வலைப்பதிவில் தேட...

Friday, January 28, 2011

நெல்லுச்சோறு

'சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கே வந்ததிப்பஞ்சம்'
-மகாகவி பாரதி

'சோறு கண்ட இடம் சொர்க்கமா?'- மகாதேவி திரைப்படத்தில் வரும் பாடல் வரி இது

'சோறுகொடு; உணவு கொடு'- மன்னனை எதிர்த்த போராட்டத்தில் அட்டையில் பிடித்திருப்பார் நாடோடி மன்னன் திரைப்படத்தில் சந்திரபாபு

'சோறு' என்றொரு திரைப்படம்   நூறு படங்களை இயக்கியிருக்கிற இராம நாராயணனின் ஆரம்பகால படைப்பு

"சொக்கனுக்கு சட்டியளவு "- என்பது கூட சோறு சம்பந்தப்பட்ட பழ மொழிதான்

சோறே இல்லாமல் கமல் தனது நண்பர்களுடன் வேலையில்லாபட்டதாரியாக இருக்கும் நேரம் சாப்பிடுவது போல காட்சி அமைத்திருப்பார் கே. பாலச்சந்தர்-வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில்.

துரை யின் இயக்கத்தில் வந்த 'பசி' திரைப்படமும் கூட சோறை அதன் தேவைக்கான வலிகளைப் பேசும் .

இன்றைய  நாட்களில் அநேகமாக எல்லா வீடுகளிலும் சோறுதான் அதாவது நான் சொல்ல வந்தது நெல்லுச்சோறு.

எனது பதின் வயதுகளில் நெல்லுச்சோறு என்பது அல்லது தோசை போன்ற பலகாரம் என்பது தீபாவளி அல்லது பொங்கல் நாட்களில் மட்டுமே.
மற்ற நாட்களில் சோளக்கஞ்சி, கம்மங்கஞ்சி,கேப்பைக்கூழ், கேப்பைக்களி,குதிரைவாலி அரிசிச்சோறு, வரகரசிச்சாதம், பதராகிப்போன நெல்லிலிருந்து கிடைத்த கருப்பு அரிசிக்கஞ்சி, திணை அரிசியில் செய்த திணை மாவு, சாமை அரிசிக்கஞ்சி, ரேஷன் கடையில் வாங்கி வந்த கோதுமைக்கஞ்சி, பஞ்ச காலங்களில் வாங்கி வந்த மக்காச்சோள மாவின் உப்புமா இப்படியாக பல/நவதானியங்களின் புழக்கம் இருந்தது.

இன்றைக்கு அப்படியில்லை.

வீட்டில் இருந்த கம்மங்கூழ் இப்போது தள்ளுவண்டியில் கிடைக்கிறது.
'கிளப்'(ஹோட்டல்) கடையில் இருந்த இட்லி தோசை பூரி எல்லாம் வீடுகளில் தயாராகிறது.

அப்போதெல்லாம் சண்டை வரும். ஒருவன் தோற்று விடுவான். அப்புறமாக 'ஒங்க வீட்டில் என்னசோறு' என்று கேட்பான் தோற்றவன் அல்லது சண்டையில் கீழே விழுந்து எழுந்தவன்
'நெல்லுச்சோறு' என்று பெருமிதம் பொங்க சொல்லுவான் மல்லுக்கட்டில் ஜெயித்தவன்.
அடிவாங்கியவன் சொல்லுவான் 'நானும்  நாளைக்கு  நெல்லுச்சோறு சாப்பிட்டு விட்டு ஒன்னைய ஒரு கை பார்க்கிறேன்'.
இப்போதெல்லாம் சிறுவர்கள் இதுபோல கள்ளன் போலிஸ் விளையாட்டுக்கள் விளையாடுகிறார்களா? கிட்டி, பம்பரம் விடுவது இருக்கிறதா?
அநேகமாக இல்லை எனலாம்.

விளையாட்டு என்றாலே கிரிக்கெட் அதுவும் கிராமத்தில் கூட என்றாகி விட்டது.
அதிலும் கூட சில வீரர்கள் விலை போக மாட்டேன் என்கிறார்கள்.

பாசுமதி அரிசிக்கு உரிமை கொண்டாடிவிட்டான் ஒருவன். நமது படைப்புதான் அது என்பதை வலியுறுத்த போராட வேண்டி இருந்தது டங்கல் திட்டத்தால்.
மஞ்சள், பாகற்காய், வேம்பு எல்லாமே "பேடெண்ட் "என்ற பெயரில் நமது பாரம்பரிய உபயோகப்பொருட்களை நம்மிடமிருந்து பறிக்க வல்லரசுகள் திட்டம் தீட்டிக்கொண்டு நம்மை வளைய வருகின்றன. இருக்கட்டும்

"உங்க வீட்டில் என்ன சோறு" என்று  கேட்ட காலம் மலையேறி விட்டது ஆகையால் சோறு  என்றாலே அது "நெல்லுச்சோறு" என்றாகி விட்டது





4 comments:

மைதீன் said...

பள்ளியில் படிக்கும்போது வீட்டில் தினமும் நெல்லு சோறுதான் ஆனால்,கூட படிக்கும் நண்பர்களுக்கு அது அதிசயம். நான் பெருமிதம் கொள்வேன் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை பின்னாளில் உணர்ந்து வருந்தியிருக்கிறேன்.

அழகிய நாட்கள் said...

நண்பர் மைதீன் அவர்களே!
அந்த நெல்லுச்சோறுதான் பல பேருக்கு 'சர்க்கரை'
யை வழங்கியிருக்கிறது என்பதை அறியுங்கள்.பணக்காரர்களின் நோயாக மட்டுமே அறியப்பட்ட சர்க்கரை சாமானியர்களுக்கும் வந்ததற்கான காரணம் வேறெதுவும் இல்லை. நெல்லுச்சோறுதான். தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி. சந்திப்போம். சிந்திப்போம்.

Rathnavel Natarajan said...

I am following your Blogs seriously.

அழகிய நாட்கள் said...

திரு ரத்தினவேல்!
எனது வலைப்பூவைத்தாங்கள் ஆர்வமுடன் பின் தொடர்வதற்கு எனது மனமுவந்த நன்றி! தொடர்ந்து சந்திப்போம். கருத்துக்களைப்பகிர்வோம். பேரன்புடன்
திலிப் நாராயணன்