வலைப்பதிவில் தேட...

Wednesday, May 18, 2011

மரண வாயில்




பெரியப்பா ஒருவர் இருந்தார். பெயர் மகாலிங்கம். முத்துராமன்பட்டி பவுண்டுத்தெரு காளியம்மன் கோவில் பூசாரி. சாமி வருகிறதோ இல்லையோ கர்ண கடூரமாக முழித்துக்கொண்டு புரண்டு கோவில் வளாகத்தயே ஒரு சுத்து சுத்தி வருவார்.

அவர் சுடுகாட்டு வேலையில் கெட்டிக்காரர்.பிணம் விழுந்தால் போதும் எரிக்க அல்லது புதைக்க போர்க்கால அடிப்படையில் வேலைகள் கன ஜரூராக நடத்தி முடித்து விடுவார். செத்துப்போன சாதிக்காரர்கள் தேர் தூக்க வரவில்லையென்றாலும் கூட தன் இன  பந்துக்களில் . ஒரு நாலு பேரை அமர்த்தி அவர்களை தேர் தூக்க வைத்து சுடுகாடு வந்தவுடன் அவர்களுக்கான கூலியை ப்பேசியபடி வாங்கிக்கொடுப்பதில் கில்லாடி.


மற்ற நாட்களில் செருப்பு தைப்பதற்காக முத்துராமன்பட்டி முழுதும் சுற்றி வருவார். செருப்பு தைக்கக்கொடுப்பவரின் முகம் கோணாமல் சரி சாமி இந்தா சாமி நீங்க போய்ட்டு வாங்க சாமி சரி செய்துவிடுகிறேன் சாமி என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனை மனதுக்குள் திட்டுவார். நாயக்கமார் தெரு அல்லம்பட்டி செட்டிமார் தெரு என்று சுற்றி வரும்போதே யாரேனும் வயதானவர்கள் முடியாமல் கடைசிகாலத்திற்காக ஏங்கிப்படுத்திருந்தால் பெரியப்பாவுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

காரணம் இதுதான். ஒரு பிணம் விழுந்தால் செருப்பு தைத்து கிடைக்கும் பணத்தை விடவும் கொஞ்சம் கை நிறையக்காசு கிடைக்கும். தேர் வாடகை, குழி வெட்ட, எரிப்பதென்றால் விறகுவாங்க வைக்க என்று எல்லாம் போக கையில் கொஞ்சம் மிச்சப்படும். அளவான குழி வெட்டி அதிலும் சைஸ் பத்தாமல் போனால் தலைமாட்டுக்கு பரித்து விட்டு சரியாகப்பிணத்தை வைத்து புறங்கையால் மண்ணைத்தள்ள்ச்சொல்லும் சித்திரம் சொல்ல முடியாதது. செத்துப்போனவன் இவரை உயிரோடு இருக்கும் போது ஏதேனும் பேசியிருந்தால் அவன் எரியும்போது இருக்கிறது கட்டைக்கம்பு அடி.

தெரு வழியாக நடந்து போகும் போது அப்படி யாரேனும்  நோயுற்றவர் தட்டுப்பட்டால் அவரது வீட்டுக்கு அருகில் போகும் போது புலி ஒன்று பதுங்கிப்போவது போல நடப்பார். பாதங்களின் சத்தம் கூட திண்ணையிலிருக்கும் வீட்டாருக்குக்கேட்காது. லேசாக சாமி! சாமியவுக எப்படி இருக்காக என்பார். வீட்டுக்காரர் பரவயில்லப்பா மகாலிங்கம் கொஞ்சம் பால் குடிக்கிறார் என்றால் போதும். கடுமையான கோபம் வந்துவிடும் அந்தக் கோபத்தை வெளிக்காட்டமாட்டார். இருக்கட்டும் சாமி நல்லா இருக்கட்டும் என்று பொய்யாக வாழ்த்தி விட்டு வந்து விடுவார்.

