்தான் வழக்கம். அந்த முறையில் தான் நமது நாயகன் ஆறுமுகமும் அவனது நண்பனும் சிரமேற்கொண்டு செய்திருந்தார்கள் சவக்குழியை. ஆறுமுகத்துக்கு சாதியின் பெயரைக் கேவலமாக சொன்னார் நரிய நாயக்கர் என்கிற ஆத்திரத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். நரிய நாயக்கர் சரிந்தார் குழியின் மேலிருந்த குவிக்கப்பட்ட மண் மேட்டில். நாயக்கர் அடிபட்டதைப் பார்தத் உடனே எளவட்ட நாயக்கமார்கள் பதிலுக்கு ஆறுமுகத்தை அடித்து உதைத்தனர். நடு வயது பெரியவயது நாயக்கர்கள் எல்லாம் கைகலப்பில் இறங்கியவர்களை சத்தம் போட்டு எளவட்டங்களை தடுத்து ஆறுமுகத்தையும் சுப்பிரமணியத்தையும் வேலையை முடிக்கச்சொல்லி ஆணையிட்டனர். குழி மூடப்பட்டது. கோபுரம் போல இருபுறமும் ம்ண்ணைக் குமித்து வைத்தார்கள். மண்வெட்டியைப் புரட்டிப்போட்டு செம்மி வைத்தான் ஆறுமுகம். கொஞ்சம் கரம்பைமண் எடுத்து பிள்ளையார் செய்து வைத்தான் சுப்பிரமணி.
எல்லாம் முடிந்தது. வேட்டியைவிரித்து பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் மருத்துவர் சோலைக்கான 'சுதந்திரம்' வழங்கப்பட்டது. சலவைக்காரர் ராக்கனுக்கும் கூட வழங்கியாகி விட்டது. வாய்க்கரிசிக்காசு உட்பட ஒரு பைசா ஆறுமுகத்துக்குத் தரப்படவில்லை. ஊர்க்கூட்டம் போட்டு இந்தப்பயல்களை ஒரு முடிவு செய்வதாகச் சொல்லி கூலி மறுக்க்கப்பட்டது. சேவகத்தொழில் தர்மம் காப்பாற்றப்பட்டது.
ஆறுமுகத்தின் அப்பாவுக்கு இந்த இழிதொழில் செய்வதில் ஈடுபாடு இல்லை என்பதை தனது மகன் ஆறுமுகத்திடம் பலமுறை சொல்லியிருக்கிறார். தனக்கும் தன்னைச் சார்ந்த சமூகம் மொத்தத்திற்கும் ஏற்பட்ட சமூகத் தளர்வுக்கும் காரணம் இது போன்ற இழிதொழில் செய்வதனால்தான் என்பதை உணர்ந்து வைத்திருந்தார். இந்த நிலைமை தனது சந்ததியினருக்கு தொடரக்கூடாது என்றும் கூட நினைத்திருந்தார். தனது பங்காளிகள் பகுத்தாளிகள் அனைவரிடமும் இதைப்பகிர்ந்து கொண்டிருக்கிறார். முடிந்தால் இந்த தொழிலை விட்டுவிடவேண்டும் என்றும் சொல்லுவார். ஆனாலும் ஒரு சமூகக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு செய்யவேண்டியிருக்கிறதே என்று வருத்தமும்பட்டிருக்கிறார். அந்த உணர்வு குறையாத நிலையிலும் அவர் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் அந்த ஊர்க்கூட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார். மயானத்திலும் இல்லாத அமைதி சாவடியில் நிலவியது.
சாவடியில் அவர்கள்.
கீழே இவர்கள்.
அவர்கள் கேள்விகள் மௌனத்தில் கரைந்தன. மௌனத்தை உடைத்தொரு குரல் ஒலித்தது. அது நமது ஆறுமுகத்தின் அப்பாவின் குரல்தான்.
தீர்க்கமாக ஆனால் தெளிவாக அவர்களின் கேள்விக்கு பதில் கொடுத்தார்.
‘இனிமேல் நாங்கள் உங்கள் பிணம் விழுந்தால் குழி தோண்ட மாட்டோம் எழவு சொல்லிப்போகமாட்டோம் மாடு செத்தால் தூக்க மாட்டோம் மேளம் கொட்ட மாட்டோம். உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்'.
துண்டை உதறித்தோளில் போட்டுகொண்டு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போல் நடக்க ஆரம்பித்தார் தமது பகுதி நோக்கி.
ஒரு தளபதியின் ஆணைக்கு இணங்கிய போர் வீரர்கள்போல ஆறுமுகத்தின் சொந்தங்கள் வீறு கொண்டு அவரது அப்பாவைப்பின் தொடர்ந்தனர்.
- திலிப் நாராயணன்
( நன்றி கீற்று இணைய இதழ்)



















