வலைப்பதிவில் தேட...

Monday, December 27, 2010

தீண்டாமைச்சுவர்கள்

உடுமலைப்பேட்டை அருகில் ஜே ஜே நகர் பகுதியில் ஒரு தீண்டாமைச்சுவர் இப்போது கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.தலித் மக்களை அவர்களது குடியிருப்புப்பகுதிகளை முற்றிலுமாக உயர் சாதியென்று கருதுவோர் சுவர் வைத்து பிரித்து தனது சாதீய மேலாண்மையை நிறுவும் முயற்சிதான் இது போன்ற சுவர்களைக்கட்டுவது.

இதற்கு சற்றே முன்பாகத்தான் கோவை நாகராஜபுரம் சுவர் தெரிய வந்தது. அதற்குமுன் திருச்சியில் உள்ள ஒரு இடுகாட்டில் இதே போன்ற சுவர் இருந்தது மக்களின் பார்வைக்கு(சிந்தனைக்குதான் ) வந்தது.

அதற்கும் முன்பாக மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் நீண்ட தீண்டாமைச்சுவர் முதன் முதலாக வெளி வந்தது.


பிரகாஷ் காரட் வரவை ஒட்டி மே 8, 2008 அன்று ஒரு 15 அடி தூரம் இடிக்கப்பட்டது.ஆனாலும் அதை முழுவதுமாக "திருக்குலத்தார்" பயன் படுத்த முடியாத சூழல் இன்னும் இருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களைப்பிரியமாக அழைத்த வார்த்தைதான் திருக்குலத்தார் என்பது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்குதான் எத்தனை எத்தனை பெயர்கள்?
மொத்தமாக அவர்களைக்குறிப்பிடும்போது பஞ்சமர்கள் அல்லது சண்டாளர்கள் அடுத்த கட்டமாக  ஹரிஜனங்கள் ( காந்தியின் பரிசு இது) தாழ்த்தப்பட்டவர்கள், அட்டவணை சாதியினர். அதன் பிறகு தமிழக அரசின் உத்தரவுப்படி ஆதி திராவிடர். அண்ணலின் வார்த்தையின் படி தலித்துகள் ( நொறுக்கப்பட்ட மக்கள்.) இருக்கட்டும் பிரச்னையைப்பார்ப்போம். இம்மக்களுக்குள் உள்ள உட்சாதியினரைப்பற்றி இங்கே குறிப்பிடவில்லை.

திருச்சியில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் இடுகாட்டு சுவரும் கூட கொஞ்சமாக ஆட்கள் நடமாடும் அளவுக்கு இடிக்கப்பட்டது.
கோவையிலும் கூட மொத்தம் 1000 அடியில் ஒரு முப்பது இன்னொரு 23 அடி என்ற கணக்கில் இடிக்கப்பட்டது.

உடுமலைப்பேட்டையிலும் இதுபோல இடிக்கப்படக்கூடும்.
இம்மாதிரியான தீண்டாமைச்சுவர்களின் நீளம் உலகிலேயே இரண்டாவதாக அறியப்படும் மெரினா கடற்கரையின் நீளத்தையும் மிஞ்சுமோ

அல்லது சீனப்பெருஞ்சுவரையும் விஞ்சுமோ என்பதுதான்  இன்றைய  மில்லியன் டாலர் (ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் !!!!) கேள்வி.

2 comments:

மாசிலா said...

//இம்மாதிரியான தீண்டாமைச்சுவர்களின் நீளம் சீனப்பெருஞ்சுவரையும் விஞ்சுமோ என்பதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி//.
சீனச்சுவரை சீனர்கள் தங்களை மங்கோலிய கொள்ளையர்களின் தாக்குதல்களுக்கு பயந்து பாதுகாப்பிற்காக கட்டப்பட்டது. ஆனால் இவைகளோ நளிந்த பயந்த சுபாவமுள்ள அடிதளத்து மக்களை இந்து மதத்தின் கோட்பாடுகளின் பெயரில் பிரித்து ஆள்வதற்கே கட்டப்பட்டு இருக்கிறது.

சீனச் சுவர் வீரத்துக்கு அடையாளம்
தீண்டாமைச் சுவரோ கோழைத்தனத்திற்கே அடையாளம்.

அழகிய நாட்கள் said...

திரு மாசிலா அவர்களுக்கு !
தங்களது வருகை மற்றும் பின்னூட்டம் மகிழ்வளிக்கிறது. உயிரைக்காக்கவும் பாதுகாப்பிற்காகவும் கட்டப்பட்ட பெருஞ்சுவர் எங்கே? மனிதருள் ஒரு பிரிவினரின் வாடையே ஆகாது என்ற மனு நீதி சிந்தனை எங்கே?. தகர்க்கப்பட வேண்டியது மனதில் உள்ள மனு நீதி சிந்தனைகளை மட்டுமே.