வலைப்பதிவில் தேட...

Saturday, June 29, 2013

ஆறடி நிலம் கூட யாருக்கும் சொந்தமில்லை

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா ....ஆறடி நிலமே சொந்தமடா"
என்ற ஒரு பாடல் தமிழ் சினிமாவில்  உண்டு.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களும் " குட்டியாடு தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம் என்ற பாடலில்

 "தட்டுக்கெட்டெ மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்"

என்று ஒரு வரி சொல்லியிருப்பார்.





உறவினர்கள்/ நண்பர்கள்/ அலுவலக உறவுமுறை என்று  யாராவது செத்துப்போனால் சுடுகாட்டுப்பக்கம் போய் பழக்கமுள்ளவர்களுக்கும்
செத்தபிறகு சுடுகாட்டுக்குப்போனால் போதும் என்று இருப்பவர்களும்,
முன்ன பின்ன செத்தாதானே சுடுகாது தெரியும் என்று சொல்பவர்களும் இருக்கிற பூமி இது.

சுடுகாட்டிலிருந்து வாழ்க்கையைத்துவங்கியவர் அல்லது எவனாவது செத்தால்தான் நமக்கு சோறு என்ற நிலையில் இருக்கும் விளிம்பு நிலை
ஆறடி நிலம் என்பது உண்மையல்ல 6க்கு 2 என்பதுதான் ஸ்டாண்டர்டு சைஸ்... அதைத்தான் பட்டுக்கோட்டை எட்டடி என்பார். அது உண்மையில் 12 சதுர அடி...



சுடுகாட்டில் குழி தோண்டுபவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும் அது ஏற்கனவே தோண்டிய குழியைத்தோண்டுவது. புதுக்குழி தோண்டுவது மிகவும் கடினம் என்பதால்தான் அது. நான் குழி தோண்டும் காலங்களில் மகாலிங்கம் என்ற ஒரு பெரியப்பா என்னோடு இருந்தார். அவர் பழைய குழிகளை காலப்பெட்டகம் போல வைத்திருப்பார்.

அவன் செத்து 2 வருஷம் ஆச்சிடா அந்தக்குழியை வெட்டு என்பார். தோண்டினால் அதில் சில எச்சங்கள் கால் எலும்பு. மண்டை ஓடு, செமிக்காத மயிர்கள் கந்தலான ஆடைகள் என பல ஐட்டங்கள் கிடக்கும் அதையெல்லாம் மண்வெட்டியால் அள்ளி தட்டில் போட்டு  புதிய பிணத்தின் சொந்தக்கங்களின் கண்களுக்குத்தட்டுப்படாமல் தூரக்கொண்டுபோய் போட்டு விட்டு வரசொல்லுவார். அந்த வீச்சம் ( வாசம்தான்) குடலைப்பிறட்டும்...

ஆகவே வாழும் போது காடு வீடு மனை மனைவி மக்கள் சொத்து சுகம் என்று வாழ்ந்தவர்கள் சுவிஸ் வங்கி உட்பட பேங்க் பேலன்ஸ் வைத்தவர்கள் அனைவரின் கவனத்திற்கு சொல்லுவதெல்லாம் இதுதான்...

பிறக்கும் போது அம்மணம்

போகும் போது ஒரு மல்லுத்துணி மற்றபடி அதுவும் அம்மணம்தான்

நகை நட்டு பிடுங்கப்படும்

ஆனால் வாழும் போது மட்டும்

ஒரே சவடால்கள்...

ஆர்ப்பரிப்புகள்...

நான் இன்ன சாதி...

நீ குறைந்தவன்...

நான் இன்ன கல்வித்தகுதி உள்ளவன்...

நீ என்னை விட க்கம்மி...

எனக்கு எல்லாம் தெரியும் ...

நான் தான் சிறந்தவன்....

நான் சொல்லுவதுதான் சரி


நான் மட்டும் இல்லையின்னா இது நடந்திருக்குமா...

என பல விளாசல்கள்...


எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...

ஒரு ஆறடி நிலம் கூட யாருக்கும் சொந்தம் இல்லை என்பதுதான்


நிதர்சனமான  உண்மை..


Monday, June 24, 2013

ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது.

தோழர்  ச.தமிழ்செல்வன் எழுதிய" ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது"  என்ற புத்தகம் பாரதி புத்தகாலயத்தின் சார்பில்  கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. சமையல் குறிப்பு போல சில வகை சாதங்கள் குழம்புகள் செய்முறை போலத்தான் அப்புத்தகம் இருக்கும். ஆனாலும் ஒரு விஷயத்தை உரக்கச்சொல்லும்... அது இதுதான். காதலிப்பதற்கு ஏற்ற இடம் சமயலறை மட்டுமே என்பதுதான் அது.

காதலிக்க ஏற்ற இடம் பார்க் ,பீச், தியேட்டெர் என்றெல்லாம் அலைய வேண்டாம் சமயலறை மட்டுமே போதுமானது என்கிறார் அவர். சமயலறையில் கலக்கப்படும் சமையல் பொருட்கள் அது கிளப்பும் புதிய வாசனை  என சமையலறை  நமக்குக்காட்டும்  ஒரு அறிவியல்  அது ஒரு சரிவிகித அறிவியல். பெண்கள்மட்டுமே சமையல் வேலை செய்ய வேண்டும் ஆண்கள் அதன் சுவையை மட்டுமே தெரிவிக்க வேண்டும் அவர் மனதில் இவர் நீங்காது இடம் பெற வேண்டும் போன்ற கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து சிந்தனைகளை சிதறடிக்கும் புத்தகம் அது.

உலகில் சரிபாதி பெண்கள். அவர்கள் இல்லாமல் எந்தவித புரட்சியையும் நடத்தி விட முடியாது என்பார் லெனின்.அவரே பிரிதொரு இடத்தில்  நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களை விடுதலை செய்யாமல் நாம் அடுத்த கட்டத்தை நோக்கிப்பயணிக்க முடியாது என்றுகுறிப்பிடுகிறார்.

நேற்று 23/06/2013 அன்று  சமையலறையில் ஆர்வமடைந்தவர்கள்  சோர்ந்து போனவர்கள் என்று இரு சாரார் சங்கமிக்க கோபி நாத் அவர்கள் நடத்திய விஜய் டிவியி நீயா நான நிகழ்வில் தோழர் தமிழ்செல்வன் பங்கேற்றார். ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது என்ற புத்தகத்தை கையில் வைத்திருந்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. கோபி நாத்.

அகில இந்திய அளவில் பணியாற்றும் என்னைப் போன்றவர்கள் குஜராத்திலும் சரி இப்போது கன்னட தேசத்திலும் சரி( பெல்லாரி)  சமையல் என்பதை ஒரு ஆர்வமான அவசியமான விஷயமாகப்பார்க்கிறோம். இரண்டரை ஆண்டுகாலம் கோத்ராவிலும் (அப்போதுதான் நரவேட்டை நடத்தினார் நரேந்திர மோடி) இப்போதும் கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாக சுய சமையல் செய்யும் ஒருவன் நான்.





என் தோழர் திரு ராதாகிருஷ்ணன் மும்பையில் பணியாற்றிய நேரம் (2008)   நானும் நண்பர்கள் இருவரும் சென்றிருந்தோம். அப்போது அவரும் அவருடன் பணியாற்றும் திரு சங்கர குமார் இருவரும் தங்கள் கைப்படவே எங்களுக்கு சமைத்து ப்பறிமாறினர். அப்போது அவர் ஒரு விஷயத்தைக்குறிப்பிட்டார். எல்லா ஆண்களும் சமைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் படும் கஷ்டம் என்னவென்று புரியும் என்றார்...

கற்பென்று சொன்னால் அது இருபாலர்க்கும் பொதுவில் வைப்போம் என்றார் பாரதியார். சமையல் என்று சொன்னாலும் கூட அது இருபாலருக்கும் உகந்ததாக இருக்கட்டும் என்பது தான் இன்றை தினத்தேவை.. வேலைக்குப்போவதும் போகாததும் இதில் கணக்கில்லை...