வலைப்பதிவில் தேட...

Monday, September 14, 2015

ஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்


"ஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்"

பாண்டிச்சேரி நாட்களில் மிகவும் மறக்க முடியாத இலக்கிய அனுபவமாக அமைந்தது ஒரு கவிதைக்காரனின் மீசை மயிருகள் நூல் அ றிமுகக்கூட்டம்தான்.

அதற்கு முன் இந்த இலக்கியக்கூட்டத்தில் நான் பங்கேற்பதற்கான சூழல் இங்கே... பாண்டியில்  நான் பணியில் சேர்ந்த சில  நாட்களில் த மு எ க ச திரைப்பட ஒருங்கிணைப்பாளர் தோழர் எஸ் கருணா அவர்களின் தேர்வில் பாண்டிச்சேரி பல்கலைக்கழக விசுவல் கம்யூனிகேசன் துறையுடன் இணைந்து ஒரு சர்வ தேச திரைப்பட விழா ஏற்பாடு ஆகி இருந்தது. வருடா வருடம் ஜனவரி மாதத்தில் நடக்கும் நிகழ்வு இது.  அவருடன் சேர்ந்து ஒரு மூன்று நாட்கள் வியட்நாம் ஓடிஸா கன்னட திரைப்படங்களைப்பார்த்திருந்த நாட்களில் தோழர் இராம கார்த்திகேயன் அவர்கள் கருணா மூலம்  அறிமுகம் ஆனார்.


சிறுகதை, நாவல், கவிதை இலக்கியம், இடது சாரி, அரசியல். தலித்தியம், மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ,பெண்ணியம், விடுதலைசிறுத்தைகள் கட்சி, பா ம க, திராவிட அரசியல் என்று எல்லா வகையிலும் எனது எண்ண ஓட்டத்தை   ஒத்திருந்தார். அவர்  தோழர் தண்டபாணி அவர்களை அறிமுகம் செய்வித்தார். இருவரும் திருச்சிற்றம்பலம் ஊரைச்சேர்ந்த நல்ல சிந்தையான நண்பர்கள். தோழர் தண்டபாணி தமிழ்நாடு மருத்துவர்  சமூக நல பாதுகாப்பு சங்கத்தின் தலைவர். 

சென்னை புத்தகத்திருவிழாவில் வாங்கிய  ஆதவன் தீட்சண்யாவின் "மீசை என்பது வெறும் மயிர்" புத்தகத்தை அபோதுதான் படித்தது முடித்திருந்தேன். அப்படி ஆன பொழுதுகளில் ஒரு நாள்  இ எம் எஸ் கலைவாணனின்  "ஒரு சவரக்காரனின் மீசை மயிருகள்" புத்தகத்தை தோழர் இராம கார்த்திகேயன்  அவரது கையொப்பம் இட்டு என்னிடம் கொடுத்தார்(கீற்று வெளியீட்டகம் விலை ரூ 75/- 92 பக்கங்கள்). படித்துப்பாருங்கள் தோழர் தண்டபாணியுடன் ஒரு நாள் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிப்போனார். 

செரக்கப்போகவேண்டியதுதானல

ஒரு மயிரும் புடுங்க முடியாது

நீ வழிச்சது போதும்

இவன் பெரிய மயிராண்டி

மயிரப்பிடுங்குன கதை

அந்த மயிரெல்லாம் எனக்கு தெரியும்

எவண்டா அவன் பெரிய மயிரா ?

 என்ற அன்றாடம்  கேட்டு கேட்டு சமூக அவலங்களின் ஓலமாக அல்லாமல் அன்றாட நிகழ்வான ஏற்றுக்கொண்ட மன நிலையை சாட்டையால் அடிக்கும் விதமான பட்டுத்தெறிக்கும் கவிதைகள் அத்தனையும். அங்கச்சவரம் செய்யச்சொன்ன ஒருவனை ஆண் குறி அறுத்து வாங்கடா  எவன் எவனுக்கெல்லாம் அங்கச்சவரம் செய்யணும் வாங்கடா என்று இலங்கையில் கந்தசாமிப்பிள்ளை ஒரு அலப்பறையைக்கொடுத்ததில் ( ஆதவனின் "மீசை என்பது வெறும் மயிர்"  புத்தகத்தில் வருபவர் கந்தசாமி பிள்ளை ) இருந்து மீளும் முன் இச்சமூகத்தின்  அவலத்தை மிகச்சிறிய புத்தகத்தின் மூலமாக எந்த அளவுக்கு எட்டி அறைய முடியுமோ அத்தனை சக்தியான வடிவான வரிகள். ஒரு வார்த்தை கூட அதிகமாகப்பிரயோகிக்காமல்.

