வலைப்பதிவில் தேட...

Tuesday, October 12, 2010

பதின் வயது நினைவுகள் 2

எட்டாவது வரைதான் அப்போது விருது நகர்  முத்துராமன்பட்டியில் இருக்கும் சௌடாம்பிகை பள்ளியில் படிக்க முடியும். அது அப்போது ஒரு நடு நிலைப்பள்ளி.( இப்போது அது ஒரு மேனிலைப்பள்ளி) அதற்குப்பிறகு கே வி எஸ், ஹாஜி பி,சுப்பையா நாடார் அரசுப்பள்ளி என  உயர் நிலைப்பள்ளிக்கல்வி படிக்க இயலும். அப்படித்தான் ஒன்பதாவது வகுப்பில் ஹாஜிபி செய்யது முகமது உயர் நிலைப்பள்ளியில் அப்பா சேர்த்து விட்டிருந்தார். விருது நகர் மெயின் பஜாரில் உள்ள மாரியம்மன் புக் சென்டருக்கு எதிர்த்த ரகுமானியா சூ மார்ட்டில் அப்பா செருப்பு சரி செய்யும் வேலை செய்து வந்தார்.

மதியம் 12 40 க்கு பள்ளி முடியும். 2 மணிக்கு மறுபடியும் வகுப்பு தொடங்கும். முத்துராமன் பட்டியின் கடைசியில் இருக்கும் வீட்டுக்கு போய் வர நேரமாகும் என்றெண்ணி மதிய நேரங்களில் அப்பா வேலை செய்யும் கடைக்கு சில நாட்களில் வந்து விடுவது உண்டு.  பொட்டலில் அப்போதெல்லாம் இரண்டு மூன்று தள்ளுவண்டிக்கடைகளில்
10 பைசா பாயாசம் படு ஜோராக விற்பனையாகும். அப்பாவிடம் போனால் கால்ரூபாய் (25 பைசா) கிடைக்கும். அப்படியே பொட்டலில் ஒரு பாயாசம் குடித்து விட்டு மிச்சம் 15 பைசாவோடு பள்ளிக்கு சென்று விடுவேன். இல்லை என்றால் பெ. சி. தெருவில் மாம்பழப்பேட்டைக்கு எதிர்த்த சந்தின் முகப்பில் ஒரு கிளப் கடை (ஹோட்டல்தான்) இருக்கும். அங்கே ஐ ஆர் 8 அரிசியில் சமைத்த சாப்பாடு ஒரு கப் கத்தரிக்காய் சாம்பார் சகிதமான மதிய நேரச்சாப்பாட்டை முடித்துக்கொள்ளலாம்.
 
இப்படித்தான் அன்றைக்கும் ஒரு கால் ரூபாயை வாங்கிக்கொண்டு பள்ளியை நோக்கி நடந்தேன். பாயாசம் கூட குடிக்கவில்லை. பாம்பாட்டிக்காரன் மகுடியுடன் தனது வேலையை அப்போதுதான் துவங்கியிருந்தான். ஒரு கோழி முட்டை ஒரு செவலை நிறப்பாம்பு அது சரியான சோம்பேறி. நெளிந்து கொண்டு இருந்தது. அந்த மோடி மஸ்தானைச்சுற்றி கூட்டம் நின்றது. சிறிது நேரத்தில் அனைவரையும் அவனது கவனத்துக்குள் கொண்டு வந்து விட்டான். திடீரென ஒரு பையன் கூட்டத்திலிருந்து அவனது கட்டுப்பாட்டுக்குள் எலும்புகூடு பக்கத்தில் ஒடிப்போய் படுத்துக்கொண்டான்.  ஒரு துணியை எடுத்து அவனது முகத்தை மூடி அதன் மேல் ஒரு தாயித்தை வைத்து பிறகு ஆரம்பித்தான் பேச..
 
வா இந்தப்பக்கம்
வந்தேன்
கேட்டால்
சொல்வேன் என வியாபார உத்தியை உசுப்பி  விட்டான்
அவன் கையிலிருந்த தாயித்தை எல்லோரும் வாங்கிப்போகும் படியாக சொன்னான்.
 
பயந்த சிலர் வாங்கினார்கள். கடமையே என நினைத்து சிலர் வாங்கினார்கள். பெருமையாகவும் சிலர் வாங்கினார்கள். பார்த்ததற்கான கட்டணமாக நினைத்து சிலர் வாங்கினார்கள். சிலர் காசு இருந்தும் வாங்காமல் இருந்திருக்கலாமா என்பது தெரியவில்லை
 
எனக்கு பயம் வந்து விட்டது
இருக்கும் கால் ரூபாயை விட்டு விட்டு (அவனிடம் கொடுத்துவிட்டு)போகவா என்று பசியில் எச்சிலை முழுங்கிக்கொண்டிருந்தேன்.
காசு இருந்தும் போடாமல் போனால் மூனே நாளில் ரத்தம் கக்கிச்சாவான் என்று சாபமும் விட்டான்.
நான் காசு போடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.
கொஞ்ச நேரத்தில் எல்லோரையும் கலைந்து போகச்சொன்னான்.
நான் தான் கடைசில் போனவனாக இருப்பேன்.
மயக்கத்தில் விழுந்த என் வயதுப்பையன் இப்போது எழுந்தான்.
சிரித்தான்
அவனது வாய் வெற்றிலை போட்டு சிவந்தது போல் இருந்தது.

2 comments:

விமலன் said...

விருதுநகரில் பொட்டல், பெனாசீனா தெரு, ரகுமானியா சூமார்ட்,செருப்பு சரிபண்ணும் தந்தை,மதியச் சாப்பாட்டிற்கு பாயாசம் வாங்கிச் சாப்பிடும் மகன்,,,
இதே காட்சிகள் வேறு,வேறு ஊர்களில் வேறு வேறு மாதிரியானதாக.இல்லாதவர்கள் வாழ்க்கை எப்பொழுதும் பாரம் சுமந்தே.பழைய நினைவுகளின் வலியையும்.இனிமையையும் பகிர்ந்து கொள்ளும் நல்ல பதிவு.

அழகிய நாட்கள் said...

தோழர் விமலன்!
பள்ளி நாட்கள் மட்டுமல்ல
கல்வி கற்கும் அந்த நாட்களில் குழந்தை உழைப்பாளராக இருப்பவர்களாகவும் இருக்கும் கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். இதை பேரா மாடசாமியின் " எனக்குரிய இடம் எங்கே" என்ற புத்தகத்தில் இரண்டு பக்கங்களில் எனது பதிவாக அவர் செய்திருக்கிறார் கடித வடிவில்.