வலைப்பதிவில் தேட...

Thursday, October 21, 2010

ரிக் ஷாக்காரன்

பட்டப்படிப்பு முடிந்தது.
விடுமுறையும் வேலையின்மையும் சேர்ந்து விரட்டத்துவங்கியிருந்தது.
பத்துரூபாய்க்காசுக்கு வேலை கிடைப்பது அரிது.
என்னுடன் படித்த நண்பன் ராஜேந்திரன் இரண்டாவதிலோ அல்லது மூன்றாவதிலோ படிப்பை நிறுத்திக்கொண்டவன்.

முத்து ராமன் பட்டி சைக்கிள் ரிக் ஷா ஸ்டாண்டில் வண்டி ஓடிக்கொண்டிருந்தான். வீட்டில் சும்மா இருக்கப்பிடிக்காமல் ரிக் ஷா ஸ்டாண்டுக்குப்போய் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
பர்மாக்கடை டீ அப்போது இருபத்தைந்து பைசா.

முததுராமன் பட்டியிலிருந்து வரும் சவாரிகள் பொதுவாக பஸ் ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி,( அப்போதெல்லாம் ஒரு ஆஸ்பத்திரி கூட முத்துராமன் பட்டியில் இல்லை; அதிகபட்சமாகப்போனால்  லைசாண்டர் ஆஸ்பத்திரி அல்லது அரசு ஆஸ்பத்திரி அதுவும் இல்லையென்றால் காட்டாஸ்பத்திரி (பிரசவ ஆஸ்பத்திரிதான் அது)) என்று இருக்கும் சில  நேரங்களி தியேட்டர் சவாரியும் அமையும்.

படித்து விட்டு வெறுமனே அல்லது "சிவனே"
என்று யாரும் இருக்க முடியாது நான் மட்டும் விதி விலக்கா என்ன?

பகலில் ஏதாவது பஸ் ஸ்டாண்டு அல்லது ரயில்வே ஸ்டேஷன் சவாரி வந்தால் ஏற்றிக்கொண்டு போய் இறக்கி விட்டால் ஒன்னரை ரூபாய் (பஸ் ஸ்டாண்டுக்கு) அல்லது இரண்டரை ரூபாய் ( ரயிலடிக்கு) தருவார்கள்.

வண்டிக்காரனிடம் சொல்லிவிட்டு ஒரு சவாரி போய் விட்டு வந்தால் எழுதப்படாத சட்டமாக வாங்கிய கூலியில் பாதி ( பவுஸ்) கிடைக்கும்.

ரிக் ஷா வண்டி ஓட்டப்பழகியது ஒன்றும் பெரிய வேலையாக எனக்குப்படவில்லை. ஏனென்றால் ராஜேந்திரன் போன்ற நண்பர்களின் வண்டியில் அவ்வப்போது பழகியது.

அனேகம் பேருக்கு அது சைக்கிள் ஒட்டுவது போல் அவ்வளவு எளிதில்லை
அது ஒரு மூன்று சக்கர வாகனமாகையால் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டு போய் கவிழ வேண்டியிருக்கும்.

எம்ஜியார் ரிக் ஷாக்காரன் படம்  நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த போது வெளீயானது. நான் எட்டாவது வார வால் போஸ்டரை ரசித்துப்பார்த்து இருக்கிறேன். அதில் மீசைக்கார எம்ஜியார் ஜஸ்டினும் போடும் சண்டைக்காட்சி இருக்கும். இந்தப்படத்துக்குதான் எம்ஜியார்  "பாரத்" பட்டம் பெற்றார் என்பது என் நினைவுக்கு வருகிறது.

கடைசியில் நானும் அவரைப்போலவே ஒரு ரிக் ஷாக்காரன் ஆனேன்.
பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு சவாரி வந்தது. ஒன்னாரூபாய் பேசி, என்னை கொண்டு போய் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுவிட்டு வரச்சொன்னான் மாப்பிள்ளை மாரியப்பன்.

முத்து ராமன் பட்டி ரயில்வே கிராசிங் தாண்டி, செந்தி வினாயகபுரம் தெரு. மாங்கா மச்சி பள்ளி, அறிவியல் மன்றம் தாண்டி, கீழக்கடை பஜார் திரும்பி, வல்லக்காலில் பல் ஆஸ்பத்திரி. அப்போதுதான் இடது புரமாக எதிரே வந்த கை வண்டிக்காக வளைக்கிறேன் ஆசாமி என்ற பேரில், ஒரு வீலை (இடது) வல்லக்காலில் ஆஸ்பத்திரிக்கு நேர் எதிரில் இறக்கி விட்டேன்.

உட்கார்ந்திருந்த சவாரி இருவர் (கணவன் மனைவி) என்னைத்திட்டிக்கொண்டே இறங்கினார்கள். இன்னொரு ரிக் ஷாக்காரர் அவரது வண்டியை ஒரங்கட்டி நிறுத்தி விட்டு வந்து விழுந்து கிடந்த  இடது வீலைத்தூக்கி ரோட்டில் வைத்து,  சவாரி இருவரையும் திரும்ப ரிக்ஷாவில் உட்கார வைத்து எந்த ஸ்டாண்டு? புதுசா? பார்த்துப்போ! என்று சொல்லிவிட்டு போனார்.

காசுக்கடை பஜார் வந்து  நாராயணன் புக் ஸ்டோர் கடந்து மாரியம்மன் கோவில் முன்பாக வந்து தேரடி வெயிலுகந்தம்மன் கோவில், கொடிமரம் தாண்டி பீட் திரும்பி சென்ட்ரல் சினிமா கடந்து சக்தி ஹோட்டலுக்கு எதிராக நிறுத்தி சவாரியை இறக்கி விட்டேன்.

வியர்வையைத்துடைத்துக்கொண்டே காசை வாங்கினேன் ஒரு ஒரு ரூபாய்     நோட்டும் ஒரு எட்டணாவும் எனது கைகளில் சிரித்தது.
அதில் முக்கால் ரூபாய் எனது உழைப்பிற்கானதாக்கும்!

2 comments:

விமலன் said...

ரிக்சா சக்கரத்தோடு சேர்ந்து நம் மனமும் எண்ணங்க்களும் சுற்றுகிறதுதான்.

அழகிய நாட்கள் said...

தோழர் விமலன்!
தங்களின் கருத்துரைக்கு நன்றி.
மூன்று நாட்கள் திரைப்பட இயக்க முகாம்(அக் 22 முதல் 24 வரை) பொதிகையின் இதமான காற்றோடும் அருமையான தென் காசி கிளை நண்பர்களுடைய அன்பான உபசரிப்போடும் ....
கிறங்கித்தான் போனோம். மாற்று திரைப்படம் குறித்த ஒரு ரசனைமட்டத்தை நாம் மட்டுமல்லாது மக்களுக்கும் அதை கொண்டு செல்லவேண்டும் என்பதே முடிவு.'மூழ்கும் நதி' கதிர் நம்ம மாது 'அவள் பெயர் தமிழரசி' மீரா கதிரவன் திரைப்படக்கல்லூரி ஆசிரியர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் கருணா, தமிழ்செல்வன், ஸ்ரீ ரசா இவர்களது உரைகளுடன் கலந்துரையாடலும், எதிர்காலத்திட்டமிடலும், இருபதுக்கும் மேற்பட்ட திரையிடல்களும்....
ஒரு வண்ணமயமான அமர்வுகளுடன் கூடிய நிகழ்வு