வலைப்பதிவில் தேட...

Thursday, January 20, 2011

அப்பா

"தவமாய்த்தவமிருந்து" படத்தில் அப்பாவின் அருமையை இயக்குநர் சேரன் செல்லுலாயிடில் அருமையாகப்பதிவு செய்திருப்பார்.  எனது அப்பாவைப்பற்றிப்பதிவு செய்வது அவசியமென்று தோன்றுகிறது இந்நேரம்.

எனக்கு சிறிய வயதில் அம்மை  நோய் கண்டிருக்கிறது. அதற்காக அம்மா விருதுநகரில் இருக்கக்கூடிய பராசக்தி மாரியம்மன் கோவிலுக்கு
(அநேகமாக ஒவ்வொரு ஊரிலும் இப்படி ஒரு தெய்வம் இருக்கும்; அது ஒரு பெரிய விஷயமல்ல என்னைப்பொறுத்தவரையிலும் ) ஒவ்வொரு கிழமையும் குளித்து ஈரத்துணியுடன் மாரியம்மன் கோவிலை வலம் வந்து வேண்டுதல் விடுத்திடுக்கிறார்கள்.

எனது பையன் உயிர் பிழைத்தால் அவன் உயிருடன் இருக்கும் காலம் முழுமைக்கும் (அதாவது ஆயுளுக்கும் அக்னிச்சட்டி (தீச்சட்டி)) எடுப்பான் என்று வேண்டிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

இயல்பாகவே எனக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை;

கல்லூரி நாட்களின் இரண்டு மூன்று ஆண்டுகள் இந்தப்பழக்கத்திற்குக்கட்டுப்பட்டு தீச்சட்டி எடுத்திருக்கிறேன்.

பின்னாட்களில் ( தாய், நினைவுகள் அழிவதில்லை  போன்ற நாவல்களைப்படித்தபிறகு)

எனக்கு கடவுள் நம்பிக்கை அற்றுப்போய் விட்டபடியால்அம்மாவிடம் சென்று  "அம்மா என்னைக்கேட்காமல் வேண்டுதல் செய்து விட்டாய் தயவு செய்து அந்த அம்மனிடம்( மாரியம்மன் தான்) அதை ரத்து செய்து விடவும்" என்று சொன்னேன்.

அம்மா சொன்னார்கள்: " இவன்  நெத்தியில் முளைத்தவனாயிற்றே" என்று

எனது பரம்பரையில் எழுதப்படிக்கத்தெரிந்தவனும்
முதல் முதல் வகுப்பு பட்டதாரியுமானவன் நான் தான்.
எனது அப்பா அப்படியில்லை;அவர் அந்தக்காலத்தில் ஆறாம் வகுப்பு நிறைய நண்பர்களுடன்.

நான் இரண்டு வயதாகி இருந்த நேரம் காங்கிரஸ் சர்க்காரை எதிர்த்து தி மு க நடத்திய போராட்டத்தில் அவரும் கலந்து சிறை சென்று விட்டார். அந்த நேரம் திருச்சி ஜெயிலில் இருந்த போது
எஸ் எஸ் ஆர் மற்றும் விஜயகுமாரி  வந்து  சந்தித்து விட்டு  சென்றார்களாம்.

அப்போது என்னை கேள்வி கேட்பார்களாம் உறவினர்கள்: "அப்பா எங்கே?"
அப்பா ஜெ!! ( இப்போதெல்லாம் வழக்கில் இருக்கிற "ஜெ" இல்லை)  ஜெயில்

அப்பாவோடு கைதான சில உறவினர்கள்  பயந்து போய் நான் இனிமேல் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டேன் என்று எழுதிக்கொடுத்து விட்டு வீடு நோக்கி ஓடி  வந்து விட்டார்களாம். அப்பா அதற்கெல்லாம் கலங்கவில்லையாம்; எவ்வளவு நாளைக்கு உள்ளே வைக்கிறார்கள் என்று ஒரு கை பார்த்து விடலாம் என்று இருந்து விட்டார்.

ஒட்டு மொத்தமாக அவர் சிறையில் இருந்த நாட்கள் 100. அதன் பிறகு ஐந்தாண்டுகள்  (1967) கழித்து தான் தி மு க ஆட்சிப்பொறுப்பை ஏற்றது.

நான் என் அப்பாவை ஒரு நாள் கேட்டேன்;

அப்படியே நீங்கள் ஏன் அந்த அரசியல் வாழ்வைத்தொடரவில்லை என்று..

அப்பாவோ செருப்புத்தைக்கும் தொழிலாளி.

அவர் குறிப்பிட்டார்.

"நமது சாதிக்குறியீடுதான் நமக்கு எதிரி தம்பீ: நம்மை முன்னேற

விடமாட்டார்கள் .   சரியான சம்பளமில்லாமல்

சாதி அடையாளமுமில்லாமல் நாம் வாழ முடியாது"

நான் முதன் முதலாக கல்லூரியில் கால் வைத்த போதும் சரி

பட்டப்படிப்பு முடித்து முதல் வகுப்பில் தேர்வு ஆன போதும் சரி

பிறகு வேலை கிடைக்காமல் எனது தெரு தோழர்களுடன்

சைக்கிள் ரிக்ஷா ஓட்டியபோதும் சரி

ஒரு எழுத்தராக DOT யில் தேர்வானபோதும் சரி

மாற்றுதலில் காரைக்குடி சென்று எட்டு ஆண்டுகள் (1982- 1990)பணியாற்றிய போதும் சரி

அப்புறமாக விருதுநகர் வந்து பணியாற்றியபோதும் சரி

1994 இல் இள நிலைக்கணக்கு அதிகாரியாக அகில இந்திய அளவில் தேர்வான போதும் சரி

பம்பாயில் ஓராண்டு பணியாற்றி பிறகும்ன் சரி

அதன் பிறகு சென்னையில் ஓராண்டு பணியாற்றிய போதும் சரி

பிறகு விருதுநகர் மாற்றலில் வந்த போதும் சரி

என்னை எந்தவிதப்புருவச்சுழிப்புமின்றி  நேசித்தவர் எனது தந்தை.

1998 இல் அவரது மரணம் என்னைக்கேள்விக்குள்ளாக்கியது.

எந்தவித உணர்ச்சிகளுக்கும் ஆட்படாத அந்த உயிர்

என்னை இன்றைக்கும் அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது...





7 comments:

அன்புடன் அருணா said...

உங்களின் வருத்தம் புரிகிறது....

அழகிய நாட்கள் said...

அன்புடன் அருணா!
தங்களது வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி!

Anonymous said...

Dear Mr.Narayanan, Got to know about you thro' Vikatan. Hereafter I'll be following u closely. O.K. The piece about your Dad is very touching and I really like your frankness.

அழகிய நாட்கள் said...
This comment has been removed by the author.
அழகிய நாட்கள் said...

அன்புள்ள அனானி!
தங்களது வருகை
மற்றும் பகிர்வு மகிழ்ச்சி தருகிறது.
தொடர்ந்து பகிர்வோம்
நினைவலைகளை..
பேரன்புடன்,
திலிப் நாராயணன்

சிவகுமாரன் said...

தவமாய் தவமிருந்து எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. அப்பாவின் நினைவுகளை கிளறி விட்டது உங்கள் பதிவு. நன்றி

அழகிய நாட்கள் said...

திரு சிவகுமாரன்!
நன்றி தங்களின் பின்னூட்டத்திற்கு