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்  நூல் அறிமுகக்கூட்டதில் கலந்து கொள்ளவேண்டும் நீங்கள் வரவேண்டும் என்று தண்டபாணியும் இராம கார்த்திகேயனும் வேண்டுகோள் விட்டனர். அதன்படி  நோட்டீசில் எனது பெயர் போட்டு விடுகிறோம் என்று சொன்னதோடல்லாமல், 31/03/2015 அன்று விழுப்புரம் நகரில் கூட்டம் நடை பெறும் என்று முடிவானது. ஒரு நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டது இதுவே முதன் முறை.

வண்ணார்கள் பற்றிய  ஆய்வு நிகழ்த்திய முனைவர் கோ. ரகுபதி, எழுத்தாளர் நண்பர் போப்பு மற்றும் தலித் சுப்பையா இவர்களோடு நானும்.கவிதை எழுதிய இ எம் எஸ் கலைவாணனும் கலந்து கொண்டு ஏற்புரை யாற்றினார். அவர் எனக்கொரு சால்வை போர்த்தினார். நான் ஒரு கைத்தறித்துண்டை அவருக்கு போர்த்தினேன்.

வடிவேலு திரைப்படங்களில் அட சண்டாளா என்று குறிப்பிடுவதைக் கண்டனம் செய்தும், ஒரு இறப்பு வீட்டில் மூன்று சேவை சாதிகள் (வண்ணார், வெட்டியான், மருத்துவர் )சங்கமிக்கிறார்கள் என்றும். இந்த இழி தொழிலை விட்டு வெளியே வர வேண்டும் என்று அம்பேத்கரின் நினைவுகளோடு நான் பேசி முடித்தேன் . மருத்துவர் சங்கத்தில் முடிவாக சினிமாவில் மயிர் சம்பந்தமாக ஏதேனும் வசனங்கள் வெளியாவதை கண்டித்து முறையாக புகார் செய்வதென்று முடிவு செய்யப்பட்டது.

இனி அவரது கவிதை (என்னோடு சம்பந்தப்பட்டதாக நான் உணர்ந்தது):

தொட்டிலில் கிடக்கும் என்னை
சலூனில்
வேலை முடிந்து வந்த அப்பா
முதமிட்ட
கன்னப்பரப்பில்
இரண்டு மூன்று
வெள்லை முடிகள்
ஒட்டியிருக்கின்றன

எந்த ஜாதிக்காரனின்
அழுக்கு மயிரோ.

அப்பா சாப்பிட வரும்போது கைகளில் யார் யாருடைய  செருப்புக்குத்தடவிய பசையின் எச்சங்கள் முண்டு முண்டாக இருக்கும் பிய்த்துப்போடுவார்.  சில நேரம் கைகளிலேயே இருக்கும். அத்துடன் தான் அவரது சாப்பாடு...

இ எம் எஸ் கலைவாணன் நாகர்கோவில்காரர்.  விருது நகரில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வேதனை நம்மையும் வதைக்கிறது...

பிச்சையெடுத்தாலும்
பார்பர் ஷாப் வேலைக்கு
போக கூடாதுன்னு
சொல்லிட்டா அம்மா
லாரில  கிளியா இருக்கும்போது
விருது நகர் பஸ்ஸ்டாண்டு
குளி ரூம்ல
நான் குளிச்ச பொறவு
நீ குளில நாசுவத்தாயளின்னுட்டு
சோப்பு நுரையோடு
என்னை வெளியே  வர சொல்லி
டிரைவர் குளிக்க போனான்
பல்லு தேச்சுட்டு நின்ன
கண்ட பயக்க எல்லாம்
ஒரு மாதிரியா பாக்கானுக

No comments: