வலைப்பதிவில் தேட...

Tuesday, October 6, 2015

மதுரை-தமிழ் தி இந்து வாசகர் திருவிழா- ஒரு பார்வை



கடந்த 04/10/2015 அன்று மதுரைக்கல்லூரியில் "தமிழ் தி இந்து" பத்திரிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவை ஒட்டி வாசகர் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.  சென்ற ஆண்டு கலந்து கொள்ள இயலாத காரணத்தால் இந்த ஆண்டு கலந்து கொள்வது என்று முடிவு செய்து அதன் படி மதுரைகல்லூரிக்கு சென்று அந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.இனி அது குறித்து வெள்ளந்தியாக சில கருத்துகள்...





தொண்ணூறுகளின் துவக்கத்தில் இருந்து ஒரு இருபதாண்டு காலமாக தினமணி வாசகராக இருந்து வந்திருந்தேன். அதற்கு முன்பாக தீக்கதிர் பத்திரிகை மட்டும் படித்து வந்திருந்தேன்.ஏப்ரல் 90 முதற்கொண்டு தீக்கதிரோடு தினமணியும் சேர்ந்து கொண்டது. தினமணி பத்திரிகையின் நடுப்பக்கங்களில் வரும் கட்டுரைகள் தலையங்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தது கூட தினமணி தொடர்ந்து வாங்க ஒரு காரணமாகவும் ஆகிப்போனது. கொஞ்ச நாட்கள் கழித்து தி இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் தினமணி மட்டும் வாங்கி வந்திருக்கிறேன். தீக்கதிர் சில காரணங்களால் வாங்க முடியாமற் போனது. அவ்வப்போதுஅதை நெட்டில்  படித்து விடுவது உண்டு.  தினமணி கட்டுரைகளுக்கான ஆசிரியர் கடிதம் மிகவும் பிடித்தமானது எனக்கு. அந்த வகையில்  நானும் அன்புள்ள ஆசிரியருக்கு என்ற பகுதிக்கு கடிதங்கள் எழுதினேன். 1999 முதல் ஒரு  ஐந்தாறு ஆண்டுகளில் எனது கடிதங்கள் பல பிரசுரம் ஆகியிருக்கிறது தினமணியில். எண்ணிக்கை அளவில் கொண்டால் ஒரு நூறு கடிதங்களைத்தாண்டும்.

குஜராத் மா நிலத்தில் பணி நிமித்தம் மாற்றலில் சென்ற நாட்களிலும்கூட ஒரு 3 மாத சந்தா கட்டி பத்திரிகை வரவழைத்து படித்தது உண்டு. அந்த தனிமை நாட்களில் பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன். மதவெறி கலவரங்களினூடே கூட எனது கடிதங்கள் தினமணியில்  பதிவாகி இருக்கின்றன.





பிரிதொரு கடிதம்:



அத்தோடு ஆங்கில தி இந்து பத்திரிகையும் வீட்டிற்கு வரவழைத்து படித்து வந்தேன் என்று சொன்னேன் அல்லவா? அப்படியாக வாங்கிக்கொண்டிருக்கையில் சரியாக  2013 செப் 16 முதல் தமிழ் தி இந்து நாளிதழ் தி இந்து ஆங்கிலப்பத்திரிகையுடன் சேர்த்து இலவசமாக  அறிமுகம் செய்தார்கள். ஒன்றிரண்டு நாட்கள் தமிழ் இந்து பத்திரிகையை அவர்கள் ஆங்கில இந்து பத்திரிகையுடன் சேர்த்து போட்டார்கள். தமிழ் இந்து பத்திரிகை ஆரம்பித்த அடுத்த நாள் தந்தை பெரியாரின் பிறந்த நாள். அது சம்பந்தமாக பிரமாதமான கட்டுரைகள் இல்லாவிட்டாலும் கூட அவரைப்பற்றி அதிகமாக எழுதாவிட்டாலும் சிறிய அளவில் கூட செய்தியாக வெளியிடவில்லை. நூறு ஆண்டு காலத்துக்கும் மேல் இதழியல் துறையில் திகழ்ந்து வரும் நாளிதழின் இந்த நிலைபாடு கொஞ்சம் சரியில்லை என்று அப்போது தோன்றியது.




தவிர, தமிழ் தி இந்து வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் பத்திரிகையாளர்களின் பெயர்களுடன் அவர்களது உழைப்பை கௌரவப்படுத்தும் விதமாக வெளி வந்தது என்னை மிகவும் ஈர்த்தது.மற்றுய்ம் வித்தியாசமான, புதிய களத்தில் தன்னுடைய பணியை ஒரு பத்திரிகைக்கே உரித்தான விதத்தில் கட்டுரைகள் மற்றும் நடுப்பக்கம் நன்றாக விஷயதானத்துடன் வெளி வந்தது  தமிழ் தி இந்து.

முதல் ஆண்டு மதுரையில் நடந்த வாசகர் திருவிழாவிற்கு நான் செல்ல முடியவில்லை காரணம் பெல்லாரியில் பணியில் இருந்தேன். எனது நண்பர் கிருஷ்ணகுமார் ராஜா முத்தையா மன்றம் சென்று கலந்து கொண்டுவிட்டு என்னிடம் தகவல் பரிமாறிக்கொண்டார்.

இந்தமுறை வாய்ப்பிருந்ததால் மதுரைக்கல்லூரி சென்று கலந்து கொண்டேன். நுழையும் போதே திரைக்கலைஞர் ரோகிணி பொதுவாகவும் திரைப்படம் சம்பந்தமாகவும் பேசினார். திப்பு சுல்தான் படத்தில்  நடிக்ககூடாது என்று சொல்லுபவர்கள் அரை குறை ஆடையுடன் சினிமாக்களில் பெண்களை இழிவு படுத்தி படம் எடுப்பதை தட்டிக்கேட்டு எதிர்க்கத்தயாரா? என்று ஆவேசத்துடன் பேசினார் திரைக்கலஞர் ரோகிணி. அதற்கான கைதட்டல் அதிக நேரம் நீடித்தது. மதச்சார்பின்மையை வலியுறுத்துவதாக அவரது பேச்சு வெளிப்பட்டது

இந்தப்பேச்சின் சாரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிகர் ரோகிணி அவர்களின் சிந்தனையை ஒட்டிய பேச்சாக எனக்குப்பட்டது. ஆனால் நடப்பில் தமிழ் இந்து தன்னுடைய 05/10/2015 செய்தியாக இப்படிப்பிரசும் செய்திருந்தது. முதல் பகுதியான திப்புசுல்தான் பற்றி குறிப்பிடவில்லை. மறு பாதியை அரை குறை ஆடையுடன் சினிமாக்களில் பெண்களை இழிவு படுத்தி படம் எடுப்பதை தட்டிக்கேட்டு எதிர்க்கத்தயாரா? என்று மட்டும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். 
மிகப்பழம் பெரும் பத்திரிகையான் தி இந்து  இப்படியாக தனது சார்புத்தனத்தை நிஜத்தில் ராஜ் நாத் சிங் பாதையிலான "இந்து"வாகவே  என்பதாகவே எனக்குப்புரிந்தது. (ராஜ் நாத் சிங் தான் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கொல்லப்பட்ட அக்லாக் என்பவரின் மரணத்தை சாதாராணமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுவிட்டு அடுத்த நாளே இந்தியா மதச்சார்பின்மை குறித்து செயல்பட எந்தத்தயக்கமும் கொள்ளாது என்று சொல்லுகிறார்.)

பேராசிரியர் ஞான சம்பந்தன் பேசினார். அப்போது கேக்குதா என்றார். இப்புடித்தான் ஒரு கூட்டத்துல கேட்குதான்னு கேட்டேன். கேக்கல சும்மா பேசுங்கன்னு கடைசிலிருந்து ரெண்டு பேரு சொன்னாய்ங்க. இதைக்கேட்டு முன்னாடி வரிசையிலிருந்து நாலு பேரு எந்திரிச்சி போய்ட்டாய்ங்க. நீங்க எதை வேணா பேசுங்க எங்களுக்கு எந்தக்கவலையும் இல்லைனு அவிங்க இருக்கானுங்க...

மேடைக்கலைவாணர் நன்மாறன். நான் எவ்வளவு நேரம் பேசலாம்ணு பேராசிரியர்ட்ட கேட்டேன். 15 நிமிடம் என்றார். அடேங்கப்பா சட்ட சபையில எங்களுக்கு கொடுத்த நேரத்தைக்காட்டிலும் மூன்று மடங்கு என்றார். அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து நீங்க அரை மணி  நேரம் பேசலாம் என்று சொன்னவுடன் அது சரிதான் எங்களுக்கு சட்ட சபையை விடவும் 6 மடங்கு நேரம் ஒதுக்கினீர்கள் என்றார். கல்யாணம் பேசி முடிக்கும்போது யாராவது மாப்பிள்ளைக்கு எத்தனை பவுன் போடுறீங்க? என்று யாரும் ஏன் கேட்பதில்லை. பெண்களுக்கு மட்டும் எத்தனை பவுன் என்று கேட்கிறார்களே? இராமாயணத்தில் ராமன் வில்லை ஒடித்து தான் மணம் முடித்தான். மகாபாரதத்தில் அர்ஜுனன் பாஞ்சாலியை அம்பு எய்தி இலக்கை வென்றுதான் முடித்தான். வரதட்சணை ஒழியட்டும் என்றார்.

அவர்களே இவர்களே என்றெல்லாம் யாரையும் விளிக்காமல் டாஸ்மாக்கை மட்டுமே குறிவைத்துப்பேசிய சட்டக்கல்லூரி மாணவி  நந்தினி குடியின் தீமை குறித்து பேசினார். அரசியலமைப்பு சட்டம் 328 இன் படி ஒருவரை போதைக்கு ஆளாக்குவது சட்டப்படியான குற்றம். அப்படியான குற்றத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மா நில அரசே செய்கிறது. குடியினால் குடும்பங்கள் அழிகின்றன. ஆண்மை அற்றுப்போகின்றனர் என்று பேசினார். (டாஸ் மாக்கை எதிர்த்த போராட்டத்தில் 41 முறை சிறை சென்றவர் இவர்)

அரபு நாடுகளுக்கு டிரைவர் வேலைக்கு சென்று ஒட்டகம் மேய்த்த சதாம் உசேன் என்பவரை அறிமுகம் செய்தனர். வாட்ஸ் அப் மூலம் தமிழ் இந்து அவரை தாய் நாட்டுக்கு அழைத்து வர உதவி செய்தது. 

வத்தலக்குண்டு பஸ் நிலையைத்தையே சுத்தமாக மாற்றிக்காட்டிய மன நலம் குன்றிய ரங்கராஜன் என்பவரை அவரை இப்போது பராமரிக்கும் திருச்சி தில்லை நகர் அமைப்பின் சார்பாக பேசினார்.

மேதகு அப்துல் கலாமின் பேரன் கலந்து கொண்டார். ( இவர் சமீபத்தில் அமீத் ஷா முன்னிலையில் பா ஜ க வில் சேர்ந்தவரா எனத்தெரியவில்லை) சோலார் ராமேஸ்வரம் பற்றி குறிப்பிட்டார்.

குள.சண்முகசுந்தரத்தின் உசிலம்பட்டி இன்று (பெண் சிசுக்கொலையில்தான்) பகிரப்பட்டது. களப்பணியாளர் குறிப்பிடுகிறார்: முதல் குழந்தை  நிச்சயமாக ஆண் குழந்தைதான் வேண்டும். இல்லையென்றால் பரவாயில்லை. இரண்டாவது ஆணாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கருவில் ஆய்வு செய்து பெண்ணாக இருந்தால் கருக்கொலை செய்வது ( முன்னாட்களில் பெண்  குழந்தை பிறந்த பிறகு எருக்கம்பால் அல்லது நெல்லு மணி போட்டு சாகடித்தார்கள்)  அந்த மண்ணில் பிறந்து சாகடிக்கப்படாத ஒரு வாசகர் மேடையில் பேசினார். முக்கிய காரணம் பெண் குழந்தைகளை பிளஸ் டூ அல்லது 10 தேறியவுடன் மணம் முடித்து வைத்து விடுகிறார்கள். முடிவெடுக்க முடியாத சிறிய வயதினரால் சிசுக்கொலை/ கருக்கொலைக்கு காரணமாக இருக்கலாம். என்று புதிய தளத்தை தொட்டார். பால்ய விவாகம் முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் இவரது கருத்தின் முத்தாய்ப்பாகப்புரிந்து கொண்டேன்...


2 comments:

Avargal Unmaigal said...

பதிவை சுவராஸ்யமாக படித்து கொடு வரும் பொழுது பாதியிலே நிறுத்திவிட்டது போல இருக்கிறது பதிவை படித்தது முடித்ததும்

அழகிய நாட்கள் said...

நன்றி திரு அவர்கள் உண்மைகள். முக்கியமாக பதிவின் நோக்கம் இதுதான் தமிழ் தி இந்து திரைக்கலைஞர் ரோகிணியின் பேச்சை முழுதுமாக வெளியிடாத தன்மைகுறித்து மட்டுமே.