வலைப்பதிவில் தேட...

Tuesday, April 26, 2011

ஆண்டிப்பகடை

இப்படித்தான்  என் நினைவு சொல்லுகிறது  அப்போது சௌடாம்பிகை நடு நிலைப்பள்ளியில் ஏழாவது படித்துக்கொண்டிருக்கும் நேரம். முத்துராமன் பட்டியிலிருந்து சாதி சனங்களோடு குடியிருந்த  வீட்டை வித்து விட்டு  மாத்த நாயக்கன்பட்டி  பாதையில் ஒரு இடத்தை வாங்கி  என் தாத்தா கட்டி  இருந்த எங்கள் வீட்டில் குடியிருந்தோம் (கூரை வேயப்பட்ட  மண் குடிசைதான் வேறென்ன?)

கிட்டத்தட்ட இரு நூறு வீடுகள் (தலக்கட்டுகள்). ஒரே இனக்குழுவைச்சேர்ந்தவர்கள் அந்தப்பகுது முழுதும்  எனது சொந்தங்கள்தான்.
என் தாத்தாவின் வயதொத்தவர் ஆண்டிப்பகடை. தாத்தா நான் மூன்றாவது படிக்கும்போதே இறந்து போனார். ஆனால் ஆண்டிப்பகடை அதற்கப்புறம் நாலைந்து ஆண்டுகள் இருந்தார்.  நல்ல கறுத்த நிறம் . வேட்டியை எப்போதும் தார்ப்பாய்ச்சி கட்டிதான் இருப்பார். அவரது மனைவி பூச்சிக்கிழவி.

அவர் ஒரு குதிரை வைத்திருந்தார். அது மிகவும் ஆரோக்கியமான அரபுக்குதிரையன்று. அவரது குடுமியைப்போலவே மெல்லிதான வால் அந்தக்குதிரைக்கு. எங்களுக்கு அந்தக்குதிரையை வேடிக்கை பார்ப்பதுதான் வேலை. அவர் விரட்டி விரட்டி விடுவார் எங்களை.



அவர் அந்தக் குதிரையை அப்படியே கடிவாளம் சார்ந்து இயங்கும் தோலாலான ஒரு நீண்ட வாரைப்பிடித்து லாவகமாக அழைத்துக்கொண்டு தெற்குப்பக்கமாக கல்பொறுக்கி சாமி யைத்தாண்டினால்   சுடுகாடு. மாத்த நாயக்கன்பட்டி சனங்கள் எல்லம் அந்த வழியாக வரும்போது அந்த மஞ்சனத்தி மரத்தடியில் கிடக்கும் கற்குவியலில் ஒரு கல்லை எடுத்துப்போட்டுவிட்டுப்போவார்கள். அதுதான் எங்களுக்கு கல்பொறுக்கி சாமி.

அந்தக்கோவிலைத்தாண்டி சீமைப்புல் பக்கம் போய் குதிரையை  புல் மேய விட்டு கொண்டு வருவார். கையில் ஒரு சாட்டைக்குச்சி வைத்திருப்பார். நாங்கள் பின்னாடியே ஓடி வந்து கொண்டிருப்போம். விரட்டுவதும் சிதறி ஒடுவதும் பின்னால் தொடருவதும் வாடிக்கையானது  அந்தப்பதின் வயதுகளில். அந்தக்குதிரைக்கு கால் குளம்பில் ஏதோ புண் மாதிரி வந்து அந்த இயல்பு நடை மறந்து போய் அவரும் வேறு வழியின்றி அதை யாருக்கோ கொடுத்து விட்டார். விலைக்கா என்னவென்று தெரியவில்லை.

இதற்குப்பிறகு ஆண்டிப்பகடை இறந்து போனார் ஒரு நாளில். சுடுகாடு மண்பாலத்துக்கு இடது பக்கத்தில் வண்டிப்பாதைக்கு வடக்கில். அதாவது  கருமாதி மடத்தை அடுத்த சாத்தூர் செல்லும் சாலயில் கௌசிகா மகா நதியின் குறுக்கே கட்டப்பட்ட வெள்ளைக்காரன் காலத்துப்பாலம்.  அதற்குப்பக்கத்தில் இரயில் செல்லும் பாலம் இரும்புப்பாலம்.

சொந்தங்கள் சுருத்துகள் ஊரார், உற்றார்  என அனைவரும் வந்த பிறகு விளக்கு வைத்தபிறகு இறுதிப்பயணத்துக்குத்தயாரானார் ஆண்டிப்பகடை. நாங்கள் எல்லாம் ஒரே குதியாட்டம்தான். கொட்டுக்காரர்களுடன் ஊடே புகுந்து. சில  நேரங்களில் அவர்களின் கொட்டுக்குச்சியில் அடியும் விழும்.

முத்துராமன் பட்டி ரயில்வே கேட் தாண்டி ராமசாமி மடத்துக்கு அருகே வரும்போது ஒருவனை விரட்டி ஓடினேன். அவ்வளவுதான். எதிரே வந்த லைட் இல்லாத சைக்கிள்காரன் மேல் மோதி விழுந்தே விட்டேன். வலது முழங்காலில் சரியான அடி. எழுந்திருக்கவே முடியவில்லை.அழுது கொண்டே இருந்தேன்.  கொட்டுக்காரர்களுடனும் சொந்தக்காரர்களுடனும்  பிணம்  என்னைத்தாண்டி கருமாதி மடத்தை  நோக்கி சென்று கொண்டிருந்தது.


3 comments:

D.Martin said...

தோழர் வணக்கம்,
அருமையான பதிவு, தீண்டாமையின் சிறுவயது வடுக்கள் ஏதேனும் இருந்தால் எழுதுங்கள். ஏன் இப்போது கூட இருக்கிறதுதான். ஒரு சக அருந்ததியனின் வேண்டுகோளாக கொள்ளுங்கள்

அழகிய நாட்கள் said...

நன்றி திரு மார்டின் அவர்களே!
எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டத்தின் வரலாறு என்று
மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இந்தியாவில் எழுதப்பட்ட வரலாறு அனைத்தும்
பிராமண வேளாள ஆதிக்கம் சார்ந்து இருக்கிறது. நான்கில் ஒரு பகுதியாக
இருந்து வரும் நமது மக்களின் வரலாற்றையும் அதிலும் குறிப்பாக அருந்ததி
இனத்தவரின் வாய் மொழி வழக்காறுகள் அனைத்தையும் நாம் மீட்டெடுத்து பதிவு
செய்ய வேண்டியது இருக்கிறது.
பேரன்புடன்,
திலிப் நாராயணன்.

அழகிய நாட்கள் said...

திரு மார்டின் அவர்களுக்கு !
நமது வரலாறு என்பது பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. இங்கு எழுதப்பட்ட வரலாறு என்பது பிராமண வேளாளர்களுடைதாகவே இருக்கிறது. வாய் மொழி வழக்கில் உள்ளதைப்பதிவு செய்வது காலத்தின் கட்டாயமாகப்படுகிறது.