வலைப்பதிவில் தேட...

Friday, May 27, 2011

ஒரு சாலை விபத்து




சர்தார்ஜி ஜோக்கில் ஒன்று:
ரயில்வே  வேலைக்கான நேர்காணலில் ஒரு சர்தார்ஜி கலந்து கொள்வார். அவரிடம் கேட்கப்பட்ட
கேள்வி: இரண்டு ரயில்கள் எதிர் எதிர் திசையில் ஒரே தண்டவாளத்தில் செல்லும்படியான நிலைமை நேரிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் .
பதில்: உடனே எனது தம்பிக்கு போன் செய்வேன்.
கேள்வி: எதற்காக
பதில்: அவன் இதுவரை நேரடியாக எந்த ரயில் விபத்தையும் பார்த்ததே இல்லை.
நேர்காணல் கண்டவர்கள் மிரண்டு போவார்கள்.
எனது பதின் வயதுகளில் ஒரு கோர விபத்தை நேரடியாகப்பார்த்ததன் வெளிப்பாடாகவே இந்தப்பதிவு.

அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். கோட்டூர் குருசாமி கோவில் சின்னையாபுரம் அம்மாவின் ஊர். விடுமுறை நாளில் அங்கே சென்று விட்டு   நம்பர் டவுன் பஸ்ஸில்   மாமா பாண்டியுடன் விருது நகர் வந்து கொண்டிருந்தோம். பஸ்ஸில் நல்ல கூட்டம் . இப்போது கலெக்டெர் அலுவலகம் உள்ள இடத்திற்கருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டரில் வந்தவர் பஸ்ஸில் மோதி விட்டார். பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடப்புறம் உள்ள வேலிக்கருவேலை அடர்ந்த பள்ளத்தில் போய் தட்டுத்தடுமாறி நின்றது.

பஸ்ஸின் படிக்கட்டில் கூட ஒருவர்  உட்கார்ந்திருந்தார். அவருக்கு நல்ல அடி ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. ஊரிலிருந்து கொண்டு வந்த நிலக்கடலைப்பை டிரைவரின் சீட்டுக்குப்போய் முட்டியிருந்தது.  கோவென்ற கூச்சல் கதறல் ஆண் பெண் குழந்தைகள் என.
வண்டி நின்றதும் ஒரு வழியாக  நிலக்கடலைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கினோம். வெள்ளை வேட்டி கிழிந்திருந்தது மட்ட மல்லாக்க விழுந்து கிடந்தார்  ஸ்கூட்டர் அப்பளம் போல் நொறுங்கி விட்டிருந்தது. காலை லேசாக அசைத்தார். அவ்வளவுதான். ஏறக்குறைய முடிந்து விட்டது. சனங்கள்  விருது நகர் வருவதற்கு பஸ்களைத்தேட ஆரம்பித்தனர். கடலைப்பொட்டணத்தை தோளில் வைத்துக்கொண்டு அப்படியே ரயில் தண்டவாளம் வழியாக முத்துராமன் பட்டி போய்ச்சேர்ந்தோம் வீட்டுக்கு.


இரவெல்லாம் பளீர் பளீர் என்று முழிப்பு தட்டியது. அழுது கொண்டேன். அம்மாவிடம் இறந்து போனவரின் நினைவு என்னைக்கொல்லுகிறது என்னால் தூங்க முடியவில்லை என்றேன். ஒரு விளக்கமாறு ஒரு மொட்டை அரிவாள் எடுத்து தலைமாட்டில் வைத்து தூங்கு என்றார்கள்.  தூங்க முயற்சித்து மீண்டும்  நினைவு வந்து எழுந்தேன். அம்மாவிடம் அழுதேன். அவருக்குதான் நேரம் வந்து போய் விட்டார் உனக்கு ஒன்னும் ஆகாது என்று ஆற்றினார்கள்.


மறு நாள் பள்ளிக்குப்போன பிறகுதான் சில விபரங்கள் தெரிய வந்தது விபத்தில் இறந்து போன அவர் விருது நகர் சென்ட்ரல் சினிமாத்தியேட்டரை எம் எஸ் பி யிடம் லீசுக்கு எடுத்து நடத்திக்கொண்டிருந்தவராம் .அப்போது சிவகாமியின் செல்வன் ஓடிக்கொண்டிருந்தது. அவரது சகோதரர் வெளி நாட்டில் மருத்துவம் படிப்பதாகவும் கேள்வியுற்றேன். ஒரு விபத்தைப்பார்த்த ஒரு பதின் வயதுப்பாதிப்பே இவ்வளவுதூரம் இருக்கும்போது  அவரது 
குடும்ப உறுப்பினர்கள் அவரைச்சார்ந்த சொந்த பந்தங்கள், நண்பர்கள் என எவ்வளவு வருந்தியிருப்பார்கள்.

இப்போதெல்லாம் நாளிதழ்களில் சாலை விபத்துக்களைப்பற்றிய செய்திகள் இல்லாமல் இருப்பதில்லை விபத்துக்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 22 மே 2011ஆங்கில  இதழில் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அவை இதோ:

சராசரியாக ஒரு நிமிடத் திற்கு ஒரு விபத்து. நான்குநிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றார். சாலை விபத்து களால் பலியாகிறவர்களின் எண்ணிக் கை அபாயகரமான அளவுக்கு அதிகரித் துள்ளது. விபத்துக்களில், குறைந்த வரு வாய் உடையவர்கள் மரணமடைவதும் அதிகரித்து வருகின்றது.

கடந்த ஆண்டு சாலைவிபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 1.6 லட்சமாகும். 2009ம் ஆண்டு 1.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஓராண் டில் 28 சதவீதம் அதிகரிப்பு என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

ஒரு மணி நேரத்தில் ஒருகிலோமீட்டர் (கேஎம்பிஹெச்) வேகத்தை அதிகப் படுத்துவதனால் மரணமடைவதற்கான வாய்ப்புகள் 3 சதவீதம் அதிகரிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக் கை செய்கிறது. உதாரணமாக, 10 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் சிக்குவதற் கும் 70 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் சிக்கும்போது மரணத்திற்கான வாய்ப்பு கள் பல மடங்கு அதிகரிக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.


4 comments:

hariharan said...

இருவழிச்சாலைகள் நான்கு வழிச்சலையா மாறிகிட்டுவருது, ஆனா சாலை விபத்து இந்தமாதிரி அதிகரிக்கிறது முரண்பாடாத்தான் இருக்கு.

அழகிய நாட்கள் said...

மக்கள் தொகைப்பெருக்கம், இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களின் அதிகரிப்பு, வேகமாக செல்ல வேண்டுமென்ற எத்தனிப்பு,தகுந்த ஓய்வில்லாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து கவனச்சிதறல் இவையே விபத்துக்கு காரணங்கள். ஒரு வழிச்சாலையாக இருந்து அது மாநில நெடுஞ்சாலைகளில் இருவழிப்பாதையாகி, தேசிய நெடுஞ்சாலைகளில் தங்க நாற்கரமாகி விட்டாலும் கூட தொடருகின்றன விபத்துக்களும் அதிகரிக்கின்றன அவலங்களும்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
விபத்துக்களை தினசரியில் படிக்கும்போதே மனசு பதறுகிறது.
வேதனை தான்.

அழகிய நாட்கள் said...

திரு ரத்தினவேல்!
தங்களது வருகைக்கும் சமூகப்பின்புலத்துடன் குறிப்பிட்ட பின்னூட்டத்திற்கும் நன்றி.