வந்து தெரு முனையில் உட்கார்ந்து கிடைத்த ஒன்றிரண்டு செருப்பைத்தைக்க உட்காரும்போது யாரேனும் சொந்த சாதிக்காரர்கள் வந்து என்னப்பா என்று சரசம் விசாரிக்கும் போது அப்படியே சுடுகாட்டு வேலைக்கு பிணம் ஏதும் வரவில்லை என்ற மேட்டரும் வரும். அப்போது  அந்த்த்தெருவில் ஒரு பெருசு இழுத்துக்கிட்டு கெடந்துச்சே எப்படிப்பா இருக்கு என்று கேட்டால் போதும்
அவருக்கு வரும் ஆவேசம் இருக்கிறதே யப்பா சொல்ல முடியாது

கட்சியைக்காப்பதும் கனிமொழியைக்காப்பதும் ஒன்றுதான் என்று கருணாநிதி  சொன்ன அதே ஆவேசம் அவரது வார்த்தையில் வெளிப்படும்.
பாலு குடிக்கிறானாம்டா வெளங்குமா வெள்ளனே! என்று பற்களை நற நற வெனக்கடித்து விட்டு ரெண்டு கெட்ட வார்த்தையால் விளாசிவிட்டு பீடியை ஒரு சுண்டு சுண்டிக்கொள்வார்.

அவரது சர்வீசில் எரித்த பிணங்கள் தான் எத்தனை எத்தனை    தாயின் கருவறையில் இறந்தது, பிறந்தவுடன் செத்தது, அம்மை கண்டு குளிர்ந்து போனது,நாண்டுக்கிட்டு செத்தது, கிணற்றில் விழுந்து ஊறிப்போய்க்கிடந்தது வயது முதிர்ச்சியால் இறந்தது போஸ்ட்மார்டம் ஆகி சுடுகாட்டுக்கு வந்தது என

பிணம்   நாறிப்போய் புழுத்துக்கிடந்தால் உயிரோடு இருக்கிற சனங்களுக்குதான் எத்தனை சீக்கு சிக்கலு.  ஒட்டு மொத்த சமூகமும் சந்தோஷமாக நோயின்றி இருக்க இப்படியான பிணங்களை எரிக்கும்/புதைக்கும் ஒருவனை எப்படித்தான் "வெட்டியான்" என்று இந்த சமூகம் சொல்லுகிறதோ தெரியவில்லை. உண்மையில் அவர்கள் "உருப்படியான்"கள்.

ஒன்றிரண்டு முறை அவரோடு சுடுகாட்டு வேலைக்கு  கூலிக்கு தேர் தூக்க என்று சுடுகாட்டு வேலைக்குப்போன அனுபவம் உண்டு. ஏற்கனவே வெட்டப்பட்ட குழியைத்தேர்ந்தெடுத்து அதை வெட்டி அடியில் அரை குறையாகக்கிடக்கும் கை எலும்புகள் கால் எலும்புகள், மண்டையோடு, தலைமுடிகள் அனைத்தையும் அதன் வாசத்தோடு அள்ளி புதிதாக வரப்போகும் பிணத்தின் சொந்தக்காரகளுக்குத்தெரியாமல் போட்டு விட்டு. அவர் சொல்லும் காரணம் அற்புதமானது. புதியதாகக்குழி தோண்டினால் காலதாமதம் ஆகும். அதற்குள் பிணம் சுடுகாட்டுக்கு வந்தவிடும் பிறகு நம்மை சாதியைச்சொல்லிகேவலமாகப்பேசுவார்கள் என்பதுதான் அது


அப்போது கோத்ராவில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். கோத்ரா ரயிலெரிப்பு நடந்து ஒரு 12 நாட்கள் அலுவலகமே செல்ல முடியாமல் இருந்து மீண்டும் வசந்தம் வந்து அலுவலகம் சென்று இரண்டு மூன்று நாட்கள் ஆகி யிருக்கும். 58 ராம் சேவக்குகள் தீயிடப்பட்டு  இறந்ததை அடுத்து குஜராத் மண்ணே இந்துத்துவா பரிசோதனைக்கூடம் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்த நேரம்.  குஜராத் சமாச்சார், சந்தேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பூராவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட  மனிதர்களின் கருகல் வாசம் வீசிக்கொண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கொருமுறை வீட்டுக்கு தொலைபேசியில்  மனைவியுடனும் குழந்தைகளுடனும் பேசிக்கொள்வது வழக்கம். சமயங்களில் தினமும் அல்லது ஒரே நாளில் இரண்டு முறை பேசிக்கொள்வோம். அப்படி ஒரு முறை நான் பேசும்போது எனது மனைவி அந்த பூசாரி மகாலிங்க மாமா செத்துப்போய்ட்டருங்க என்று சொன்னார்கள். என்னையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது. கட்டுப்படுத்த முடியவில்லை.

வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடத்திற்கு அவர் சென்று விட்டார்.

நமக்கு எப்போது என்பது தெரியவில்லை



10 comments:

blogpaandi said...

மனிதனின் மன ஓட்டத்தை பற்றிய சிறந்த பதிவு. மேலும் பல நிகழ்வுகளை பதிவு செய்ய வாழ்த்துகிறேன்.

பனித்துளி சங்கர் said...

தலைப்பிற்கு தகுந்தார் போல பதிவும் மிரட்டல்தான்

அழகிய நாட்கள் said...

திரு ப்ளாக் பாண்டி! வாழ்வதற்கான போராட்டத்தில் உழைப்பு இருக்கிறது ஒரு மனிதனின் சாவில் கூட உழைப்பு இருக்கிறது அதற்கான கூலியுடன்.. என்றென்றும்,
திலிப் நாராயணன்

அழகிய நாட்கள் said...

திரு பனித்துளி சங்கர் !
வணக்கம். தங்களது பின்னூட்டம் நினைவலைகளை வலைப்பூக்களில் தொடுத்து மகிழத்தூண்டுகிறது,
அன்புடன்,
திலிப் நாராயணன்.

துளசி கோபால் said...

அருமையான பதிவு திலீப்.

பாவம்..... அவருக்குக் குழி வெட்டியது யாரோ? போனபிறகும் பிறர் தயவு வேண்டித்தானே இருக்கு:(

அழகிய நாட்கள் said...

திரு துளசி கோபால்!
நிச்சயம் அவரது சொந்தங்கள்தான். அவர் புதைத்த எரித்த எத்தனையோ மனிதர்களின் சொந்தங்கள் சுடுகாட்டுப்பக்கம் கூட வரவில்லையாம்.

சிவகுமாரன் said...

உள்ளத்தைத் தொட்ட பதிவு. பிணம் விழுந்தால் மகிழ்ச்சி அடையும் கேரக்டர் மனித இனத்தின் அவலம். -- கடைசியில் குஜராத்தில் எரிந்த பிணங்களைக் காட்டி , மகாலிங்கம் பெரியப்பாவை கண் முன் நிறுத்தி கலங்கடித்து விட்டீர்கள்.

அழகிய நாட்கள் said...

திரு சிவகுமாரன்!
டிசம்பர் 2004 சுனாமியில் இறந்தவர்களிடமிருந்துஉயிரோடிருந்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களையும் நிவாரணம் என்ற ரீதியில் எந்த உதவி வந்தாலும் எத்தனை தடவையாயினும் வாங்கிக்கொண்டு இறந்தவரின் உறவினர் என்று சொல்லிக்கொண்டு அடித்துப்பிடித்து உயிர் வாழ வேண்டும் என்ற வெறி கொண்டலைந்தவர் எத்தனை பேர் தெரியுமா?
அதே நேரத்தில் இறந்து போய் அழுகிய நிலையிலும் அதை எடுத்து மொத்தக்குழி வெட்டி இறுதிக் கடமை மூலம் நோய் பரவாமல் செய்தவர்கள் மகாலிங்கம் பெரியப்பா போன்றவர்கள்தான். தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!.
தொடர்ந்து ச(சி)ந்திப்போம்.

Anonymous said...

Hi, it's a good post. I will recommend it to my friends as they have been looking for such information. sildenafil citrate

அழகிய நாட்கள் said...

திரு அனானி அவர்களே!
பதிவான வாழ்வின் அனைத்து அம்சங்களும் எங்கெங்கோ முளைத்துக்கிடக்கின்றன். எனது தோட்டத்தில் விளைந்தவைகளை நான் பதிவு செய்திருக்கிறேன். தங்களின் வருகை எனக்கு உவகை